முன்தினம் இரவு பிலம் குகைகளின் அருகில் ஆந்திர அரசு கட்டிய விடுதியில் தங்க இடம் கிடைத்தது. தலைக்கு அறுபது ரூபாய்தான். நாங்கள் மதியம் சாப்பிடவில்லை. பிலம் குகைகள் ஐந்தரை மணிக்கு மூடிவிடுவார்கள் . அதற்குள் குகைக்குள் போய்விடுவோம் என்று அவசரப்பட்டோம். குகைகளைப் பார்த்து முடித்து வந்ததும் அங்கிருக்கும் உணவு விடுதியில் போய் உணவு கோரினோம். கொஞ்சம் ஆறிப்போயிருந்தாலும் ஆந்திரபாணி சைவ உணவு கிடைத்தது. ருசிக்கு ஆந்திராவின் சோறும் சாம்பாரும் ரசமும் அனல்பறக்கும் ஆவக்காயும் மிகவும் பிடிக்கும். பசியும் இணைந்துகொண்டமையால் கடந்த சில மாதங்களின் மிகச்சிறந்த உணவை உண்டோம்
முன்னராகத் தூங்கிவிட்டோம். நான் காலை நான்கரை மணிக்கு எழுந்து, விடிந்துவிட்டதா என்று திகைத்தேன் இரவு ஒன்பது மணிக்குத் தூங்கியதன் விளைவு. காலை ஆறு மணிக்கு அனைவரும் குளித்துக் கிளம்பிவிட்டோம்.
காலையில் பிலம் அருகிலுள்ள கண்டிக்கோட்டை என்ற கோட்டைக்குப் போனோம். ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கோட்டை போலத் தோன்றியது. நெருங்கிப் போனபோதுதான் அதன் பிரமிக்கச்செய்யும் உயரம் தெரியவந்தது. கற்களால் ஆன பெரும் கோட்டை. நாயக்கர்கோட்டைகளுக்குரிய சிறப்பம்சமான மடிந்து மடிந்து உள்ளே போகும் வழி. உள்ளே காவல் மாடங்கள். ஆழமான நீராழிகள்.
கோட்டைக்குள் ஒரு நூறு வீடுகள் இருக்கும். ஊர் முழுமையாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது. வறுமையான குடிசைகள். அங்கிருந்த மாதவராயண்ணா கோயிலுக்குச் செல்லும் வழி முழுக்க மலம். கோயிலில் மூலச்சிலை இல்லை. அதன் அமைப்பு தஞ்சைக் கோயில்களை ஒத்திருந்தது. பெரிய பிரகாரங்கள். சுற்றும் முற்றம். கோபுரம் மேலே உடைந்திருந்தது. மணற்கல்லால் ஆன கோயிலாகையால் சிற்பங்கள் அதிகமில்லை. ஆனால் அந்த வேளையில் அக்கோயிலில் தனியாக நின்றிருக்கையில் ஒரு விதமான மன எழுச்சி உருவானது
பெரிய கோட்டை. கோயிலுக்குப்பின்னாலும் விரிந்துகிடந்த வயல்களையும் பொட்டல்களையும் உள்ளே அமைத்து விரிந்து சூழ்ந்து கிடந்தது. கோட்டைமேல் ஆயுததாரிகள் நிற்கும் அறைகள். பீரங்கி மேடைகள். தொலைதூரத்து மலைகளின் மீது காவல்கோபுரங்களைக் காணமுடிந்தது. பாறைக்குவியல் போன்ற மலைகள் மீது அமைதியும் காலையொளியும் மூடிக்கிடந்தன.
இந்தக் கோட்டை 12 ஆம் நூற்றாண்டில் கல்யாண சாளுக்கிய மன்னரான ஆகவமல்ல சோமேஸ்வரின் சிற்றரசரான கப்பராஜ நாயக்கரால் கட்டப்பட்டது. இப்பகுதியில் நாயக்கர் ஆட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை காகதீயர்களின் முக்கியமான ஒரு ராணுவ மையம். விஜயநகர ஆட்சியின் முக்கியமான காவல்தலைநகரமாக இருந்தது. விஜயநகர வீழ்சிக்குப்பின் இஸ்லாமிய ஆட்சிக்குள் சென்றது. கோட்டைக்குள் ஒரு மசூதி அப்போதுதான் கட்டப்பட்டது. கடைசியாக இதை ஹைதர் அலியிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்.
தெலுங்குக் கவிஞர் வேமன இங்கே வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. இக்கோட்டை அருகே பெண்ணாறு ஓடுகிறது.
கோட்டை முகப்பில் இருந்த டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அங்கு சிலர் பஸ்ஸுக்குக் காத்து நின்றனர். அடுத்த பஸ் மாலை ஐந்துமணிக்கு என்றார்கள்.
அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய இடம் யாக்கண்டி குகைக்கோயில்கள். ஆனால் அதற்குச் செல்வதற்கு முன் பெத்தமுடியம் என்னும் ஊரில் இருக்கும் தொல்லியல் கிராமத்தைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள். இந்தமுறை நான் பயணங்களைத் திட்டமிடவில்லை. நண்பர்கள் அவர்கள் போக்கில் முடிவெடுத்தார்கள். தொல்லியல் தலங்கள் எல்லாமே முக்கியமானவை அல்ல.பலவற்றில் பார்க்க ஒன்றும் இருக்காது. போகும் வழியிலும் அந்த ஊர் இல்லை. அங்கு என்ன இருக்கும் என்றும் தெரியவில்லை. நேராகக் கிளம்பிச்சென்றுவிட்டோம்
இருபக்கமும் பட்டாணிக்கடலை பயிர் வளர்ந்து பச்சையாகத் தொடுவானம் வரை விரிந்து கிடந்த சாலை. பெரிய டிராக்டர்கள் வந்துகொண்டிருந்தன.__ ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். கடப்பைக்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட கட்டிடங்கள். ஒரு உயரமான உருண்ட கற்கோபுரம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமியக் கொள்ளையர்கள் அதிகமாக கிராமங்களைத் தாக்குவதுண்டாம். அப்போது கட்டப்பட்ட காவல்மாடங்கள் அவை.
கிராமத்தில் எவருக்கும் அங்கு தொல்லியல்ஆய்வு நடப்பதோ பிற விவரங்களோ தெரிந்திருக்கவில்லை. காவலர் ஒருவரிடம் கேட்டபோது விபரமாக சொன்னார். அதைக் குறித்து வைக்காமல் தலையாட்டிக்கொண்டு கிளம்பி மீண்டும் பத்து கிலோமீட்டர் தொலைவு போனபின் அதை முழுமையாக மறந்து விட்டு விழித்தார்கள். சுற்றிச்சுற்றி வந்தோம். கிராமம் முழுக்க பட்டாணிக்கடலை மணம். கொறிப்பதற்கு பட்டாணிக்கடலைச்செடியைப் பச்சையாகக் கையில் கொடுத்தனர். நன்றாகத்தான் இருந்தது. ஊர் நடுவே ஒரு பழமையான கோயில் இருந்தது. லட்சுமிநரசிம்மர் கோயில். சிற்பங்கள் அதிகமில்லை. குளிர்ந்த திண்ணை பகலுறக்கத்துக்கு அழைத்தது.
சரி, நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை, யாக்கண்டி கோயில்களுக்குச் செல்வோம் என்று முடிவெடுத்தோம். பகல் உணவை ஒரு வழியோர நகரில் முடித்தோம். அசைவ உணவகத்தில் சைவ உணவு. கூட்டு பொரியல் எல்லாம் ஊறுகாய் போலக் காரமாக இருந்தன. ஆனால் எப்படியோ நாக்குக்கும் அவை சுவையாகவே இருந்தன.
யாக்கண்டி ஊரின் பெயரை ஓட்டுநரும் கார்த்திக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையாகச் சொல்லி வழிவிசாரித்தனர். ஒருமுறை கார்த்திக் ஏகாந்தி என்று விசாரித்தார். விசாரிக்கப்பட்டவரின் கண்களில் வரும் திகைப்பு பார்க்க அற்புதமான அனுபவமாக இருந்தது.
யாக்கண்டி ஒரு புண்ணியதலம். அங்கே கீழே ஒரு சிவன் கோயில் இருந்தது. யாக்கண்டி உமா மகேஸ்வரர் கோயில் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரத்தை நிறுவிய மன்னர்கள் ஹரிஹர புக்கரால் கட்டப்பட்டது. கொஞ்சம் தமிழ்ப் பயணிகளைக் காதால் அறிய முடிந்தது. சாமியார்கள் பலர் தமிழ் உரையாடி வழி சொன்னார்கள். பிற ஊர்களை விட இங்கு அதிகம் சாமியார்களைக் காண முடிந்தது.
யாக்கண்டியில் உள்ள பாறை சரளைமண் இறுகிப் பாறையாக ஆனதுபோல இருந்தது. மலையுச்சியில் இருந்து பிரம்மாண்டமான பாறைகள் உருண்டு சரிந்து கிடந்தன. அந்தப்பாறைகளில் பெரிய விரிசல்களும் துளைகளும் இருந்தன. அவற்றில் மூன்று குகைகளில் வழிபாடுகள் நிகழ்ந்தன. குகைகளின் அடிவாரத்தில் அழகிய சிறிய கோயில் கிட்டத்தட்ட கோயில் அளவுக்கு பெரிய கட்டுமானம் ஒன்று இருந்தது. உள்ளே சிரிப்பொலிகள். உள்ளே பார்த்தால் அது ஒரு குளம். இடுப்பளவு ஆழம். பையன்கள் உற்சாகமாகக் குளித்துக்கொண்டிருந்தனர். மலையில் இருந்து வழியும் ஊற்றைத் தேக்கி அமைக்கப்பட்ட குளம். அதற்கு நந்தி தீர்த்தம் என்று பெயர்.
குளத்தைச் சுற்றிக்கொண்டு முதல் குகைக்குச் சென்றோம். கிட்டத்தட்ட நூறு செங்குத்தான படிகள். படிகளுக்கு மேல் குகை. இருண்ட குகை. மின்விளக்குகள் போட்டிருந்தனர். உயரமான உட்குடைவுப்பாறையில் வரலாற்றுக்காலம் முழுக்க பந்தம் எரித்த கரி படிந்திருந்தது.
அங்கே ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். அவர் முன் ஒரு சிவலிங்கம். அதிகம் பழையது போல தோன்றவில்லை. சாமியார் அதற்குப் பூசை செய்து சில்லறை வாங்கிக்கொண்டார். ஆனால் கெடுபிடியோ வற்புறுத்தலோ ஒன்றும் இல்லை. அங்கு அகத்திய முனிவர் தவம் செய்ததாகவும் காகாசுரன் என்பவன் அவரிடம் மோதி சாபம் பெற்று மோட்சம் போனதாகவும் ஒரு கதை சொன்னார். அங்கு வழிபட்டால் சனி தோஷம் தீரும் என்றார். அங்கே காகங்களே இல்லை என்பது ஒரு தொன்மமாகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது குகை இன்னும் உயரமானது. உள்ளே சுண்ணாம்புப்பாறை. சுண்ணாம்புப் பாறைகள் இருந்த இடங்கள் அரிக்கப்பட்டு உருவான குகைகள்தான் அவை. இரண்டாவது குகை வைணவர்களுக்கு. வெங்கடேஸ்வரா குகை என்று பெயர். அங்கே ராமனும் லட்சுமணனும் கோயில் கொண்டிருந்தனர். ஒரு எட்டுமாடிக்கட்டிடம் அளவுக்கு உயரமாக இருந்தது குகையின் உட்கூரை.
மூன்றாவது குகைக்குள் ஒரு சிறிய கோயில் இருந்தது. பிரம்மேந்திரர் குகை என்று அதற்குப்பெயர். அதன்பின்பக்கம் நாலைந்து நபர்கள் தங்குமளவுக்கு அகலமான ஒருகுகை. ஆனால் குனிந்துதான் அங்கு வாழமுடியும்.வெட்டூரி பிரம்மந்திரசாமி என்னும் துறவி அங்கெ தங்கியிருந்து ஒரு காவியம் எழுதியிருக்கிறார். அங்கு தங்கியிருக்கும் ஒரு கிழவி அதைப் பராமரித்து வந்தாள்.
விசித்திரமான ஒரு உணர்வை அளித்தன அக்குகைகள். ஒரு பெரும் மிருகத்தின் வாயிலும் மூக்கிலும் நுழைந்து மீண்டது போல உணர முடிந்தது. மிருகம் அதை அறியும் என்றும் அது மௌனமாகக் காத்திருக்கிறது என்றும் தோன்றியது. குகைகள் உயிருடன் விழுங்கப்பட்டுவிட்ட உணர்வைத்தான் மீண்டும் மீண்டும் அளித்துக்கொண்டிருக்கின்றன
[மேலும்]