எச்சிலில் புரள்வது என்னும் சடங்கு


அன்புள்ள அண்ணா,
இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் சடங்கு நமக்கு சொல்ல விழைவது என்ன?

அன்புடன்,
ராஜமாணிக்கம்.

அன்புள்ள வீரா,

ஏற்கனவே ஊடகங்களால் அடித்து துவைத்துக் காயப்போடப்பட்ட செய்திதான் இது. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்த ஓர் அபூர்வமான சடஙகை முன்வைத்து வழக்கம்போல இந்துமதத்தின் சாதிமேலாதிக்கம், அதன் மூடத்தனம் அனைத்துக்கும் உதாரணமாக அதை சித்தரித்து உலகமெங்கும் கொண்டு சென்றுவிட்டார்கள். இதுதான் இந்துமதம், இதுவன்றி வேறெதுவும் அல்ல என்று நிறுவ உலகம் முழுக்க ஊடகங்கள் தங்கள் அனைத்து ஆற்றலையும் செலவிட்டுவிட்டன.

இனி விவேகானந்தரோ ராமகிருஷ்ணரோ நாராயணகுருவோ வள்ளலாரோ அல்ல, இந்துமதம் என்பது இந்தச்சடங்குதான் என்று சொல்லும் கூட்டத்துக்குத்தான் நீங்கள் பதில் சொல்லவேண்டும். இப்போது இஸ்லாமிய ஊடகங்களின் முறை போலும்.

இந்துமதச்சார்புள்ளவர்களையே இச்செய்திகள் மிகவும் குழப்புகின்றன. பலசமயம் தர்மசங்கடங்களை நோக்கித் தள்ளுகின்றன என்பதையும் காணமுடிகிறது.

முதலில் ஒரு அடிப்படையான புரிந்தலை நாம் அடைந்தாகவேண்டும். மதங்கள் அனைத்துமே மிகத்தொன்மையான பாரம்பரியத்தின் நீட்சியாகவே அமைகின்றன. அப்பாரம்பரியத்தின் வேர் அச்சமூகத்தின் பழங்குடிப்பண்பாட்டு பின்புலத்தில் கிடக்கும். காலம்தோறும் உருமாறி உருமாறி அது வந்துகொண்டிருக்கும். அதிநவீன மனிதர்களாக நம்மை எண்ணிக்கொண்டிருக்கும் நாம் அன்றாடவழ்க்கையில் கடைப்பிடிக்கும் ஆசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளில் பெரும்பாலானவை பழங்குடிப்பண்பாட்டில் உதித்தவையாக இருக்கும்.

பழங்குடி மரபில் ஆசாரங்களுக்கு வெவெவெறு நடைமுறைக்காரணங்கள் இருந்திருக்கும். பிற்பாடு அவை குறியீட்டுச்சடங்குகளாக மாறிவிட்டிருக்கும். உதாரணமாக ஒரு குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்மாமன் செய்யும் சீர்களும் சடங்குகளும் தமிழகத்தில் உண்டு. அவை புராதனமான தாய்வழிச்சமூகத்தின் சடங்குகள். தாய்வழிச்சமூகம் நிலைநின்ற கேரளத்தை பார்க்கும்போது அது தெரிகிறது. அச்சமூகத்தில் தாய்மாமன்தான் குழந்தையின் காவலன். ஆனால் தந்தைவழிச்சமூகம் உருவாகி பல்லாயிரமாண்டுகளான பினன்ரும் அந்த மனநிலையும் ஆசாரங்களும் இங்கே தொடர்கின்றன.

மதங்கள் இந்த தொன்மையான பண்பாட்டு நீட்சியை தொகுத்து மறுஆக்கம் செய்து முன்வைக்கின்றன. தத்துவ விளக்கம் அளிக்கின்றன. குறியீடுகளாக ஆக்குகின்றன. எந்த மதமானாலும் அது தத்துவம், நம்பிக்கை, ஆசாரம் என்ற மூன்றுதளங்கள் கொண்டதாகவே இருக்கும். உதாரணமாக கிறித்துவம் ஏசுவின் ரத்தத்தையும் மாமிசத்தையும் உண்ணும் ஒரு குறியீட்டுச்சடங்கைச் செய்கிறது. இறந்த மூதாதையர் மற்றும் மாவீரர்களின் உடலின் சிறுபகுதியை உண்டு தங்கள் உடலாக அவர்களை ஆக்கிக்கொள்ளும் நம்பிக்கை ஆப்ரிக்காவில் இன்றுமுண்டு. கிறித்தவத்துக்குள் அது உருமாற்றமடைந்திருப்பதை எளிதில் காணலாம்.

இந்துமதம், யூதமதம், ஷிண்டோ மதம்,ஆப்ரிக்க தொல்மதங்கள் போன்றவை இன்னும் அதிகமான சடங்குத்தன்மை கொண்டவை. காரணம் அவை எந்த ஒரு தீர்க்கதரிசியாலும் உருவாக்கப்பட்டவை அல்ல. திட்டவட்டமான தரிசனத்தை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டவை அல்ல. நூற்றாண்டுகளாக நிகழ்ந்த ஒரு சமூகப்பரிணாமத்தால் தன்னிச்சையாக உருவானவை. அவற்றுக்கு கறாரான ஒரு ’மையத்தணிக்கை’ இல்லை.

இப்படிச்சொல்லலாம். ஒரு தட்டில் தானியமணிகளைப்போட்டு கீழே மெல்லமெல்ல தட்டினால் அவை இணைந்து ஓரு குவியலாக ஆகின்றன. அதைப்போலத்தான் பலநூறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆசாரங்களும் இணைந்து இந்துமதம் என்ற அமைப்பாக உருவாயின. இணைவு என்ற தேவை இருக்கையில் அதற்கான சாத்தியத்தை அளிக்கக்கூடிய கொள்கைகள் அப்பணியை ஆற்ற ஆரம்பித்தன.

இந்தியா என்ற சமூக அரசியல் அமைப்பு மெல்ல மெல்ல வன்முறையில்லாத வழியில் உருவாக இந்த மதங்கள் பெரும்பங்காற்றின. இம்மதங்கள் இல்லாவிட்டால் இந்தியா இன்றைய ஆப்ரிக்கா போல சமரசமே இல்லாத இனக்குழுச்சண்டைகளின் களமாக இருந்திருக்கும் . நிலப்பிரபுத்துவத்துக்கான மேலாதிக்க அடுக்கை இந்த மதங்கள்தான் உருவாக்கின. அந்த அடுக்கே அரசுகளை , பண்பாட்டை உருவாக்கியது.

ஆம், சென்றகால நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் வெற்றிகள் தோல்விகள் நன்கைகள் தீமைகள் அனைத்துக்கும் அவையே காரணம். நிலப்பிரபுத்துவ காலகட்டம் எல்லாவகையான அடிமைத்தனங்களும் கொண்டது. ஆனால் பழங்குடிச்சமூகங்களை விட எல்லாவகையிலும் மேம்பட்டது. அதிலிருந்துதான் அடுத்தகட்ட சமூக அமைப்புகள் உருவாக முடியும். இந்தியாவில் வைதிகம், பௌத்தம், சமணம் முதலியவை சமூக உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தன. இந்த இயங்கியலைப்பற்றி மிகவிரிவாக டி.டி.கோசாம்பி எழுதியிருக்கிறார்.

இப்படி இணைந்து உருவாகும் மத, சமூக,பண்பாட்டு கட்டுமானங்களில் எந்தெந்த பழங்குடி அம்சங்கள் நீடிக்கின்றன, எவை அழிகின்றன, அவற்றுக்கான காரணம் என்ன என்பதை எளிதில் புரிந்துகொள்ளமுடியாது. கூர்ந்த ஆய்வுநோக்கும் விரிவான சமூகப்புரிதலும் அதற்குத்தேவை. ஆனால் அது இங்கே உள்ள ஆய்வாளர்களுக்கில்லை. இங்கே நாம் ஆய்வாளர் என அறிபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பலவகைகளில் நிதியுதவி பெற்று அந்த நிதிக்காகவே ஆய்வுசெய்பவர்கள். அந்த நிதியளிக்கும் அமைப்புகள் உருவாக்கிக்கொடுக்கும் எளிய கருத்துச்சட்டகத்தை அப்படியே இந்துமதம் , இந்திய சமூகம் மீது போடுபவர்கள். இவர்களின் எஜமானர்களுக்கு துல்லியமான அரசியல், மத ஆதிக்க நோக்கம் உண்டு. இவர்கள் அவர்களின் கூலிப்படையினர் மட்டுமே.

நாம் இவர்கள் உருவாக்கும் ஒற்றைவரிகள் வழியாக சிந்திக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். இன்றையசூழலில் அப்படி சில ஒற்றைவரிகளை முன்வைத்து மிதமிஞ்சி கோபாவேசத்தை நடித்துக்காண்பிப்பவர் சமூகஅக்கறைகொண்ட முற்போக்காளர் என்ற பிம்பத்தைப்பெறுகிறார். அதற்கான உழைப்பும் பெரிதல்ல என்பதனால் அதற்குத்தான் புதுவரவுப்பையன்கப் ள் அதிகம். ஆனாலும் சிலரேனும் பொறுப்புடனும் கடும் உழைப்புடனும் நம் சமூக-பண்பாட்டு-மத வரலாற்றுப்பரிணாமத்தை அறிய முயலவேண்டும்

இந்தியசமூகத்தில் அதன்பழங்குடிக்காலம் முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக உருவாகிவந்த சடங்குகள் இந்துமதத்திலும் சமண,பௌத்த மதங்களிலும் தொகுக்கப்பட்டு நீடிக்கின்றன. இந்த மதங்களின் தத்துவார்த்தமான தளத்தில் இயங்குபவர்கள் தொடர்ந்து சடங்குகளை சீர்திருத்திக்கொண்டே இருக்கிறார்கள். முற்றிலும் காலத்திற்கொவ்வாத சடங்குகளைக் கண்டித்து நீக்க முயல்கிறார்கள். அச்சடங்குகளுக்கு குறியீட்டு ரீதியாக ஏதேனும் முக்கியத்துவமிருக்கும் என்றால் அவற்றை குறியீடுகளாக ஆக்க முயல்கிறார்கள்.

உதாரணமாக, கேரளத்தில் சாக்தம் உச்சகட்டத்தில் இருந்த பத்தாம்நூற்ற்றாண்டில் உயிர்ப்பலி என்பது அன்றாடநிகழ்ச்சியாக இருந்தது. இருவகை உயிர்ப்பலி. ஒன்று மனிதப்பலி. இன்னொன்று மிருகபலி. அதற்கான பண்பாட்டுக்காரணத்தை கேரளத்தின் நிலப்பரப்ப்பின் தேடவேண்டும். கேரளம் பெருங்காடு, அங்குள்ள மக்கள் வேட்டைப்பாரம்பரியம் கொண்டவர்கள்.

பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் தொடர்ச்சியாக பல மதச்சீர்த்திருத்தவாதிகளைப்பார்க்கிறோம். தொன்மங்களில் உள்ள சங்கர பாதர் [ஆதிசங்கரர் அல்ல] அதற்கு தொடக்கப்புள்ளி. பதினாறாம் நூற்றாண்டின் வில்வமங்கலத்து சுவாமியார் அவர்களில் கடைசி. இவர்கள் எல்லா கோயில்களையும் மறு அமைப்பு செய்திருக்கிறார்கள். மனிதப்பலியை கடுமையாகக் கண்டித்து நிறுத்தியிருக்கிறார்கள்.

நிறுத்த முடியாதது மிருக பலி. அதற்கு பல உளவியல் காரணங்கள். ஆகவே மிருகபலியை குறியீடுகளாக ஆக்கினார்கள். கும்பளங்காயை பிளந்து அதனுள் குங்குமம் போட்டுபடைப்பது, இளநீர் சீவி வைத்து படைப்பது, தெச்சிப்பூ படைப்பது, சுண்ணாம்பும் மஞ்சளும் சேர்த்து செய்யப்படும் செக்கச்சிவந்த திரவத்தை அபிஷேகம்செய்வது [இதற்கு குருதி என்றுதான் பெயர்] சுண்ணாம்பும் மாவும் மஞ்சளும் கலந்த செந்நிற விழுதை பூசுவது [மஞ்சணம்] போன்ற சடங்குகள் உருவாகி மிருகபலி மறைந்தது.

இந்துமதத்த்தின் ஓர் எல்லையில் மிகமிகத்தொன்மையான சடங்காசாரங்கள் இருந்துகொண்டே இருக்கும். அவை ஊருக்கு ஊர் ,சாதிக்குச்சாதி வேறுபடும். பல சடங்குகள் முற்றிலும் பழங்குடிவாழ்க்கை சார்ந்தவையாக இருக்கும். இன்றையபார்வையில் அபத்தமானவையாக , கொடூரமானவையாக இருக்கும். அதற்கு மறு எல்லையில் உயர்தத்துவம் அச்சடங்குகளை மதிப்பிட்டு சீர்திருத்தி மறுஆக்கம் செய்துகொண்டே இருக்கும். இரண்டுக்கும் நடுவே தான் இந்துமதம் செயல்பட்டுக்கொண்டிருக்கும். ஆசாரங்களுக்கும் தத்துவத்துக்கும் இடையே நிகழும் முரணியக்கமே இந்துமதம் என்று சொல்லலாம்.

இந்துமதத்தை வேண்டுமென்றே அதன் அடித்தளத்தில் உள்ள பழங்குடிச்சடங்களை மட்டும் கொண்டு மதிப்பிட்டு இதுதான் இந்துமதம் என்று சொல்லலாம். இல்லை அதன் தத்துவ உச்சங்களை மட்டுமே கண்டு அதுவே இந்துமதம் என்று கண்ணைமூடிக்கொள்ளலாம். இங்கே நிதியூட்டப்பட்ட ஊடகங்கள் செய்வது முதல்பணியை மட்டுமே. நான் ஒட்டுமொத்த பார்வையை மட்டுமே முன்வைப்பேன்.

பலசமயம் நாம் நம்முடைய பண்பாட்டுவெளிக்கு அப்பாலுள்ள சடங்குகளை அறியும்போது ஆச்சரியமோ அருவருப்போ அடைகிறோம். சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் ஏழுவயதுப்பெண்ணுக்கு திருமணம் நிகழ்ந்தது என்பது நமக்கு வியப்பு. ஆனால் இன்றும் நாம் செய்யும் பல சடங்குகளின் ஆச்சரியம் நம்மை தீண்டுவதில்லை. சனிக்கிழமை ஒருவர் செத்தால் கூடவே ஒரு கோழியையும் புதைக்கிறோம். மலையாளிகள் அதைக்கண்டு அருவருப்பார்கள். மலையாளிகள் பிணத்தை எரித்ததுமே குளித்துவிட்டு கூட்டாகச் சாப்பிடுவார்கள். தமிழர்கள் அதைக்கண்டால் வாந்தி எடுப்பார்கள்.

சடங்குகளை இன்னும் கொஞ்சம் வரலாற்று நோக்குடன் பார்க்க நாம் பழகும்போது மட்டுமே இந்தியா போன்ற புராதன தேசத்தை, அந்த தேசத்தின் பல்லாயிரம் இனக்குழுக்களை, அந்த மக்கள் படிப்படியாக இணைக்கப்பட்டு உருவான சமூக அமைப்பை, அந்த இணைவுப்போக்கின் விளைவாக உருவான மதங்களை புரிந்துகொள்ள முடியும். அதற்கு நாம் இந்த கூலிமுற்போக்காளர்களை கொஞ்சம் தள்ளிவைக்கவேண்டும். போலிக்கொந்தளிப்புகளை நோக்கி புன்னகைசெய்யப் பழகவேண்டும்

*

இனி இச்சடங்குக்கு வருகிறேன். இந்தியாவெங்கும் உணவு கொடுப்பது சார்ந்து பற்பல ஆசாரங்கள் உள்ளன. அவற்றுக்கான வேர்க்காரணங்கள் நம்முடைய தொல்குடி மனநிலைகளில் ஊன்றியவை. ஒன்று கவனித்திருப்பீர்கள். நாம் ஒரு விருந்தினருக்கு உணவளித்தால் அவர் அந்த எச்சில் இலையை எடுக்க அனுமதிப்பதில்லை. அந்த இலையை நாம்தான் எடுக்கவேண்டும். அது நமக்குப்புண்ணியம். அந்த உணவு நம்முடைய முன்னோருக்கு அளிக்கும் உணவாக ஆகும்.

விருந்தினரும் இரவலரும் உணவுண்ட இலை புனிதமானது என்ற எண்ணம் நம் சமூகத்தில் பல தளங்களில் இருந்திருக்கிறது. இப்போதுகூட திருச்செந்தூரில் அன்னதானம் செய்துவிட்டு அந்த எச்சில் இலைமேல் உருண்டு நேர்த்திக்கடன் தீர்க்கும் சடங்கு அடிக்கடி நிகழ்கிறது. பல அம்மன்கோயில்களில் இவ்வழக்கம் காணப்படுகிறது. காசியில் இது அன்றாடக்காட்சி.

பொதுவாக புழக்கத்தில் இருக்கும் சடங்கு என்பது இரவலருக்கு உணவிட்டபின் அப்படி உருள்வதுதான். நெல்லையப்பர் கோயிலில் பிச்சைக்காரர்களுக்கு உணவிட்டு அவர்கள் உண்ட உணவில் உருண்டு நேர்த்திக்கடன் செய்த சிவகாசித்தொழிலதிபர் ஒருவரை ஒருவருடம் முன்பு கண்டு நானே திகைத்துப்போனேன். சில இடங்களில் அந்த உணவை பிச்சை எடுத்த பணத்தாலும் தானியத்தாலும் அளிக்கவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நூற்றெட்டு வீடு மடிப்பிச்சை எடுப்பது என்றெல்லாம் கணக்குகள் உள்ளன.

பண்பாட்டு ரீதியாக இந்த வழக்கத்தின் வேர்களை எங்கே தேடுவது? முதலில் கவனிக்கவேண்டியது சமணர்கள் மற்றும் பௌத்தர்களின் வழக்கங்களைத்தான். பிச்சை ஏற்பது, உணவிடுவது இரண்டையுமே அவர்கள் இன்றும் புனிதமான மதச்சடங்குகளாக ஆக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமணமுனிவர்கள் பிச்சை எடுத்தே வாழவேண்டும். அவர்களுக்கு இல்லறத்தார் உணவிடுவது பெரும் புண்ணியம்.

சமணமுனிவர் உணவுண்ட பின் அவருக்கு சமைத்த மிஞ்சிய உணவை பிரசாதமாக உண்பதை நான் கண்டிருக்கிறேன். சமணப்பயணிகளுக்கு இல்லறத்தார் உணவிடுவதற்கு முன் அவர்கள் கால் கழுவ நீர் வார்க்கவேண்டும். அவர்கள் உணவுண்ட பின் அந்த இலைகளை குடும்பத்தலைவர் எடுக்கவேண்டும். சில இடங்களில் அந்த இலைகளை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. அது வேள்விக்குண்டத்தின் சாம்பலைவிட புனிதமானது என்று சொல்கிறார்கள்.

இரவலருக்கு உணவிட்டு அந்த இலையை புனிதமான வேள்வியின் எச்சத்துக்கு நிகராகக் கருதுவது சமணத்திற்கு முன்னரே இருந்திருக்கிறது. தருமன் இரவலருக்கு அளித்த பெரும் விருந்தில் எச்சில் இலைகளில் ஒரு கீரி வந்து உருண்ட கதை மகாபாரதத்தில் வருகிறது. அதன் ஒரு பகுதி தங்கமாக இருந்தது.மறுபகுதியையும் தங்கமாக ஆக்கும்பொருட்டு அது வந்து அப்படி உருண்டது. ஆனால் உடல் தங்கமாக ஆகவில்லை.

அதைக்கண்டு வியந்து தருமன் அந்தக்கீரியிடம் விசாரிக்கிறான். ஒரு மாபெரும் கொடையாளியின் தர்மச்செயலே தன்னை பாதி தங்கமாக ஆக்கியது என்கிறது கீரி. அந்தக்கொடையாளி ஒரு பிச்சைக்காரன். தனக்கு பலநாள் கழித்துக்கிடைத்த உணவை பசித்துவந்த இன்னொரு பிச்சைக்காரனுக்கு அவன் அளித்தான். அந்த பிச்சைக்காரன் உண்ட இலையில் புரண்டதனால்தான் கீரியின் உடல் பாதி தங்கமாக ஆகியது. தர்மனின் கொடையைவிட அந்த பிச்சைக்காரனின் கொடை பெரியது என்கிறது கீரி

தர்மன் திகைக்கிறான். ‘நீ இதோ நான் இத்தனைபேருக்கு உணவிடுகிறேன் என்ற மனநிலையில், அவர்களை விட மேலே நின்று உணவளித்தாய். ஆகவே இது தர்மம் அல்ல. இது தர்மத்தின் எப்பலனையும் அளிக்காது’ என்கிறது கீரி.

இந்தக்கதை இந்தச்சடங்கு எத்தனை தொன்மையானது என்பதைக் காட்டுகிறது. கூடவே அதன் அடிப்படையான மனநிலை என்ன என்பதையும் காட்டுகிறது. கொடுப்பவன் தன் அகங்காரத்தை வெல்ல, எளிமையிலும் எளிமையாக தன்னை ஆக்கிக்கொள்ள இச்சடங்கு முன்வைக்கப்பட்டு அதன்பொருட்டே நீடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்தியா முழுக்க சித்தர்களும், ஞானிகளும்,வைதிகர்களும், சமண பௌத்த துறவிகளும் அலைந்து திரிந்து ஞானத்தையும் சமூகஒருமையையும் பரப்பி இந்த தேசத்தை உருவாக்கிய காலகட்டத்தில் இந்தச்சடங்கு உருவாகியிருக்கலாம். இச்சடங்கு மிக எளிதாக யாசகம்பெறுபவர்களை கடவுள் நிலைக்குக் கொண்டுசெல்கிறது. கொடுப்பவர்களை எளியவர்களிலும் எளியவர்களாக ஆக்கி அவர்களின் காலடியில் அமரச்செய்கிறது.

அந்த மனநிலை உலகம் முழுக்க உள்ளதுதான். ஏசு தன் இல்லத்துக்கு வருகைதந்தபோது ஒரு சமாரியப்பெண் தன் கூந்தலால் அவர் பாதத்தை துடைத்தாள் என்ற வரியை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அது ஒரு சமர்ப்பணச்சடங்கு. ஒரு நவீனமனிதர் ‘அய்யய்யே கூந்தலால் காலைத்துடைப்பதா?’ என்றாரென்றால் அவரால் அந்தப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாது.

இந்தியாவில் வைதிகர்களும் முன்பு பௌத்த-சமணத்துறவிகளின் வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார்கள். எந்த தொழிலையும் செய்யாமல் யாசகம் செய்தும் அலைந்து திரிந்தும் அவர்கள் வாழ்ந்தாகவேண்டும் என்ற நெறி இருந்திருக்கிறது. சங்கப்பாடல்கள் காட்டும் வைதிகர்கள் எப்போதுமே மெலிந்து ஒடுங்கிய தவசீலர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தியாவில் பிராமணர்கள் பின்னாளில் அதிகாரத்தைக்கையாள ஆரம்பித்தபோதும்கூட பெரும்பாலான பிராமணர்கள் சமூகத்தால் பேணப்படும் வறியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் மதச்சடங்குகள்செய்தல் என்ற தொழில்களுக்கு அப்பால் அவர்கள் நகர்ந்ததில்லை. அதனால் அவர்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய தார்மீக அதிகாரம் இருந்தது என்கிறார் டி.டி.கோசாம்பி.

அவர்கள் பிறவழிகளில் பணமீட்ட ஆரம்பித்தது பிரிட்டிஷார் ஆட்சி செய்ய ஆரம்பித்தபின்னர்தான். சொல்லப்போனால் இருபெரும் பஞ்சங்களில் அவர்களை பேணிய சமூக அமைப்புகள அனைத்தும் அழிந்து அவர்கள் தங்கள் மரபான தொழில்களால் வாழமுடியாமலானபிறகுதான். அன்றுவரை இந்துசமூகத்தின் எஜமானர்களாக அல்ல, ஆசிரியர்களாகவே பிராமணர்கள் கருதப்பட்டார்கள். சமணத்திலும் பௌத்ததிலும் முனிவர்களுக்கும் பிட்சுக்களுக்கும் இருந்த இடம் அவர்களுக்கு இருந்தது.அதாவது அவர்கள் ஒரேசமயம் இரவலர்கள், ஆனால் மிக உச்சகட்ட சமூகமரியாதையையும் பெற்றவர்கள்.

ஆகவே பிராமணர்களுக்கு உணவிடுதல் என்பது சென்றகாலகட்டத்தில் உயர்சாதி எஜமானனுக்கு அடிமை சோறுபோடுவதாக இருக்கவில்லை. இந்தியாவில் நிலமும் அரசும் என்றுமே இரண்டாம், மூன்றாம் படிநிலையைச்சேர்ந்த சாதிகளுக்குரியதாகவே இருந்திருக்கிறது. அவர்களை அண்டித்தான் பிராமணர் வாழ்ந்தனர். பிராமணபோஜனம் என்பது அந்த அதிகாரசாதிகளால் அளிக்கப்படும் ஒருவகை அன்னதானமே. மிகுந்த பக்தியுடன் செய்யப்படும் அன்னதானம்.

கேரளத்தில் நாற்பதுகள் வரை பிராமணபோஜனம் என்னும் அன்னதானம் நீடித்தது. பஞ்சம்பிழைக்கவந்த தமிழகப்பிராமணர்களே அதில் பெரும்பாலும் உணவுண்டிருக்கிறார்கள். மெல்ல மெல்ல சமூகத்தில் பிராமணர்களுக்கிருந்த இடம் இல்லாமலாகியது. பிராமணிய மதிப்பீடுகளை இந்துசமூகம் உதறி தன்னை மறுசீரமைப்புச் செய்து கொண்டது. ஆகவே பிராமணபோஜனமும் அதுசார்ந்த சடங்குகளும் முழுமையாக அழிந்தன.

ஆனால் இன்றும் குருவாயூரில் இரவலருக்கு அன்னதானம் செய்யப்படும்போது அதே சடங்குகள் நீடிக்கின்றன. சாதிமதம் பார்க்காமல் அன்னதானம் செய்யப்பட்ட எச்சில் இலையில் புதியதாக பெயர்சூட்டப்பட்ட குழந்தையை அமரச்செய்யும் சடங்கை இன்றும் அங்கே காணலாம்.

ஆனால் நான் காசர்கோட்டுக்குச் சென்றபோது தென்கனராவில் ஒரு சில கோயில்விழாக்களில் பிராமணபோஜனம் என்னும் சடங்கு அப்படியே நீடிப்பதைக் கண்டேன். சமூகமாற்றம் நிகழ்ந்தபின்னரும் மனநிலைமாற்றம் நிகழவில்லை. அந்த அன்னதானத்தைச் செய்பவர்கள் பிராமணர்களை கால்தொட்டு வணங்கி அமரச்செய்வதையும் பின்னர் அந்த இலைகளை வணங்கி எடுப்பதையும் கண்டேன். சில இடங்களில் நேர்த்திக்கடன் செய்பவர்கள் இலைகளில் உருள்வதுண்டு என்று அறிந்தேன்.

ஆனால் இதைச்செய்பவர்கள் தலித்துக்கள் மட்டும் அல்ல. மிகப்பெரிய நில உடைமையாளர்களான நடுத்தரச்சாதியினர்தான் அதிகமும். காசர்கோடு, புத்தூர் பகுதி மல்லிகார்ஜுனர் கோயில்களில் நானே பலமுறை கண்டிருக்கிறேன். அத்துடன் பிராமணபோஜனத்துக்கு மட்டும் இப்படிச்செய்கிறார்கள் என்பதும் பிழை. எல்லா சாதியினரும் அமர்ந்து உண்ணும் பந்தியிலும் இதைக் கண்டிருக்கிறேன். கும்பளா என்ற ஊரில் ஓர் ஆலயத்தில் நான் சாப்பிட்ட பந்தியில் சிலர் இப்படி உருண்டதைக் கண்டு மிகுந்த சங்கடம் அடைந்திருக்கிறேன். அவர்கள் குழந்தை பிறப்பதற்காக அப்படி வேண்டியிருந்தார்கள் என்றார்கள்.

தென்கனராவில் தலித்துக்கள் பரம ஏழைகளோ அடிமைகளோ அல்ல. நான் நன்கறிந்த தென்கனரா மிக ஆரம்பகாலத்திலேயே நிலச்சீர்திருத்தம் நிகழ்ந்த பகுதி. சொந்தமாக சற்று நிலம் இல்லாத தலித்துக்கள் அங்கே அனேகமாக இல்லை. அவர்களின் பொருளியல்நிலையும் சமூக நிலையும் மேம்பட்டவை. இச்சடங்கில் தலித்துக்கள் மட்டும் எச்சிலில் உருண்டார்கள், உருளச்செய்யப்பட்டார்கள் என்பதும் வெறும் பொய்ப்பிரச்சாரம் மட்டுமே. சமூகத்தின் பொதுமனநிலைக்குள் அவர்களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஆக, இச்சடங்கை நான் எப்படி பார்க்கிறேன்? இது இந்தியச்சமூகத்தில் தொல்பழங்காலம் முதலே இருந்துவரும் சடங்கு. விருந்தினர், இரவலர், அலைந்துதிரியும் ஞானிகள் போன்றவர்களுக்கு உணவிடும்போது உணவிடுபவன் கடவுளுக்கு வேள்விஉணவு படைக்கும் மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் உணவுண்ட எச்சில் இலை வேள்விச்சாம்பல் போல புனிதமானது என்றும் கருதப்பட்டது.

அதன்பின் ஒரு காலகட்டத்தில் அந்த எச்சில் இலை நோய்களை தீர்ப்பது என்றும், கடவுள் அருள் கொண்டது என்றும் மனநிலை உருவாகியது. அது கடவுளுக்கான வேண்டுதலாக நீடித்தது. எல்லா மதத்திலும் இச்சடங்கு இருந்தது. விருந்தினருக்கும் இரவலர்களுக்கும் உணவு படைத்த இலைமீது அங்கப்பிரதட்சிணம் வைப்பது என்ற சடங்காக அது இன்றும் நீடிக்கிறது

பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட்டது அவர்கள் உயர்சாதியினர் என்பதற்காக அல்ல. அவர்கள் எஜமானர்கள் என்பதற்காக அல்ல. மாறாக அவர்கள் அன்றைய சமூக அமைப்பில் கல்வி, மதச்சடங்கு இரண்டை மட்டுமே தொழிலாகச் செய்து யாசகம் பெற்று வாழவேண்டியவர்களாக அமைக்கப்பட்டிருந்தார்கள் என்பதனால்தான். அவர்களுக்கு உணவளிக்கப்பட்டது சமணர்களும் பௌத்தர்களும் தங்கள் துறவிகளுக்கு உணவளித்த அதே மனநிலையுடன்மட்டுமே. அக்காரணத்தாலேயே அவர்கள் உண்ட இலையும் புனிதமானதாக கருதப்பட்டது.

இன்று அனேகமாக இந்துமதத்தின் எல்லா பிரிவுகளிலும் எல்லா இடங்களிலும் பிராமணபோஜனம் என்ற சடங்கு முழுமையாகவே கைவிடப்பட்டுவிட்டது. காரணம் பிராமணர் அப்படி ஒரு சிறப்புச்சமூகமாக இன்று நீடிக்கவில்லை. அவர்கள் ஒரு சாதிமட்டுமே.

இவ்வாறு அந்தச்சடங்கு நேற்று ஏன் இருந்தது என்பதை வரலாற்று ரீதியாக புரிந்துகொள்ளலாம். அந்த மனநிலையை இன்று நாம் விமர்சிக்கமுடியாது. ஏனென்றால் அதை நாம் இன்று உணரமுடியாது. இன்றைய மனநிலையே வேறு.

இன்று அது முற்றிலும் அபத்தமான, ஒவ்வாத ஒரு விஷயம். முழுமையாகவே நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. இந்துமதம் என்பது அதன் ஆசாரங்களை கைவிட்டும் மாற்றியமைத்தும்தான் முன்னகர்கிறது. எவ்வளவோ ஆசாரங்களையும் மனநிலைகளையும் அது உதறியிருக்கிறது. அதில் ஒன்று இது

பிராமண போஜனம் சார்ந்த சடங்குகள் மட்டுமல்ல, இரவலருக்கு உணவிட்ட இலையில் உருள்வது, அந்த இலையில் சாப்பிடுவது, மண்சோறு சாப்பிடுவது , மடிப்பிச்சை எடுப்பது போன்று நம்மிடமிருக்கும் பல ஆசாரங்கள் வெறும் பழங்குடித்தன்மை மட்டுமே கொண்டவை.அவை முழுமையாகவே களையப்படவேண்டும்

என் நோக்கில் அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தீச்சட்டி எடுத்தல், தலையில் தேங்காய் உடைத்தல், தீமிதித்தல் போன்ற சுயவதைச்சடங்குகள்கூட காலத்திற்கு ஒவ்வாதவை, கழிந்து செல்லவேண்டியவைதான். கடவுள்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் தவிர்க்கப்படவேண்டும்.

அதேபோல நம்முடைய ஈமச்சடங்குகள் பலவற்றையும் நாம் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தாகவேண்டும். பிணத்தை எரித்த மூன்றாம்நாள் எலும்பை எடுத்து அதை பால் விட்டு கழுவுவது, கலத்தில் சேமிப்பது போன்று பல சடங்குகள் நம்மிடம் உள்ளன. அவை தேவையானவை அல்ல என்றே நான் நினைக்கிறேன். அவற்றை நீக்கமுடியாவிடால் குறியீடுகளாக ஆக்கிக்கொள்ளலாம்.

இச்சடங்குகள் இந்துமதத்தின் மையம் அல்ல. இவை இந்தியாவின் பெருநிலத்தில் பரவிவாழும் பல்லாயிரம் சாதிசமூகங்கள் பழங்குடிகளாக இருந்தபோது உருவாக்கிக்கொண்டவை. இவற்றை தொகுத்துக்கொண்டு இந்துமதம் உருவாகி முன்னகர்கிறது. காலம்தோறும் இவற்றில் பலவற்றை அது நிராகரித்தபடித்தான் செல்கிறது. அப்படி பரிசீலனையையும் நிராகரிப்பையும் நிகழ்த்த ஆதாரமாக உள்ள ஒரு தத்துவஞான அமைப்பு இந்துமததிற்குள் உள்ளது.

ஆகவே சடங்குகளும் ஆசாரங்களும் அல்ல, நடைமுறைவிதிகளும் கட்டுப்பாடுகளும் அல்ல, தத்துவமும் ஞானமுமே இந்துமதத்தின் சாரம் என்று உணர்பவர்களுக்கு இந்த ஆசாரங்களை கண்டிக்க, சீர்திருத்த தயக்கமேதும் தேவை இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைபயணத்திற்கு வாழ்த்து
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 2