மாபெரும் இயந்திரம்

நான் இளமையில் விருப்பிப் படித்த ஆசிரியர்களில் ஒருவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். பிறப்பால் தமிழரான இவர் எழுபதுகளின் மலையாள இலக்கியத்தில் ஒரு நட்சத்திரம். 1973ல் இவரது யந்த்ரம் என்ற நாவல் வெளிவந்தது. வெளிவந்தபோதே பெரிதும் கவனிக்கப்பட்ட இந்நாவலை நான் திருவட்டார் ஸ்ரீ சித்ரா நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். திருவரம்பில் இருந்து திருவட்டாறு வரை ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று நான் அப்போதெல்லாம் நூல்களை எடுத்துவருவேன்.

சிவகாமி

திருவிதாங்கூர் மகாராஜாவின் புதிய ’கிரான்ட்’ தொகை வந்துவிட்டது, புத்தகங்கள் வாங்கிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் ஓடிசென்று புதிய புத்தகங்களைப்பார்த்தேன். அள்ளி அள்ளி முகர்ந்தேன். அச்சு மை மணக்கும் புத்தகங்கள். கேரள சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கத்தின் முத்திரையான அந்த அன்னப்பறவைதான் எவ்வளவு மனக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. காதலியின் நெற்றிப்பொட்டுபோல!

அதில் யந்த்ரம் இருந்தது. நீலநிற அட்டை கொண்ட கனமான புத்தகம். உடனே அதை எடுத்துக்கொண்டு திரும்பிவரும் வழியில் வயல்வரப்பிலேயே வாசிக்க ஆரம்பித்தேன்.அது மலையாற்றூரின் சுயசரிதையின் சாயல்கொண்ட நாவல். ஒருசாதாரண இளைஞன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக ஆவதன் கதை. அதிகாரம் முதலில் அவனைபிரமிக்கச்செய்கிறது. கூடவே உன்னதமான இலட்சியவாதத்தையும் மனதில் உருவாக்குகிறது. ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும், தீமைக்கு எதிராக போராடவேண்டும் என்றெல்லாம் உத்வேகங்கள்.

ஆனால் கொஞ்சம் கொஞமாக அதிகாரயந்திரத்தின் பிரம்மாண்டம் தெரியவருகிறது. இதில் நான் ஒரு சிறிய ஸ்குரூ மட்டுமே என்று உணரமுடிகிறது. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் யந்திரத்தின் மொத்த எடையும் விசையும் தன்மீது அழுத்தி தன்னை தேய்ந்து உடையவைத்துவிடும் என்று உணரமுடிகிறது. எந்த ஒரு சின்ன விஷயத்துக்கும் முழு ஆவேசத்துடன் அந்த ஒட்டுமொத்த அமைப்புடன் மோதவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் தோல்வியும் ஏளனமும்தான் எஞ்சுகிறது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று புரிய ஆரம்பிக்கிறது. தானும் அந்த மாபெரும் இயந்திரத்தின் பகுதி என்ற உணர்வின் வலிமை. நான் தனியாளல்ல ஒரு மாபெரும் இயந்திரம் என்ற தன்னுணர்வு. அது அபத்தமானது என்று தெரிந்தும்கூட அதில் மெல்ல மெல்ல அவன் அமிழ ஆரம்பிக்கிறான். அவன் ஆன்மா அவனுடைய அகங்காரத்தின் களிம்பால் மூட்ப்பட்டு அவன் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக ஆரம்பிக்குமிடத்தில் நாவல் முடிவை நோக்கிச் செல்கிறது. ஆனால் அவனால் அப்படி முழுக்க மூழ்கிவிடமுடியாது, அவனுடைய ஆன்மாவிற்குள் இருக்கும் கனல் அதற்கு அனுமதிக்காது என்றும் நாவல் குறிப்புணர்த்தியது

கிராமத்து இளைஞனாகிய நான் அதிகபட்சம் அறிந்த அரசதிகாரி என்பவர் எங்களூரின் பிளாக் ஆபீசர்தான். நாங்கள் அவரை உர ஆபீசர் என்போதும். அரசு என்றால் எங்களுக்கு அவரும் ஊருக்குள் அடிக்கடி தென்படும் சில பில்கலகெடர்களும்தான். அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்ற மாபெரும் சித்திரத்தை எனக்களித்தது அந்நாவலே. அரசாங்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான இயந்திரம். அந்த இயந்திரம் செயல்படுவது அந்த இயந்திரத்தைச் செயல்படச்செய்வதற்காகவே. எதையும் அது உற்பத்தி செய்வதில்லை. எந்த நோக்கமும் இல்லை. அது அங்கே செயல்பட்டபடி இருக்கவேண்டும், அவ்வளவுதான்!

நிரந்தர இயக்க இயந்திரம் என்ற மாயை பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அலைக்கழித்திருக்கிறது. அதாவது சில வகையான இயந்திர அமைப்புகளை உருவாக்கினால் ஒரு சக்கரத்தை காலம் உள்ளவரை சுற்றிக்கொண்டே இருக்கும்படிச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை. ஆற்றல் அழிவற்றது என்ற கொள்கை உருவாவதற்கு முந்தைய பொறியியலாளர் இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சக்கரத்தின் வலப்பக்கம் எப்போதும் மூன்று எடைகளும் இடதுபக்கம் இரண்டு எடைகளும் இருக்கும்படி அதன் அமைப்பு இருக்கிறது என்று கொள்வோம். எடை அதிகமான பக்கம் நோக்கி சக்கரம் திரும்பும். அப்போது மீண்டும் அதேபக்கம் இன்னொரு எடை வந்து சேரும். அவ்வாறு சக்கரம் திரும்பிக்கொண்டே இருக்கும். எப்போதைக்குமாக. இதுதான அந்த நுட்பம்

யாக்கோப் பெரல்மான் அவரது பொழுதுபோக்கு பௌதிகம் என்ற நூலில் இத்தகைய யந்திரங்களைப்பற்றி சொல்லியிருக்கிறார். அதில் ஒரு நிகழ்ச்சி. ஒரு கடைவாசலில் நிரந்தர இயக்க சக்கரம் ஒன்று சுற்றிக்கொண்டே இருக்கிறது. எப்போதுமே அதன் ஒருபக்கம் உள்ள குழிகளில் மூன்று குண்டுகள் இருக்கும். அந்தப்பக்கம் கீழே வந்தபடியே இருக்கும். இது நிரந்தர இயக்கச் சக்கரம்தான் என்று அவரது இளம் மாணவர்கள் சொல்கிறார்கள். பெரல்மான் அப்படி ஒரு சக்கரம் இருக்கவே முடியாது, ஆற்றல் தான் விசையாக மாற முடியும், அந்த சக்கரத்துக்கு விசை எங்கோ ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார். கடைசியில் அந்த விசையைக் கண்டுபிடிக்கிறார்கள். அது உள்ளே இருந்தது

அரசு இயந்திரமும் அப்படிப்பட்டதே. அது தன்னுடய சொந்த விசையால் நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருப்பது போல தோற்றமளிக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் செயல்படச்செய்கிறது என்று பிரமை அளிக்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் ஓடி ஓடி அந்த இயந்திரச் சக்கரத்தை சுற்றவைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களே அப்படித்தான் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் வெறும் காட்சிவித்தைகள். அவர்களின் சுற்றல் எல்லாம் வீண் உழைப்பு. ஆனால் அதற்குள் ரகசிய விசைகள் உள்ளன, அதை இயக்குபவை அவைதான்.

அந்த இயந்திரத்தின் நோக்கம் ஒன்றுதான். ஒன்றும் படப்படவேண்டாம், இதோ எல்லாவற்றுக்கும் பொறுப்பாக ஒரு திறமையான இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற பிரமையை அந்த இயந்திரம் அளிக்கிறது. எவ்வளவு வலிமையான உருளைக்குண்டுகள் பார்த்தீர்களா? எவ்வளவு திறமையாக இவை சக்கரத்தைச் சுற்றுகின்றன பார்த்தீர்களா? எந்தப்பிரச்ச்னையானாலும் இது சமாளிக்கும். பயமே வேண்டாம். ஒரு பிளாஸ்போ எஃபக்ட்!

மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பின்னர் ஐஏஎஸ் பணியிலிருந்து வெளியேறி முழுநேர எழுத்தாளரானார். அவர் சர்வீஸ் ஸ்டோரி என்று ஒரு சுயசரிதை எழுதினார். அதில் அவரது பணிக்கால நெருகக்டிகள், அதில் அவருக்கு இருந்த உளைச்சல்கள், அவர் வெளியேற நேர்ந்த முறை எல்லாவற்றையும் எழுதியிருந்தார். அரசை உண்மையில் இயக்குவது எந்த விசை என அப்பட்டமாகவே சொல்லியிருந்தார்.

மலையாளத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று அது. யந்திரம் கலையாகச் சொன்னதை அப்பட்டமாகச் சொல்ல முற்பட்டது இந்த நூல். ஆனால் ஒன்று தெரிந்தது, இந்த அப்பட்டத்தை விட கலையின் மறைமுகத்தன்மையே அதிக பாதிப்பை அளிப்பதாக இருந்தது! ஏனென்றால் நாவல் ஒரு மனிதனை முன்வைக்கிறது. அவனுடைய எழுச்சியையும் வீழ்ச்சியையும் நம்மால் காணமுடிகிறது. யந்திரத்தின் முன்னால் நிற்பது அவன் அல்ல, நாமேதான்.

அதன்பின் நான் அரசியந்திரத்தின் செயல்பாட்டைப்பற்றிய பல நாவல்களை வாசித்திருக்கிறேன். தமிழில் இந்தவகையான எழுத்தின் முன்னோடி என்று கிருத்திகாவைத்தான் சொல்லவேண்டும். நுட்பமான அங்கதத்தையும் இந்தியப்புராணமரபின் படிமங்களையும் கலந்து அவர் எழுதிய ’தர்மஷேத்ரே’ போண்ற நாவல்களை தமிழின் முக்கியமான தொடக்கப்புள்ளிகளாகக் கருதலாம். அதன்பின் இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திரபூமி’ போன்ற நாவல்கள். சமீபத்தில் அவ்வாறு நான் வாசித்த நல்ல நாவல் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி.

சிவகாமியின் இந்நாவல் அந்த மரபில் வரும் ஆக்கம். இத்தகைய நாவல்களை மதிப்பிடுவதற்கான முதற்கேள்வி என்பது ‘இது எந்த அளவுக்கு நேர்மையானது?’ என்பதே. அந்த வினாவுக்கு சாதகமான பதில் இல்லையேல் என்னதான் நுணுக்கமாக எழுதப்பட்டிருந்தாலும் அந்நாவலை பொருட்படுத்தவேண்டியதில்லை. ஏனென்றால் நேர்மையாக எழுதப்படாவிட்டால் இத்தகைய நாவல்கள் எதற்காக எழுதப்படுகின்றனவோ அந்த நோக்கத்தை அடைவதில்லை.

சிவகாமியின் இந்நாவலை வாசிக்கையில் எனக்குத்தோன்றிக்கொண்டே இருந்தது , இது உண்மை உண்மை என்றுதான். இந்நாவல் புனைகதையின் வடிவை எடுத்ததே எந்தச்சங்கடமும் இல்லாமல் உண்மையைச் சொல்லக்கூடியதாக இது இருக்கவேண்டும் என்ற எண்ணத்தால்தான் என்று பட்டது. ஏனென்றால் இது ஒரு சுயசரிதை. ஒரு ‘சர்வீஸ் ஸ்டோரி’

இந்நாவலின் நாயகியான நீலா மிக எளிய தலித் குடும்பத்திலிருந்து மேலெழுந்து வந்தவர். மிக இளம் வயதிலேயே அவர் கண்டு வளர்ந்த அடித்தள தலித் மக்களின் வாழ்க்கை பற்றிய பிரக்ஞை அவரை அம்மக்களுக்காக போராடக்கூடியவளாக ஆக்குகிறது. அரசு என்னும் அமைப்புக்குள் இருந்துகொண்டு அம்மக்களுக்கு நீதியும், அவர்களுக்கு உரிமையான சலுகைகளும் கிடைப்பதற்காக போராடுகிறாள். அரசமைப்புக்கு வெளியே சென்று அம்மக்களை ஒன்று திரட்டவும், அவர்களுக்கு போராடும்முறைகளைச் சொல்லிக்கொடுக்கவும் உழைக்கிறாள். இவ்விரு தளங்களிலும் நீலா எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், சோர்வுகள், எழுச்சிகள், முன்னுதாரணங்களைப்பற்றிய நாவல் இது.

மலையாற்றூர் ராமகிருஷ்ணன்

நாவலில் வரும் நீலா ஆசிரியையின் நேரடி பிரதிபலிப்பாக இருக்கிறார். ஆகவே இது ஒரு சுயசரிதைநாவல். ஆகவே இந்நாவலில் வரக்கூடிய பிற கதாபாத்திரங்களை தமிழிலக்கிய-அரசியல் சூழல் அறிந்தவர்கள் ஒருவாறாக ஊகிக்க முடியும். இந்த ஒரு அம்சத்தால் இந்நாவல் அரசியல்-இலக்கிய வம்புகள் தேடும் வாசகர்களுக்கு ஒருவகை சுவாரசியத்தை அளிக்கலாம். யார்யார் என்று கண்டுபிடித்து மகிழும் ஒரு வாசிப்பை அவர்கள் மேற்கொள்ளலாம். இவ்வகை நாவல்களின் மிகப்பெரிய சிக்கலும் அதுதான்.

ஆகவே குறைந்தது இருபத்தைந்தாண்டுக்காலம் இவை இந்தச் சவாலைச் சந்திக்கும். இந்த கிசுகிசுத்தன்மையை உதறி நாவலை வாசிக்க சில நல்லவாசகர்களாலேயே முடியும். இந்த நாவலில் வேறுபெயர்களில் குறிப்பிடப்படும் மனிதர்கள் காலத்தில் பின்னகர்ந்து போனபிறகு, வெறும் வரலாறாகவே அவர்கள் ஆனபிறகு, நாவல் நின்றிருக்கும். இலக்கியத்தின் ஆயுள் மிக நீளமானது. அப்படி இது மட்டும் எஞ்சும்போதுதான் இந்நாவல் இந்த நிழலை விட்டு வெளியே வந்து வாசிப்பை பெறும்.

சுயசரிதைநாவல்களில் இந்த ’கிசுகிசுச்’ப்சிக்கலை எப்படி எதிர்கொள்வது? ஒன்று நேரடியாக மனிதர்களைச் சுட்டும் எந்த அடையாளங்களுமில்லாமல் அதை எழுதிவிடலாம். ஆனால் அது நேர்மையான நேரடியான வரலாற்றுத்தன்மை நிகழாதுசெய்துவிடும். ஆக, கேள்வி இதுதான். உங்களுக்குத்தேவை அப்பட்டமான யதார்த்தம் என்றால் நீங்கள் இந்த கிசுகிசு வாசிப்பை போனஸாக பெற்றே ஆகவேண்டும். சிவகாமி அப்படியே ஆகட்டும் என முடிவுசெய்திருக்கிறார்.

ஆகவே நான் இங்கே இந்நாவலை அப்படி ஒரு கிசுகிசு வாசிப்புக்குள்ளாக்குவதை முழுக்கவே தவிர்த்துவிடுகிறேன். இந்நாவல் இங்கே இப்போது நிகழ்ந்தது அல்ல என்றே எடுத்துக்கொள்கிறேன். எங்கும் எப்போதும் நிகழக்கூடியது. இதிலுள்ள அனைவருமே முற்றிலும் கற்பனையான மனிதர்கள். இது ஆசிரியை உருவாக்கும் ஒரு புனைவுக்களம் மட்டுமே. இந்தப்புனைவுக்களத்தில் புனைவின் விதிகள் விதிமீறல்களினூடாக இம்மனிதர்கள் காட்டும் வாழ்க்கை என்ன அதன் சாரம் என்ன என்று மட்டுமே பார்க்க முனைகிறேன்.

இந்நாவலை நீலாவும் அமைப்புகளும் என்று ஒரே வரியில் சுருக்கலாம். தன்னை எப்போதும் ஒரு தனிநபராக உணரும் நீலா சந்திக்க நேரும் அமைப்புகளைப்பற்றிய நாவல் இது. அவள் எந்த அமைப்பிலும் உள்ளே நுழைந்து கரைந்துவிடுவதில்லை என்பதை நாவல் முழுக்க காணலாம். அமைப்புகளுக்கு வெளியே சற்று ஐயத்துடன் தயங்கி நிற்பவராகவே நாம் நீலாவைக் கான்கிறோம். எந்த அமைப்பின் விதிகளையும் அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. எங்கும் அமைப்பு கோரும் சமரசங்களை ஏற்றுக்கொள்வதில்லை. முரண்படும் இடங்களில் எதிர்க்குரல் எழுப்பத் தயங்குவதில்லை.

நாம் அமைப்பு முன் நிற்கும் போது அந்தப்பூதம் வந்து நம் முன் விஸ்வரூபம் கொண்டு நிற்கிறது. கண்களில் விஷசிரிப்புடன் கேட்கிறது. ’நான் உன்னை உண்ணட்டுமா? நீ என் வயிற்றுக்குள் செல்லலாம். என் உடலாக நீ ஆகலாம். அதன்பின் என் வலிமை எல்லாம் உன் வலிமை. என்னுடைய சாகசமெல்லாம் உன்னுடைய சாகசம். வா, இதைவிடப்பெரிய வாய்ப்பு உனக்கு வராது’

‘ஆனால் அதன்பின் நான் இருக்கமாட்டேனே’ என்று சொன்னோமென்றால் பூதம் கோபம்கொள்கிறது. ‘சரி அப்படியென்றால் நாம் எதிரிகள் ‘ என்று அது அறைகூவுகிறது. போர் ஆரம்பிக்கிறது. நீலா போரை தேர்ந்தெடுக்கிறாள். இந்நாவல் அந்தப்போரின் கதை.

அரசு என்பது என்ன? திரும்பத்திரும்ப அது வரையறை மறுவரையறை செய்யப்படுகிறது. சம்பிரதாயமான வரையறை ஒரு சமூகம் தன்னைத்தானே நிவாகம்செய்துகொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட அமைப்பு என்பது. சம்பிரதாய மார்க்ஸிய வரையறை என்பது அது ஆளும் வர்க்கம் அடக்கப்பட்ட வர்க்கத்துக்கு மேல் அதிகாரம் செலுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் ஓர் அடக்குமுறை அமைப்பு என்பது. நவமார்க்ஸிய வரையறை என்பது அது வர்க்கங்களுக்கு நடுவே உருவாகும் ஒரு சமரசப்புள்ளி என்பது.

சமரசப்புள்ளியே அரசு என்பதே என் பார்வையில் பொருத்தமான வரையறை. வர்க்கங்களுக்கிடையே உள்ள சமரசம். பண்பாடுகளுக்கிடையே உள்ள சமரசம். பல்வேறு அதிகார இச்சைகளுக்கிடையே உள்ள சமரசம். தத்துவார்த்தமாகப் பார்த்தால் அரசு என்பது கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையேயான சமரசமும் கூட. ஆகவே தான் தராசின் முள் போல அரசு எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கிறது. வரலாறு முழுக்க பார்த்தால் நிலையான அரசு என்ற ஒன்றே இல்லை என்று காணலாம். பேரரசுகள் கூட தற்காலிகமானவையாகவே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு கணமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள்வதற்கான போராட்டத்திலேயே இருந்திருக்கின்றன

ஆகவே அரசு ஏன் இயங்குகிறது என்று கேட்டால் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக என்று மட்டுமே சொல்லமுடியும். அதன் மொத்த விசையும் அனைத்து ஆற்றலும் அதற்காகவே. அரசு என்பது ஒட்டுமொத்தமாக சில விதிகளும் சில நடைமுறைகளும் சில ஆசாரங்களும் சில நம்பிக்கைகளும் அடங்கிய ஒரு தொகை என்று சொல்லலாம். நிர்வாகம் என்பது அந்த அருவமான அமைப்பின் தூலமான வடிவம். ஆகவே அது ஓர் இயந்திரம். அந்த இயந்திரத்தின் ஒரே நோக்கம் அது இருப்பதும் செயல்படுவதும் மட்டுமே

இந்த உண்மையை நீலா எதிர்கொள்கிறாள். அவள் அதை ஒரு நலம்நாடும் அமைப்பு , சீர்படுத்தும் அமைப்பு என்று நினைத்து அதற்குள் செயல்பட முனைகிறாள். மெல்லமெல்ல அது நிலையற்ற ஒரு சமரசப்புள்ளி என்று உணர்கிறாள். கோடிக்கோடி சமரசங்கள் மூலம் அது இயங்குகிறது. அது தன்னிச்சையாக எதுவும் செய்யமுடியாது. எந்தச்செயலுக்கும் அதற்கு எதிரான விசை இருக்கும். கண்கூடான ஓர் அநீதியைக்கூட அதனால் தடுக்கமுடியாது, அதைத்தடுக்கும் இன்னொரு சக்தி அதே அமைப்புக்குள் இருக்கும். அந்த சக்திக்கும் இந்த அநீதிக்கும் இடையே ஒரு சமரசத்தையே அதனால் செய்ய முடியும்.

ஆகவே நிர்வாகம் இருவழிகளை கண்டுபிடித்திருக்கிறது. ஒன்று,ஒத்திப்போடுவது. இரண்டு ஒப்புக்குச் செய்வது. ஒரு நியாயமான விஷயத்தை செய்யமுடியவில்லை என்றால் அது நியாயம்தான் ஆனால் இன்னொருமுறை பார்க்கலாம் என்று ஒத்திப்போடுகிறது. மேலும் கட்டாயப்படுத்தப்பட்டால் ஒப்புக்கு செய்துவிட்டு செய்துவிட்டேனே என்கிறது.

நாவல் முழுக்க நீலா அரசின் மையத்தின் முன் அநீதிகளை, சுரண்டல்களை ஆவேசமாகச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறாள். வாதாடுகிறாள். ஆதாரம் காட்டுகிறாள். ஆனால் அரசு பெரும்பாலும் அவற்றை ஒத்திப்போடுகிறது. அவள் கொதிப்படைகையில் அவள் சொல்வதில் மிக எளிய ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை ஒப்புக்குச் செய்ய முன்வருகிறது. இந்நாவல் முழுக்க அத்தகைய பல தருணங்கள் வந்தபடியே இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் அமைப்பு சீராக அதன் வழிமுறைகளையே கையாள்கிறது. நீலா சோர்ந்து களைத்து சக்கையாக வெளியே துப்பப்படுகிறாள்.

அரசு என்னும் அமைப்புக்குள் உள்ள பல்வேரு வகையான மனிதர்களை காட்டிக்கொண்டே செல்கிறது நாவல். காலில் விழுந்து யாசித்துப்பெறுபவர்கள். மேலிடத்தின் காலில் விழுந்தபின் கீழிருப்பவர்களிடம் விரைப்பைக் காட்டுபவர்கள். அதிகாரத் தரகர்கள். நுட்பமாக ஒதுங்கி ஒப்புக்குப் பணியாற்றுபவர்கள். போராடுபவர்கள். போராடித்தோற்றவர்கள். போராடுபவர்களாக பாவனைகாட்டுபவர்கள். பல்வேரு நுண்ணிய பாவனகள் வழியாக அவர்கள் ஒருவரோடொருவர் பழகிக்கொள்கிறார்கள். பொய்யான மரியாதைகள், விஷம் தடவப்பட்ட சொற்கள்.

ஒருகட்டத்தில் நீலா அரசு என்பது சமரசப்புள்ளிகளால் ஆனது என்பதை உணர்கிறாள். அதனிடம் கருணையை கோர முடியாது. நீதியை எதிர்பார்க்கமுடியாது. அது சமநிலையை மட்டுமே நாடும். தன் நிலைநிற்றலை மட்டுமே கவனம் கொள்ளும். ஆகவே அதன் சமநிலையை குலைக்கவேண்டும். அதற்குச் சவால்களை உருவாக்கவேண்டும். அதை அசைக்கவேண்டும். அதற்காக அவள் வெளியே திரும்புகிறாள். ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களை திரட்டி அவர்களின் ஆற்றல்களைக் குவித்து அதை ஒரு விசையாக ஆக்கி அரசு மேல் செலுத்தமுடியுமா என்று பார்க்கிறாள்

அதற்காக ஓர் இதழை உருவாக்குகிறாள். அவ்விதழ் சார்ந்து ஓர் நண்பர்க்குழுவை அமைக்கிறாள். கிட்டத்தட்ட ஓர் அமைப்பு போலவே அவர்கள் செயல்படுகிறார்கள். அடித்தள மக்களிடையே அவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களை கருத்தியல்ரீதியாக திரட்டவும் அமைப்புரீதியாக போராடச்செய்யவும் முயல்கிறார்கள். நீலா அங்கு சந்திப்பதும் அமைப்புகளையே.

இந்நாவல் வெறுமொரு சர்வீஸ் ஸ்டோரியாக ஆகாமல் தடுப்பது இந்த அம்சம்தான். நாவலுக்கு இன்னும் விரிவான ஒரு தளத்தை இது திறக்கிறது. வழக்கமாக அரசுசு பற்றி எழுதப்படும் நாவல்கள் அரசின் இயல்புகள் எல்லாம் அந்த அமைப்புக்கே உரிய தனித்தன்மைகள் என்று காட்டமுயலும். அரசு ஒரு ராட்சத இயந்திரமாக காட்சியளிக்கையில் அவை முடிந்துபோகும். ஆனால் இந்நாவலில் நீலா சமூகப்பணிக்கு வரும்போது அவள் அரசுக்குள் கண்டதை விட நுட்பமான, பிரம்மாண்டமான அதிகாரவிளையாட்டுக்களை காண்கிறாள்.

இப்படிச் சொல்லலாம். நீலா ஓர் இயந்திரத்தைக் காண்கிறாள். அந்த இயந்திரத்தின் விதிகளை அறிந்து அதனுடன் மோத அவள் வெளியே வரும்போது தெரிகிறது அந்த இயந்திரம் என்பது அதைவிட அதி பிரம்மாண்டமான ஓர் இயந்திரத்தின் பகுதிதான் என்று. நாவலின் இந்த தரிசனமே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. அரசாங்கம் பற்றி எழுதப்பட்ட பிறநாவல்களில் இருந்து இதை வேறுபடுத்துகிறது.

நீலா அவளுடைய அரசியல் செயல்பாடுகளில் காண்பது அரசாங்கச்செயல்பாடுகளில் கண்ட அதே விஷயங்களைத்தான். இங்கும் எல்லா விசைகளும் அதிகாரத்திற்கானவையாகவே இருக்கின்றன. இலட்சியவாதம் கூட உள்ளூர அதிகாரத்துக்கான ஆசையால் இயக்கப்படுகிறது. அதிகாரத்திற்கான விருப்பு அகங்காரமாக மாற்றுருவம் கொள்கிறது. அது ஒருவர் இன்னொருவருடன் இணைந்து செயல்படமுடியாதபடிச் செய்கிறது. ஒருவர் இன்னொருவரை வீழ்த்தும் முயற்சிகளைச் செய்யவைக்கிறது.

இங்கும் மனிதர்கள் நடிக்கிறார்கள். குழு சேர்கிறார்கள். பொய்யாகப் பேசுகிறார்கள். தாழ்வுணர்ச்சியும் மேட்டிமை உணர்ச்சியும் கொண்ட மனிதர்களை அதிகாரத்திற்காக மாறி மாறி வேவுபார்க்கிறார்கள். குழு சேர்கிறார்கள். ஒருவரை ஒருவர் பிடித்திழுக்கிறார்கள். அதற்காக அவர்களின் உண்மையான இலட்சியங்கள் குலைந்தால்கூட அதை பொருட்படுத்துவதில்லை.

நாவல்முழுக்க வரும் இந்த அரசியல் அதிகார இழுபறிகள் அதன் ஊடுபாவுகள் அப்பட்டமான எளிமையுடன் சொல்லப்பட்டிருப்பதனாலேயே மனச்சோர்வூட்டும் அளவுக்கு உண்மையாக தெரிகின்றன. இந்நாவல் அளிக்கும் முக்கியமான அனுபவமே இந்த உண்மையின் காட்சிதான்.

இங்கும் நீலா சமரசத்தையே காண்கிறாள். அரசும் நிர்வாகமும் எப்படி சமரசங்கள் வழியாக செயல்படுகின்றனவோ அப்படித்தான் உண்மையான இலட்சியவாத நோக்கம் கொண்ட அரசியலமைப்புகளும் கூட பல்வேறு வகையான சமரசங்கள் வழியாகச் செயல்படுகின்றன. நீலா அந்த சமரசங்கள் அடிப்படை நோக்கங்களுக்கு எதிரானவையாக இருக்குமென்றால் கடுமையாக எதிர்வினையாற்றுகிறாள். ஆனால் அமைப்புகளையும் நண்பர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டுபோவதற்கான சமரசங்களை அவள் செய்யவும் தயாராகிறாள்.

உள்ளும் வெளியும் அவள் காணும் இந்த ‘அதிகாரஇச்சைகளின் சமரச இயக்கம்‘ என்ற செயல்முறையில் அவள் ஆழ்ந்த சோர்வை அடையும் கணங்கள் இந்நாவலில் உள்ளன. அப்போது அவள் மனம் ஒன்று இளமைப்பருவ நினைவுகளை நோக்கிச் செல்கிறது. அல்லது இயற்கைத்தோற்றங்களை நோக்கிச் செல்கிறது. ஒட்டுமொத்தமாக எதுவும் செய்யமுடியவில்லையோ என்ற ஏக்கம் நாவல் முழுக்க நீலாவை துரத்துகிறது

இந்நாவல் அளிக்கும் சித்திரம் வாசகனுக்கும் சோர்வூட்டக்கூடியதே. அதிகாரங்களின் அநீதிக்கு எதிராகக் கிளம்பும் இலட்சியவாதங்களுக்குள் அதிகாரத்தைக் காண நேர்வது எளிய அனுபவம் அல்ல. இந்நாவலில் நீலா அச்சோர்வின் தருணங்களில் கண்டுகொள்ளும் சில ஆளுமைகளே நாவலின் மையங்களாக கடைசியில் திரண்டு வருகிறார்கள். உதாரணமாக அசிந்தா. எந்த அதிகார இச்சையும் இல்லாமல் ஆகவே அகங்காரமும் இல்லாமல் அடித்தள மக்களுக்கான சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு மெல்லமெல்ல தன் முழுமையை அடையும் அசிந்தா நீலாவுக்குள் இலட்சியவாதத்தின் உண்மையான பெறுமானத்தை திரும்பத்திரும்ப காட்டிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம்

நாவலை வாசித்து முடித்தபின் அசிந்தாவை மையமாக்கி இன்னொரு முறை மனதுக்குள் வாசிக்க முடிந்தால் அதிகார விசைகளின் சோர்வூட்டும் நாடகத்தை முன்வைக்கும் இந்நாவல் உண்மையில் தூய இலட்சியவாதத்தின் காலடியில் வந்து நிற்பதை காணமுடியும். இந்நாவலின் முழுமை அங்கேதான் நிகழ்கிறது.

அலக்ஸாண்டர் குப்ரின் மலோஹ் என்ற ஒரு அற்புதமான குறுநாவலை எழுதியிருக்கிறார். மலோஹ் என்றால் நெருப்புக்கடவுள். ஒரு எளிய அழகிய கிராமத்துக்கு வந்துசேரும் ஆலையைப்பற்றிய கதை அது. அந்த ஆலையின் நெருப்பை அந்த மக்களைச் சுரண்டும் அதிகாரத்தின் குறியீடாகவே கொண்டு செல்கிறார் குப்ரின். அந்நெருப்பில் அந்த எளிய மக்களின் வாழ்க்கை கருகுகிறது. அந்நிலம் பொசுங்குகிறது. இரவும் பகலும் அந்த ஆலை அம்மக்களை நோக்கி கர்ஜித்துக்கொண்டே இருந்தது. கோபம் தணியாத எஜமானனைப்போல அது ஆணையிட்டது. பசி தீரா அரக்கனைப்போல சாப்ப்ட்டது. வெறிகொண்ட பேய் போல அச்சுறுத்தியது

நாவலின் கதைநாயகன் அந்த ஆலையின் பொறியாளர். அந்த ஆலையின் ஒரு பகுதிதான் அவனும். ஆகவே பிற எவரையும் விட அவனுக்கு அதன் அழிவுச்சக்தி தெரியும். அதன்பகுதியாக மாறிப்போன பிறரைப்போல அவனால் ஆகமுடியவில்லை. அவன் எதிர்க்கிறான். முரண்படுகிறான். அதன் பிரம்மாண்டம் முன் அஞ்சி நிற்கிறான். சோர்வுற்று பெருங்குடிகாரனாகிறான். அலைக்கழிகிறான். ஒரு கணத்தில் முடிவெடுத்து அந்த ஆலையின் நெருப்புமையத்துக்குச் சென்றுவிடுகிறான். அந்த நெருப்பைக் கட்டுப்படுத்தும் கருவி அவனுக்குத்தெரியும். அதன் விசையை அவன் திருகினால் அது வெடித்து அழியும். அந்த அமைப்பு முழுமையாகவே இல்லாமலாகும்

அந்த விசை அவன் கையருகே இருந்தது. அவன் அதை தொட்டான். ஒரே இழுப்பு. எல்லாம் முடிந்துவிடும். ஆனால் முடியவில்லை.கை நடுங்குகிறது. முழு ஆன்மாவும் செய் என்கிறது. முழு மூளையும் யோசி என்கிறது. உச்ச கணம். காலமும் வெளியும் கூர்மைகொள்ளும் தருணம். அவன் கையை எடுத்துவிடுகிறான். அவனால் அதைச்செய்ய முடியவில்லை. சிரிப்பது போல நெருப்பு சீறியது. நெருப்புதெய்வத்தின் கண்களும் நாக்கும் மின்னி ஒளிவிட்டன.

ஆம், நிறுத்துவது எளிதல்ல. அதைப்பற்றி ஆயிரம் கனவுகாணலாம். ஆயிரம் பேசலாம். நிறுத்துவது வரை செல்லலாம். கையையும் வைக்கலாம். ஆனால் நிறுத்துவது எளிதல்ல

யா. பெரல்மான் அவரது நூலில் சொல்கிறார். ஒரு சந்தையில் நிரந்தர இயக்க இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. எந்த விசையும் அதற்கு வெளியே இருந்து அளிக்கப்படவில்லை. அதை நிறுத்தவே முடியாது என்றார்கள் அமைபபளர். அதை நிறுத்த பல்லாயிரம் பேர் முயன்றார்கள். முடியவே இல்லை. அது முடிவில்லாமல் ஒடியது

கடைசியில் ரகசியம் தெரிந்தது. அதை நிறுத்த முயன்றவர்கள் அதை பிடித்து எதிர்திசைக்கு முறுக்கினார்கள். அந்த விசையை பயன்படுத்தி ஒரு கம்பிச்சுருளை முறுகச்செய்து அந்த இயந்திரச்சக்கரம் மேலும் சுற்றியது! நம் அரசுகளும் அமைப்புகளும் அப்படித்தான் இயங்குகின்றனவா?

வில்லியம் பீட்டர் பிளாட்டியின் எக்ஸார்ஸிஸ்ட் படத்தின் இறுதியில் ஃபாதர் டாமியன் கண்டுகொள்கிறார். அந்த பேய் என்பது ஒரு பேய் அல்ல. அது ஒரு கூட்டம். ஒட்டுமொத்த நரகத்தின் வாய் அது. அதை மூட ஒரே வழிதான் இருக்கிறது. அவர் அதைசெய்தார். தன்னை வைத்து அந்த வாயை மூடினார்

அந்தவழிதான் அசிந்தாவின் வழி .ஒருபரிபூரண அர்ப்பணம் மூலம் அவர் அதைச்செய்கிறார்.நாவலின் ஆடிக்கொண்டே இருக்கும் முள் கடைசியில் அதைத்தான் சுட்டி நிற்கிறது

நன்றி

[6-12-2012 அன்று சென்னையில் சிவகாமியின் ‘ உண்மைக்கு முன்னும்பின்னும்’ நாவலை வெளியிட்டு ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைஅகம் மறைத்தல்-கடிதம்
அடுத்த கட்டுரைதொடக்கம்