விழா-மேலும் கடிதங்கள்

அன்பின் ஜெ..

விழா மிக அழகான. பொருத்தமான இறை வணக்கத்துடன் துவங்கியது.

நாஞ்சிலின் உரை – நன்றாக இருந்தது. விழா நாயகனை விட, முக்கிய விருந்தினரை விட மிக அதிகம் பேசியிருந்தாலும், அது தேவதேவனை ஒரு தளத்தில் பொது மக்கள் மனத்தில் இருத்தும் ஒரு setting ஐ அமைத்தது என்று சொல்லலாம். சங்கக் கவிதையை நோக்கிச் செல்லும் கவிதை என்று அவர் எடுத்துச் சொன்ன ஒரு புள்ளியைக் கொஞ்சம் பெரிதாக்கி, பின் வருபவர்கள் பேசியிருந்தால், அது பொது மக்களுக்கு, உண்மையான கவிதை என்றால் என்னவென்று எடுத்துச் சொன்ன மாதிரியிருந்திருக்கும். சொல் அலங்காரம் கவிதையல்ல என்றும்.

கல்பற்றா நாராயணன் மிக அழகாகப் பேசினார். மொழி பெயர்ப்பு தேவையில்லை என்பதே பல பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது. எனக்கும் அப்படியே தோன்றியது. கோவை ஈரோடு நகரங்களில் மலையாளிகள் அதிகம் வசிக்கின்றார்கள். குறைந்த பட்ச மலையாள வார்த்தைகளை அனைவரும் அறிவோம். மொழி பெயர்ப்பு, பேச்சு ஓட்டத்தைத் தடை செய்து எரிச்சலூட்டுகிறது. எனக்குக் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது. அது பற்றிய ஒரு ஜோக்கை உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தேன். கல்பற்றா ஒரு கவிஞர் என்பதை அவர் பேச்சே சொன்னது என்று சொல்வேன்.

இளையராஜாவின் பேச்சு – எதிர்பார்த்த வகையில் தான் இருந்தது. மண்ணின் மரபை, அவர்களின் இதயத்தைத் தொடும்படியாகத் தந்த ஒரு பெரும் இசைவாணன், அதே மரபின் நீட்சியான ஒரு மகாகவிஞனுக்கு விருது வழங்கியது ஒரு பெரும் பொருத்தம். இளையராஜவின் பேச்சுக்களை, அவர் இசை உருவாக்கும் ஒரு க்ரியேட்டிவ் மனம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அவரை அருகில் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

நிகழ்ச்சியின் உண்மையான உச்சம் உங்கள் பேச்சு. கவிதை என்னும் பொருளை நீங்கள் எடுத்துச் சொன்ன விதம்.. கவிதையின் அனுபவம் – குழந்தையின் புத்தம் புதிதான பார்வை, முதியவர்களுக்குத் தொடுகை தரும் அனுபவம் என்று புதிய தளத்தில் கவிதையை வைத்துப் பேசியது பார்வையாளர்களுக்கு ஒரு பேரனுபவமாக இருந்ததை உணர முடிந்தது. முத்தாய்ப்பாக உங்களின் தேவதேவனின் கவிதையின் காலமின்மையை உணர்த்திய கட்டியமும் மனதிலேயே இருக்கிறது.

தேவதேவனின், ஏற்புரை, ஆச்சர்யமாக, சுவாரஸ்யமாக இருந்தது, மீதி இருந்த பாதிப் பேர், மிக அமைதியாக இருந்து கேட்டனர். மூன்று மணி நேரம், ஒரு uncomfortable இருக்கையில் இருந்த அசௌகர்யம் தாண்டி, பார்வையாளர்கள் அமைதி காத்ததின் பின்னணியில், தேவதேவனின் உரையின் சாராம்சத்தின் உண்மையும் இருந்தது.

விழா நடந்த அரங்கு – அழகான கட்டிடம். சென்னை தக்கர் பாபா கட்டிடம் இதற்குச் சரியாக அமைந்திருக்காது. கோவையின் மிக முக்கியமான இடத்தில் அமைந்த அரங்கு. இதைத் தேர்ந்தெடுத்தது, நம் குழுவின் மிகச்சரியான முடிவு.

ஆனால், விழா நடத்தியதில் எனக்குப் பலகுறைகள் தென்பட்டன. இதை, உங்கள், ‘பந்தி’ கட்டுரையின் தொடர்ச்சியாக வாசித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விழா ஒரு பொது விழா. பொது மக்களுக்கு இலக்கியத்தையும், இலக்கிய வாதிகளையும் அறிமுகப் படுத்தும் ஒரு நிகழ்வு, முக்கிய விருந்தினர், மேதைமையிலும், பொதுத் தளத்திலும் ஒரே சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் கலைஞன். நூற்றாண்டுக்குச் சில முறை நிகழும் அதிசயம்.

எனது பட்டியல், நமது அடுத்த நிகழ்வை இன்னும் சிறப்பாகச் செய்ய:

1. மூன்று மணி நேர பொது நிகழ்ச்சி – மிகவும் நீளம். பொது நிகழ்ச்சி என்பதை மனதில் வைத்துக் குறைத்து இருக்கலாம். 1 1/2 – அல்லது அதிகபட்சம் 2 மணி நேரம்தான் சரியாக இருக்கும்.

2. அதே போல், 7 பேர் கிட்டத்தட்ட 20-25 நிமிடம் பேசுவதற்குப் பதிலாக, (வரவேற்புரை தவிர்த்து) – முக்கிய விருந்தினர், தலைமை, சிறப்புரை, ஒரு விமரிசனம் – ஏற்புரை – 15-20 நிமிடம் – crisp and precise. இது பொது நிகழ்வுக்கு மிக முக்கியம்.

3. நமது ஊரில், கவிதையின் உச்சம் என்பது, வானம்பாடிக் கவிதைகள் என்றே அறியப் பட்டிருக்கிறது. தேவதேவனின் கவிதைச் சாதனை என்ன என்பதும், பெருங்கவிகளின் தரத்தில், தேவதேவனின் இடம் என்னவென்பதையும், ஒரு அழகான audio visual presentation ஆகக் கொடுத்திருக்கலாம். பொது மக்களின் மனதில், பாரதிக்கு அடுத்த ஒரு மகாகவி இதோ இங்கே அமர்ந்திருக்கிறான் என்பதை அழுத்தம் திருத்தமாக மக்கள் மனத்தில் register செய்திருக்கலாம்.

4. மேடை சாங்கியங்கள்: விருதை யார் யாருக்கு எடுத்துக் கொடுப்பது போன்ற சிறு வழக்கங்கள். அவற்றில் தடுமாறும் போது, அது ஒரு ஜோக்காகி விடுகிறது. விழாவின் முக்கியத்துவத்தையே ஒரு நகைச்சுவையாக்கி விடக் கூடிய அபாயம் கொண்டவை இவை. அதே போல், மேடையில் விழா நடந்து கொண்டிருக்கும் போதே மக்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்து கொண்டேயிருந்தது. நடப்பது நம் வீட்டுத் திருமணமல்ல. ஒரு மாபெரும் பொது விழா.

5. முக்கிய விருந்தினரைக் கவனித்துக் கொள்ளுதல் – இதற்கென ஒரு தனிக் குழு அமைதல் மிக முக்கியம். இவ்விடத்தில் ஒரு நிறுவன அமைப்பே சரி. ஆர்வமுள்ளவர்கள் எல்லாம் பங்கு பெறுவதாக அமைவது என்பதாக அமையக் கூடாது. மதியம் நாம் தங்கியிருந்த திருமணக் கூடத்தில் பந்தி அப்படி இருப்பது ஓ.கே. ஆனால், இளையராஜா போன்ற ஒரு பெரும் வி.ஐ.பி வரும் போது, அது தொடர்பான விஷயங்கள் மிக முக்கியமாகக் கவனிக்கப் பட்டிருக்க வேண்டும். அவருக்கான ஒரு dedicated வாகனம், அவருக்கான, குறைந்த பட்சம் இரண்டு காவலர்கள் – bouncers (அடுத்த முறை கமலஹாஸன் வருவதாக இருப்பதால்..). அவர் எப்படி அரங்குக்கு வருவார்.. விழா முடிந்தவுடன் எவ்வழியே செல்வார் என்பது வரை – ஒரு மிலிட்டரி precision உடன் திட்டம் இருக்க வேண்டும். அவர் ஒரு பிரபலம் என்பதால், பொது மக்கள் அவர் மீது விழுந்து பிராண்டுவது மிக சகஜம். அதை தமிழ்ச் சினிமா பண்பாடு என்று ஒதுக்கி விடாமல், அது உலகமெங்கும் உள்ள ஒரு பிரச்சினை என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

விழா நடத்துதலின் குறைபாடு என நான் காண்பது, நமது குழுமத்தில் உள்ள ஒவ்வொருவரின் திறனையும் நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோமோ என்று இருக்கும் ஒரு உணர்வு என்று சொல்லுவேன். . அல்லது, அப்படி ஒரு விழா அமைப்பு இருந்திருந்தால், அது visible ஆக அனைவருக்கும் தெரிய இருப்பதும் அவசியம்.

உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது ஒரு முக்கிய இன்பம் எனினும், அது இனிமேல், விழாவுக்கு அடுத்த நாள்தான் என்று ஆக்குவது, மிக முக்கியமான ஒரு விதியாக வேண்டும்.

ஒரு உன்னதமான நோக்கை மக்கள் மத்தியில் வைக்கும் குழுவாக எழுந்திருப்பதே, தமிழ்ச்சூழலில் ஒரு சாதனை. அதை ஒரு மக்கள் விழாவாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்துவதும், லௌகீகச் சூழலில், ஒரு பெரும் நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் நடத்துவதும் சாதாரண விஷயங்கள் அல்ல. அந்தச் சாதனைக்குத் தலைவணங்கியே ஆக வேண்டும்.

ஆனால், இச்சாதனையை, ஒரு பெரும் பொது நிகழ்வாக நடத்தும் போது, அதை ஒரு கச்சிதமான – precise and crisp ஆன நிகழ்வாக நடத்த வேண்டிய அடுத்தக் கட்டத்துக்கு நாம் போக வேண்டும்.

பாலா

அன்புள்ள பாலா

நன்றி

விழாவை நடத்திமுடித்தபின் அதன் பிழைகள் குறைகளை சீர்தூக்கிப்பார்ப்பது எங்கள் வழக்கம். அதன்படி நாங்கள் நடத்தியவற்றில் விமர்சகர் கிருஷ்ணனின் குறைவான குற்றச்சாட்டுகளைப்பெற்ற விழா இதுவே என்பதில் எங்களுக்கு பெருமிதம்.

பொதுவாக இத்தகைய விழாக்களைச் சிறப்பாகச் செய்பவர்கள் இருவகை. ஒன்று, விழா எடுப்பதையே தொடர்ச்சியாகச் செய்துவருபவர்கள். அவர்களுக்கு அனுபவம் அதிகம். ஆனாலும் குளறுபடிகள் இருப்பதை கவனித்திருக்கிறேன். நாங்கள் இதை ஒரு தனிப்பட்ட ஆர்வத்தால் செய்கிறோம்

விழாக்களுக்கு ஈவண்ட் மேனேஜர்கள் எனப்படும் தொழில்முறை நிபுணர்களை அமர்த்துபவர்கள் இரண்டாம் வகை . எங்கள் பட்ஜெட் அதற்கு ஒப்புக்கொள்ளாது. நாங்கள் நடத்திய இந்த இலக்கியவிழாவை இதில் பாதிசெலவில்கூட இன்னொருவர் நடத்தமுடியாது.

வரும்காலங்களில் அனுபவம் மூலம் மேம்படுகிறோம்

ஜெ

ஜெ

உண்மையில் அவர்களைத்திரும்பக்கூட்டி வந்து இளையராஜாவிடம் அழைத்துச்சென்றது பெரிய விஷயம். பொதுவாக யாரும் இதை யோசித்து செயல்படுத்தி இருக்க மாட்டார்கள். அதைப்படிக்கையில் எனக்கும் கண்ணில் நீர் முட்டியது. சீனு எழுதியிருந்தாரே தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டு இளையராஜாவைக்கண்டு நின்ற ஒருவர் பற்றி. தியானம் செய்யும் ஒருவர் கண்ணிலிருந்து நீர்வழியப் பார்த்திருக்கிறேன். இதுவும் ஒருவகை தியான அனுபவம்தான்.

இளையராஜா கையெழுத்திட்ட இடத்தை கவனித்தேன். வலதுகைப்பக்கம் ஒப்பமிட எளிதாய் இருக்கும் இடம் அது. யோசித்தெல்லாம் செய்திருப்பாரில்லை. ஆனால் ஒரு சிறுவனாக ரமணருக்கு அருகில் ஒருவர் அமர்ந்தால் அவரது கை தலையைத் தொட்டு ஆசி செய்யக்கூடிய இடமும் அதுவாகத்தான் இருக்கும்.

அருணகிரி

அன்புள்ள அருணகிரி,

ஆம் நானும் அதை கவனித்தேன். ஒரு குழந்தையைப்போல ராஜா மெதுவாகக் கையெழுத்திட்டது அற்புதமான காட்சி

ஜெ

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்ட ஒருவன். உங்கள் நண்பர்களுடன் நானும் இருந்தேன். அறிமுகம் செய்துகொண்டேன். நினைவிருக்கலாம்

நான் இன்றுவரை சந்தித்தவற்றில் மிகச்சிறப்பான இலக்கிய விழா இதுதான். எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் உங்கள் நண்பர்கள் மாறி மாறிக் கிண்டல்செய்துகொண்டபடி பேசி சிரித்ததும் எப்போதும் எங்கும் இலக்கியமும் சங்கீதமும் நிறைந்திருந்ததும் நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா என்ற உணர்ச்சியை உருவாக்கின.

விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த விஐபி மேடையில் இருந்தபோதும் கூட விழா தேவதேவனையே மையம் கொண்டு நடந்தது மிக ஆச்சரியமானது. தேவதேவனின் சில கவிதைகளை வந்திருந்தவர்களுக்கு அச்சிட்டுக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது

கே.கண்ணன்

அன்புள்ள கண்ணன்,

நன்றி

நல்ல யோசனைதான். ஆனால் தோன்றவில்லை. தேவதேவன் ஆவணப்படத்தை அங்கே திரையிடலாமென நினைத்தோம். நேரமில்லை

ஜெ

முந்தைய கட்டுரைவல்லுறவும் சட்டமும்
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 5