«

»


Print this Post

விஐ: கடிதங்கள்


அன்பின் ஜெயமோகன்,
திரு வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய உங்களது நினைவுக்கட்டுரையைப் படித்தேன். திறமிகு  தமிழ் ஆய்வாளரும் பண்பாளருமான வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களை நினைவுகூர்ந்தமைக்கும் அவருடைய பல்வேறு முயற்சிகளைப் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி. 
உங்களது கட்டுரையில் காணப்படும் ஒரு மதிப்பீடு தவறானது எனக் கருதுகிறேன். நான் திருநெல்வேலிப் பொறியியற்கல்லூரியில் 90களில் படிக்கையில், வ.அய்.சுப்பிரமணியத்தின் மகன் எனது வகுப்புத் தோழன். பலமுறை அவரை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை உங்களது ‘ரப்பர்’ நாவலைக் குறித்து என்னிடம் பேசினார். மேலும் தமிழ் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களைப் பற்றிக் கேட்டார். ஒரு பத்து,பதினைந்து பேர் இருப்போம் என்று சொன்னேன்.
சில மாதங்களுக்குப் பிறகு, நாகர்கோயிலில் அந்தக் கல்லூரி மாணவர்களுக்காக இலக்கியப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்து, நான்கு நாட்களுக்கு எங்களுக்குத் தங்குமிடம், உணவு வசதி ஏற்பாடு செய்து ஒவ்வொரு நாளும் முக்கிய தமிழிலக்கிய படைப்பாளியை அழைத்து வந்து பட்டறையை நடத்தினார்.  தோப்பில் முகமது மீரான், நீல.பத்மநாபன், மங்கை, இறுதி நாளன்று சுந்தரராமசாமி ஆகியோர் பட்டறைக்கு வந்தனர். அப்பொழுது சுந்தர ராமசாமியுடன் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் சில இளைஞர்களும் வந்திருந்தனர். நவீன தமிழிலக்கியம் குறித்த தனிப்பட்ட ஆர்வமில்லாதிருந்தபொழுதும்  தொடர்ந்து அவதானித்தே வந்தார். இலக்கிய எழுத்தாளர்கள் குறித்து அவர் எப்பொழுதும் குறைத்து மதிப்பிடவில்லை. அந்தப் பட்டறை மூலமாகத் தனிப்பட்ட முறையில் நான் அடைந்தது நிறைய.
திருவனந்தபுரத்தில் இருந்து Dravidian Linguistic Association மூலமாக வெளியிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் மிக முக்கியமானவை.
அன்புடன்,
மெய்யப்பன்

 

 
அன்புள்ள மெய்யப்பன் அவர்களுக்கு

நன்றி. நீங்கள் சொன்ன கோணத்தில் நான் விஐயை அணுகியதே இல்லை. நான் பழகி அறிந்த விஐயைப்பற்றி எழுதவில்லை, ஏனென்றால் பழகவே இல்லை. நான் எழுதியது பிறர் சொல்லிக்கேட்ட விஐயைப்பற்றி. அது ஒரு வெறும் மனப்பதிவாகவே இருக்கும் என நானும் நம்புகிறேன்

ஜெ

 

வ.ஐ. சுப்பிரமணியம் அவர்களின் ஓட்டு வீடு என் மாமனார்  வீட்டுக்கு மிக மிக அருகில் மனோன்மணி சுந்தரனார் தெருவில் இருக்கிறது. இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அந்த வாசலை கடந்து செல்கிறேன். பயமோ மரியாதையோ  அவரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியதேயில்லை. இனி எங்கே சந்திப்பது?

இத்தனைக்கும் என் மாமனாரும் தமிழ் பேராசிரியர். என்னை அவரிடம் அறிமுகப்படுத்த எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. வடசேரி வாழ் வெள்ளாளர்கள் அமைத்த சமூக கூட திறப்பு விழா போட்டோ ஆல்பத்தில்தாந் அவர் புகைப்படைத்தை பார்த்தேன்


ஜீவா

 

அன்புள்ள ஜீவா
நீங்கள் குறிப்பிட்ட அதே தயக்கம் எனக்கும் இருந்தது. அவரிடம் நெருங்குவது கஷ்டம். நெருக்காதே என்றுதான் அவர் அமர்ந்திருப்பார். பழையகால மனிதர். நீங்கள் நெருங்கி ”வணக்கம்” சொல்லியிருந்தால்கூட ”நீங்கள் யார்? உமக்கு என்னிடம் என்ன காரியம் ஆகவேண்டும்?” என்று கேட்டிருப்பார்

ஜெ

 

 

அன்புள்ள ஐயா, வணக்கம்.

மூதறிஞர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையினை வாசித்தேன். நீங்கள் பிறரைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் அவர்களின் ஆளுமைச்சிறப்பினை அழகுபடச் சொல்லியிருந்தீர்கள். இக்கட்டுரையில் அவ்வகையில் விரிவாக ஏதும் இல்லை. ஓர் உளப்பதிவு மட்டுமே உள்ளது. ஒரு நல்ல கட்டுரைக்காகவேனும் நீங்கள் அவரிடம் நெருங்கியிருக்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்

அர.முனுசாமி

அன்புள்ள முனுசாமி

விஐயை நெருங்குவது எளிதல்ல. நெருங்கியிருக்கலாம், அதற்கான மனநிலை எனக்கு அமையவில்லை. ஆனால் அவரது ஆய்வுநெறிமீது எனக்கு பெருமதிப்பு இருந்தது. ஒரு நிகழ்ச்சி. சம்பந்தபப்ட்டவரே என்னிடம் சொன்னது. சுதந்திரமாக ஆய்வுசெய்யும் ஒஉவர் விஐயை நெருங்கி ‘தமிழாய்வுசெய்கிறேன். பலகலை நிதியுதவி ஏதேனும் கிடைக்குமா?” என்று கேட்டார்.

விஐ ”நீங்கள் ஏன் தமிழாய்வுசெய்யவேண்டும்?” என்றார்.” ஏனென்றால் உலகிலேயே மூத்தமொழியாகிய தமிழை உலக அளவில் நிலைநாட்டவேண்டும்” என்றார் இவர். ”உலகிலேயே மூத்தமொழி என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் இருக்கிறதா?” என்றார் விஐ. ”இல்லை ஐயா கண்டிப்பாக இல்லை. துளிகூட இல்லை” என்றார் ஆய்வாளர்

”இந்த அளவுக்கு உறுதிப்பாடு இருக்கையில் இனி நீங்கள் ஏன் ஆய்வுசெய்யவேண்டும்?கடைசிநபி முகமதுதான் என்பதை முஸ்லீம்கள் ஆதாரம் காட்டி நிறுவிக்கொண்டா இருக்கிறார்கள்? அப்படியே நம்பவேண்டியதுதானே?” என்றாராம் விஐ.

ஜெ

 

அன்புள்ள ஜெ

நீங்கள் கொடுத்த இணைப்பில் சென்று திரு இளங்கோவன் அவர்களின் இணையதளத்தைப் பார்த்தேன். வெற்று அரட்டைகளாக இணையதளங்கள் சீரழிந்து கிடக்கும் சூழலில் மிக்க நம்பிக்கையுடன் நடத்தப்படும் உருப்படியான இணையதளம் அது. நன்றி

சந்திரகலா

அன்புள்ள சந்திரா

உண்மை. இளங்கோவனின் பாசாங்கற்ற தமிழ்ப்பற்றும் அதை செயல்மூலம் வெளிப்படுத்தும் பாங்கும் மிக முக்கியமானவை. இங்கே தமிழ்ப்பற்று என்றாலே பிடிக்காத கொஞ்சபேரை தமிழ்ப்பகைவர் எறு வசைபாடுவதாக பொருள் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் வசைபாடாத ஒரு தமிழியதளம் என்பது மிக ஆச்சரியமும் உவகையும் அளிக்கிறது

ஜெ

 

அஞ்சலி: வ.அய்..சுப்ரமணியம்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/3346