ஆனியாடி:கடிதங்கள்

அன்புள்ள ஜெ

 

ஆனியாடி நாஞ்சில்நாட்டு மழையைப்பற்றி உங்கள் கட்டுரையில் படித்து ஏக்கம் அடைந்தேன். ஆனால் பிறகு நினைத்துக்கொண்டேன் அப்படி எண்ண வேண்டியதில்லை என்று. எல்லா மண்ணுக்கும் தனக்கான அழகு கொண்டிருக்கிறது இல்லையா? நான் பிறந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது .அங்கே வருசத்தில் பத்து நாள் மழைபெய்தாலே அதிகம். வெங்காத்து அடிக்கும். கோடைகாலத்திலே கூரைக்கீழே படுக்க முடியாது. தோட்டத்துக் கொட்டாயிலேதான் படுப்போம். குடிதண்ணிக்காக நிறைய தூரம் சைக்கிளிலே போவோம். ஆனால் இப்போது நினைத்துப் பாக்கிறபோது அப்போது வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் சந்தோசமாக இருப்பது போலத்தான் நினைக்கிறேன். சீமைக்கருவேலம் படர்ந்த கம்மாய்கரையையும் பனைவிடலிகள் நிற்கும் கரட்டுமேடுகளையும் நினைக்கும்போதும் மனசு ஜிலுஜிலுப்பாகத்தான் இருக்கிறது. எத்தனை வசதிகள் இருந்தாலும் இப்போது நகரத்திலே அதெல்லாம் இல்லை. அதாவது வானம் மண் காற்று இதெல்லாம் இருந்தால் போதும் எல்லா இடத்திலும் மனுஷன் சந்தோசமாகத்தான் இருப்பான் என்று நினைக்கிறேன்

 

ராதாகிருஷ்ணன்

 

வணக்கம் குரு.,
       
நாஞ்சில் நாட்டின் மண்ணை மணக்க வைத்துவிட்டீர்கள்.!! மிகவும் உற்சாகமாக இருந்தது நாஞ்சில் நாட்டு ஆனியாடி தகவல்கள். ஒவ்வொரு மண்ணிற்க்கும் இதே போன்ற ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது,இருந்தபோதும் அதை பதிவு செய்துவருவது உங்களைபோன்ற மிகச்சிலரே.! நாஞ்சில்நாட்டிற்க்கு பல தனிச்சிறப்பு இருப்பது போலவே அம்மண்ணை, மக்களை பதிவு செய்யும் தன்னிகரற்ற எழுத்தாளர்களும் உண்டு. எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் தஞ்சை, ராமநாதபுரம் போன்ற என் மண் சார்ந்த எழுத்துகள், பதிவுகள் கிடையவே கிடையாது என்பது தான் (எஸ் ரா, வெயிலை பற்றி மட்டும் தான் எழுத முடியும் வேறு அங்கு வெயிலும், வேளிக்கருவை மரமும் தான் இருக்கிறது, அவர் என்ன செய்வார்.!!?).

        ஆனால் நீங்கள் வாய்ப்பும் அவகாசமும் கொடுத்தால் அதை அருண்மொழி அக்கா சிறப்பாக செய்வார்கள் எனபடுகிறது. உங்களுக்கு இணையாக எழுதமுடியும் அவகாசமும்,வீட்டுச்சுமையும் இல்லை என்றால், என முன்னரே உங்கள் மூலம் அறிந்தேன்!
பணிவன்புடன்  

மகிழவன் 

 

 

அன்புள்ள மகிழவன்

 

எல்லா எழுத்தாளர்களுக்கும் அவரவர் மண் அழகானது, முக்கியமானது. எழுத்தாளன் எழுதும்போது மண் மொழியில் புதிதாக உருவாகி வருகிறது. நாஞ்சில்நாடன் எழுதும் குமரிமண், நான் எழுதும் குமரிமண், தோப்பில் எழுதும் குமரிமண் மூன்றும் மூன்று இடங்கள். மூன்று பண்பாடுகள்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

ஆனியாடி மாதம் பற்றி எழுதினீர்கள் எங்கள் ஊர் பண்ணைபுரம். கேள்விப்பட்டிருப்பீர்கள், இளையராஜா பிறந்த ஊர். இங்கேயும் ஆனியாடிமதம் அப்படியேதான் இருக்கும் சிலுசிலுவென்று காற்றூ அடிக்கும். ஆனால் அந்தக்காற்று அங்கே கிராம்பு ஏலம் எதுக்கும் நல்லது இல்லை ஆகவே செடிகளுக்கு மறைப்பு கட்டி வைக்கவேணும். சாரல் மழையில் புல்தான் நன்றாக முளைக்கும். காட்டுக்குள் நிறைய அட்டைகள் பெருகிவிடும். அதனால் விறகு எடுக்கப்போக முடியாது. சாரல் மழையை நானெல்லாம் சின்னவயசிலே நிறைய திட்டுவோம். எங்களுக்கு அப்போதெல்லாம் சட்டை அதிகம் இருக்காது. ஸ்கூலில் கொடுக்கிற சட்டைதான். அது நனைந்தால் காயாது. அதை அடுப்புக்குமேலே கட்டி தொங்கவிடுவோம். வெள்ளைச் சட்டையெல்லாம் கரியாகிவிடும். எங்கள் தங்கச்சியின் சட்டை எரிந்தே போய்விட்டது. காட்டை நம்பி வாழக்கூடியவர்களுக்கு ஆனியாடிமாதம் கஷ்டமானது. நீங்கள் வால்பாறை இந்த மாதிரி போய் பார்த்தீர்களானால் தெரியும். தேயிலை  எடுக்கக் கூடியவர்கள் மழையிலே கஷ்டபப்ட்டு விறைத்து போய் நின்று கொளுந்து எடுப்பார்கள். கொளுந்து எடுத்துக்கொண்டு சேத்திலே மலை ஏறுவதும் கஷ்டம்

 

சிவபாலன்

 

 

அன்புள்ள சிவபாலன்

 

ஒழுகாத வீடும் ஓட்டையில்லா போர்வையும்

சூடான சோறும் இருந்தால்

மழைதான் நல்லது

 

என்று எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்

 

ஜெ

 

 

ஆனியாடி

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களை அணுகுதல்….
அடுத்த கட்டுரைஏழாம் உலகம், கடிதங்கள்