வல்லுறவும் சட்டமும்

அன்புள்ள ஜே எம்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

காந்தியும் கற்பழிப்பும் வாசித்தேன். டெல்லியில் மட்டும் ஒரு பெண் பதினேழு மணிக்கு ஒரு முறை கற்பழிக்கப் படுகிறாள். இந்தியா முழுதும் கணக்கெடுத்தால் எண்ணிக்கை என்னவோ?

சரி, நம் சட்டம் என்ன மாதிரி தண்டனை கொடுக்கிறது என்று பாருங்கள்.
கற்பழிப்புக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை நம் நாட்டில். அதிலும் நன்னடத்தை, காந்தி மற்றும் நேரு பிறந்த நாள் என்று தண்டனைக் காலம் குறைந்து விடுகிறது.

ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கோ சமூகம் கொடுக்கும் தண்டனை ஆயுள் தண்டனை. இல்லை கொலை தண்டனை ( ஏனென்றால் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் )
இது தான் உலகத்திலேயே பெரிய ஜன நாயக நாடான இந்தியாவின் நிலை.

சரி, உலகிலேயே சக்தியான ஜன நாயக நாடான அமெரிக்காவில் என்ன சட்டம் என்று பார்ப்போம்.
கற்பழிப்பு: குறைந்தது 10 – 20 வருடம், ஆணும் பெண்ணும் 18 வயதைக் கடந்தவர்கள் என்றால்.
பெண் 18 வயதுக்கு குறைந்தவள் என்றால் குறைந்தது 20 வருடம்.
12 – 16 வயதுக்கு குறைந்தவள் என்றால் ஆயுள் தண்டனை.

வன்முறையோடு கூடிய கற்பழிப்பு என்றால் பெரும்பாலும் 30 -வருடம் ஆயுள் தண்டனை.

கற்பழிப்பு கொலை என்றால் ஆயுள் அல்லது கொலை தண்டனை.

நம் நாட்டின் ஆண்களின் ஆதிக்க வெறியையோ வக்கிரத்தையோ திருத்துவது மிகக்கடினம். ஆனால் சட்டம் மற்றும் தண்டனையை கடினம் ஆக்கலாமே.

சிவா சக்திவேல்

அன்புள்ள சிவா,

சற்றுமுன் இரண்டு வழக்கறிஞர்களிடம் பேசினேன்.

இந்தியாவில் சட்டத்திற்குக் குறை ஏதும் இல்லை. சட்ட நடைமுறையில்தான் பிரச்சினை. நான் தொடர்ந்து அவதானித்துவந்த ஒரு வழக்கு தர்மபுரி கல்பனாசுமதி வல்லுறவு வழக்கு. வழக்கு முடிந்து கடைசியாகக் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிப்பட இருபது வருடங்களாயின. இதேபோல சிதம்பரம் பத்மினி வல்லுறவு வழக்கு , வாச்சாத்தி வழக்கு முதலியவற்றை கவனித்தால் தெரியும் பத்துப்பதினைந்தாண்டுகள் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை

வல்லுறவு வழக்குகளைத் தொடர்ந்து வருடக்கணக்காக இழுப்பதன்மூலம் வென்றுவிடமுடியும். நீதிமன்றம் சலிக்காமல் வாய்தா கொடுக்கும். நீதிபதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதுவரை பாதிக்கப்பட்ட பெண்ணும் குடும்பமும் சோர்வில்லாமல் நீதிமன்றம் வந்து கொண்டே இருக்கவேண்டும்.

இந்தச்சூழலில் பெரும்பாலும் அப்பெண்ணை ஆதரிக்கும் அமைப்புகள் ஆர்வமிழந்து பின்வாங்கிவிடுவார்கள். அந்தப்பெண்ணின் குடும்பம் பின்வாங்கிவிடும். இருபது வருடம் வழக்கு இழுக்கப்பட்டால் அவள் பெற்றோர்கள்கூட உயிருடனிருக்க வாய்ப்பில்லை. ஆகவே ஒருகட்டத்தில் வழக்கை நடத்த ஆளிருக்காது. ஒருமுறை கூட விசாரணை நிகழாமல் வழக்கு நின்றுவிடும். தள்ளுபடிசெய்யப்படும்

பெரும்பாலான வழக்குகளில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்து அவள் கணவனும் அவ்வழக்கைத் தீவிரமாக நடத்த முன்வந்தால் மட்டுமே வழக்கு முடிவை நோக்கிச் செல்கிறது.

பெரும்பாலும் அப்பெண்ணுக்கு வல்லுறவு நிகழ்ச்சிக்குப்பின் சில காலம் கழித்து திருமணம் நடக்கிறது. அவளுடைய ஊரைவிட்டு மிகமிக அப்பால் அவள் திருமணம் செய்து அனுப்பப்படுவதே வழக்கம். அவளோ அவள் கணவனோ மீண்டும் நீதிமன்றம் வர விரும்ப மாட்டார்கள். பொதுவாக இவ்விஷயத்தை மறக்கவே விரும்புவார்கள். குறிப்பாகக் குழந்தைகள் பிறந்துவிட்டதென்றால் அதை முழுமையாகவே விட்டுவிட விரும்புவார்கள்.

இங்கே உண்மையில் வல்லுறவுக்குற்றவாளிகள் நம் நீதிபதிகள்தான். இத்தகைய அடிபப்டை அறம் சார் பிரச்சினையில்கூட வரம்பில்லாமல் வழக்கை நீட்டிக்க அவர்களே அனுமதிக்கிறார்கள். அவர்களை தண்டிக்க இங்கே சட்டமில்லை. அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு உருவானாலே போதும் இந்தியநிலைமை மாறிவிடும்

இவ்வாறு நீதிமன்றத்தின் திட்டமிட்ட தாமதம் என்னும் சல்லடையைத் தாண்டி தண்டனை வரை செல்பவை தமிழகத்தில் 10 சதவீத வழக்குகள் மட்டுமே. கேரளத்தில் 7 சதவீதம்.

இந்த யதார்த்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு வழக்கறிஞர்கள் சில வருடங்கள் கழித்து வழக்கை சமரசமாக முடித்து வைக்கிறார்கள். வல்லுறவுப்புகார் வந்ததுமே முந்தைய வழக்குகளின் விவரங்களைச் சொல்லி என்ன நடக்கும் என வழக்கறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே பெரும்பாலான புகார்கள் நீதிமன்றத்தில் நீடிப்பதே இல்லை. இது இரண்டாவது சல்லடை.

அதற்கு முன்னரே ஒரு சல்லடை இருக்கிறது. காவல்துறையின் சல்லடை. காவலர்கள் வல்லுறவு வழக்குகளை பொதுவாக பதிவுசெய்ய விரும்புவதில்லை. காவலர்களின் மனநிலை எப்போதுமே ஆணாதிக்கம் சார்ந்தது. ‘இவ இளிச்சுக்கிட்டு நின்னிருப்பா’ என உடனே தீர்ப்பளிக்கக்கூடியது. சமரசப்பேச்சு காவல்நிலையத்திலேயே ஆரம்பமாகிவிடும். வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் ஏழை, தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அது பதிவாவது மிகமிக அபூர்வம்

அதற்கும் முன்னால் இருக்கும் சல்லடை குடும்பம். வல்லுறவுச்செய்தி ஊடகங்களால் ‘கொண்டாடப்படும்’ போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பெரும் சமூக அவமானத்தைஅடைகிறது. அந்தப்பெண்ணுக்குத் தங்கைகள் இருந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுகிறது

நம் ஊடகங்கள் வல்லுறவு செய்தவன் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் படங்களை வெளியிடும். வல்லுறவுக்குள்ளான பெண்ணின் முகத்தையும் பெற்றோரின் முகத்தையும் தேடித்தேடி அச்சிடும். வல்லுறவு செய்தவனின் மகளின் கருத்து என்ன என்று கேட்டு வெளியிடவேண்டியதுதானே என நான் ஊடக நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்

இத்தனை இக்கட்டுகள் இருப்பதனால் அனேகமாக வல்லுறவு தண்டிக்கப்படுவதே இல்லை. ஒருகுற்றத்தைச்செய்துவிட்டு எளிதில் தப்பிக்கலாமென்ற எண்ணமே அக்குற்றத்தை செய்வதற்கான முதன்மை உந்துதலாக அமைகிறது

ஆகவே , சட்டத்தை வலுவாக்குதல் அல்ல அதன் நடைமுறையைச் செம்மையாக்குதலே இங்கே முக்கியமானது. இன்றைய போராட்டம் உண்மைநிலைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இது ஒரு திறப்பாக அமைந்தால் நல்லது. வல்லுறவு வழக்குகள் நூறுநாட்களில் முடிக்கப்படவேண்டும், மேல்முறையீடு நூறுநாட்களில் முடிந்து இருநூறுநாட்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்படவேண்டும். எல்லா வல்லுறவுப் புகார்களும் கண்டிப்பாகப் பதிவுசெய்யப்படவேண்டும் என்ற விதி வகுக்கப்படவேண்டும்.

இன்னொரு பக்கமும் இதற்குண்டு. இந்தியாவில் உண்மையில் வல்லுறவு வழக்குகளில் கணிசமானவை குடும்பங்கள் மோதிக்கொள்ளும்போது பழிதீர்க்கும்நோக்கில் ஜோடிக்கப்படுகின்றன. இங்கே குடும்பங்களின் வன்மங்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை. மதுரைப்பக்கம் வல்லுறவு வழக்கை அடிதடி வழக்குகளுக்கு பலம் சேர்க்க ஜோடித்துச் சேர்த்துக்கொள்வது மிகச்சாதாரணம் என்றார் நண்பர். அந்தப்பெண்கள் குடும்பத்தின் அடிமைகள். அவர்கள் ஏதும் சொல்லமுடியாது.

மேலும் இங்கே திருமணம்செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றுவதையும் பாலியல்வல்லுறவு என்னும் குற்றச்சாட்டாகவே பதிவுசெய்கிறார்கள். பலசமயம் இதிலும் குடும்பப்பகை பெரும்பங்கு வகிக்கிறது. சிலசமயம் பெண்களே இதில் பொய்க்குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள். திருமண நோக்குடன், பொருள்நோக்குடன்.

மேலே சொன்ன இரு வகையில் குற்றச்சாட்டுக்குள்ளாகி அவதிப்பட்டதை என் இரு வாசகர்கள் முன்னர் எனக்கு எழுதியிருக்கிறார்கள். இவ்வழக்குகள் அதிகமும் தென்மாவட்டங்களில்தான் உள்ளன.

ஆகவே தண்டனையை மரணதண்டனையாக அல்லது நிகராக அதிகப்படுத்துவது போலி வழக்குகளையே அதிகம் உருவாக்கும். எந்த ஒரு சண்டையையும் பாலியல் வல்லுறவுடன் முடிச்சுப்போட முயல்வார்கள். அந்தக் கோரிக்கை வெறும் உணர்ச்சிகரமானது.

இன்றைய தேவை உண்மையான சட்டநடவடிக்கை நடக்கும் என்ற உறுதிப்பாடு மட்டுமே. அதை அரசுகளும் நீதிமன்றமும் அளித்தாலே போதும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் … தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் …

தங்களின் டெல்லி சம்பவம் பற்றிய பதிவு படித்தேன் . சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன . இந்த சம்பவம் பற்றிய ஊடக , தொலைக்காட்சி கருத்துக்கள் , பதிவுகளைப் படிதது வருகிறேன். கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்களுமே , சட்டங்களைப் பற்றியும், நீதி தண்டனைகள் பற்றியும் , பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியுமே விவாதிக்கின்றனவே தவிர , இப்படிப்பட்ட கொடூரங்களை செய்யும் , செய்யக் கூடிய மனநிலைகளை எவ்வாறு எதிர்கொண்டு மாற்றுவது அல்லது அப்படிப்பட்ட மனநிலைகள் உருவாகாமல் தடுக்க குடும்பத்தில், பெற்றோர்கள், பள்ளியில், சினிமா, தொலைக்காட்சி, போன்ற பல்வேறு ஊடகங்களில் என்ன செய்யலாம் , ஒரு தீவிர ஆணாதிக்க மனநிலையை அகற்றுவது எவ்வாறு, என்பதைப் பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டது போல் தெரியவில்லை ?

தண்டனைகள் கடுமை ஆவதும், மிக விரைவாக விசாரணை முடிப்பதும் மிக மிக அவசியம் கண்டிப்பாக இவை நடந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறைவது திடம் ..ஆனால் என் மனதில் எழும் கேள்வி, அதுவா இறுதித் தீர்வு? .. நண்பரிடம் பேசுகையில் ஒரு விஷயம் விவாதித்தோம் .. இன்று நடக்கும் எதிரான வன்முறை சம்பவங்களில், மிக அதிக விகிதம் (70, 80%?) குடும்பத்தை சேர்தவர்களோ, தெரிந்தவர்களோ , அரசியல் பக்கபலமோ, காவல் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களோ வாக இருக்கும் பட்சத்தில் இச்சம்பவங்கள் வெளி வருவதே மிக கடினமாகுமே (ஏற்கனவே இருக்கும் மூடி மறைக்கும் தன்மை இன்னும் தீவிரமாகலாமே ?

மேலும், இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் அநேகமாக மிக அதிக தன் அகங்காரம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன் (arrogance , self confidence ) … தண்டனை தீவிரமாக இருந்தாலும் “நம்மைக் கண்டு பிடிக்க முடியாது” என்ற தன்னம்பிக்கையில் தவறுகளை செய்து கொண்டிருக்க மாட்டார்களா? .

தங்கள் கருத்துக்களை அறிய ஆவல் …

தங்கள் பதிலை எதிர்நோக்கும்

அன்புள்ள

வெண்ணி

அன்புள்ள வெண்ணி

நீங்கள் சொல்வது உண்மை

‘ஆம்புள்ளப்புள்ள அப்டித்தான் இருக்கும்’ என்றும் ‘ஆம்புளப்புள்ள மாதிரி இருடா’ என்றும் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ளது பிரச்சினை

அந்த மனநிலையைக் கொண்ட பிள்ளைகள் அவர்கள். வாழ்க்கையில் அடையும் இழப்புகளும் அதிகம்

ஜெ

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 4
அடுத்த கட்டுரைவிழா-மேலும் கடிதங்கள்