அன்புள்ள ஜெயமோகன் மற்றும் ராஜகோபாலன்,
உங்கள் இருவரின் பேச்சின் கட்டுரை வடிவம் கண்டேன். அதை பற்றி நிறைய சொல்ல முடியும் என்றாலும் அதன் வடிவம் சார்ந்த ஒன்றை மட்டும் சொல்லியே ஆகவேண்டும். இவை இரண்டுமே கண கட்சிதமாக ஆக்கப்பட்ட ஒரு உரை. இதில், நம் பேச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. உங்கள் உரைகளில் மேடையில் இருப்பவர்கள் பற்றி ஒவ்வொருவராக புகழ்ந்து, அவர்களின் பராக்கிரமங்களை மணிகணக்காக சொல்லிகொண்டிருக்கவில்லை (அவர்கள் எல்லோரும் அதற்க்கு முழுதும் உரியவர்கள் எனும் போதிலும்). 1992-ல் நானும் அவரும் என்று தொடங்கி, நீங்கள்சாப்பிட்ட தோசையின் மொறுமொறுப்பை, அதற்கு அவர் பில் கொடுத்ததை பற்றி வியந்து 30 நிமிடம் பேசவில்லை. இவற்றை சொல்லவே கூடாது என சொல்லவில்லை. அதற்கு இடம் இருக்கிறது.
எத்தனை எளிதாக இந்த விழா இளையராஜா என்ற வரலாற்றின் புகழ் பாடுவதாக மட்டும் அமைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அமையவில்லை எனும் போது அமைப்பாளர்களின் நோக்கம், அதன் நேர்மை பாராட்டுக்குரியதாகிறது. இதற்கு இளையராஜா அவர்களின் எளிமையும் காரணமாக இருக்கலாம். சென்ற வாரம், கீதை பற்றிய ஒரு சொற்பொழிவு கேட்க போயிருந்தேன். அதை ஆற்றியவர் எப்படி அமரிக்க குடிமகன் ஆனார் என்று(மட்டும்) அறிந்து வந்தேன்.
உங்கள் பேச்சுக்கள் மிக செறிவாக இருக்கிறது. விழாவின் நோக்கத்தை சுற்றி படரும் ஒரு கோடி போல. தனித்து வளரும், மூடி வளரும் ஒரு களையாக இல்லை. இந்த விழாவின் நோக்கம் தேவதேவன் அவர்களை கௌரவித்தல் மட்டும் இல்லை. அவர் கவிதைகளை எங்களுக்கு அறிமுகபடுத்தி, எங்களுக்கும் கொஞ்சம் நீர் பாய்ச்சுதலே. (அது தானே அவருக்கு கெளரவம்). இந்த இரு உரைகளும் அதை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கின்றன. அதில் வெகுவாக வெற்றியும் அடைந்திருக்கின்றன. அதிலும், ராஜகோபாலன் அவர்களின், ஒரு கருத்து என்னை மிகவும் கவனிக்க செய்தது. தேவதேவன், இயற்கையை வியந்து, மனிதன் அற்ப வாழ்வை மறந்தோ, இழித்தோ பாடும் ஒருவர் இல்லை. அந்த சிறு புள்ளியும் இயற்கையில் சேர்த்தி என வாழும் கவிதைகள் அவரது என்பதே.
இந்த விழா என் நண்பர்களுடையது என்பதை சம்பிரதாயமின்றி சொல்லும் உங்கள் அறம் வாழ்க!
விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி,
கௌதமன்
அன்புள்ள கௌதமன்,
விழா தேவதேவனுக்கே என்பதில் எப்போதும் எங்களுக்கு ஐயமில்லை. நாங்கள் வைத்த விளம்பரங்கள் அழைப்பிதழ் உட்பட இளையராஜா வந்ததும் தேவதேவனுக்காக மட்டுமே. விருது எப்போதும் அதைப்பெறுபவர்களால் கௌரவிக்கப்படுகிறது
விஷ்ணுபுரம் விருது எப்போதும் அப்படித்தான் இருக்கும்
நன்றி
ஜெ
***
அன்புள்ள ஜெ,
’இளையராஜா தேவதேவன் இருவருமே தத்தம் கலை தவிர பிறிதொன்றும் அறியாதவர்கள்’ என நீங்கள் குறிப்பிட்டது பெரும் உண்மை. கலை வாசல்களை காவல் காக்கும் யட்சிகளின் அருள் பெற்ற அவர்கள் நமது பெரும் வணக்கத்துக்குரியவர்கள்.
இ.ஆர்.சங்கரன்
***
அன்புள்ள சங்கரன்,
உண்மை. ஒரு தருணத்தில் கலைஞர்கள் பிறந்துவிடுகிறார்கள் என்று எனக்குப்படுவதுண்டு. அந்தத்தருணம் அழிவிலலமல் நீடிக்கிறது
ஜெ
***
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் முதன் முறையாக இந்த வருடம் தான் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தேன். அருமையாக இருந்தது. சென்ற வருடமே திட்டமிட்டும் பணி நிமித்தமாக அந்த நாளில் கோவையில் இருக்க முடியவில்லை.
விழாவுக்கு முன்பாகவும் அடுத்த நாளும் நண்பர்கள் தங்கியிருந்த திருமண மண்டபத்துக்கு வந்திருந்தேன். அடுத்த நாள் சுமார் இரண்டு மணி நேரம் பாடல்களை ரசித்தும் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டும் இருந்தேன். மன நிறைவான சங்கமம்.
பல நண்பர்களை இணைத்து அவர்களை அரவணைத்துச் செல்லும் உங்களின் பாங்கு மற்றும் நண்பர் குழாம் என்னை மிகவும் கவர்ந்தது. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆர்வமும் அதிகரிக்கிறது. கல்லூரி நாட்களில் எழுதிய கவிதைகள் சிறுகதை எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. அடுத்த ஊட்டி சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் வருகிறது. வாய்ப்பிருக்கும் போது இந்தியப் பிரயாணத்திலும் கலந்து கொள்ள ஆசை.
வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர வேண்டும்.
அன்புடன்
கனகசபாபதி.
***
அன்புள்ள கனகசபாபதி அவர்களுக்கு
நன்றி. உங்கள் வருகை எங்களுக்கு கௌரவம்
ஜெ