காந்தியும் ‘கற்பழிப்பும்’

காந்தியின் எழுத்துக்களை வாசித்துக்கோண்டிருந்தபோது அவர் மீண்டும் மீண்டும் பெண்களின் நடமாட்ட உரிமையைப்பற்றியே பேசுகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. ’பெண்கள் நள்ளிரவில் அச்சமில்லாமல் சுதந்திரமாக நடமாடக்கூடிய தேசம்தான் உண்மையான சுதந்திரம் உடையது’ என்ற அவரது வரி அனேகமாக அனைவரும் அறிந்ததே.

‘பெண்கள் ஏன் நள்ளிரவில் நடமாடவேண்டும்?’ என்ற ஆசாரமான கேள்வியால் காந்தியைக் கேனையனாக காட்டிவிடுவது எளியது. காந்தி வெறுமே சட்டம் ஒழுங்கைப்பற்றி மட்டும் பேசுகிறார், அதற்காக இதை ஓர் அளவீடாகக் கொள்கிறார் என்று விளக்குவதும் சாத்தியமே. ஆனால் காந்தி திரும்பத்திரும்ப அதை அளவுகோலாக வைக்கிறார். எல்லா நாடுகளையும் அதைக்கொண்டே மதிப்பிடுகிறார்.

காந்தியின் ஒட்டுமொத்த எழுத்துக்களையும், அவ்வெழுத்துக்களின் பின்புலமாக உள்ள அவர் உருவாக்கிய அரசியல்-சமூக இயக்கத்தையும் கூர்ந்து ஆராய்ந்தால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும். காந்தியைப்போல ஆண்-பெண் சமத்துவத்தை அவர் காலகட்டத்தில் வலியுறுத்திய இன்னொரு தலைவர் இல்லை என்றே சொல்லமுடியும். உலகவரலாற்றில்கூட. பின்தொடர ஆளில்லாமல் மேடைவீராப்பு பேசியவர்களை கணக்கில் கொள்ளவில்லை. செய்து காட்டியவர்களைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். காந்தியின் ‘ராம ராஜ்யத்தில்’ ஆண் பெண் என்ற பேதம் எவ்வகையிலும் இல்லை.

ஆகவே காந்தி பெண்கள் மூன்றுதளங்களில் ஆணுக்கு நிகராக முன்னிற்கவேண்டும் என்று சொல்கிறார். ஒன்று கல்வி, இன்னொன்று தொழில், மூன்று பொதுச்சேவை.

காந்தியக்கல்வி என்பது பெண்கள் அடிபப்டைக்கல்வி பெறுவதைப்பற்றி பேசுவது அல்ல, பெண்கள் முழுமையான கல்வியைப்பெறுவதைப்பற்றி பேசுவது.இந்தியாவில் காந்திக்கு முன்னரே பெண்கல்விக்கான உயர்மட்ட முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் அவரது ;தேசியக்கல்வி’ என்ற இயக்கம்தான் அடிமட்டம் வரைச்சென்று பெண்களை கல்விக்குள் கொண்டுவந்தது.

இரண்டாவதாக தொழில். காந்தி அதைப்பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார் என்பதைப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. காந்தியின் நோக்கில் ஒரு மனித உயிர் அதுவே பிற உதவி இல்லாமல் வாழத்தேவையான கைத்தொழிலை கற்றிருக்கவேண்டும். இல்லையேல் அது முழுமையான ஆளுமை அல்ல. ஆகவே பெண்களுக்குக் கைத்தொழில் என்பதை காந்தி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார். கதர், கிராமியத்தொழில்கள் முதலியவற்றை அந்நோக்கிலேயே வலியுறுத்துகிறார். எந்த ஓர் அமைப்புக்குச் சென்றாலும் ‘இங்கே எல்லா பெண்களும் கைத்தொழில் பழகுகிறார்களா?’ என்ற வினாவை அவர் கேட்காமல் இருப்பதில்லை.

பெண்களுக்குக் கைத்தொழிலை வலியுறுத்தும் காந்தி அந்தப்பார்வையில் நின்று சமையல் முதலிய வீட்டுவேலைகளை பெண்கள் முடிந்தவரை குறைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார். அதற்கு அவர் சொல்லும் வழிகள் அவருக்கு மட்டுமே சாத்தியமானவை. சமைத்து உண்ணும் உணவின் அளவை குறைப்பதும், கூட்டுச்சமையலறைகளும் ஒருவேளை இன்று சாத்தியமல்லாமலிருக்கலாம். ஆனால் பெண்கள் சமையலறைகளில் இருந்து வெளியேறவேண்டும் என அவர் சொல்வதை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்

இன்று காந்திய கிராமம் மேம்பாட்டு இயக்கத்தின் ஒட்டுமொத்த விளைவுகளில் முக்கியமானதாக உள்ளதே அது பெண்களுக்கு பொருளியல் தன்னிலையை உருவாக்கி அளித்த முதல் இந்திய இயக்கம் என்பதுதான். கோவை அய்யாமுத்து உள்ளிட்ட சர்வோதயவாதிகளின் எழுத்துக்களில் நாம் காண்பது கதர் என்பது எழுபது சதவீதம் பெண்களால் உற்பத்திசெய்யப்பட்ட ஒன்று என்பதுதான். அது பெண்களின் கைகளில் நேரடியாகவே வருமானம் வந்துசேர வழி வகுத்தது. அன்றைய சமூகத்தில் அது உருவாக்கிய தாக்கம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

மூன்றாவதாக காந்தி பெண்களின் பொதுவாழ்க்கைப் பங்கெடுப்பைப்பற்றிச் சொல்கிறார். இந்திய அரசியலில் பெண்களின் பொதுவாழ்க்கை பற்றிப்பேசிய முதல் தலைவர் அவர். பேசியதை நேரடியாக நடைமுறைக்குக் கொண்டுவந்து அதில் பெருவெற்றி பெற்றார். அவரைப்பொறுத்தவரை அரசியல் என்பது சேவைதான். சேவை என்றே அவர் அதைச் சொல்கிறார். ஆனால் சேவை என்பது சமூக அதிகாரமாக மாறும்தன்மை கொண்டதே. ஆகவே அவர் அரசியல் வழியாக பெண்கள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதைப்பற்றியே பேசுகிறார்.

செல்லுமிடங்களில் எல்லாம் காந்தி பெண்கள் அரசியலுக்கு வருவதைப்பற்றி பேசுகிறார். ஒவ்வொரு தொண்டனிடமும் உன் மனைவியை அரசியலுக்கு ஏன் கூட்டிவரவில்லை என்று கேட்கிறார். தன்னை பார்க்கவரும் பெண்களிடமெல்லாம் அரசியலுக்கு வர ஆணையிடுகிறார். அனைத்தையும் விட முக்கியமாக தன் மனைவியை தன் மருமகள்களை நேரடியாக போராட்ட அரசியலுக்கு கொண்டுவந்து முன்னால் நிறுத்திக்காட்டுகிறார். தாராசானா உப்பு சத்தியாக்கிரகமே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மிகமிக நேரடியாக வன்முறையை எதிர்கொண்டது. அதில் கிட்டத்தட்ட தற்கொலைப்படைபோல தயாரித்து அனுப்பப்பட்ட தொண்டர்களை தன் மனைவியும் வயது முதிர்ந்தவருமான கஸ்தூரிபாவை தலைமைதாங்கச்செய்து அனுப்பினார் காந்தி. அதெல்லாம் மகத்தான முன்னுதாரணங்களாக அமைந்தன

காந்திய இயக்கம்தான் மிக அதிகமான பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்தது. அந்தக்காலகட்டத்தில் உலக அளவில் நிகழ்ந்த பிற அரசியல் இயக்கங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அவை எதிலுமே சொல்லும்படி பெண்கள் பங்களிப்பு இல்லை என்பதைக் காணலாம். புகழ்பெற்ற ருஷ்யப்புரட்சியாகட்டும், சீனாவில் சன்யாட்சென் உருவாக்கிய அரசியல் எழுச்சியாகட்டும் ஐரோப்பிய அரசியல் இயக்கங்களாகட்டும் எங்கும் பெண்களை நாம் பார்க்கமுடியாது

காந்திக்குப்பின்பு இந்தியாவில் நிகழ்ந்த எந்த அரசியலியக்கத்திலும் குறிப்பிடும்படியான பெண்கள் பங்களிப்பு இல்லை. இடதுசாரி இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், இந்துத்துவ இயக்கங்கள் எல்லாமே ஆண்களாலானவைவே. காங்கிரஸும் ஆண்களாலானதே, ஆனால் அங்கே பெண்கள் நம்பி தலைமை ஏற்ற ஒருவரே எல்லாமாக இருந்தார்- காந்தி. அவரை ஏற்றுக்கொண்ட பெண்கள் அனைவருமே அவரை தங்கள் தாயைப்போல உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்– தந்தையாக அல்ல.

இன்று எஞ்சியிருக்கும் காந்திய யுகத்து அரசியல் தலைவர்களிடம் இதைக் காணலாம். அவர்கள் அனைவருமே தங்கள் மனைவியுடன் சேர்ந்து போராட்டங்களில் பங்கெடுத்திருப்பார்கள். சிறை சென்றிருப்பார்கள். அவர்கள் கிராமத்திலேயே, அவர்களின் சாதியிலேயே வீட்டை விட்டு வெளியே வந்த முதல் பெண் அவரது மனைவியாகவே இருப்பார். இன்று நினைக்கையில்கூட பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் இது. காந்தி என்ற மாபெரும் படிமம், அதற்கு இருந்த ‘முனிவர் என்ற அடையாளமே அந்த மாற்றத்துக்கு காரணமாகியது என நான் நினைத்திருந்தேன். ஆனால் குமரிமாவட்டத்தின் ஒரு தியாகி சொன்னார் அவரது மனைவி சிறைசென்ற ஒரே காரணத்தால் ‘தேவ்டியா’ என்று மொத்த சாதியாலும் தூற்றப்பட்டார் என்று.

கல்வி- தொழில்-சேவை இந்த மூன்று அடிப்படைகளை வலியுறுத்திய காந்தி அந்த நடைமுறைத்தேவைகளில் இருந்தே பெண்களின் நடமாட்ட உரிமை என்ற எண்ணத்தை அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். 1923க்குப்பிறகுதான் இந்திய அரசியலில் பெண்கள் பெரும் திரளாக களமிறங்கினார்கள். பெண்களும் வேறெந்த காங்கிரஸ் ஊழியர்களையும்போல மிகக்குறைந்த ஊதியத்தில் கிராமம் கிராமமாக சென்று சேவையாற்றவேண்டியிருந்தது. ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சத்தியாக்கிரகங்களிலும் பங்கெடுக்க வேண்டியிருந்தது . அனைத்தையும் விட முக்கியமாக சிறைசெல்ல வேண்டியிருந்தது. இவையனைத்துக்கும் ஆதாரமாக தேவைப்படுவது பெண்கள் தனித்து நடமாடும் உரிமைதான்.

நடமாடும் உரிமையில் உள்ள எந்தக்கட்டுபபாடும் கல்வியிலும் தொழிலிலும் சமூகப்பங்கேற்பிலும் உள்ள கட்டுப்பாடாகவே உருமாறும். அவற்றில் பெண்களை ஒடுக்க நினைப்பவர்கள் முதலில் கைவைப்பதே நடமாடும் உரிமையில்தான். கல்வி ,தொழில், சமூகப்பங்கேற்பில் முழு உரிமை இல்லாத பெண் குடும்பத்திலும் அடிமையாகவே இருப்பாள். சுதந்திரம் இல்லாமல் அவளுடைய ஆளுமை மலர முடியாது..ஆகவே அவள் ஆன்மீகமாகவும் முழுமையடைய முடியாது.

இன்று பாலியல் வல்லுறவுச்செய்திகள் சார்ந்து எழும் கொந்தளிப்புக்கான அடிபப்டைக்காரணத்தை இந்தக்கோணத்திலேயே அணுகவேண்டும். வீட்டுக்குள் நிகழும் கற்பழிப்பைவிட பொது இடத்தில் நிகழும் கற்பழிப்பு இன்னும் தீவிரமானது. அதிலும் தவிர்க்கவேமுடியாத பேருந்துப்பயணத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு அது நிகழ்கிறது என்னும்போது இன்னும் தீவிரமானது. இந்திய அரசியலதிகாரத்தின் மையமான டெல்லியில், காவலர்களின் தடுப்பரண்களுக்கு ஊடாக அது நிகழ்கிறது என்னும்போது அது மிகமிக முக்கியமான குறியீடு.

உண்மையில் அது வல்லுறவு அல்ல, வீட்டைவிட்டு வெளியே வராதே என்ற அறிவிப்புதான். காந்தி வீட்டை விட்டு வெளியே கொண்டுவந்த இந்தியப்பெண்ணை நோக்கி இன்றைய சுரணையற்ற அரசியலதிகாரம் சொல்லும் வரியாகவே அதை பொருள்கொள்ளவேண்டும். காந்தியப் போராட்டம் அந்த வரிக்கு எதிரானது. நடமாட்ட உரிமையை இந்த அரசும் சமூகமும் உறுதிசெய்கிறதா இல்லையா என்ற ஆதாரமான கேள்விதான் அது.

அதற்குப்பதிலாக ‘பெண்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்’ ‘முள் இலையில் விழுந்தால் இலைக்குத்தானே கேடு?’ ‘பெண்கள் ஏன் இரவில் வெளியே செல்லவேண்டும்? ‘கிளப்புக்கு போகும் உரிமைக்காக போராடுகிறார்கள்’ என்பது போன்ற வரிகளை ஆலோசனைகளாக வழங்குபவர்கள் காந்தியின் காலகட்டத்துக்கு முன்னால் எங்கோ வாழ்கிறார்கள்.

காந்தி பெண்களின் உரிமைக்காக முன்வைத்த கருத்துக்களில் முக்கியமான இன்னொன்று பெண்கள் பாலியல் அடையாளத்தை முதன்மையாக கொண்டிருப்பதுபற்றிய அவரது எதிர்ப்பு. காந்தியின் எழுத்துக்களை கூர்ந்து பார்க்கையில் ‘இதென்ன இந்தக்கிழவர் பெண்கள் அவர்களின் பாலியல் அடையாளங்களையும் இச்சைகளையும் முழுக்க துறந்துவிடவேண்டுமென்று சொல்கிறாரா?’ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் காந்தி ஆண்களுக்கும் பாலியல்துறப்பை முவைத்தார் என்பதைக் காணலாம். காந்தியைப்பொறுத்தவரை இளமை என்பது மகத்தான இலட்சியவாதங்களை தாங்கி முன்னேறவேண்டிய அரிய பருவம். அங்கே அதற்கு தடையாக அமைவது பாலியல் இச்சை. அதை வெல்வதே இலட்சியவாதம் நோக்கிச் செல்வதற்கான முதன்மையான வழி. ஆகவே காந்தி அதை வலியுறுத்துகிறார்.[ காந்தி அதைச் சொல்லும்போது உச் கொட்டுபவர்கள் உலகின் முக்கியமான புரட்சியாளர்களும் அதையே சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொள்வது நல்லது]

அதைவிட முக்கியமாக பாலியல் அடையாளம் பெண்களுக்கு ஒரு பெரும்சுமை என்று காந்தி நினைக்கிறார்.அரசியலிலும் பிற துறைகளிலும் ஈடுபட வீடுவிட்டு வரும் பெண்களுக்கு பாலியல் அடையாளம் எதிர்மறையானது என்றும் நினைக்கிறார். ஆகவே பெண்களுக்கு மிக எளிய உடை போதும், அவர்கள் அலங்காரம் செய்துகொள்ளவேண்டியதில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்கள் அறிவு,சேவை இரண்டாலும் மட்டுமே அடையாளம்காணப்படவேண்டும் பால் அடையாளத்தால் அல்ல என்கிறார்

காந்தி விதவைமறுமணத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் திருமணமாகாமலிருக்கையில் விதவை மறுமணம் தேவையற்ற ஒன்று என்று நினைத்தார். டாக்டர் சிவராம காரந்த் விதவைத்திருமணம் ஒன்றைப்பற்றி காந்தியிடம் சொல்லும்போது காந்தி அதை நிராகரிக்கிறார்.

ஆனால் விதவைகள் மறுமணம் செய்துகொள்ளாமல் குடும்பத்துக்குள் ஒடுங்கி சுருங்கி கைம்மைவிரதம் கொண்டு வாழவேண்டுமென காந்தி சொல்லவில்லை.அவர்கள் அரசியல்-சமூகப்பணிகளுக்கு வரவேண்டும் என்று சொல்கிறார். அதாவது தெருத்தெருவாக சென்று தேசசேவையில் ஈடுபடவேண்டும் என்கிறார். குடும்பம் என்ற தளையில் இருந்து அவர்கள் விடுதலைபெற்றதாகவே அது பொருள்படுகிறது அவருக்கு. பின்னாளில் காந்தி விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறார்– தம்பதிகள் இருவரும் சமூகசேவையில் ஈடுபடுவதாக இருந்தால்.

காந்தி அவரது வாயால் வன்முறையை நியாயப்படுத்திச் சொன்ன முக்கியமான தருணம் பாலியல் வன்முறை பற்றி பேசும்போதுதான். வல்லுறவில் ஈடுபடுபவனை அந்தப்பெண் தன் பல்லாலும் நகத்தாலும் கொல்லவேண்டும் என்று சொல்கிறார். அதற்காக அப்பெண் என்ன செய்தாலும் அது தகுமே என்று வாதிடுகிறார்.

ஆனால் அது ‘கற்பிழப்பு’ என்று காந்தி நினைக்கவில்லை. பெண்ணின் புனிதத்தை அழிப்பது என எண்ணவில்லை. ஏனென்றால் அப்படி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்கள் எதையும் இழக்கவில்லை என்றுதான் அவர் சொல்கிறார். அப்படிப்பட்ட பெண்களை சமூகம் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். காந்தியின் ஆணையை ஏற்றுக்கொண்டு மிருதுளா சாராபாய் போன்றவர்கள் இந்தியப்பிரிவினையின்போது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களை மணம் செய்து வைக்க மிகக்கடுமையாக உழைத்தார்கள்

அப்படியென்றால் ஏன் பாலியல் வன்முறையை கொலைத்தண்டனைக்கான குற்றமாக காந்தி எண்ணினார்? ஏனென்றால் அது பெண்ணை பொதுவெளியில் இருந்து திரும்ப இருண்ட சமையலறைக்கு விரட்டுகிறது என்பதனால்தான். இருபதாம் நூற்றாண்டின் அரசியலால் அவள் அடைந்த அனைத்தையும் அவளிடமிருந்து பறிக்கிறது என்பதனால்தான்

பாலியல் வன்முறை என்பது வல்லுறவு மட்டும் அல்ல. பெண்களைப்பற்றி அவதூறு கிளப்புவது, பாலியல் வசைகளால் அவமதிப்பது, பொது இடங்களில் சீண்டுவது எல்லாம்தான். அவை அனைத்துக்கும் அடியில் உள்ள உணர்வு பெண் பொதுவெளிக்கு வருவதற்கு எதிரான காழ்ப்பும் அச்சமும் மட்டுமே. ஆணின் மனம் அதற்கு ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கும். பல்லாயிரம் கோணங்களில் நியாயங்கள் சொல்லும். அவை அனைத்துக்கும் பொருள் ஒரே வரிதான். ‘உள்ள போடி’ என்றுதான் அவன் ஆழ்மனம் சொல்கிறது.

வெளியே வரச்சொன்ன காந்தி அதற்கான வழியையும் சொல்லியிருக்கிறார். அவரைப் பொறுத்த வரை விடுதலை என்பது சத்தியத்தையும் முழுமையையும் நோக்கிச் செல்வதற்கான முன் நிபந்தனை. ஆகவே எல்லா உயிருக்கும் அதற்கான உரிமை இருக்கிறது. அதற்காக எல்லா இழப்புகளையும் சந்தித்து , சமரசமே இல்லாமல், பொறுமையுடன் போராடி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டிய கடமையும் இருக்கிறது
[மறுபிரசுரம் 2011]

முந்தைய கட்டுரைகன்னிநிலம் முடிவு – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27