தருமபுரி

நான் 1990ல் தருமபுரிக்கு முதல்முறையாகச் சென்றிறங்கினேன். முதல்நாள் முதலில் நான் கண்ட அனுபவமே என் வாழ்க்கையின் பல பார்வைகளை தீர்மானிப்பதாக இருந்தது. அதைப்பற்றி சிலவருடங்களுக்குப்பின் ஒரு சிற்றிதழில் எழுதியிருந்தேன். அதையொட்டி விவாதங்களும் நிகழ்ந்தன. வழக்கம்போல நான் கேரளமேன்மையைப்பற்றி பேசுவதாக எண்ணிக்கொண்ட தமிழ்த்தேசியர்களின் வசைகளுக்கு ஆளானேன்.

பேருந்துநிலையத்தில் இருந்து வெளிவந்து காலைச்சிற்றுண்டிக்காகச் செல்லும்போது செருப்புதைப்பவரிடம் ஒருவர் கிழிந்த செருப்பை கழற்றிப்போட்டு அவரது சாதியையும் கெட்டவார்த்தை ஒன்றையும் சொல்லி ‘டேய் — தைச்சுக்குடுடா, அவசரம்.’ என்று சொல்வதைக் கேட்டேன். அந்த தொழிலாளர் சிரித்த முகத்துடன் ‘இப்ப தீராது சாமி. எல்லா தையலும் விட்டுபோயிருக்குங்க’ என்றார்.

நான் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளானேன். காரணம் குமரிமாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நான் அதற்குமுன் மொத்தமாக ஆறுமாதங்களுக்குள்தான் தமிழகத்தின் மையநிலத்துக்குள் இருந்திருப்பேன். அதுவும் சென்னையில் மட்டும். திருவண்ணாமலையில் சிலநாட்கள். ஒரு சுற்றுலாப்பயணியாக ஒகேனேக்கல் உட்பட பல ஊர்களுக்கு சென்றதும் உண்டு. எனக்கு தமிழக மையநிலத்தின் பண்பாடும் அரசியலும் நேரடி அறிமுகம் இல்லை என்றே சொல்லவேண்டும்.

குமரிமாவட்டத்தில் விளவங்கோடு பகுதி இடதுசாரி அரசியல் மேலோங்கியது. நானெல்லாம் நேரடியாக கேரள அரசியலைத்தான் அதிகமும் கவனித்துவந்தேன். படிப்பு முடிந்து சிலவருட ஊர்சுற்றலுக்குப்பின் கேரளத்தில் வேலைக்குச்சேர்ந்து எண்பத்தெட்டில் இருந்து ஐந்தாண்டுக்காலம் அங்கேதான் இருந்தேன். மலையாள இலக்கியம் கேரளஅரசியல் கட்சிக்கம்யூனில் வாழ்க்கை என்று இருந்தவன் பிறகு மெதுவாக தமிழ் எழுத்தாளனாக என்னை உணர ஆரம்பித்திருந்தேன்.

தமிழில் எழுதுபவன் தமிழ்நாட்டில் வாழவேண்டும் என்றார் ஆற்றூர் ரவிவர்மா. ஆகவே தமிழகத்துக்கு மாற்றலாகி வந்தேயாகவேண்டும் என்று ஆசைப்பட்டு பாலகிருஷ்ணன் என்பவரிடம் பரஸ்பர இடமாற்றத்து விண்ணப்பித்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற சிறிய ஊருக்கு நியமனம் பெற்று வந்திருந்தேன்.

குமரிமாவட்டத்தில் எந்த தாழ்த்தப்பட்ட சாதித் தொழிலாளரையும் அப்படி ஒருவர் சொல்லிவிடமுடியாது. அக்கணமே அந்த தொழிலாளர் அதே செருப்பால் கன்னத்தை பழுக்கவைத்திருப்பார். முடியவில்லை என்றால் எழுந்து கூப்பாடு போட்டு அப்பகுதியில் உள்ள அவரது சாதியினரை எல்லாம் கூட்டியிருப்பார். அடிதடிகளும் வெட்டுகுத்துகளும் சமரசப்பேச்சுவார்த்தைகளுமாக கொஞ்சநாள் கலவரச்சூழல் நிலவும். நான் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கே சாதியடுக்குகள் இருக்கத்தான் செய்தன. சாதிபேதம் இருந்தது. ஆனால் சாதிசார்ந்த இழிவுபடுத்தலை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அப்படி ஒருவர் இன்னொருவரை நோக்கிச் சொல்ல முடியும் என்பதே நான் அறிந்திராதது.

நூறுவருடம் முன்பு குமரிமாவட்டத்தில் அதியுக்கிரமான சாதிய ஒடுக்குமுறை இருந்திருக்கிறது. ஒருவேளை அத்தகைய சாதிய ஒடுக்குமுறை தமிழகத்திலெங்கும் இருந்திருக்காது. தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டினால்தான் தீட்டு என்பதுதான் இந்திய வழக்கம். குமரிமாவட்டத்தில் அவர்கள் பதினாறு அடி தூரத்துக்குள் வந்தாலே தீட்டாகிவிடும். நாயாடிகள் போன்ற சில சாதியினரை கண்ணால் பார்த்தாலே தீட்டாகிவிடும். நாகர்கோயில் கழுதைச்சந்தை இருக்குமிடத்தில் 1870 வரை அடிமைச்சந்தை இருந்தது. அங்கே தாழ்த்தப்பட்டவர்கள் விற்கப்பட்டு வாங்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் நூறாண்டுகளாகவே வலுவான சமூகசீர்திருத்த இயக்கங்கள் குமரிமாவட்டத்தில் நிகழ ஆரம்பித்தன. அய்யா வைகுண்டரின் இயக்கம்தான் குமரிமாவட்ட வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் உரிமைக்குரல். கிறித்தவ மிஷனரிகளின் பணிகள் பரவலாக விழிப்பை உருவாக்கின. அதன்பின் ஒட்டுமொத்தமான சமூக மாற்றத்தை உருவாக்கிய கருத்தியல் இயக்கங்கள் உருவாகி வந்தன. நாராயணகுருவின் பேரியக்கம் அதில் முதன்மையானது. அய்யன்காளியின் இயக்கம் அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்கது.

இவ்விரு இயக்கங்களில் இருந்து காங்கிரஸ் தன் உத்வேகத்தை அடைந்தது. காங்கிரஸும்நாராயணகுருவின் இயக்கமும் அய்யன்காளியின் இயக்கமும் சேர்ந்து நிகழ்த்திய வைக்கம் போராட்டமும் அதைத்தொடர்ந்து சுசீந்திரம் குமாரகோயில் போன்ற இடங்களில் நிகழ்ந்த ஆலயநுழைவுப்போராட்டமும் பெரும் கருத்துவளர்ச்சியை உருவாக்கின. அதன் நீட்சியே கேரளத்தின் இடதுசாரி இயக்கம். இன்றும் குமரிமாவட்ட அரசியலை இடதுசாரிகளும் காங்கிரஸும்தான் தீர்மானிக்கிறார்கள்.

குமரிமாவட்டத்தின் பண்பாட்டையும் சிந்தனையையும் தீர்மானிப்பதில் இடதுசாரிகளுக்கு இருந்த, இன்றும் இருக்கக்கூடிய பங்களிப்பு மிகமிக அதிகம். இடதுசாரிகள் அல்லாதவர்கள் கூட இடதுசாரிச்சிந்தனைகளால் வலுவாக பாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். இங்கே இன்றும் ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் நீதியின் குரலாக ஒலிக்கும் ஒரு தோழர் இருப்பார். அவரை ஒட்டியே அந்த கிராமம் சிந்திக்கும். சாதிசார்ந்த பார்வைகளில் ஐம்பதாண்டுக்காலமாக திட்டவட்டமான மாற்றத்தை உருவாக்கியவர்கள் இடதுசாரிகள். குறிப்பாக மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி. இங்கே சாதிப்போட்டி இன்றிருக்கிறது. அதில் வென்று முன்செல்லும் சாதிகள் உள்ளன சாதிய ஒடுக்குமுறை சாத்தியமில்லை.

1990 முதல் 1997 வரை பாலக்கோட்டிலும் பின்னர் தர்மபுரியிலுமாக பணியாற்றினேன். இக்காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் மிகவிரிவாகச் சுற்றி அலைந்திருக்கிறேன். பல தளங்களில் நண்பர்களை பெற்றிருக்கிறேன். எனக்கு தருமபுரி மாவட்டம் அன்று ஒரு மிகப்பெரிய விந்தையாக, மானுடவாழ்க்கையின் மிகப்பெரிய களமாக, தெரிந்தது. இன்றும் தருமபுரி என்னுடைய நினைவில் ததும்பியிருக்கும் ஒரு நிலம். நான் ஏன் தமிழகம் வரவேண்டும் என்று ஆற்றூர் சொன்னார் என்று அதன்பிறகே புரிந்தது.

நான் இருந்த காலகட்டத்தில் தருமபுரிதான் தமிழகத்தின் மிகமிக பிற்பட்ட மாவட்டம். பெரும்பாலான பகுதிகள் நீர் இல்லாத மேட்டுநிலங்கள். தமிழகத்தின் மழை மறைவுப்பிரதேசம் அது. மழைபெய்தால் சோளமும் கேப்பையும்தான் பயிரிடுவார்கள். அதுதான் பெரும்பாலானவர்களுக்கு உணவு. அங்கே அதிகமும் கண்ணுக்குப்படும் மரம் புளிதான். வருடம்தோறும் புளி ஒரு வருமானம். கணிசமானவர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகளை பத்திவிட்டுக்கொண்டு கம்பிளியை போர்த்தியபடி குவியல் குவியலாக அமர்ந்திருப்பார்கள். கொஞ்சம் குளிர் உள்ள பகுதியாகையால் காலையில் நன்றாக விடிந்தபின்னரே கிராமப்பக்கங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும். கல்பெஞ்சு போடப்பட்ட டீக்கடைகளில் குந்தி அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருப்பார்கள்.

அக்காலத்தில் தருமபுரியை ‘களி-புளி-கம்பிளி’ என்பார்கள். சராசரி தருமபுரிக்காரன் களியை தின்று அன்றாட வாழ்க்கையை ஓட்டுவான். புளியை விற்று வருடத்துக்கு ஒருமுறை துணி எடுப்பான். கம்பிளியைப்போர்த்தியபடி சும்மாவே அமர்ந்திருப்பான். இது ஐம்பதுகள் முதல் அங்கே நிலம் வாங்கி குடியேற ஆரம்பித்த கொங்கு கவுண்டர்களின் பகடியாக இருக்கலாம். தருமபுரியில் பெரும்பாலானவர்கள் வன்னியக் கவுண்டர்கள். அவர்களை கவுண்டரே என்று அழைத்தால் மகிழ்ச்சியடைவார்கள்.

தருமபுரியின் சொந்தமக்கள் நெடுங்கால மேய்ச்சல் வாழ்க்கை காரணமாக மிக ஓய்வான வாழ்க்கைமுறையும் அதற்கேற்ற மனநிலைகளும் கொண்டவர்கள். பேசுவதே நிதானமாகத்தான். கடைநிலை ஊழியர்களிடம் ஒரு சின்ன விஷயத்தை கேட்டு தெரிந்துகொள்வதற்குள் பொறுமை போய்விடும். எல்லாவற்றையும் நிகழ்காலத்தில் நீட்டி நிறுத்தி விவரிப்பார்கள். ‘…நீ இப்ப இன்னா சொல்றே…நான் லேட்டா வந்தேங்கிறே. நான் என்ன சொல்றேன். அஞ்சு நிமிசம்தான் லேட்டுங்கிறேன். அப்ப நீ இன்னா சொல்றே…’

வெளியே இருந்து வருபவர்களுக்கு தருமபுரியில் பெரும்பாலானவர்கள் ஒரே பொருளாதார நிலையில் ஒரே சமூகநிலையில் வாழ்வதாகவே தோன்றும். பண்ணைகளை அமைத்து கிணற்று நீரைக்கொண்டு பெரிய அளவில் மாம்பழமோ கரும்போ விவசாயம்செய்யும் நிலக்கிழார்களான கொங்குக் கவுண்டர்க்ளும் நாயுடுக்களும் மராட்டிய ராவ்களும் மட்டுமே வேறுமாதிரி இருப்பார்கள். ஆனால் சிலநாட்களிலேயே அங்கே உள்ள பேதங்கள் நமக்குத் தெரியவரும். அங்கே எங்கும் எப்போதும் கைநீட்டினால் தொட்டுவிடக்கூடியதாக இருப்பது சாதி.

அதிலும் வன்னியர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மீது இருக்கும் உக்கிரமான வெறுப்பும் விலக்கமும் பீதியூட்டுவது. இத்தனைக்கும் அவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அன்றாட வாழ்க்கை ஒருவரோடொருவர் பின்னிப்பிணைந்து கிடந்தது. ஆனால் மிக மூர்க்கமாக அவர்கள் பேதங்களைப் பேணினார்கள். என்னுடைய சொந்த அனுபவங்களை ஒரு நாவலாகவே எழுத முடியும். அங்கே எனக்கு நெருக்கமான நண்பராக அமைந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்கள். அவர்களின் ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் அந்த இடத்திலிருந்து சுயமுயற்சியால் மேலெழுந்து வந்ததை அடிப்படை மானுட உத்வேகம் என்றே உணர்கிறேன் முன்னேறுவதற்கும் வென்றுசெல்வதற்குமான இச்சை. அதற்கு சுதந்திரத்துக்குப்பிந்தைய இந்திய சமூகம் அளித்த வாய்ப்புகள். இடஒதுக்கீடு.

மற்றபடி தருமபுரியில் சென்ற நூறாண்டுக்காலத்தில் இந்திய சமூகமனத்தை கட்டமைத்த எந்தக் கருத்தியலியக்கமும் எந்த பாதிப்பையும் செலுத்தியதாகத் தெரியவில்லை. எங்களூரில் கடும்சாதியவாதி கூட நவீன வாழ்க்கையில் சாதிக்கு எதிரான நிலைபாடே சகஜமானது என்றும் , தான் அதற்கு எதிராக இருப்பவர் என்றும் உணர்ந்திருபபார். ஆனால் சாதிக்கு எதிராக உலகில் சில பேச்சுகள் நிகழ்ந்திருக்கின்றன என்ற தகவலே தருமபுரியில் படித்தவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. ‘அதெப்பிடிங்க சாதி இல்லேண்ணு ஆகும்?’ என்பார்கள். கண்ணெதிரே இருக்கும் மலையை இல்லை என்று சொல்வதைப்போல வியப்பார்கள்.

ஆனால் நான் அன்று சந்தித்தவரை அங்கிருந்த வன்னியர்களில் மிகப்பெரும்பான்மையினர் கடுமையான திராவிட இயக்க ஆதரவாளர்கள். ஈவேரா பற்றி ஒரு சொல் எதிர்மறையாகச் சொல்லிவிடமுடியாது. ஈவேரா அங்கு பலநூறு முறை வந்திருக்கிறார். அவர் பேசாத ஊர்களே அங்கே இல்லை. பெரும்பாலான வீடுகளில் அவரது காலண்டர்கள் கிடக்கும். அவர் கிட்டத்தட்ட கடவுள். அவரால்தான் எல்லாமே என்ற நம்பிக்கை. ஈவேரா அவர்களிடம் ‘சாதி இல்லை’ என்று கற்பிக்கவில்லை. தலித்துக்களும் சகமனிதர்களே என்று சொல்லவில்லை. அவர்களுடைய கண்ணெதிரே நில உடைமைச்சக்திகளாக இருந்த நாயுடுக்களைக்கூட எதிரிகளாகச் சுட்டிககாட்டவில்லை . அவர்கள் தங்கள் கிராமங்களில் கண்ணால் பார்க்கவே வாய்ப்பில்லாத பிராமணர்கள்தான் அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடை என்று சொன்னார்.

ஈவேரா சொன்னவற்றில் இருந்து அவர்கள் எடுத்துக்கொண்டதும் அந்த கடுமையான பிராமண வெறுப்பை மட்டுமே. பிராமண வெறுப்பு என்பது அவர்களுக்குள் இருந்த அதைவிட தீவிரமான தலித் வெறுப்பின் இன்னொரு பக்கம், அவ்வளவுதான். தனித்தமிழ், தமிழ்த்தேசியம், இனமானம் என எது பேசினாலும் இந்த இரு அடைப்புக்குறிகளுக்குள்தான் அவை இருக்கும். ஈவேராவின் திராவிட இயக்கம் ‘வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லை’ என்ற கோஷத்தை ஆப்தவாக்கியமாகக் கொண்டது. அதனடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன்பின் ஈவேரா அரசியல்ரீதியாக மறக்கப்பட்டார். ஒரு கடவுளுருவமாக மட்டும் எஞ்சினார்.

அங்கே நானிருக்கையில்தான் திடீரென்று ஈவேரா மீண்டும் பிறந்தெழுதார். ஈவேராவின் பேச்சுக்களை விதவிதமாக தொகுத்து பெரியாரியம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். புத்தகங்கள் மேலும் புத்தகங்கள். நான் என் ஊரில் இருந்திருந்தால் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தருமபுரியின் கண்ணெதிரே இருந்த அப்பட்டமான உண்மை அதை நம்ப விடவில்லை. ஈவேராவின் பங்களிப்பைப்பற்றிய என்னுடைய புரிதலை அந்த நேரடி யதார்த்தம் வழியாகவே அறிந்தேன்.

தருமபுரியில் அன்று வன்னியர்களுக்கிடையே வன்னியர் சங்கம் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லை என்ற அந்த பழைய கோஷத்தின் புதிய வடிவம்தான் அது. வன்னியர் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான வன்னியர்களுக்கிருந்தது. அந்த உணர்ச்சியை பாட்டாளிமக்கள் கட்சி பயன்படுத்திக்கொண்டது

அப்போதே தலித் மக்கள் பெங்களூர் ஓசூர் பகுதிகளுக்குச்சென்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தார்கள். முதல்முதலாக அவர்கள் வாங்குவது ஒரு டிவிஎஸ்50 வண்டியாக இருக்கும். அந்த வண்டிகளில் அவர்க்ள் செல்லும்போது ‘நேத்துவர நடந்த்போன கபோதிக்கு வண்டி கேக்குது’ என்று வன்னியர் பொருமுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறேன். அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கும்போது வீட்டுமுன்பக்கத்தை கொஞ்சம் இறக்கிக் கட்டி சன்னலுக்கு திரைச்சீலை போடும்போது வன்னியரிலும் நாயுடுக்களிலும் எழும் மனக்கொந்தளிப்பை கண்டிருக்கிறேன்.

பாலக்கோடு பகுதிகளில் அன்று டீக்கடைகளில் அடையாளம் இருந்தது. ஒரு டீக்கடையில் டீ கேட்டபோது முதலில் ‘பால் இல்லீங்க’ என்றார். பால் இருப்பதை கவனித்தேன். அதை நான் பார்ப்பதைக் கண்டதும் ‘இங்கெல்லாம் நீங்கள்லாம் சாப்பிடக்கூடாதுங்க’ என்றார் அவர். நான் சாப்பிடுவேன் என்றேன். ‘அய்யா கம்யூனிஸ்டுங்களா?’ என்றார். அங்குள்ள கிராமங்களில் ஒரு தாழ்ந்த்தப்பட்ட நண்பரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிராமச்சதுக்கத்துக்குச் சென்ற என்னை ஊர்க்காரர்கள் இருவர் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். எங்கும் எவ்விடத்திலும் துல்லியமான சாதிமுத்திரை.

தமிழகம் வெளியடையாளங்களில் சாதியை இல்லாமலாக்கிக்கொண்டு உள்ளே மேலும் வலுவாக்கிக்கொண்ட ஒரு சமூகம் என்ற எண்ணத்தை அங்கேதான் நான் அடைந்தேன். அதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்ற புரிதலையும். திராவிட இயக்கம் ஒரு பாப்புலிஸ்ட் இயக்கம். அது மக்களை நோக்கி உண்மையைப்பேசாது, மக்களுக்கு எது பிடிக்குமோ எதை அவர்கள் நம்ப விரும்புகிறார்களோ அதையே பேசும். மக்கள் தங்கள் குறைகள் சுட்டிக்காட்டப்படுவதை விரும்புவதில்லை. தங்கள் வீழ்ச்சிக்கு இன்னொரு எதிரியே காரணம் என நம்ப விரும்புவார்கள். பொது எதிரியை சுட்டிக்காட்டி பொதுவெறுப்பை தூண்டி அவர்களை வென்றெடுத்தார்கள் திராவிட இயக்கத்தினர்.

ஆகவே சென்ற இருநூறாண்டுகளில் இந்தியச் சமூகத்தில் பேசப்பட்ட மானுட சமத்துவம் பற்றிய எந்த கருத்தும் சென்றடையாதவர்களாக இருந்தனர் தர்மபுரி மக்கள். ஓர் இனக்குழுவாக அவர்களை திரட்டும் அமைப்பு வந்தபோது அதன் கொடிக்கீழ் திரண்டனர். அதன் மூலம் அவர்களிடம் ஏற்கனவே இருந்த மூடநம்பிக்கைகளும் சாதிநோக்கும் வலுப்பெறவே செய்தன. அதன் விளைவே இன்றைய சாதிக்கலவரம்.

*

சாதிப்பூசல் என்பது இந்தியாவின் வளர்ச்சியின் இயல்பான ஒரு பக்கவிளைவு என நான் நினைக்கிறேன். நூற்றாண்டுகளாக சாதிகளாக நம் சமூகத்தின் அதிகார அடுக்கு உருவாகி இருக்கிறது. அது நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒழுங்கு. இந்தியா முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி நகர ஆரம்பித்தபோது அந்த சமூக அமைப்பு குலைந்து வேறு வகையான அதிகார அமைப்பு உருவாகத் தொடங்கியது. அந்த மாற்றம் நிகழும்போது கீழிருந்தவர் மேலும் மேலிருந்தவர் கீழும் மாற நேர்கிறது. அது பொறாமைகளை கோபங்களை காழ்ப்புகளை உருவாக்குகிறது.

புதிய பொருளியல் முறைமையில் பிறப்பு முக்கியமல்ல. உழைப்பும் திறனும்தான் முக்கியம். தலைமுறைதலைமுறையாக அடிமைகளாக இருந்த ஒரு சாதியைச்சேர்ந்தவர்கள் உழைப்பு மற்றும் திறன் காரணமாக மேலே வரும்போது பிறப்பு காரணமாக மேலே இருந்தவர்க்ள் பொறுக்கமுடியாமல் குமுறுவது இயல்பே. ஆகவே சாதிப்பூசல் என்பது இந்திய சமூகத்தின் வளர்ச்சிமாற்றத்தின் அடையாளம். ஓர் இடத்தில் சாதிப்பூசல் நிகழ்கிறதென்றால் அடக்கப்பட்ட சாதி மேலே எழுந்திருக்கிறது என்றே அர்த்தம்.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் சாதிப்பூசல்கள் நிகழ்ந்திருக்கினன. கேரளத்தில் இன்று ஒவ்வொரு சாதியும் அதிகாரத்துக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கிறது. கூடவே சாதாரணமான சாதிக்கலப்பு திருமணங்களால் சாதியின் கட்டமைப்பும் இல்லாமலாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் சாதிக்கலவரம் சென்ற அறுபதாண்டுகளில் நிகழ்ந்ததில்லை. சிறிய அளவில்கூட. ஆனால் அய்யன்காலியின் வரலாறு முதலிய நூல்களை வாசிக்கையில் அதற்கு முன் தொடர் மோதல்கள் நிகழ்ந்திருப்பதை காணமுடிகிறது. கலவரங்கள் மாற்றம் நிகழ்வதன் அடையாளமென்றால் அந்த மாற்றம் அப்போதே நிகழ்ந்துமுடிந்துவிட்டது.

தமிழகத்தில் முதலில் பெருமுதலீடும் நவீனத்தொழில்களும் உள்ள நகரங்களில், குறிப்பாக துறைமுகங்களில், மாற்றங்கள் நிகழ்ந்தன. அங்கே தொழிலாளர் குடியேறியபோது சாதிசார்ந்த சமூக அடுக்கு முக்கியமிழந்து பொருளியல்தகுதி சார்ந்த அடுக்கு முதன்மைப்பட்டது. ஆகவே அங்கே சாதிசார்ந்த பூசல்களும் நெருக்கடிகளும் உருவாயின. சென்னையில் 1920களில் நடந்த சாதிமோதல்களை நாம் திருவிக போன்றவர்களின் சுயசரிதைகளில் வாசிக்கலாம். மெல்ல அந்தப்பூசல்கள் இல்லாமலாயின. ஏனென்றால் புதிய சமூக ஒழுங்கை நகரமக்கள் மெதுவாக புரிந்துகொண்டார்கள்.

சுதந்திரம் கிடைத்தபின் அந்த சமூகமாற்றம் கீழிறங்க ஆரம்பித்தது. ஐம்பதுகள் முதல் எழுபதுகள் வரை தமிழகத்தின் சிறியநகரங்களில் அந்த சமூகமாற்றம் உருவாகியது. அதன் விளைவாக அங்கே சாதிப்பூசல்கள் பிறந்தன. எண்பதுகளுக்குப்பின்னர்தான் அத்தகைய மாற்றமும் பூசல்களும் கிராமங்களில் நிகழ ஆரம்பித்தன. தமிழகத்தின் மிகப்பிற்பட்ட கிராமங்களில் தொண்ணூறுகளில் நிகழ தொடங்கின. தர்மபுரியில் இரணாயிரத்திப்பன்னிரண்டில் அது ஆரம்பித்திருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. அது தமிழகத்தின் பாதாளமூலை.

இன்னும் தங்கள் பிறப்பு சார்ந்து மேலாதிக்கத்தை கற்பனைசெய்துகொண்டிருப்பவர்களிடம் அந்தக்காலகட்டம் முடிந்தது என்று சொல்லத்தான் அறிஞர்களும் சீர்திருத்தவாதிகளும் தேவை. மனிதர்கள் உழைப்பு என்னும் தளத்தில் சமம் என்று புரியவைக்கத்தான் சமூக இயக்கங்கள் தேவை. தர்மபுரியில் மார்க்ஸிய இயக்கம் தவிர எந்த இயக்கமும் அதைச்செய்யவில்லை. போலிப்பெருமிதங்களை மேலும் வளர்க்கவும் கற்பனை எதிரிகளை உருவாக்கிக்கொடுத்து வெறுப்பை எழுப்பவுவுமே பிற இயக்கங்கள் முயன்றன. ஆகவேதான் இந்தியாவில் மிகமிக பிற்பட்ட நிலப்பகுதிகளில் உள்ள மக்கள்கூட ஏற்றுக்கொண்ட ஓர் உண்மையை தர்மபுரி மக்களால் விழுங்கமுடியவில்லை.

நான் தர்மபுரியில் இருந்த தொடக்க காலகட்டத்தில் அங்கே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு இல்லை. ஆகவே தலித்துகள் மீதான ஒடுக்குமுறை என்பது மிகமிக சாதாரணமான அன்றாட நிகழ்ச்சி. மாத இறுதியில் காவலதிகாரிகள் தலித்சேரிகளுக்குச் சென்று அங்கே கண்ணில்படுபவர்களை எல்லாம் பிடித்து வழக்கு போடுவது சாதாரணமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. ‘வேற என்ன சார் பண்றது? நாங்க கேஸ் போட்டாகணுமே’ என காவல்துறை அதிகாரிகள் வாதிட்டு கேட்டிருக்கிறேன்

பொதுக்குடிநீர், பொதுச்சாலை, பொதுச்சுடுகாடு எதற்குமே தலித்துக்கள் வன்னியர்களிடமும் நாயுடுக்களிடமும் பணிந்து நின்றாகவேண்டும். என் மனைவி சில சிற்றூர்களில் பணியாற்றும்போது அடைந்த அனுபவம் இது. தபால்நிலையம் ’ஊருக்குள்’ இருக்கும். அங்கே தலித்துக்கள் வர முடியாது. ஆகவே அவள் பேருந்து இறங்கி ஊருக்குள் செல்லும் வழியில் தலித் பெண்கள் காத்து நிற்பார்கள், இன்லண்ட் ,கவர் முதலியவற்றை வாங்க.

தலித் பகுதிகளில் அவ்வப்போது எதிர்ப்புகள் உருவாகும். அந்த கோபக்கார இளைஞர்களுக்கு உடனடியாக கிடைக்கும் அரசியல் தொடர்பு இடதுதீவிரவாத [மார்க்ஸிய லெனினிய] இயக்கங்கள்தான். அவர்கள் அந்த இளைஞர்களை வெறும் தொண்டர்களாக பயன்படுத்திக்கொண்டார்கள். மாலே அமைப்புகள் எந்தவகையிலும் கட்டுக்கோப்புள்ளவை அல்ல. அவை மேலே உடைந்துகொண்டே இருக்கும். என்ன காரணம் என்று கீழே இருப்பவர்களுக்கு புரியாது. ஓர் அமைப்பு உடைந்ததும் அதுவரை அந்த அமைப்புக்காக போராடியவர்களை அப்படியே விட்டுவிடுவார்கள். சிலசமயம் எதிர்களாகக்கூட நினைப்பார்கள்.

விளைவாக சில வருடங்கள் ஆக்ரோஷமாக மாலெ இயக்கங்களில் பணியாற்றிய இளைஞர் சில வழக்குகளுடன் ரவுடி, நக்சலைட் முத்திரையுடன் வாழ்நாள் முழுக்க காவலர்களுடன் மல்லுக்கட்டவேண்டியிருக்கும். அவர்களுக்காக அந்த அமைப்போ தலைவர்களோ எதுவுமே செய்வதில்லை. உண்மையில் அமைப்பு என ஏதும் இருக்கிறதா என்றே அவர்களால் அறியமுடியாது. இப்படி சிலர் மாலெ இயக்கங்களில் இருந்து உதிர உதிர சிலர் ஆவேசமாக ஏறிக்கொண்டும் இருப்பார்கள். ஆகவே எண்ணிக்கை மாற்றமே இல்லாமல் அதே சிலபத்துகளில் தொடரும்

இந்த மாலெ முத்திரை காவலர்களுக்கு மிக உதவிகரமானது. தலித் குடியிருப்புப் பகுதிகளில் மாதாமாதம் கைதுசெய்யப்படும் இளைஞர்கள் சில்லறை வழக்குகளில் மாட்டவைக்கப்படுவார்கள். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் நக்சலைட்தான். வாழ்க்கை அழிந்தது. என் நண்பர் ஒருவரின் தம்பியை இப்படி ஒரு சிக்கலில் இருந்து மீட்பதற்காக நான் எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கெஞ்சியிருக்கிறேன். மறைந்த கோமல் சுவாமிநாதன் கடைசியில் உதவினார்.

மா.லெ இயக்கங்களில் அனல் கக்கிய பலர் கூட்டம் கூட்டமாகச் சென்று பாட்டாளி மக்கள் கட்சியில் ஐக்கியமானதை அப்போதுதான் காணநேர்ந்தது. அவர்கள் வீரவன்னியர்களாக மறுபிறவி எடுத்ததையும் கண்டேன். சமூக அரசியலியக்கங்களை அவற்றில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட ஆளுமையை- நேர்மையை- வைத்து மட்டுமே மதிப்பிடவேண்டும், ஒருபோதும் அவர்கள் பேசுவதையும் எழுதுவதையும் கொண்டு மதிப்பிட்டுவிடக்கூடாது என்ற அறிதலை எனக்களித்தது அந்த தொண்ணூறுகள்தான்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மெல்லமெல்ல தலித் குடியிருப்புகளில் வேரூன்றியபோதுதான் காவலர்களின் ஆட்டம் அடங்கியது என்பதுதான் உண்மை. காவல்நிலையத்திற்கு வர ஓர் அமைப்பும் தலைவர்களும் உருவானார்கள். சிக்கல்களில் மாட்டநேரும் என்ற பிரக்ஞை காவலர்களுக்கு உருவானது. இந்த மாறுதலை நான் கண்ணெதிரில் கண்டேன் என்றால் மிகையல்ல. அதேசமயம் தலித்குடியிருப்புகளில் ஏற்கனவே கோபம்கொண்ட இளைஞர்களாக உருவானவர்களின் கட்சியாகவே அது இருந்தது. அவர்களின் கட்டுக்கடங்காத தன்மை எப்போதும் அவ்வியக்கத்திடல் இருந்தது.

இன்றைய கலவரத்தை ஏதோ நடக்கச்சாத்தியமில்லாதது நடந்துவிட்டது என்ற பாணியில் பேசும்போது ஆச்சரியமடைகிறேன். பெரியார் பிறந்த மண்ணில் சாதிக்கலவரமா என்று ஆச்சரியப்படுகிறார்கள். தமிழகத்தில் தொண்ணூறுகளுக்குப்பின்னர் கிராமங்களில் தொடர்ந்து சாதி உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன. தென்னகத்தின் கலவரங்கள் மெல்ல ஓய்ந்து சில வருடங்களே ஆகின்றன. மாற்றம் இப்போதுதான் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

*

இத்தகைய கலவரங்கள் ஒருவகையில் நன்மையையே உருவாக்குகின்றன. நம்முடைய சாதியமைப்பின் உண்மையான பிரச்சினையை நாம் புரிந்துகொள்வதே இல்லை. சென்ற அறுபதாண்டுக்காலமாக இங்கே உள்ள திராவிட இயக்கம் சாதி என்ற அமைப்பை வரலாற்றுரீதியாக புறவயமாக விளங்கிக்கொள்வதற்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. தன்னுடைய சொந்த அரசியல் செயல்திட்டத்திற்கு உகந்த வகையில் சாதியை பற்றி ஒரு அபத்தமான விளக்கத்தை அளித்து அதை பரப்புகிறது அது

பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஒருங்கிணைவின்மூலம் அரசியலதிகாரம்- இதுதான் திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்திட்டம். அதற்கு ஒரு பொது எதிரி அதற்கு தேவைப்பட்டது. ஆகவே பிராமணர் என்ற பொது எதிரியை உருவாக்கி முன்னிறுத்தியது திராவிட இயக்கம். அந்த பொது எதிரிமீதான வெறுப்பை உக்கிரமாக ஆக்குவதன்வழியாக பிற்படுத்தப்பட்டோரின் ஒருங்கிணைவைச் சாத்தியமாக்கியது. உலகமெங்கும் பாப்புலிஸ்ட் இயக்கங்கள் செயற்கையான பொது எதிரியை கொண்டே தங்கள் அதிகார ஒருங்கிணைப்பை அடைகின்றன

பிராமணர்களின் ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசுநிர்வாகத்திலும் மதத்திலும் இருந்தது உண்மை. ஆனால் சமூக அளவில் தமிழகத்தில் இருந்தது பிராமணரல்லாத உயர்சாதியினரின் ஆதிக்கமே. பிராமணரல்லாத உயர்சாதியினர் பிராமணருக்கு அரசதிகாரத்திலும் மதத்திலும் இருந்த ஆதிக்கத்துக்கு எதிராக கொண்ட கோபம் இங்கே ஏற்கனவே இருந்தது. அதுவே பிராமணரல்லாதோர் இயக்கமாக ஆகியது.

அவ்வியக்கத்திடமிருந்து பிராமணவெறுப்பை கடன்கொண்ட ஈ.வே.ரா அதை பிற்படுத்தப்பட்டோரையும் பிராமணரல்லா உயர்சாதியினரையும் ஒரே அணியில் திரட்டுவதற்கான ஆயுதமாக அடையாளம் கண்டார். அதன் விளைவே திராவிட இயக்கம் அடைந்த அதிகாரம். காலப்போக்கில் எண்ணிக்கை பலத்தால் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே அதிகாரத்தை அடைய பிறர் கீழே வீழ்த்தப்பட்டார்கள். இந்த அரசியல் சதுரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிதித்து ஏறிச்செல்லும் படியாக தலித் மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

அதற்குப் பயன்படுத்தப்பட்டது பிராமணவெறுப்பு என்ற பொது எதிரிதான். ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி வெறியரின் மனநிலை மிகமிக ஆச்சரியமளிப்பது. அவர் பிராமணரை வெறுக்கிறார். காரணம், அவர்கள் தமிழர்களை சாதியால் பிரித்து ஆண்டார்கள் என்கிறார். ஆனால் அவர் தன் சாதியை விட்டுக்கொடுக்க மாட்டார். சாதியின் அடிப்படையில் தலித்துக்களை வெறுப்பார், முன்னேற விட மாட்டார். தலித்துக்கள் தன்னுடைய சாதிவெறியை பொருட்படுத்தக்கூடாதென்று ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிவெறியர் நினைக்கிறார். சாதியை கற்பித்தவர்கள் பிராமணர்கள் என்றும் ஆகவே தன்னுடைய சாதிவெறிக்காக தலித்துக்கள் பிராமணரை வெறுக்கவேண்டும் என்றும் அவர் கோருகிறார்

அதாவது திராவிட இயக்கக் கொள்கையின்படி தருமபுரியில் தலித்துக்களை தாக்கிய வன்னியர்களை தலித்துக்கள் குற்றம் சொல்லக்கூடாது. அவர்களை சாதிகளாக பிரித்த பிராமணர்களைத்தான் வெறுக்கவேண்டும். வன்னியர்கள் தங்கள் சாதியை பிராமணர்கள் சொன்னாலும் விடமாட்டார்கள். ஆனால் தலித்துக்கள் பிராமண எதிர்ப்பில் வன்னியர்களுடன் கைகோர்க்கவேண்டும்.

ஐம்பதாண்டுக்காலமாக இங்கே சொல்லப்பட்டுவந்த இந்த மாய்மாலத்தை கொஞ்சமேனும் திரைவிலக்கிப் புரிந்துகொள்ள இந்த கலவரங்கள் தலித்துக்களுக்கு உதவுமென்றால் இவை நல்லவைதான். சாதி என்ற பிரச்சினையின் வரலாற்று உண்மையை அறிய , அதன் கண்களை நோக்கி பேச அவர்களால் முடிந்தால் அது நல்லதுதான்.

*

சாதி என்னும் அமைப்பின் தோற்றம் அது நீடித்த விதம் இன்று அதன் இடம் பற்றிய பல முக்கியமான ஆய்வு நூல்கள் இன்று எழுதப்பட்டுவிட்டன. அரசியல் உள்நோக்குடன் எழுதப்பட்ட நூல்கள், இந்திய எதிர்ப்புநோக்குடன் நிதியூட்ட ஆய்வாளர்களால் செய்யப்பட்ட நூல்கள் ஆகியவற்றை ஒரு நல்ல வாசகன் எளிதில் தவிர்த்துவிடமுடியும். உண்மையை அறிய எளிய வழி ஒன்றுள்ளது. ஒரு கருத்தை வாசிக்கும்போது சொந்த வாழ்க்கையுடன், வாழும் சூழலுடன் கறாராக ஒப்பிட்டு பார்த்துக்கொள்வதுதான் அது.

சாதி எந்த ஒரு மனிதக்குழுவாலும் கட்டி எழுப்பப்பட்ட ஒன்று அல்ல. அது ஒரு சதியோ சூதோ அல்ல. இந்தியப்பெருநிலத்தில் இருந்த பல்லாயிரம் பழங்குடிக் குலங்கள்தான் சாதிகளாக உருவெடுத்தன. அது இங்கே நிலப்பிரபுத்துவம் உருவான முறை. இந்தியாவில் எங்கெல்லாம் சாதிகள் இல்லையோ அங்கெல்லாம் பழங்குடிக்குலங்கள் உள்ளன. அங்கே சாதியமைப்பை விட கொடூரமான பரஸ்பர மோதல்கள் உள்ளன.

இனக்குழுக்கள் சாதி என்ற அமைப்பாக ஆனது பல்லாயிரம் வருடங்கள் படிப்படியாக நீடித்த ஒரு செயல்பாடு. இது பிரிக்கும் செயல்பாடு அல்ல. தொகுக்கும் செயல்பாடு. அதாவது மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை, சாதிகளாக தொகுக்கப்பட்டார்கள். குலங்கள் இனக்குழுக்களாகவும் இனக்குழுக்கள் சாதிகளாகவும் ஆனார்கள். ஆகவேதான் ஒவ்வொரு சாதிக்குள்ளும் உட்பிரிவுகள் இருக்கின்றன. அவை கடைசியில் கோத்திரம் அல்லது கூட்டம் என்னும் குலக்குழு அமைப்பைச் சென்றுசேர்வதைக் காணலாம்.

இனக்குழுக்களும் குலங்களும் சாதிகளாகத் திரண்டபோது அவர்களின் பரஸ்பரப் போராட்டம் வழியாக அன்றைய நிலப்பிரபுத்துவ அதிகார அடுக்கு உருவாகி வந்தது. அதில் நிலத்தை வென்றடைந்தவர்கள் மேலே சென்றார்கள். இழந்தவர்கள் கீழே சென்றார்கள். பல்லாயிரம் வருட இந்திய வரலாற்றில் பல பழங்குடிகள், அடித்தளச் சாதிகள் திரண்டெழுந்து ஒன்றுபட்டு நிலத்தை வென்று பேரரரசுகளை உருவாக்கியிருக்கின்றன. பல இனக்குழுக்கள் நிலமிழந்து அடிமைகளாகியிருக்கிறாரக்ள்.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இயந்திரங்கள் இல்லை. ஆகவே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் அடிமைகள் மூலமே செயல்பட்டிருக்கிறது. வென்றவர்கள் தோற்றவர்களை அடிமைப்படுத்தி சுரண்டி உபரியை சேகரித்து பெரும் அரசுகளாக உருவாவது நிலப்பிரபுத்துவத்தின் வழிமுறை. அந்த உபரி மூலம் உருவாக்கப்பட்ட வயல்வெளிகளும் ஏரிகளும் நகரங்களுமே இன்றும் நம் சொத்தாக உள்ளன. நாமெல்லாம் அதில்தான் வாழ்கிறோம்.

மனிதர்களை அடிமைகளாக வைப்பதற்குரிய கொள்கைகள் எங்கிருந்து கிடைக்கின்றனவோ அங்கிருந்தெல்லாம் எடுக்கப்பட்டு நிலப்பிரபுத்துவத்தால் வளர்க்கப்பட்டுள்ளன. மதம் அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விதிவிலக்கான மதம் என ஏதும் இல்லை. இஸ்லாமும் கிறித்தவமும் உலகமெங்கும் பிரம்மாண்டமான அடிமைச்சமூகங்களை கொண்ட அரசுகளின் மதங்களாக இருந்தன என்பதை வரலாற்றை புரட்டும் எவரும் உணரமுடியும். இந்துமதமும் பௌத்தமும் எல்லாம்தான்.

அதேசமயம் மதங்களின் ஒருபகுதி என்றும் மேலான விழுமியங்களுக்காக குரல்கொடுத்தபடியும் இருக்கும். அதில் சான்றொர்கள் உருவாகி அவர்கள் வாழ்ந்த அன்றைய காலகட்டத்தின் அடிமைமுறைக்கும் அநீதிக்கும் எதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள். புத்தர் முதல் நாராயணகுரு வரை அந்த மரபை நாம் காணலாம். மதம் என்பது இவ்விரு புள்ளிகளும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும் ஒரு பரப்புதான். மதம் சுரண்டலின் கருவி என்றும் சொல்லலாம், மதம் மீட்புக்கான ஞானம் என்றும் சொல்லலாம்.

இன்று நாம் நிலப்பிரபுத்துவத்தை தாண்டி வந்திருக்கிறோம். இன்றைய சமூக பொருளியலமைப்பில் எவரையும் அடிமைகளாக வைத்திருக்கவேண்டியதில்லை. ஆகவே பிறப்படிப்படையிலான அதிகார அடுக்குக்கும் இடமில்லை. இந்த மாற்றம் இங்கே நூற்றைம்பதாண்டுகளாக நடந்துவருகிறது. சாதி நேற்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஒரு அதிகார அடுக்குமுறை. இன்று அது பழங்கதை

ஆனால் சாதி நமக்கு எவராலும் வெளியே இருந்து கற்பிக்கப்பட்டது அல்ல. நம்முடைய குலக்குழு, இனக்குழு அடையாளம் அது. நம்முடைய பழங்குடி வாழ்க்கையில் அதன் வேர் உள்ளது. இங்கே வரலாறு தோன்றுவதற்கு முன்னே அந்த அடையாளம் இருந்திருக்கிறது. ஆகவே ஒரு வரலாற்றுச்சூழல் மாறியதும் அது உடனே மாறிவிடாது. அது நம் பண்பாட்டு நினைவுகளில் , ஆழ்மனப்படிமங்களில் உறைந்துதான் இருக்கும். நம் வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே நீடிக்கும்

சாதியின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித்துக்கும் இதுவே உண்மைநிலை. ஒரு தலித் செயல்பாட்டாளர் அவரை விட தாழ்ந்த சாதியைச்சேர்ந்த ஒரு தலித்தை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைத்து அவரை அவர்கள் சமமாக நடத்தும்படிச்செய்ய முயன்றால் இந்த உண்மை புரியவரும்.

சாதிக்கெதிரான போராட்டம் என்பது ஒவ்வொரு சாதியும் தன்னுடைய உரிமைக்காக நிகழ்த்தும் சமரசமில்லாத போராட்டம்தான். அது உடனடியாக வெல்லக்கூடிய களமல்ல. அதன் முதல் தேவை என்பது ஒருங்கிணைதலே. அடுத்து நீடித்த தொடர் போராட்டம்.

இந்தியவரலாற்றில் சமானமான சாதிகள் ஒன்றாக இணைவதன்மூலம் பெருந்திரளாக ஆகி வெல்வதை தொடர்ந்து பார்க்கலாம். மிகச்சிறந்த உதாரணமென்பது கடைசியாக நிகழ்ந்த நாயக்ககளின் எழுச்சி. அது நான்கு பெரும் சாதிகளும் எட்டு சிறு சாதிகளும் ஒன்றாக இணைந்ததன் விளைவு. அந்த வரலாற்று வெற்றிக்கும் ஐந்து பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் பிறகும் அவர்களிடையே அச்சாதிகளின் தனியடையாளங்கள் நீடிக்கின்றன என்பதையும் நாம் காணலாம். அவை ஏற்றத்தாழ்வுகளாக அல்லாமல் பண்பாட்டுஅடையாளங்களாக நீடிக்கின்றன. காரணம் அவர்களின் ஒருங்கிணைவு நிகழ்ந்தது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில்

அந்த வெளிப்போராட்டத்திற்கு இணையாகவே சொல்லப்படவேண்டியது அகப்போராட்டம். ஒவ்வொருவரும் தன்னுள் உறையும் சாதிக்கு எதிராக நிகழ்த்தும் போராட்டம் என்று அதைச் சொல்லலாம். தன்னை மேம்படுத்திக்கொள்வதன் வழியாக அதை வென்றுசெல்வதே அதன் இலக்கு. அந்த இலக்குடன் முயலும் ஒரு வன்னியர் அப்படி முயலும் ஒரு தலித்துக்கு எதிரியாக இருக்கமுடியாது. அந்த சமரில் அவரும் தலித்தின் நண்பரே. அதையே பிராமணருக்கும் சொல்வேன்.

வெவ்வேறு உள்நோக்குடன் உருவாக்கப்படும் திரிபு வரலாறுகளை , அதன் விளைவாக நிகழும் திசைதிருப்புதல்களை அடையாளம் காண இத்தருணம் உதவட்டும். இங்கே பொது எதிரி என்பது எந்த மதமும் சாதியும் அல்ல. நாமனைவருக்கும் உரிய நம் கடந்தகாலம்தான்.

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 1
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள்