சில வருடங்களுக்கு முன் என் மதிப்புக்குரிய நண்பர் பவா செல்லத்துரை ’எல்லா நாளும் கார்த்திகை’ என்ற நூலை எழுதியிருந்தார். மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் அது. தன் வீட்டுக்கு வந்துசென்ற வெவ்வேறு ஆளுமைகளைப் பற்றிய பவாவின் நினைவுக்குறிப்புகள் அவை.
பவாவை நான் 1989 முதல் அறிவேன். நான் தர்மபுரியில் இருந்த நாட்களில் திருவண்ணாமலை செல்வதுண்டு. பவா அன்று ஏற்பாடு செய்துவந்த கூட்டங்களிலும் விழாக்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழின் முக்கியமான பல எழுத்தாளர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது அப்போதுதான்.
பவா சரியாகவே சொல்லியிருந்ததுபோல அவரது இல்லம் எல்லா நாளும் தீப அலங்காரத்துடன்தான் இருக்கும். யார் யாரோ வந்து தங்கி சாப்பிட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். கட்சிக்காரர்கள், கலைஞர்கள் ,எழுத்தாளர்கள். பவாவின் அம்மா அத்தனைபேருக்கும் சமைத்து மூச்சுமுட்டப் பரிமாறுவார்கள். அவர்கள் வீட்டில் நான் கிட்டத்தட்ட உடல்முழுக்க நிறையுமளவுக்கு பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன்.
இன்றும் பவாவின் வீடு அப்படித்தான் இருக்கிறது. எல்லாநாளும் அங்கே விருந்தினர். வருவிருந்தோம்பி செல்விருந்து பார்த்திருப்பதில் பவாவின் மனைவி ஷைலஜா அவரது அம்மாவை ஒருபடி மிஞ்சிவிட்டார் என்று சொல்லவேண்டும்.
பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக்கோரியபோது அந்த மரபை நானும் கொண்டுசெல்லலாம் என நினைத்தேன். என் நினைவில் நீங்காதிருந்த சில ஆளுமைகளைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்
இக்கட்டுரைகளில் பல முன்பே எழுதப்பட்டவை. சிலவற்றை மாற்றி எழுதினேன். சில கட்டுரைகள் புதியவை. இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இவை இவ் வடிவில் வந்திருக்காது அதற்காக திரு ராவ் அவர்களுக்கு நன்றி.
இம்மனிதர்கள் அனைவரையும் நான் நேரில் அறிவேன். எளிமையாக அறிமுகம் கொண்ட பலர். நெருக்கமான சிலர். அவர்கள் அனைவருமே ஏதோ வகையில் இலட்சியவாதத்தின் சில அம்சங்களாவது கொண்டவர்கள். அந்த இலட்சியவாதம் வழியாக வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொண்டவர்கள். கலையும் இலக்கியமும் சேவையும் எல்லாம் அவர்களுக்கு அதற்கான வடிவங்களாக இருந்தன. அவர்களின் நினைவை நிறுத்திக்கொள்ளவேண்டியது எந்த ஒரு சமூகத்திற்கும் அவசியமானது. இந்நூல் அதற்கான ஒரு ஆவணம்
இந்நூலை பவா செல்லத்துரைக்கும் ஷைலஜாவுக்கும் சமர்ப்பணம்செய்கிறேன்
[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் இவர்கள் இருந்தார்கள் நூலுக்கான முகவுரை]