குகைகளின் வழியே – 4

 

இந்த குகைப்பயணத்தின் மிகமுக்கியமான ஓர் அம்சம் குகைகள் அருகருகே இல்லை என்பது தான். ஆகவே குகைகள் இருக்குமிடங்களை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள வேறு இடங்களையும் பயணத்தில் சேர்த்துக் கொண்டோம். ஆனால் அதற்காக வழியை விட்டும் விலகிச்செல்ல முடியாது. யாகண்டி குகைகளை பார்த்த பின் நேராக விஜயவாடா. அதுதான் இலக்கு. விஜயவாடா வரை வேறு குகைகள் ஏதும் இல்லை. விஜயவாடாவிலும்கூட இயற்கையான குகைகள் ஏதும் இல்லை. ஆகவே வழியில் உள்ள சில இடங்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டோம்.

வரும் வழியில் ஓங்கோல் என்ற சிறிய நகரம். ஓங்கோல் தமிழர்களுக்குத் தெரிந்த பெயர், ஓங்கோல் காளைகள் நம்மூரில் புகழ்பெற்றவை. இது புழுதிபடிந்த நகரம். ஆனால் ஆந்திரத்தின் சிறிய நகரங்கள்கூட பொருளாதார ரீதியான வளர்ச்சியின் பாதையில் இருக்கின்றன .நான்குவழிச்சாலைகள். நல்ல கடைவீதிகள். பெரிய பெரிய கடைகள். ஆனால் இன்னமும்கூட அதிகம் செலவில்லாமல் தங்க முடியும். நாங்கள் தங்கிய விடுதியில் மூன்று அறைகளுக்கு 1200 ரூ செலவானது. அதில் எட்டுபேர் தங்கிக்கொண்டோம்.

நான் பயணக்கட்டுரை எழுதி முடிக்க பதினொரு மணி. என் மடிக்கணினி கார்த்திக்கின் உடைமை. அதில் ஆங்கில இ அடிக்கவில்லை. இ இல்லாத சொற்களாகத் தேடிப்பார்த்து அடித்தபோது என் மொழியே மாறிப்போனது. அவ்வப்போது வரும் இயை சேர்த்தேன். பிழைகள். அதை சரிபார்க்க முடியாமல் தூக்கம். எப்போதுமே எனக்கு என் எழுத்தைப் பிழை திருத்துவது பொறுமையை சோதிக்கச்செய்யும் வேலை.

அதன்பின் நண்பர்கள் புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்தனர். குடிநீருக்காகக் கேட்டபோது அது காரில் இருக்கிறது என்றார்கள். கார் இருக்குமிடம் பூட்டப்பட்டிருந்தது. விடுதிக்காவலர் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்தார். கூச்சலிட்டு அவரை வரவழைத்து ஒருவழியாகத் தண்ணீரைக் கொண்டு வந்து குடித்துவிட்டுப் படுத்தேன்.

காலை ஐந்து மணிக்கு எழுந்தேன். இப்பயணத்தில் காலையில் குளிப்பதை முதல் நாளுக்குப்பின் நிறுத்திவிட்டேன். காலையில் எங்குமே வெந்நீர் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம். புழுதியிலும் வெயிலிலும் வதங்கிக் கசங்கி வந்துசேர்ந்ததும் குளித்துவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வருகிறது என்பது இன்னொரு காரணம். விடுதிக்கு முன்னால் ஒருவர் டீக்கடை திறந்திருந்தார். டீ குடித்துவிட்டு விஜயவாடா கிளம்பினோம்.

வரும் வழியில் ஒரு சிறிய ஊரில் சாலையோரக்கடையில் சாப்பிட்டோம். ஆந்திரத்தில் பெசரெட் என்ற தோசை பிரபலம். நம்மூர் அடைதான். நாம் துவரம்பருப்பு அரைத்து செய்வதுபோலக் கடலைமாவு அரைத்துச் செய்கிறார்கள். மிகவும் ருசியான காலையுணவு. இரவுணவு வெறும் பழங்கள். ஆகவே காலையுணவின் சுவை அதிகம்.

வழியில் ஒரு பெருமாள் கோயில். கோபுரம் பெரியதாக இருப்பதைக்கண்டு உள்ளே சென்று பார்த்தோம். கருவறை பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சில பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நடுத்தரமான கோயில். சிற்பங்கள் என ஏதும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர நாயக்கர்களால் கட்டப்பட்டது . பின்பக்கம் ஒரு கோபுரம் அடித்தளம் மட்டும் கட்டப்பட்டு அப்படியே விடப்பட்டிருந்தது.

விஜயவாடா செல்லும் முன் சென்ற ஊர் உண்டவில்லி குகைகள். விஜயவாடாவிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இவை கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த குகைகள். மணல்பாறையில் வெட்டப்பட்டவை. முதல் அடுக்கு முடிக்கப்படவில்லை. இரண்டாம் அடுக்கில் நான்கு கருவறைகள். அவற்றில் சிலைகள் இல்லை. மூன்றாமடுக்கில் மையக்கோயில்கள் காலியாக இருக்கின்றன.

இவை நெடுங்காலம் கைவிடப்பட்டுக் கிடந்தன என்றும் பின்னர் இப்பகுதியை ஆண்ட சாளுக்கியர் காலகட்டத்தில் வைணவத் தலமாக மாற்றப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. புதியதாக ஒரு கருவறை பக்கவாட்டில் செதுக்கப்பட்டு அதனுள் இருபதடி நீளமான மிகப்பெரிய விஷ்ணு சிலை செதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் குடைவரைக் கோயிலில் உள்ள விஷ்ணுவைப்போன்ற சிலை. அது புத்தர் சிலை என்று சிலர் சொல்வதுண்டு என்றாலும் சிலையின் எவ்வியல்பும் புத்தருக்குரியதல்ல. கழலணிகளும் கௌஸ்துபமம் பீதாம்பரமும் எல்லாம் விஷ்ணுவுக்குரியவை. மேலும் அக்குகை சமணக்குகையாகவே முன்னர் இருந்திருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும் உண்டவில்லி குகைக்கோயில்கள் நாயக்க மன்னர்களால் பேணப்பட்டன. பின்னர் கைவிடப்பட்டன. இன்று வழிபாடு ஏதுமில்லாமல் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த குகைக் கோயில். இங்கே புராதன சமணமதம் சார்ந்த சில பிராமி மொழிக் கல்வெட்டுகள் கண்டடையப்பட்டுள்ளன. மணற்பாறை உறுதியற்றது என்பதனால் இந்த குகைக்கோயில் அரிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட கரைந்த நிலையிலேயே உள்ளது.

மதிய உணவை உண்டவில்லியில் சாப்பிட்டுவிட்டு விஜயவாடாவுக்குள் இருக்கும் இரண்டு குகைக்கோயில்களைப் பார்க்கலாமென்று சென்றோம். உண்மையில் அவை மிகச்சிறிய குடைவரைகள். எவ்வகையிலும் முக்கியமற்றவை. இத்தகைய பயணங்களில் தொல்லியல்துறை குறிப்புகளை மட்டும் நம்பி இடங்களைத் தேர்வுசெய்யக்கூடாது. கூடவே அந்த இடத்தைப்பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அக்கண்ண மதன என்ற குடைவரை நகர் நடுவே ஒரு பாறையில் உள்ளது. ஒற்றை அறை கொண்ட கோயில். ஆனால் வெளியே நிரந்தரமாகப் பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். இன்று பகலில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விஜயவாடாவில் அந்தக் குடைவரையை விசாரித்து விசாரித்து காரிலேயே அலைந்தோம். நகரில் வாழும் எவருக்கும் அந்த இடம் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஒருவழியாகக் கண்டுகொண்டபோது ஏமாற்றமாக இருந்தது . ஆனால் எதிர்பாராத அற்புதங்கள் போலவே எதிர்பாராத ஏமாற்றங்களும் பயணத்தின் பகுதியே.

விஜயவாடாவிலிருந்து நீண்ட பயணம் சட்டிஸ்கருக்கு. வழியில் ஏலூர் என்னும் நகரில் விடுதியில் அறை போட்டோம். ஏலூர் நெல்லை அளவுள்ள நகரம். ஆனால் பெரிய விடுதிகள் இருந்தன. நாங்கள் சிறிய விடுதிகளைப் பார்த்தோம். அவை சகிக்க முடியாதவை. ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டு தேடி ஒரு நடுத்தர விடுதியைப் போட்டோம். நான் குளித்துவிட்டுக் குறிப்பை எழுத ஆரம்பித்தேன்.

[மேலும்]

 

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 3
அடுத்த கட்டுரைவல்லுறவும் சட்டமும்