பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்

பிளந்த சிற்பம்
==========
அசையாப்பொருட்கள் என்ற எண்ணமே
இந்த சிற்பங்களுக்கு இல்லை.
வைத்த பீடங்களிலிருந்து
இறங்கி நடக்கின்றன.

ஒரு குவிண்டால் எடையுள்ள
அந்த பெரிய உலோகச்சிலை
கலைக்கூடத்துப்
படிகளில் ஏறுவதைப்பாருங்கள்

அங்கே,
அந்த கருங்கல்தேவன்
தோட்டத்துப் பூந்தொட்டிகளை உடைத்தபடி
உலவுகிறார்.

ஒரு மரத்தெய்வத்தின் கைவலிமையைப் பார்த்தீர்களா?
பிளாஸ்டர் ஆஃப் பாரீசில் வடித்த
அந்த புத்தரின்
தலையை அடிக்கக் கிளம்பியிருக்கிறார்.

இதோ ஃபைபர் கிளாஸில் செய்யப்பட்ட ஒர் உருவம்
என்னை நோக்கி நடந்து வருகிறது.
என்னையே உற்று நோக்கி
தொட்டும் தடவியும் நிற்கிறது.

அட, என்ன இது?
நீங்கள் ரசிக்கவேண்டிய
ஒரு சிலையல்ல நான்.
பின்னே யார் என்றா? நல்ல கதை!
நான்தான் சிற்பி.
என்ன கேட்டீர்கள்? என் சிற்பங்கள் எங்கே என்றா?
எனது சிற்பம் இந்த கலைக்கூடத்திலில்லை.
காணவேண்டுமென்றால் கூடவே வாருங்கள்

மண்ணாலான ஒன்று.
ஒரு ஹரிஜனக் காலனி
நீரில்லாத ஒரு கிணறு.
கள்ளுக்கடையும் செங்கொடியும்
நட்சத்திரங்களும் உள்ள ஒரு குன்று.

கவனித்துப்பார்த்தால்
அதன் நெற்றியில் ஒரு பிளவு தெரியும்.
அதில்தான் குடியிருக்கிறேன்.
வருகிறீர்களா?
***********

காற்றே கடலே
============

திண்ணையிலிருந்து
உள்ளே எடுத்துவைக்க மறந்த கிண்டி
திருட்டுபோனதுபோல
வயல்கரையில் இருந்த ஒரு குன்று
காலையில் காணமாலாயிற்று.
மழையும் வெயிலும் சேர்ந்து
எங்கெல்லாம் தேடின!

பிறகும் மிஞ்சிய ஒரு குன்றின்
விலாவில் என் வீடு.

இப்போது குன்றுகளெல்லாம்
சாலைபோடும் வேலைக்குப் போகின்றன.
அழும் வீடுகளை உறங்க வைத்துவிட்டு.

பந்தலம் குன்று, புதுக்குன்று,
புளியறக்குன்று, பறக்குன்று,
சோலைக்குன்று, சந்தைக்குன்று,
கரும்பனைக்குன்று…
பெயர் அழைக்கப்படும்போது
வரிசையாக வந்து
லாரியில் ஏறவேண்டும்.
சொன்ன இடத்தில் இறங்கவேண்டும்.
சமப்படுத்திய தலையில்
எட்டுவரிப்பாதையை சுமந்து நிற்கவேண்டும்
தலைக்குமேல் காலம்
‘சூம்’என்று பாய்ந்துசெல்லும்.
அசையக்கூடாது.

காற்றே, கடலே,
தென்னை ஓலைகளே!
நாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக
ஆகப்போகிறோம்
இனிமேல் சந்திக்கமுடியாமலாகலாம்.

பஷீரின் கதையில் நாராயணி*
வானத்தை நோக்கி சுள்ளியெறிந்தது போல
நீங்களும் ஏதாவது அடையாளம் காட்டுங்கள்.
காத்திருப்பேன்.
* பஷீரின் ‘மதில்கள்’ கதையில் பெண்சிறைக்குள் இருக்கும் நாராயணி ஆண்சிறைக்குள் பெரிய மதிலுக்கு இப்பாலிருக்கும் கண்காணாத காதலன் பஷீருக்கு காதலை தெரிவிக்க ஒரு சுள்ளியை வானம் நோக்கி விட்டெறிவாள்.

கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதைகள்

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

முந்தைய கட்டுரைசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதை ஒரு சமையல்குறிப்பு