லோகி. 3, ரசிகன்

லோகிக்கு சின்னவயசு நெல்சன் மண்டேலாவின் சாயல் கொஞ்சம் உண்டு. ஆனால் லோகி நல்ல கருப்பு இல்லை. மாநிறம் என்றே சொல்லிவிடலாம். சுருண்ட கூந்தலை தோளில் புரளவிட்டிருப்பார்.  அவரது கழுத்து குறுகியது, தடித்தது. பின்பக்கம் பிடரிமயிரும் முன்பக்கம் தாடியும் அதை மறைத்துவிடும். குள்ளமானவர். தொப்பை உண்டு. ஆனால் சுறுசுறுப்பான உடலசைவுகள்.

காலையிலேயே எழுந்து நடக்கச்செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. லக்கிடியில் என்றால் கிராமச்சாலைகளில் நெடுந்தொலைவு செல்வார். ஏதாவது ஒரு டீக்கடையில் புகுந்து டீ குடிப்பார். அங்கேயே மாத்ருப்பூமியும் மலையாள மனோரமாவும் படிப்பார். ‘நாட்டு வர்த்தமானம்’ பேசிக்கொண்டிருப்பதும் உண்டு. புட்டோ ஆப்பமோ மணமாக இருக்குமென்றால் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிட்டுவிடுவார்.

 

லோகிக்கு சாப்பாடு மிகமிகப் பிடிக்கும். நல்ல சாப்பாட்டுக்காக காரை எடுத்துக்கொண்டு ஐம்பது கிலோமீட்டர்தூரம் பயணம் செய்யவும் தயங்கமாட்டார். தலைச்சேரியில் ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக கண்ணனூரில் இருந்து காரில் வந்துசெல்லத் துணிபவர் அவர். சாப்பாடு என்பதும்கூட லோகிக்கு வாழ்க்கைமேல் இருந்த அபாரமான பிரியத்தின் அடையாளம்தான்.

”சாப்பாடும் காமமும்தான் மனுஷஜென்மத்துக்கு அடிப்படையான சந்தோஷம். ஏன் என்றால் மனித உடல் அன்னம். ஜடப்பிரபஞ்சம் அன்னத்தால் ஆனது.அன்னம் அன்னத்தை விரும்புகிறது. ‘உதாத்தம்’ என்று சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் இந்த அடிப்படை சந்தோஷத்தில்  இருந்து உருவாக வேண்டும். இந்த சந்தோஷம் இருந்தால்தான் இதில் இருந்து மேலே செல்லமுடியும்…”

லோகிக்கு கேரள உணவுதான் இஷ்டம். கரிமீன் பொரித்தது அவருக்குப் பிடிக்கும். கேரளத்தில் கடலோர நன்னீரில் வளரும் இந்த மின் அரசிலை மாதிரி இருக்கும். சப்பையானது. கத்தரிவைத்து ஓரங்களை வெட்டிவிட்டு தகடாகப் பொரித்தெடுக்க வேண்டும். ரம்முக்கு கரிமீன் மாதிரி ஜோடி இல்லை என்பார் லோகி. விஸ்கிக்கு ஆட்டுக்கறி. பீருக்கு முந்திரிப்பருப்பு.

மம்மூட்டி,சத்யன் அந்திக்காடு

நன்றாக வற்றல்மிளகாய் போட்டு வற்றச்செய்த அயலைக் கறி. நெய் மிதக்கும் மத்திச்சாளைக்குழம்பு. கேரளத்துச் சிவந்த கொட்டை அரிசிச் சோற்றில் அதைப்பிசைந்து சாப்பிடவேண்டும்.  லோகி சிக்கன், பீ·ப் இரண்டும் சாப்பிட மாட்டார். அவர் ஒரு ஆட்டுக்கறிப் பிரியர். பன்றிக்கறியும் பிடிக்கும். ”ஆயுர்வேத விதிப்பிரகாரம் குªம்பு உள்ள, புல்மேயக்கூடிய மிருகங்களை மட்டும்தான் சாப்பிடவேண்டும். பறவைகளை சாப்பிடுவது தவறு…  எந்தக் கறி நெடுக்குவாட்டில் பிரிகிறதோ அது குடலுக்கு கெடுதல்…”

லோகிக்கு ஏகப்பட்ட ஆயுர்வேத நண்பர்கள். அவர்களின் பேச்சில் அவருக்கு தேவையானதை மட்டும் அன்னப்பறவை போல பிரித்து வைத்துக்கொள்வார். அவ்வப்போது எடுத்துவிடுவார். ”லோகி, ஆயுர்வேத விதிப்படி உடல் உழைப்பு உள்ள சத்ரியனும் சூத்ரனும் மட்டும்தானே இறைச்சி உண்ணலாம். நீங்கள் மூளை உழைப்பு உழைப்பதனால் பிராமணன் அல்லவா?” என்றால் ”அதெல்லாம் சும்மா… நான் சூத்திரன் கூட இல்லை” என்று தப்பித்து விடுவார்.

மொத்தத்தில் லோகி சுகவாசி. சுகமாக இருப்பதற்கான கொள்கைகள் கோட்பாடுகள் நம்பிக்கைகள். ஆட்டிறைச்சியை காலையில் ஆப்பத்துக்கும் மதியம் சோற்றுக்கும் இரவு பரோட்டாவுக்கும் தொடர்ந்து சாப்பிடுவதில் கூச்சமில்லை. கருவாடை உப்பு மிளகு புளி போட்டு இடித்து தூளாக்கிய பொடி ஒரு புட்டியில் இருக்கும். அதை சாதத்துக்குப் போட்டுக் கொள்வார். சிலசமயம் இடுக்கி பகுதி நண்பர்கள்  உப்புக்கண்டம் இறைச்சி கொண்டுவந்து கொடுப்பார்கள். அது கன்னங்கரேலென உறுதியாக இருக்கும். லோகி அதை நீராவியில் வேகவைத்து மென்மையாக்கி சீவி போட்டு குழம்பு வைப்பார்.

லோகி நல்ல சமையல்காரர். ”நல்ல சமையல் செய்ய தெரியாவிட்டால் கலைமனசு இருக்காது. நாக்கு சரஸ்வதி.  ருசி என்பது சரஸ்வதி உபாசனை” லோகியின் சொந்தக் கோட்பாடு இது. பச்சைப் பப்படத்தை கத்தியால் வெட்டிப்போட்டு வற்றல்தூளுடன் எண்ணைச் சொட்டு விட்டு சிவக்க வறுத்து ஓர் அவசரப் பொரியல்செய்வார் லோகி. ஜிர்ரென்று இருக்கும். குடிக்கு தொட்டுக்கொள்ள அவசரத்துக்குக் கைகொடுக்கும்.
    
சென்னையில் இருக்கும்போது அவருக்கு குமரகம் பிடித்தமான ஓட்டல். சில சமயம் காயல் ஓட்டலுக்கும் செல்வார். அவருக்கு நட்சத்திர ஓட்டல்கள் பிடிக்காது. பு·பே முறையை லோகி மனமார வெறுத்தார். ”பிச்சைக்காரங்க சாப்புடுற மாதிரி…”என்பார். அவருக்கு பொதுவாக சைவ உணவு மீது பெரிய ஈடுபாடு இல்லை. சிற்றுண்டி என்றால் கூட புட்டு- மீன்குழம்பு, வெள்ளையப்பம்- முட்டைக்கறி, பத்திரி-பாயா தான். ஆனால் பாலடைப்பிரதமன் என்று சொல்லப்படும் நடுக்கேரளப் பாயசம் பிடிக்கும். பாலில் வெல்லம்போட்டு செய்யப்படும் பாயச வகை அது.

லோகி எப்போதுமே சம்பிரதாயமான உடைகளை அணிவதில்லை. அழுத்தமான நிறத்தில் உடையணிவார். பரதன் லோகியின் மனதில் ஒரு ரகசிய வழிபாட்டுக்குரிய ஆளுமையாக இருந்தார். பரதனைப்போலவே தொப்பியும் தாடியும் வைத்துக்கொண்டு அவரைப்போலவே உடைகளும் அணிவார். இயக்குநர் ஆனதும் பரதனைப்போல நடக்கவும் பேசவும் முயன்றார். காரில் அவர் சென்றபோது கிராமத்தில் யாரோ ”பரதன் போறார்டா” என்று சொன்னதை தேசியவிருது கிடைத்தது போல எடுத்துக்கொண்டார். பரதனைபோலவே செட்டில் தலையில் துணியைக் கட்டிக்கொள்வதும் உண்டு.

லோகி மூகாம்பிகை பக்தர். அவரைப்போன்ற உணர்ச்சிகரமான ஒருவர் பக்திக்குள் செல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவர் கெ.பி.ஏ.ஸி தொடர்பில் இருந்தபோது நாத்திகராகவே இருந்தார். ஒருமுறை நண்பர் குழு ஒரு வேன்பிடித்து சபரிமலைக்குச் சென்றார்கள். எல்லாருமே தாடிக்காரர்கள். ஆகவே ஒன்றும் பிரச்சினை இல்லை. போகிறவழியிலேயே மாலை போட்டுக்கொணார்கள். வழியெங்கும் குடி. தொட்டுக்கொள்ள மாட்டுக் கறி. கள்ளுஷாப்புகள் வழியாகச் சென்ற அந்த தீர்த்தாடனம் பம்பையை அடைந்தது. ஒரு லார்ஜ் ‘வீசி’ விட்டு லோகி சபரிமலை ‘சவிட்டி’ ஏற ஆரம்பித்தார்

எங்கும் சரண கோஷம். பக்தி. லோகியின் கண்கள் பொங்கி வழிய ஆரம்பித்தன. மனம் உடைந்து அய்யப்பனை கூவி அழைத்தபடி இரவெல்லாம் மலை ஏறினார். மறுநாள் காலை பதினெட்டு படி ஏறி அய்யப்பன் முன் நின்றபோது அங்கே உண்மையான ஒரு மனித உருவம் இருப்பது போன்ற பிரமைக்கு லோகி ஆளானார். அய்யப்பன் அவரை கண்ணோடு கண் நோக்கி புன்னகைப்பதுபோல. பின்னர் அவருக்கு அதே அநுபவம் குருவாயூரிலும் மூகாம்பிகையிலும் நிகழ்ந்ததாகச் சொல்வார். லோகி அய்யப்பன் மோதிரம், மூகாம்பிகை டாலர் போட்ட  பளிங்கு மாலை, குருவாயூர் டாலர் போட்ட முத்துமாலை ஆகியவற்றை எப்போதும் அணிந்திருப்பார். படுக்கும்போது எல்லாவற்றையும் கழற்றிவிட்டு கூந்தலையும் சிறிய கொண்டையாக பின்னால் கட்டி வைத்துக்கொள்வார்.

லோகி ஏசுதாசின் விசிறி. தாஸேட்டன் என்பார். இசையமைப்பளர்களில் தேவராஜன் மாஸ்டர். அவரை ‘மாஷ்’ என்பார். மாஷ¤ம் தாஸேட்ட்டனும் சேர்ந்தால் அது கண்டிப்பாக கிளாசிக் பாட்டு என்று சொல்வார். கர்நாடக சங்கீதம் பிடிக்கும். அவருக்கு பிடித்த பாடகர் சாலக்குடி நாராயணசாமி. காரணம், அவரது சொந்த ஊர்க்காரர் என்பதுதான். ”அப்படி இல்லை. ஸ்வாமியின் அந்த ·பாவம் வேறு யாருக்குமே வரவில்லை. எம்.டி.ராமநாதனுக்குக் கூட வரவில்லை….” ஆனால் லோகி எம்டி.ராமநாதனியோ பிறரையோ போதிய அளவு கேட்டவரல்ல. அவருக்கு கருவி இசை கேட்கும் பொறுமை கிடையாது.

லோகிக்கு நடிகர்களில் சத்யனைப் பிடிக்கும். வட இந்திய நடிகர்களில் சஞ்சீவ்குமாரைப் பிடிக்கும்.  பின்னர் வந்த நடிகர்களான நஸிருதீன் ஷா, ஓம் புரி போன்றவர்கள் நடித்த பெரும்பாலும் எந்தப்படத்தையும் அவர் பார்த்தது இல்லை. தமிழில் கமலஹாசனை மிகவும் பிடிக்கும். கமலை நடிக்கவைத்து ஒரு நல்ல படம் செய்யும் கனவு இருந்தது. பல திட்டங்களும்  தொடங்கப்பட்டன, அவை நடக்கவில்லை. ரஜினிகாந்த் நல்ல நடிகர் என்று லோகி அடிக்கடிச் சொல்வார்.  ஆட்டோக்காரர் பாஷாவாக மாறும் மாற்றத்தை நல்ல நடிகர்தான் நடித்துக்காட்ட முடியும் என்பார். ஆனால் லோகிக்கு சிவாஜி மேல் உயர் அபிப்பிராயம் இல்லை.

மலையாள நடிகர்களில் மோகன்லால் மம்மூட்டி இருவருமே பெரும் நடிகர்கள் என லோகி சொல்வார். ஆனால் மம்மூட்டி ஒருபடி மேல் என்பார். மோகன்லாலால் குரலில் சில விஷயங்களைக் கொண்டு வரமுடியாது. மோகன்லாலின் கண்கள் உணர்ச்சியுடன் மாறும், அந்த அளவுக்கு அவர் குரல் மாறுபடாது என்பார்.  குணச்சித்திர நடிகர்களில் திலகனும் நெடுமுடியும் இணையான பெரும் நடிகர்கள். ஆனால் திலகனைவிட நெடுமுடி ஒரு படி மேல். திலகன் தன் உடல்மொழியை அதிகமாக மாற்றிக்கொள்ள முடியாது என்பார்.

மலையாள திரைக்கதை ஆசிரியர்களில் லோகிக்குப் பிரியமானவர்கள் தோப்பில் பாசியும் பத்மராஜனும்தான். எம்.டி வாசுதேவன்நாயர் ஒரு மேதை என்று லோகி சொன்னாலும் எம்டி உருவாக்கிய கதாபாத்திரங்கள் எல்லாமே கொஞ்சம் செயற்கையானவை , வாழ்க்கையில் இல்லாதவை என்று அவர் எண்ணினார். பத்மராஜன் தான் லோகிக்கு முன்னுதாரணம். கிராமத்துத் திருடனையும் தவளை பிடிப்பவனையும் எல்லாம் கதைக்குள் கொண்டுவந்த சினிமாக்கதைசொல்லி.

லோகியின் பல கதைகளின் வேர் பத்மராஜனில் இருக்கும். கிரீடம் உண்மையில் பத்மராஜனின் ‘பெருவழியம்பலம்’ என்ற கதையின் சாயல் கொண்டது. அதில் ஒரு பெரிய கேடியை சிறுவன் தற்செயலாகக் கொன்றுவிடுகிறான். அவனை கேடியாக ஆக்குகிறது கிராமம். அவன் அதில் இருந்து தப்பி ஓடுகிறான். [மீரா கதிரவன் மொழியாக்கத்தில் இது தமிழில் வெளிவந்திருக்கிறது. கனவுப்பட்டறை வெளியீடு]

லோகிக்குப் பிடித்த மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டிதான். அதன்பின் உறூப். இருவருமே லோகியின் மனம் ஈடுபட்டிருந்த மத்திய கேரளத்தின் கதைசொல்லிகள். எளிமையையும் கவித்துவத்தையும் அடைய முயன்றவர்கள். சென்ற நூறு வருடத்தில் கேரளத்தில் உருவான முதன்மையான ஆளுமை யார் என்ற ஒரு இதழாளரின் கேள்விக்கு லோகி மாதவிக்குட்டி என்று பதில் சொல்லியிருந்தார். நன்றாக ‘மூத்து இறுகிய’ பாலடைப்பிரதன் போன்றது மாதவிக்குட்டியின் நடை என்பார் லோகி. மலையாளத்தில் அவருக்குப் பிடித்த நாவல் உறூபின் ‘சுந்தரிகளும் சுந்தரன்மாரும்’ [தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. சி.ஏ.பாலன் மொழியாக்கம்]

பின்னாளில் லோகி அதிகம் வாசிக்கவில்லை. ‘பஞ்சஸார’ [சீனி] என்று அவர் சொல்லும் பெண்கொஞ்சல்களே அவரது நேரத்தில் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டன. செல்போனை காதோடு அணைத்து கனத்த குரலில் மெல்ல மெல்ல பேசியபடி சிரித்த முகத்துடன் மார்பை வருடிக்கொண்டோ தாடியை நீவிக்கொண்டோ  படுக்கையில் கிடக்கும் லோகியின் முகமே மனத்தில் நீடிக்கிறது. ”செல்போன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு. அது மனித உறவுகளையே மாற்றி அமைத்துவிட்டது” என்று லோகி சீரியசாகவே சொன்னார்.

காம சாஸ்திரம் காமத்தின் முக்கியமான அம்சமாக ‘மந்த்ரணம்’ என்ற விஷயத்தைச் சொல்கிறது. பெண்ணின் காதருகே ஆண் மெல்லிய குரலில் காமத்தைத் தூண்டும்படியாகப் பேசுவது அது. அது பெண்களுக்கு மிகமிக முக்கியமானது. உடலுறவை விடவும் கூட முக்கியமானது என்பார் லோகி. செல்போன் வழியாக மந்த்ரணம் நடத்துவதைபோல வேறு எப்படியும் நடத்த முடியாது. பெண் கதவைச் சாத்திக்கொண்டு மிக அந்தரங்கமாக இருக்கலாம். பேசும் ஆண்கூட அவளைப் பார்ப்பதில்லை என்பதனால் அவள் இன்னும் அந்தரங்கமாக இருக்கலாம். செல்போனால் அவள் காதுக்குள் புகுந்து அத்தனை நுட்பமாகப் பேசமுடியும். ”நேரிடையாக அவள் ஆத்மாவுக்குள் நுழையமுடியும்..”

லோகிக்கு எல்லா பெண்களையும் பிடிக்கும். ‘சுந்தரி அல்லாத பெண்ணே உலகத்தில் இல்லை’ மறைந்த நாடக ஆசிரியர் என்.என்பிள்ளையின் பொன்மொழி. லோகி அதை அடிக்கடிச் சொல்வார். ஆனால் அவரது தனிப்பட்ட ரசனை, அவரைவிட உயரம் குறைவான சிறுமித்தனம் மிக்க சிவப்பான பெண்தான் – ஆமாம், நீங்கள் நினைப்பது சரிதான்.

லோகி அதிகம் சினிமா பார்ப்பதில்லை என்று சொன்னால் நம்பக் கஷ்டம்தான். எப்போதுமே அவர் அதிக படம் பார்த்தவர் அல்ல. சிறுவயதில் அவருக்கு வாசிப்புதான் முதல் ஈடுபாடு. பின்னர் நாடகம். சினிமாவுக்கு வந்தபின்னர் அவர் சினிமா பார்த்தது குறைவு. என்ன பொதுபோக்கு போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது ஓடும் படங்களைப் பார்ப்பார். கணிசமான படங்களில் லோகி பாதியிலேயே தூங்கிவிடுவார். பலமுறை நான் அவருடன் படம் பார்க்கச் சென்றிருக்கிறேன்.  இடைவேளைக்குப்பின் அருகே நல்ல குரட்டை ஒலிக்கும்

இந்நூற்றாண்டின் மகத்தான படங்கள் என்று சொல்லப்படும் உலகசினிமாக்களில் அனேகமாக எதையுமே லோகி பார்த்திருக்கவில்லை. ஆர்வமில்லை. ஒருமுறை ஷாஜி குருதத்தின் அத்தனைபடங்களும் அடங்கிய ஒரு செட் வாங்கி லோகிக்கு அன்பளிப்பாக அளித்தார். லோகி அதை பிரிக்காமலேயே ஆறுமாதம் கழித்து மீரா ஜாஸ்மினுக்கு அன்பளிப்பாக அளித்துவிட்டார். லோகி ஈடுபட்டது நேரடி வாழ்க்கையில். அதில் இருந்து அவர் தன் படங்களை உருவாக்கினார்.

”ரசிகன்” என்ற சொல்லுக்கு மலையாளத்தில் மூன்று பொருள். நகைச்சுவை உணர்ச்சி கொண்டவன், ரசனை கொண்டவன், மிகச்சிறந்தது. மூன்றுமே ஒன்றுதான் என்பார் லோகி. ரசம் என்றால் சாராம்சம். சாறு. அதை உண்பவன் ரசிகன். இந்த பூமி ஒரு ஆரஞ்சுப்பழம். அதை அப்படியே பிழிந்தால் வரக்கூடிய ரசம் இருக்கிறதே அதை குடித்தபடியே வாழ்க்கூடியவன்தான் ரசிகன்..” லோகி சொல்வதுண்டு. லோகி நான் கண்ட மிகச்சிறந்த ரசிகன்.

முந்தைய கட்டுரைசாருவின் புது அவதூறு
அடுத்த கட்டுரைமீசை:கடிதங்கள்