விழா மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,
விழா நிமித்தம் உங்களையும் நண்பர்களையும் சந்திக்க முடிந்தது மிக்க மகிழ்வளிக்கிறது.மகிழ்ச்சி என்பதைவிட இது மனதை நிறைக்கும் ஒரு அனுபவம் என்றே சொல்ல வேண்டும், ஒரு விதமான பூரிப்பு.

எழுத்தாளர்களை நேரில் சந்திப்பது ஏமாற்றமாகவே முடியும் என்ற‌ பொதுவான அபிப்பிராயத்தைதைத் தகர்த்தது தங்களை சந்தித்த அனுபவம்.எனக்குத் தங்களைப் பற்றி மனதில் இருந்த பிம்பத்திற்கும் நேரில் கண்ட ஆளுமைக்கும் வித்தியாசமே இல்லை , நேற்று எழுத்தில் விட்டதை இன்று நேரில்தொடர்வது போல தான் இருந்தது .

விழாவிற்கு முதல் நாள் நண்பர்கள் அரங்கன் செல்வேந்திரன் இருவரையும் சந்தித்த சில நிமிடங்களிலேயே இந்த விழா திறமையான கைகளிலே இருக்கிறது என்ற நம்பிக்கைவந்து விட்டது.பின் விஜயராகவன் ,ராம், ஸ்ரீனிவாசன் , ரவி ,ராதா கிருஷ்ணன் என்று செயல் வீரர்களை சந்தித்த பொழுது இனியெல்லாம் சுகமே என்று நினைத்துக்கொண்டேன்.

அறையில் உங்கள் கைகளைப் பற்றுகையில் உணர்ந்த மென்மை இரண்டு நாட்களாகத் தொடர்ந்த படியே இருந்தது, ரவி அவர்களின் வீட்டு மாடியில் நிலவொளியில் உங்களுடன் உரையாடியது ஒரு இனிய அனுபவம் ,அந்த சரளமும் வேகமும் தீவிரமும் நகைச்சுவையும் முதன் முறையாக நேரில் காணக்கிடைத்தது.”இந்த மொழிபெயர்ப்பைப் பத்தி என்ன நினைக்கறீங்க” என்று நண்பர் ஒருவர் ஆரம்பிக்கும் பொழுது அதிகாலை இரண்டு மணி :)

ரவி அவர்களின் எளிய நட்பும் தடையற்ற விருந்தோம்பலும் சிறப்பு, கொங்கு மண்டல விருந்தோம்பலை நீண்ட இடைவேளைக்குப்பிறகு உணரமுடிந்தது சிறு வயது மிட்டாய் தித்திப்பு போல‌.

அடுத்த நாளும் ஒரு இனிய உதயம், கவிஞரைக் கோவை ரயில் நிலையத்தில் சென்று வரவேற்கும் வாய்ப்பு , அவர் கைகளைப் பற்றிக்கொண்டு வாழ்த்தி சில தினங்களுக்கு முன் தொலைபேசியதை நினைவுபடுத்தினேன்.அவர் கவிதையைப் போலவே தான் அவரும் இருந்தார்.

கவிஞர் வந்த உடனேயே கிருஷ்ணன் தன் கேள்விகளுடன் தயாராக‌ இருந்தார் .ஹிண்டு பேட்டிக்கான ஒத்திகை போன்றிருந்தது .கவி எழுச்சியை , கவி மனதை அன்றாட வாழ்க்கை நெருக்கடியிலிருந்து இடையில் தக்க வைத்துக்கொள்ள வாழ்க்கையை எளிமைப்படுத்துவதே ஒரே வழி என்று கூறினார் .நண்பர்கள் ஒவ்வொருவராக வாசலில் நின்று அறிமுகம் செய்து கொள்கையில் ஆமாம் இது கல்யாணம் விசேஷமேதான் என்று நினைத்துக்கொண்டேன்.

ஸ்ரீனிவாசன்,ஜடாயு,சுனீல்,சீனு,ராம் ,பிரசாத்,சதீஷ் ,செந்தில், வேலன், விஜயராகவன்,ராதா கிருஷ்ணன்,ஜா ஜா,சித்தார்த் , கோபி ,மற்றொரு கார்த்திக் என்று ஒவ்வொருவரும் மின்கம்பத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணுக்கமாய் வந்தமரும் பறவைகள் போல நினைவில் அமர்ந்து கொண்டனர்.ராம் சுவற்றில் அடித்த ரப்பர் பந்தாக அங்கும் இருந்தார், இங்கும் இருந்தார்.தொற்றிக்கொள்ளும் உற்சாகம்.

சேர்ந்து இருந்து ,கூடி அமர்ந்து பேச்சு, பேச்சு, பேச்சு என்று ஒன்றைத் தொட்டு இன்னொன்று என்று தன்னிச்சையாக செல்லும் கலந்துரையாடலின் மயக்கமே தனி.பெரும்பகுதிக்கு நான் ஒரு மாணவனாகவே அமர்ந்திருந்தேன்.நீங்கள் பல முறை பல்வேறு தளங்களின் பலருடன் ஒரு தொடர் உரையாடலில் / விவாதத்தில் இருக்கிறேன் என்று குறிப்பிடும் பின்னணி இப்பொழுது புரிந்தது.

இசை கேட்கப் பிடிக்குமே தவிர அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது ,சுகாவின் சொல்வனம் கட்டுரைகள் சில (முக்கியமாக பண்டிட் பாலேஷ் பற்றி ) இசை ரசனை ,தரம் சார்ந்து பல திறப்புகளை நிகழ்த்தியது,அதை அவரிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ராஜாவையும் அவரையும் சந்திக்க முடிந்தது நிறைவாக இருந்தது அதை விட முக்கியமாக இசை பற்றி ஒரு அடிப்படைப் புரிதலையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் கிளர்ந்து விட்டது.

உங்கள் உரையின் இறுதியில் நீங்கள் தேவதேவனின் கவிதைகள் பல நூறு வருடங்கள் கழித்து இன்றிருக்கும் அனைத்தும் அழிந்து மட்கிப் போனாலும் மிஞ்சி நிற்பது தேவதேவனின் வரிகளாக மட்டுமே இருக்கும் என்று தமிழின் முதன்மை எழுத்தாளனாக நின்று அறுதியிட்டுக் கூறியது கவிஞருக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.

கல்பற்றா மேடையை விட்டு இறங்கியதுமே அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன்,கச்சிதமான கவிநயமான பேச்சு , அவரைத் தமிழ் கற்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன் :)

தேவதேவனின் அமைதி கவிதை , கல்பற்றாவின் பேச்சு கவிதை.
ரஜினிக்கு அடுத்தபடி style ஜ வெளிப்படுத்துபவர்கள் கவிஞர்கள் என்றே தோன்றுகிறது.

சு.வெங்கடேசன் அவர்கள் சந்தித்தது ஒரு எதிர்பாராத சந்தோஷம்.

சுரேஷ் , ராம் மற்றும் புதிய நண்பர் ஆனந்தின் பாட்டும் அது தொடர்பான சிறு அறிமுகமும் ஆனந்தமான ஒரு இளைப்பாறல் .குறிப்பாக ஆனந்தின் கேளடி கண்மணி, தொழில்முறைப் பாடகருக்கே உரிய நுணுக்கத்துடன் பாடினார், ராமின் கிளாசிகல் பாடல்கள் , சுரேஷின் எம்.எஸ்.வி ராஜா தொடர்பான சில அவதானிப்புகள் பாடல்கள்.ராம் நன்றாகவே பாடுகிறார் அதற்காகவே அவரின் “சீராட்டுகளை”ப் பொறுத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன் :)

இதையெல்லாம் தாண்டி ஞாயிறு மாலை நடந்த நிகழ்வே என்னளவில் உச்சம் என்று தோன்றுகிறது.இளையராஜா நிகழ்ச்சிக்குப் போகத் தயாராகி நீங்கள் யாருக்காகவோ காத்திருக்கும் தருணம் , யாராக இருக்கும் என்று நான் யோசித்தபடியே இருந்தேன்.இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இறங்கிய அந்த இரு ராஜா ரசிகர்களை இல்லை பித்தர்களைக் கண்டதுமே எனக்குள் ஒரு ரகசிய குதூகலம்.

சரிந்த புத்தக அலமாரியை யாரோ சீர்படுத்தியது போல ,முன்தினம் ஏதோ வகையில் சீர் குலைந்த ஒரு ஒழுங்கு சீராகி சமநிலை திரும்பியது போல.

கார்திக்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு என்னால் காலையில்தான் வரமுடிந்தது. கல்யாணமண்டபம் வந்திருந்தேன். நீங்கள் இல்லை. இளையராஜாவை வரவேற்கச்சென்றிருந்தீர்க்ள் என்று சொன்னார்கள். அங்கே நடந்த சந்திப்புகளில் கலந்துகொண்டேன். கவிஞர் தேவதேவனைச் சந்தித்ததை என்னுடைய வாழ்க்கையின் பெரும் பேறாகவே நினைக்கிறேன். குழந்தைபோல இருந்தார் கவிஞர். எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு வளர்ந்த குழந்தை. என் பெயரை நான் சொன்னதும் நாம சந்திச்சிருக்கோமா என்று கேட்டார். ஆமா சார் நிறையவாட்டி கவிதையில் சந்திச்சிருக்கோம் என்று சொன்னேன்

நான் உங்களிடம் முறையாக அறிமுகம்செய்துகொள்ளவில்லை. நீங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தீர்கள். ஆனாலும் நான் உங்கள் அருகே நின்று கவனித்துக்கொண்டே இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கே நீங்கள்தான் மூலகாரணம். ஆனால் ஒன்றுமே உங்களை பாதிக்காதவர் மாதிரி இருந்தீர்கள்

விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. எல்லாரும் நன்றாகப்பேசினார்கள். ராஜகோபாலனும் நீங்களும் பேசியதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கே மகுடம் என்பது கூடத்தில் கல்பட்டா நாராயணன் அவர்களிடம் வாசகர்கள் நடத்திய அருமையான உரையாடல்தான்

கார்த்திகேயன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு நான் வந்திருந்தேன் -குழந்தையுடன் வந்திருந்தேன். உங்களுக்கு ஞாபகம் வருவதற்காக. நலமாக இருக்கிறீர்களா?

நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. கொஞ்சம் கூட்டம் அதிகம். என்றாலும் எல்லா ஏற்பாடுகளும் நன்றாக இருந்தன. இசைஞானியை அவ்வளவு அருகே பார்க்கமுடிந்ததைப் பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.

இந்த விழா எக்காரணம் கொண்டும் கோவையை விட்டு வெளியே நிகழக்கூடாது

செந்தில்குமார்

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 5
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 6