வரலாறு-கடிதம்

மிக உண்மையான வாதம். குடும்ப வரலாறு, ஊர் வரலாறு, தேச வரலாறு – உண்மையின் உரைவிடமாக இருப்பதைக் காட்டிலும், நல்லதை மட்டுமே சொன்னால் போதும் என்ற விதமாகவே நம் நாட்டில் இருந்து வந்திருக்கின்றன.

உங்கள் வாதம் மிகச் சரியானதே. இருந்தாலும், வள்ளலார் போன்றவர்கள் மிகப் பெரிய ஞானி என்ற ஒரு கருத்தே முக்கியம். எதற்காக நீதிமன்றம் ஏறினார், எதில் வென்றார் என்பதே சொல்லப்படாமல் இருந்தால் கூட பரவாயில்லை.

நேரு, காந்தி, நேதாஜி, போஸ், போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை உண்மையுடன் எழுத ஆரம்பித்தால் அது எதில் போய் முடியுமோ?? அவர்கள் நாட்டு நலனுக்கு உழைத்தார்கள் என்ற பெரிய உண்மைக்கு முன் அவர்களின் பலப் பல சிறிய வாழ்க்கைக் குறிப்புகள் மறைந்து போவதே மேல் என்று தோன்றுகிறது.

சிந்திக்க வைக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்பது முக்கியம் – உங்கள் குடும்பத்தாருடன் உங்கள் உறவு நிலை என்ன என்பது எவருக்கும் முக்கியம் இல்லை :-)

உங்கள் கட்டுரையை மிகவும் ரசித்தேன். நன்றி!!

உமா

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழ்நாட்டுத் தமிழர்களின் வரலாற்று அறிவு அல்லது அறிவின்மை எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம். எதனையும் ஆய்ந்தறியாமல் புளுகு மூட்டைகளை உடனடியாக நம்புகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. கருணாநிதியோ, அண்ணாத்துரையோ, ஈ.வெ.ரா. அல்லது வேரொரு திராவிடக் குஞ்சோ சொன்னது அல்லது சொல்வதுதான் “தமிழர் வரலாறு” என்கிற நிலமை மிக துக்ககரமானது மட்டுமல்ல, மிகக் கேவலமானதும் கூட. நம்மை விடவும் இலங்கைத் தமிழர்கள் அதிக வரலாற்று அறிவுடன் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்தியா அளவிற்கு வரலாறுடைய நாடு உலகில் வேறேதும் இருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவிற்குத் தொடர்ச்சியான போர்களும், ஆக்கிரமிப்புகளும் இந்த மண்ணில் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. தமிழ்நாடும் இதற்குச் சளைத்ததில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெருநகரமும், சிறு நகரங்களும், சின்னஞ்சிறு கிராமங்களும் நம்பவே இயலாத அளவிற்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. நம்மில் பெரும்பாலோருக்கு அதுபற்றிய தெரிதல் இல்லை; தெரிந்தாலும் அது குறித்தான அக்கறை இல்லை. அந்த அறிவு இருந்தால் நமது நகரங்களையும், கிராமங்களையும் இதுபோலக் குப்பை மேடாக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

உதாரணத்திற்கு மதுரையை எடுத்துக் கொள்வோம்.

மதுரை இடைச்சங்க காலத்திலிருந்து அறியப்படுகிற ஒரு நகரம். ஆரம்பத்தில் அது கூடல் என்றே அறியப்பட்டு வந்திருக்கிறது. கூடலை ஆண்ட அகுதி என்ற சிற்றரசனை, ஒல்லாளூர் புத்தப்பாண்டியன் விரட்டியடித்துவிட்டு, கடல் கொண்ட தங்களின் தென்மதுரையின் நினைவாக மதுரை என்று பெயர் சூட்டியிருக்கிறான். இடைச்சங்க காலத்துப் பாண்டிய அரசர்களில் பெரும்பாலோர் பெளத்தர்கள் என்பது இன்னொரு ஆச்சரியமூட்டும் செய்தி. புத்தப்பாண்டியன் மெல்லவே பூதப்பாண்டியனாக தமிழர்களின் நாவில் உருமாறி இருக்கிறான். இன்றைய பூதப்பாண்டி என்ற ஊர் ஒருகாலத்தில் புத்தப்பாண்டியாக இருந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.

இன்றைக்கு இடிபாடுகளாகக் கிடக்கும் (அல்லது திராவிடக் கண்மணிகளால் பிளாட் போட்டு விற்கப்பட்டிருக்கும்) பழைய மதுரை என்று அறிப்படுகிற இடமே உண்மையான மதுரை. நான்கு யானைகள் ஒரே சமயத்தில் நடந்து செல்லக் கூடிய அகலத்தில் அதன் கோட்டை வாயில்கள் நகரின் நான்குபுரத்திலும் இருந்ததாகத் தெரிகிறது. அதுவே நான்மாடக் கூடல் என்று பெயர் வரக் காரணம். அப்படியான ஒரு வாசல் 18-ஆன் நூற்றாண்டின் இறுதிவரை கூட, இடிபாடுகளுடன் இருந்து வந்திருக்கிறது.

பாண்டியர்கள், இலங்கை அரசர்களுடன் தொடர்ச்சியான மண உறவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பெருவாரியான சிங்கள அரசர்களின் அன்னையர்கள் தமிழ்ப் பெண்களே. இலங்கையின் முதல் சிங்கள அரசனாக அறியப்படுகிற விஜயனிலிருந்து, கடைசியாக ஆண்ட கண்ணுச்சாமி வரை, மதுரைப் பாண்டியத் தொடர்பு இடையறாது இருந்து வந்திருக்கிறது.

மதுரை, சிங்கள தேசத்தின் ஒரு பகுதியாக மாறவிருந்த அபாயம் சோழர்களால் தடுக்கப்பட்ட சம்பவமும் நடந்ததுண்டு. பாண்டிய இளவரசர்களுக்கிடைய நடந்த வாரிசுரிமைச் சண்டையில், வீரபாண்டியனுக்கு ஆதரவாக, இலங்காபுரன் என்ற தளபதியின் கீழ் அனுப்பி வைக்கப்பட்ட சிங்களப்படை, குண்டக்கல் வழியாக மதுரை அடைந்து அதனைப் பிடித்துக் கொண்டது. அபாயத்தை உணர்ந்த சோழர்கள், சிங்களப்படையைத் தோற்கடித்து, இலங்காபுரனைச் சிரச்சேதம் செய்து, அவன் தலையை கோட்டை வாசலில் அறைந்து வைத்தார்கள்.

இன்னொரு பாண்டிய வாரிசுரிமைச் சண்டையில், ஒரு பாண்டிய வாரிசு மாலிக்கபூரின் உதவியை நாட, மதுரை முகலாயர்களின் கைக்குச் சென்றது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் பிடியில் இருந்த மதுரையைப் பிடிக்க முயன்ற வல்லாளன் என்கிற அரசன் ஏறக்குறைய அதில் வெற்றி அடைந்தான். இறுதியில் வல்லாளன் செய்த ஒரு சிறிய மூடத்தனத்தால் முகலாயர்களினால் பிடிக்கப்பட்டான். வல்லாளனின் தோலை உயிருடன் உரித்து, அதில் வைக்கோலை அடைத்துக் கோட்டை வாசலில் தொங்க விட்டிருப்பதனைப் பார்த்ததாக இப்ன்-பதூதா தனது பயணக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். அது நிகழ்ந்த போது வல்லாளனுக்கு வயது எண்பதிற்கும் மேல் எனத் தெரிகிறது.

நான் எழுதியது மதுரை வரலாற்றின் ஒரு சிறு துளி மட்டுமே. வரலாற்றுப் பிரியர்களுக்கு மதுரை ஒரு அற்புதம்.

தமிழ் நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் கருவூர் (இன்றைய கரூர்). கரூர் சேரர்களின் வஞ்சிமாநகரம். அவர்களின் தலைநகரமாக இருந்த நகரம். ஓயாத சோழ, பாண்டியப் போர்கள் காரணமாக சேரர்கள் தங்கள் தலைநகரத்தை கொடுங்கல்லூருக்கு பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார்கள். சிலப்பதிகாரம் அனெகமாக கருவூரிலே இயற்றப்பட்டதாக இருக்க வேண்டும். (சிலப்பதிகாரம் சோழ நாட்டு செட்டியார் ஒருவரால் இயற்றப்பட்டதாக தொ.மு.சி. இரகுநாதன் ஆதாரங்களுடன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக அறிகிறேன். இன்னும் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை).

கரூர் சோழர்களின் தலைநகரமாகவும் சிறிது காலம் இருந்திருக்கிறது. தன்னைக் கொல்ல முயலும் சேர, பாண்டியர்களிடமிருந்து தப்ப கரிகாற் சோழன் மறைந்து வாழ்ந்த இடமும் கருவூரே.

இன்னும் காஞ்சிபுரமும், உறையூரும், தஞ்சாவூரும், சிதம்பரமும் இன்னும் பல நகரங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையே. அதுபற்றி எழுதத்துவங்கினால் ஒரு புத்தகம் என்ன பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதலாம்.

சிறு நகரங்களும் இதில் சளைத்தவை இல்லை. பொதினி மலைக்கருகில் (இன்றைய பழனி) சமுத்திர குப்தனுக்கு எதிராக, சோழ பாண்டியர்கள் ஒன்றிணைந்து போரிட்டு அவனைத் தோற்கடித்துப் பின் வாங்கச் செய்திருக்கிறார்கள்.

இப்படியாக, கொட்டிக் கிடக்குது வரலாறு தமிழ்நாட்டில். கொள்வார்தான் இல்லை. மிகப் பரிதாபம்தான்.

நினைவிலிருந்து நான் எழுதியவற்றில் ஏதேனும் தவறிருந்தால் என்னைத் திருத்தத் தயங்காதீர்கள் என வேண்டுகிறேன்.

நன்றி.

முந்தைய கட்டுரைநிதிவசூல்-கடிதம்
அடுத்த கட்டுரைபௌத்தமும் வேதாந்தமும்