வல்லுறவும் உயிரியலும்

அன்புள்ள ஜெயமோகன்,

அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இங்கு இவ்விஷயம் இதுவரை விவாதிக்கப்படவில்லை என்பதால் இக்கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். டில்லியில், ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் மரணமடைந்து விட்டாள்.இதே போன்று பஞ்சாபில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண், தன்னுடைய புகாரின்மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். தமிழகத்தில், தூத்துக்குடிக்கு அருகே பள்ளி செல்லும் சிறுமியை ஒருவன் வன்புணர்ந்து
கொலை செய்துள்ளான். விருத்தாசலம் அருகே ஒரு இளம்பெண் தன்னுடைய காதலன் முன்பாக ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள்.

சாதாரணமாக, பதினெட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை டில்லியில் ஒரு கற்பழிப்புப் புகார் பதிவு செய்யப் படுகிறது என்கிறார்கள். சென்ற வருடம் மட்டும், 600-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் டில்லியில் பதிவாகி இருக்கின்றன. இதுவரை தண்டனை அடைந்ததோ ஒரே ஒருவர் மட்டுமே என்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு ஆய்வு முடிவு, பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு என்று இந்தியாவை அறிவித்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களை நம்பாவிட்டாலும், சாதாரணமாகவே ஒருவர் செய்தித்தாள் படித்தாலே தெரிந்துகொள்ளக் கூடிய ஒரு செய்தி, இந்தியாவில் வடக்கு தெற்கு என்று பேதமில்லாமல் எல்லா மாநிலங்களிலும் யாரோ ஒரு பெண், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறாள். இன்று டில்லியில் மக்கள் ஆவேசமாகப் போராட்டம் நடத்தி வருவது, சமூக மனம் இன்னும்
மரத்துப் போகவில்லை என்ற உண்மையைக் காட்டுவதாக இருந்தாலும், சில கேள்விகள் ,என்னை நீண்ட காலம் பின்தொடர்ந்து கொண்டே வருகின்றன.

ஒரு குற்றத்தைக் கூடக் கொடூரமாக செய்தால்தான்,அரசும் சமூகமும் விழித்தெழுகின்றன. இது ஏன்?
மற்ற 600 பெண்கள் பலாத்காரம் செய்யப் பட்ட போது, நாம் என்ன செய்தோம்?

அரசையும் போலீஸையும், தங்கள் கடமையைச் செய்ய வைப்பதற்குக் கூட ஏன் பெரும்திரளாக மக்கள் கூடி நின்று, ரத்தம் சிந்திப்போராட வேண்டி இருக்கிறது? அப்படியே ஒரு முறை இவர்கள் நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற குற்றங்களும், அதற்கான நடவடிக்கையின்மையும் ஏன் தொடர்கின்றன? சமூகம் எப்போதும் இப்படித்தானா? எத்தனையோ புகாரின்களும், வீரபத்ர பிள்ளைகளும்,அடக்கி ஒடுக்கப்படுவதுதான் அதிகாரமா?

ஒரு பெண்ணின் உடலை அவளின் விருப்பத்திற்கு மாறாக, எடுத்தாள்வது, எவ்வளவு பெரிய வன்முறை? எனக்கு விளங்க முடியாப் புதிராக இருப்பது, இது போன்ற குற்றங்களைச் செய்வதெல்லாம் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளைப் பெற்றவர்கள் தான்?அது போலவே, கற்பழிக்கப்படும் பெண்கள், சிறுமிகள் யாவரும் ஏன் ஏழைகளாகவோ, நடுத்தர வர்க்கத்தினராகவோ இருக்கிறார்கள்?

எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு கதையில், காய்கறி மார்க்கெட்டில் ஒரு ரௌடி இன்னொருவனைக் கொலை செய்கிறான். காய்கறி வாங்க வந்த மக்கள், சிதறி ஓடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில், திருமணமான ஒரு பெண்ணும் சிக்கிக் கொள்கிறாள். கல்லூரி மாணவன் ஒருவன் அவளை ஒரு பெட்டிக் கடைக்குப் பின்புறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான். அவள் நன்றியுணர்ச்சியில் நெகிழ்ந்து கொண்டிருக்கும்போது,
சட்டென்று அவளைத் தன்பக்கம் இழுத்து முத்தமிட்டுவிட்டு ஓடி விடுகிறான். அக்கணத்தில், அந்தப் பெண்ணிற்கு மார்க்கெட்டில் நடந்த கொலையைக் காட்டிலும் தன்னை நம்பி வந்த பெண்ணை ஒருவன் முத்தமிட்டதுதான் மிகப்பெரிய வன்முறையாகத் தெரிகிறது.

உண்மையில், நிராதரவாக ஒரு பெண் ஒரு ஆணிடமோ/ பல ஆண்களிடமோ சிக்கிக் கொள்ளும் பட்சத்தில், அவளது உடலை எடுத்தாள்வதுதான்ஒரு ஆணின் ஆழ்மனம் அவனுக்கிடும் உத்தரவோ?

இதைப் பற்றிய தங்களின் மனப்பதிவுகளை அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு,
சிங்கப்பூர்.

அன்புள்ள கணேஷ்

மரபியல், மற்றும் சமூகவியலில் விரிவான வாசிப்புள்ள என் மகனிடம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ஒரே வரியில் இதைப்பற்றிய என்னுடைய மனச்சித்திரத்தை மாற்றினான். சிம்பன்ஸிக்களில் பெரும்பாலான உடலுறவுகள் ஆண் செய்யும் வல்லுறவுகள்தான். அதைப் பெண் சிம்பன்சிக்கள் பல சமயம் அச்சத்துடன் தடுக்கின்றன. தப்பி ஓடமுயல்கின்றன.

இது ஓர் அடிப்படை உயிரியல் பண்பாக இருக்கலாம். பண்பாடு, கலாச்சாரம் என்பது அந்த ஆதி இயல்புகளுக்கு எதிரான முடிவில்லாத சமர்தான். அரசு சட்டம் நீதி அறம் ஒழுக்கம் எல்லாமே அதற்காகத்தான். இவ்விஷயத்தில் உலகிலுள்ள எல்லா நாகரீகங்களும் எல்லா பண்பாடுகளும் சமமானவையே

அரசும் சட்டமும் எப்போதுமே பொதுபப்டையான தளத்தில் மெல்லவே இயங்குகின்றன. அவற்றை செயல்படச்செய்ய சமூகத்தின் கூட்டான விசை தேவையாகிறது. எல்லா விஷயங்களிலும்

ஜெ [மறுபிரசுரம் 2013]

முந்தைய கட்டுரைவெண்முரசு விவாதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42