சாருவின் புது அவதூறு

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் புலி எதிர்ப்பாளர்களால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே, என்ன சொல்கிறீர்கள்?

நாகராஜ்

அன்புள்ள நாகராஜ்,

அது குற்றச்சாட்டு இல்லை, அவதூறு. என் புல்வெளிதேசத்தில் என்னை அழைத்தவர்கள், என்னைவைத்து கூட்டம் நடத்தியவர்கள் எல்லாரையும் படத்துடன் விரிவாகவே போட்டிருக்கிறேன். ரகசியம் ஏதும் எப்போதும் இல்லை. எனக்குக் கூட்டம் நடத்தியவர்களில் புலி எதிர்ப்பாளர்கள் உண்டு, ‘மாவீரர்குடும்பங்’களும் உண்டு. ஒருசாரார் கூட்டத்துக்கு மறுசாரார் வரவில்லை. இரு சாராரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே எந்தக்கூட்டத்துக்கும் இருபதுபேருக்கு மேல் ஆள்சேரவில்லை. நான் அதைபெரிதாகப் பொருட்படுத்தவில்லை, நான் ஊர்சுற்றத்தான் போயிருந்தேன்.

என்னை அழைத்தவர்கள் உபசரித்தவர்கள் முழுக்கமுழுக்க இலக்கியவாதிகள்தான்.  நான் எந்தத் தரப்புக்கும் ஆதரவாவோ எதிர்ப்பாகவோ எதுவுமே சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். சட்டப்படி சொல்லவும் கூடாது. எனக்கு உறுதியான அரசியல் தரப்பு இல்லை. அப்படி ஒன்றை உருவாக்கி அதற்காக வாதாடி அதில் நின்றுகொண்டிருக்க என்னால் முடியாது. என் கருத்தியல் நிலைபாடு எப்போதுமே அப்பட்டமானது, வெளிப்படையானது.

சாரு சமனம் அடைய ஆறுமாதமாவது ஆகும். அதுவரை அவதூறுமழை பொழிந்துகொண்டே இருப்பார். பொதுவாக இந்தவிஷயத்தில் சாரு உட்பட இந்தியத்தமிழர் சிலர் நடந்துகொள்வதுதான் கசப்பூட்டுகிறது. தங்கள் பழைய, நிரந்தர விரோதிகளை எல்லாம் இந்த ஈழப்பிரச்சினையை வைத்தே முத்திரைகுத்த, அவதூறுசெய்ய,வசைபாட முயல்கிறார்கள். ஒரு மானுட அழிவுகூட இவர்கள் மனதில் எப்போதும் உள்ள வெறுப்புக்கான ஆயுதமாகவே பயன்படுகிறது. ஒருகணம்கூட அது ஒரு மனிதாபிமான மன எழுச்சியை உருவாக்கவில்லை. அந்தரங்கமாகக்கூட இவர்கள் அந்த எளிய மக்களுக்காக வருந்தவில்லை. கிடைத்தது ஓரு புது ஆயுதம் என்ற எக்களிப்பு மட்டுமே எழுகிறது இவர்களுக்கு. இதுதான் இணையமெங்கும் காணக்கிடைக்கிறது. ஏதோ இவர்களின் பகைக்காகத்தான் ஈழத்தவர் செத்துக்கொண்டிருப்பதுபோல! விசித்திர ஆத்மாக்கள்!

ஜெ

முந்தைய கட்டுரைலோகி,2. கலைஞன்
அடுத்த கட்டுரைலோகி. 3, ரசிகன்