அன்புள்ள ஜெ,
இளையராஜா அவர்கள் உங்கள் விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனுபவங்களை எழுதியிருந்தீர்கள். இளையராஜா வெறும் இசையமைப்பாலர் இல்லை. அவர் ஒரு பெரிய வரலாறு. அத்தகையவர்கள் சாமானிய மக்களில் உருவாக்கும் விளைவு என்பதும் அதேபோல ஆழமானதாகவே இருக்கும். அந்த எளிய இளைஞர்களை நீங்கள் மறுநாள் இளையராஜாவிடம் அழைத்துச்சென்றதும், அவர்கள் அழுததும் எல்லாம் எனக்கும் கண்ணீரை வரவழைத்தன. உண்மையில் நானும் அந்த இளைஞர்களைப்போலத்தான் இருக்கிறேன். இளையராஜாவைச் சந்தித்தால் காலில் விழுவேன். அழுவேன். ஒரு சொல்கூட பேசமுடியாது. நீங்கள் செய்தது பெரிய விஷயம் ஜெ. நீங்கள் பெரியமனிதராக இருப்பது இதனால்தான். மற்ற எளியமனிதர்களை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது. என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்
முருகேஷ் சின்னத்துரை
அன்புள்ள முருகேஷ்
நன்றி. அது ஓர் எளிய விஷயம். அந்த இளைஞர்களின் தரப்புதானே நானும்?
இளையராஜா அவர்களுக்கு கவனாமக பெயர் கேட்டு கையெழுத்திட்டுக்கொடுத்த அந்தக்காட்சி கண்ணில் நிற்கிறது. அவர்களின் பரவசம். ஒருவேளை நான் என்றும் நினைவுகூரும் நிகழ்ச்சியாக அது இருக்கலாம். அவ்வகையில் எனக்குத்தான் அது லாபம்
ஜெ