டெல்லி சம்பவம்- சில பதில்கள்

டெல்லி பாலியல்வன்முறை நிகழ்ச்சியை ஒட்டி உருவான போராட்டமும் அதற்கெதிரான வாதங்களும் தொடர்ந்து பல தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் நாம் உடனடி எதிர்வினைகளை, உணர்ச்சிகரமான வரிகளை சொல்லிவிட்டு நிறைவடையக்கூடியவர்களாக இருக்கிறோம். ஆகவே முடிந்தவரை தாமதித்து இதை எழுதுகிறேன்.

இந்த ஒரு கற்பழிப்புக்கு மட்டும் ஏன் இந்த கூச்சல்? இந்தியாவில் கிராமப்புறங்களில் எவ்வளவு கற்பழிப்புகள் தினம் நடக்கின்றன? அதற்கெல்லாம் ஏன் இத்தனை கூச்சல் எழவில்லை? அப்படியென்றால் டெல்லியில் , உயர்வட்டத்தில் நடந்தால் மட்டும்தான் இதைப்பற்றி இந்திய மனசாட்சி கவலைப்படுமா? இந்திய மனசாட்சி நகர் சார்ந்ததா? — இது முதல் வினா.

டெல்லி என்பதை டெல்லியிலேயே என்று திருத்திக்கொண்டால் உடனடியாக பதில்வந்துவிடுகிறது. இந்தியாவில் எந்த ஒரு கற்பழிப்புக்கும் எதிர்வினை எழத்தான் செய்கிறது. ஆனால் இந்தியத்தலைநகரான டெல்லியிலேயே இப்படி நிகழும்போது அது வெறும் கற்பழிப்பு மட்டுமாக இல்லை. நம்முடைய அரசியலமைப்பு, நம்முடைய காவல்துறை, நம் நீதித்துறை அனைத்தையும் பற்றிய ஆழமான வினாவை எழுப்புகிறது அது. கொலை கொடூரமான குற்றமே. ஆனால் காவல்நிலையத்துக்குள் புகுந்து வெட்டிக்கொன்றால் அது சாதாரண கொலை அல்ல, அதற்கும் மேல்.


இந்தப்போராட்டம் எதற்காக? குற்றவாளிகளை கைதுசெய்துவிட்டார்களே. அதற்கு பிறகும் எதற்காக ஆர்ப்பாட்டமும் அமளியும்?-
இது இரண்டாவது வினா.

எந்த மக்கள்போராட்டமும் நெடுநாள் ஒத்திவைக்கப்பட்டு வேறுவழியில்லாமல்தான் வெடிக்கும். அவ்வாறு வெடிப்பதற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி முகாந்திரமாக இருக்கும். அந்நிகழ்ச்சியை மட்டும் வைத்து அந்த போராட்டத்தை மதிப்பிடுவதும் விவாதிப்பதும் அறியாமையே. அந்த உணர்வெழுச்சிக்குப்பின்னால் நீண்டநாள் குமுறல் ஒன்று இருக்கும். அது மிகமிக முக்கியமான சமூகப்பிரச்சினையாகவே இருக்கும். அந்தப்போராட்டம் அப்பிரச்சினையை நோக்கி நம்மை கொண்டு செல்லவேண்டும்.

இத்தகைய தன்னிச்சையான போராட்டங்கள் சமூகம் என்ன நினைக்கிறது, எதைக்கோருகிறது என அரசுக்கும் அறிவுஜீவிகளுக்கும் திட்டவட்டமாக காட்டக்கூடியவை. இவை எழாவிட்டால் அந்தப்பிரச்சினை நோக்கி அரசோ அறிவுஜீவிகளோ பார்வையை திருப்பவே மாட்டார்கள். அவ்வகையில் அவை மிகமிக முக்கியமானவை. ஒரு சமூகம் உயிர்ப்புடன் இருக்கிறதென்பதற்கான ஆதாரங்கள் அவை

தன்னிச்சையான போராட்டங்கள் ஒருவேளை கூர்மையான சித்தாந்தத் தெளிவை கொண்டவையாக இல்லாமலிருக்கலாம். திட்டவட்டமான தலைமையோ கோரிக்கையோ அற்றவையாக இருக்கலாம். ஒருவேளை அரசோ சமூகமோ அவற்றுடன் ஒரு முறையான பேச்சுவார்த்தையைக்கூட நடத்த முடியாமலிருக்கலாம். அவை உடனடியான உணர்ச்சிக்கொந்தளிப்புகளாக மட்டுமே இருக்கலாம். அக்காரணத்தாலேயே அவை உடனே அடங்கியும் போகலாம்.

மேலும் இத்தகைய தன்னிச்சையான போராட்டங்களில் ஏதேனும் ஒரு தரப்பு மட்டுமே ஈடுபடுவதும் இயல்பே. அதிகமாக செய்திகள் அறிபவர்கள். அல்லது நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அல்லது போராட்டத்தில் உடனடியாக இறங்குமளவுக்கு வேறு வகையில் ஒன்று திரட்டப்பட்டவர்கள்.

உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் கல்பனா சுமதி கற்பழிக்கப்பட்ட வழக்கில் காவலர்களை கைதுசெய்யக்கோரி போராடியவர்களில் தொலைபேசி-தபால்துறை ஊழியர் சங்கம் முக்கியமானது. கல்பனாசுமதிக்கும் அவ்வமைப்புக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த பகுதியில் ஒருங்கிணைவுள்ள தொழிற்சங்கமாக இருந்தது அதுவே.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி அப்போராட்டத்தை மட்டம்தட்டவோ குறைத்துமதிப்பிடவோ செய்பவர்களுக்கு ஜனநாயகத்தில் மதிப்பு இல்லை என்றுதான் அர்த்தம். இந்த நோக்கில் அணுகினால் எந்த ஒரு போராட்டத்தையும் எளிதில் சிறுமைப்படுத்திவிடலாம். இதை ஒரு ஆசாமி நடுத்தரவர்க்க போராட்டம் என்று சொல்லலாம். லிப்ஸ்டிக் போட்ட பெண்களின் போராட்டம் என்று சொல்லலா. இதெல்லாமே கொச்சைப்படுத்தும் போக்கு.

போராட்டங்களின் மறுபக்கத்தைச் சுட்டிக்காட்டுவது வேறு கொச்சைப்படுத்துவது வேறு. ஒரு போராட்டத்தின் எல்லா உள்ளடுக்குகளையும் புரிந்துகொண்டபின் அதன் போதாமைகளை சுட்டிக்காட்டுவதற்கு சிந்தனையாளர்களுக்கு உரிமை உள்ளது. அதற்காக அவர் அரசியல் சரிநிலைகளை எதிர்க்கலாம். ஆனால் மேம்போக்கான கொச்சைப்படுத்தல்களை கீழ்த்தர எதிர்ப்பு என்றே புரிந்துகொள்ளவேண்டும்.

நேற்று ஊழலுக்கு எதிராக எழுந்த மக்கள் கிளர்ச்சியை நடுத்தரவர்க்க கிளர்ச்சி என்றெல்லாம் சொல்லி இதேபோல சிலர் கேவலப்படுத்தினார்கள். அவர்கள் இன்று இந்தப்போராட்டத்தை ஆதரிக்கையில் வேறுசிலர் இப்போராட்டத்தை கேவலப்படுத்துகிறார்கள். இந்த மனநிலையை ஒரு சோம்பேறிமூளை வெளிப்பாடு என்று மட்டுமே சொல்ல விழைகிறேன்.

இந்தப்போராட்ட்த்தால் என்ன ஆகப்போகிறது? வெறுமே ஊடகங்களுக்கு தீனி
– இன்னொரு வரி இது

இந்தப்போராட்டம் சமீபகால அரசியல் வரலாற்றில் முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். இது நம் அரசுகளை நடைமுறை யதார்த்தம் நோக்கி திரும்பச்செய்திருக்கிறது. இந்தியா என்றல்ல உலகில் எங்குமே அரசுகள் எதையும் பெரிதாக பொருட்படுத்தாதவைதான். தங்கள் வழக்கமான தடத்தில் இயங்கும் இயந்திரங்கள் அவை. அரசையும் அமைப்பையும் ஒரு விஷயம் நோக்கி திரும்பச்செய்ய மிகத்தீவிரமான போராட்டம் மட்டுமே உதவிகரமானது. இப்போராட்டம் நிகழாவிட்டால் இந்த விஷயம்நோக்கி நம் அரசுகளின், ஊடகங்களின் கவனம் திரும்பியிருக்காது.

அப்படி அரசும் ஊடகங்களும் இதை நோக்கித் திரும்பும்போதுதான் நமக்கு ஓர் உண்மை தெரிய வருகிறது, இந்தப்பிரச்சினையில் முதல் குற்றவாளிகள் நம் காவல்துறையும் நீதித்துறையும்தான். கற்பழிப்பு வழக்குகளை இருபதாண்டுக்காலம் வரைக்கும்கூட இழுத்தடிக்க அனுமதிப்பவர்களான மனசாட்சியும் அடிப்படை நீதியுணர்ச்சியும் இல்லாத நமது நீதிபதிகள். கற்பழிப்பு வழக்குகளை பதிவுசெய்ய மறுக்கும் ,ஆதாரங்களை திரட்டவும் வழக்குகளை சீராக நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லவும் அக்கறையே காட்டாத காவல்துறை.

நீதித்துறை தன் முன் வரும் கற்பழிப்புவழக்குகளை அதிகபட்சம் 100 நாட்களுக்குள் விசாரித்துத் தண்டனை அளிக்கட்டும், மேல்விண்ணப்பங்கள் அதிகபட்சம் மேலும் நூறுநாட்களுக்குள் முடியட்டும். இந்தப்பிரச்சினையில் பாதிப்பங்கு தீர்க்கப்பட்டுவிடும் என நான் நினைக்கிறேன்.

1990ல் நான் தர்மபுரி சென்றபோது கல்பனா சுமதி என்னும் ஆசிரியையை காவலர்கள் கற்பழித்த நிகழ்ச்சி முடிந்து பிரச்சினை நீதிமன்றம் சென்றிருந்தது. மூன்றுமாதம் நீண்ட மிகபெரிய மக்கள்போராட்டம் மூலமே காவலர்கள் மீது முதல்தகவலறிக்கையையே பதிவுசெய்ய முடிந்தது. அதற்குமேலும் மக்கள்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. நான் சிலவற்றில் பங்கெடுத்துமிருக்கிறேன்.

அப்போதும் கல்பனா சுமதியை இழிவுபடுத்தும் விதமாக ஒருசாரார் பேசினார்கள். போராட்டக்காரர்களை ‘பிளாக்மெயில் செய்கிறார்கள்’ என்று ஊடகங்கள் எழுதின. ஆனாலும் போராட்டம் நீடித்தது.

ஆனால் முதல் தண்டனை வந்தது எட்டு வருடம் கழித்து. கடைசியாக தண்டனை உறுதிசெய்யப்பட்டது 20 வருடம் கழித்து. யோசித்துப்பாருங்கள். ஒரு கற்பழிப்பு வழக்கை அந்தப்பெண்ணின் குடும்பம் 20 வருடம் எடுத்து நடத்தியாகவேண்டும். அதற்காகவே எஞ்சிய வாழ்க்கையைச் செலவழிக்கவேண்டும்.அந்த வழக்குக்காக போராடிய தொழிற்சங்கவாதிகளெல்லாம் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார்கள். அப்பெண்ணின் கணவரின் பிடிவாதமும் அவரது சாதியின் ஆதரவும் இருந்த ஒரே காரணத்தால்தான் வழக்கு வென்றது.

இதற்கும் அப்பால் உள்ள ஒன்று நம் நீதியரசர்களின் ஆசார மனநிலை. பன்வாரி தேவி வழக்கு இங்கே அதற்கான பெரும் ஆதாரமாக உள்ளது. ஒரு எளிய கிராமத்துச் சமூகசேவகி கிராமப்பொறுக்கிகளால் கற்பழிக்கப்பட்டார். கற்பழித்தவர்கள் உயர்குடியினர், கல்விகற்றவர்கள், ஆகவே அவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள் என்ற தங்கள் ‘நம்பிக்கை’யை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கீழ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட வழக்கை தள்ளூபடி செய்தது உச்சநீதிமன்றம்.

இன்றைய கிளர்ச்சி நூற்றுக்கணக்கான கல்பனா சுமதி வழக்குகள், நூற்றுக்கணக்கான பன்வாரி தேவி வழக்குகள் உருவாக்கிய ஏமாற்றமும் கசப்பும் ஒரு புள்ளியில் வெடிப்பதுதான். நமது நீதிமன்றங்கள் கற்பழிப்பு வழக்குகளில் காட்டும் அலட்சியமும் ஆணவமும் நம் சமூகத்தில் எப்போதுமே பெரும் கசப்பாக இருந்துகொண்டுள்ளன. அந்த கசப்பை நேரடியாக கொட்டும் ‘இன்சாஃப் கா தராசு’ போன்ற படங்களின் பெருவெற்றி சுட்டிககட்டுவது அதையே.

கற்பழிப்புக்கு உள்ளான பெண்ணையே அதற்கு காரணமாக காட்டும் நமது சமூகமனப்பான்மையை அதற்கு அடுத்தாற்போல குற்றம் சாட்டவேண்டும். பெண்கள் உடையணிவதை குற்றம் சாட்டுகிறார்கள். இதே ஆசாமிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் படிப்பதையே கற்பழிப்புக்கான காரணமாகச் சொன்னார்கள். இந்திய சமூகம் இந்த அயோக்கியர்களை நம்பி இல்லை. இவர்களைத் தாண்டித்தான் அது முன்னேறிச்செல்கிறது.

சிறிய அளவில் நம்மில் பலரும் அதே மனநிலையைத்தான் பகிர்கிறோம். மகாபலிபுரம் சாலையில் இரவு 11 மணிக்கு ஒரு பெண் ஸ்கூட்டரில் சென்றாள். என்னுடன் இருந்த சினிமாக்கார இளைஞர் ‘எங்க போய் சுத்திட்டு வருதோ’ என்றார். ஆனால் அந்தப்பெண் வண்டியின் பின்னால் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் அவளை ஒரு நர்ஸ் என்று காட்டின. நான் அதைச் சுட்டிக்காட்டினேன். ‘நர்ஸ்ங்கள்லாம் ஒருமாதிரிதான் சார்’ என்றார் அவர்.

ஒரு பெண் அரசியல்வாதியை நமக்குப்பிடிக்காவிட்டால் உடனே அவரை பாலியல்ரீதியாகவே வசைபாடுகிறோம். அது சரி என்றே நினைக்கிறோம். ஒரு பெண்ணை கீழ்த்தரமாக வசைபாடிவிட்டு அதற்குக் காரணம் அவள் சொன்ன அரசியல் எனக்குப்பிடிக்கவில்லை என்று சொல்ல நமக்கு வெட்கமில்லை. இவர்கள் ஒரு பெண் தனிமையில் சிக்கி, அந்தக்குற்றம் தண்டிக்கவும்படாது என்றால் ஏன் கற்பழிக்க மாட்டார்கள்?

இங்கு மையப்படுத்தப்படும் பிரச்சினை கற்பழிப்பு அல்ல. கற்பழிப்பை விட அபாயகரமானது கற்பழிப்பு பற்றிய பீதி. அது பெண்களின் நடமாட்ட உரிமையை முழுமையாகவே இல்லாமலாக்கிவிடுகிறது. பெண்கள் கல்விகற்க, ஆராய்ச்சிகளுக்காக, வேலைககாக, சமூகப்பணிகளுக்காக, அரசியல்செயல்பாடுகளுக்காக , சுற்றுலாவுக்காக பயணம்செய்வதை இது குறுக்குகிறது. அதன் விளைவுகள் எல்லா தளங்களிலும் அவர்களுக்கு அனுபவமாகும்.அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் இது.

ஒரு தரப்பினர் இந்தப்போராட்டத்தை நடத்துபவர்களை பலவகையிலும் குறை சொல்ல முயல்கிறார்கள். இன்னொருசாரார் வழக்கம்போல இவர்கள் ஏன் அதற்காக போராடவில்லை, இதற்காக போராடவில்லை என சகல அரசியல் பொருளாதாரப்பிரச்சினைகளையும் உள்ளே கொண்டு வருகிறார்கள். சிலர் இதைச் சாக்காகக் கொண்டு இந்தியாவையும் இந்துமதத்தையும் தாக்க முற்படுகிறார்கள்.

அரசு நமது பெண்களுக்கு முழுமையான நடமாட்ட உரிமையை உறுதிசெய்ய முடியுமா முடியாதா என்பதே கேள்வி. அதற்கு அரசு என்ன செய்யப்போகிறது என்பதே கேள்வி. அது அன்றி வேறு எதுவுமே விவாத விஷயம் அல்ல.இத்தகைய ஒரு போராட்டத்தில் இந்த போராட்டத்தின்மூல ஒருமுனைப்படும் பிரச்சினை தவிர வேறு எதைப்பற்றி பேசுவதும் திட்டமிட்ட திசைதிருப்பலாகவே பொருள்படும்.

முந்தைய கட்டுரைகொளத்தூர் புலிக்குத்தி நடுகல்
அடுத்த கட்டுரைஅவன் இவன் என்பது…