கிறித்துவம்- கடிதங்கள்

வணக்கம் ஜெ. நல்லா இருக்கீங்களா ?

கடல் படத்தில் ‘அன்பின் வாசலே..’ பாட்டு கேக்கும் தோறும் உள்ளே ஒரு பொங்கல் பொங்குற பீலிங்.

நாளங்கள் ஊடே, அன்பின் பெரு வெள்ளம்..
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்..

நீயே எனது அந்தமாக,
நீயே எனது எண்ணமாக,
உணர்ந்தோம்,
மெய் மறந்தோம்.

அண்ணன் கார்கி கலக்கியிருக்காரு.. உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

-அசோக்

அன்புள்ள அசோக்

ஆம்

அந்தப்படத்தின் முக்கியமான வரிகள் உடைய பாடல் அதுதான். நாத்திகர் எழுதி இஸ்லாமியர் இசையமைத்து இந்து பாடிய கிறித்தவப்பாடல். கிறித்தவப்பாடலின் அந்தக் கூட்டு மன எழுச்சி அருமையாக வந்த பாடல்

ஜெ

அன்புள்ள ஜெ

பேராசிரியர் ஏசுதாசன் மாபெரும் தமிழறிஞராக இருந்திருக்கலாம்.. ஆனால், அவரது கிறிஸ்தவப் பின்னணி + திராவிட இயக்க தமிழகச் சூழல் இரண்டும் இணைந்து இத்தகைய ஒரு சார்புப் பார்வையை உருவாக்கி யிருக்கலாம- ஜடாயு எழுதுகிறார்

நீங்கள் ஜேசுதாசனை உங்கள் குருநாதர்களில் ஒருவராகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் ஜேசுதாசனை மத அடிப்படைவாதி என நினைக்கிறீர்களா?

உங்கள் சொல்புதிது குழுமத்தில் வரக்கூடிய பல கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சில சமயங்களில் அருணகிரி , ஜடாயு போன்றவர்கள் எழுதும் கடிதங்கள் அத்துமீறிச்சென்று கிறித்துவத்தைத் தாக்குவதுபோல இருப்பதாக உணர்கிறேன்

நீங்கள் அக்கடிதத்தை இணையதளத்தில் வெளியிடும்போது உங்கள் ஒப்புதல் அதற்கு இருப்பது போலத் தெரிகிறது

ஜாஸ் டயஸ்

அன்புள்ள ஜாஸ்

ஜடாயு, அருணகிரி ஆகியோர் தெளிவான அரசியல் நிலைப்பாடு உடையவர்கள். அவர்கள் மனம் எப்போதும் அந்த ஒற்றைப்புள்ளியிலேயே சென்று நிற்கும்.

நான் அவர்கள் கருத்துக்களுடன் முரண்படும்போது திட்டவட்டமாக அதைச் சொல்லியே வெளியிடுகிறேன். சிலசமயம் சொல்ல ஏதுமில்லை என்றால் ஒன்றும் எழுதுவதில்லை.அருணகிரி கிறித்துவம் பற்றி எழுதிய எல்லாவற்றுக்கும் நான் விரிவான பதில் சொல்லியிருக்கிறேன். ஜடாயு பேராசிரியர் பற்றி சொல்லியிருக்கும் கருத்துக்குப் பலமுறை பல பதிவுகளில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது

இக்கடிதங்கள் ஏன் பிரசுரமாகின்றன என்றால் அவற்றில் அந்த அரசியல் நிலைப்பாட்டுடன் கூடவே ஏதேனும் குறிப்பிடத்தக்க தகவலோ கருத்தோ இருக்கும்போதுதான். ஜடாயுவின் கடிதத்தில் அறம்பற்றிப் பேரிலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை பற்றிய வரிகள் கவனத்துக்குரியவை என நினைத்தேன்

ஜெ

முந்தைய கட்டுரைபஸ்தர்- விவாதம்
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 14