நிதிவசூல்-கடிதம்

‘ஆனால் எந்த அமைப்பு மிக முறையாக நிதிவசூல் செய்கிறதோ, அதற்காக முற்றிலும் தொழில்முறையான அமைப்புகளை உருவாக்கியிருக்கிறதோ அது அதற்காக ஏராளமானவர்களைப் பணியமர்த்தியிருக்கிறது என்றே அர்த்தம். அது வசூல் செய்யும் தொகையில் பாதி அந்த வசூல் செய்யும் நிர்வாக அமைப்புக்கே செலவாகி விடுகிறது. இதைப் பல பெரிய தன்னார்வ அமைப்புகளில் கண்டிருக்கிறேன். அவற்றின் முதன்மையான பணி என்பது நிதிசேகரிப்புதான்’ – என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியான வார்த்தை. பலவருடங்களுக்கு முன்னர் ‘டொராண்டோ’விலுள்ள இவ்வகையான அமைப்பொன்றில் சிறிது காலம் தகவல் தொழில் நுட்பத் துறையில் இணையத்தளப் பராமரிப்பாளராகப் பணிபுரிந்திருக்கின்றேன். அவர்களுக்கு வருடா வருடம் சுமார் $400,000 உதவித் தொகை கனடிய அரசிடமிருந்து கிடைக்கின்றது. அதில் சுமார் $40,000 மட்டுமே அந்த அமைப்பின் நோக்கத்துக்காகச் செலவழிக்கின்றார்கள். அதற்கான பணியினையும் தன்னார்வத் தொண்டர்களே செய்கின்றார்கள். மிகுதி $360,000 நிதியினை இயக்குநர், செய்திக்கடித ஆசிரியர், கணக்காளர் போன்ற அந்த அமைப்பில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இயக்குநருக்கு மட்டும் ஊதியமாக வருடத்துக்கு $100,000ற்கு மேல் வழங்கப்படுகிறது.

மேற்கு நாடுகள் பலவற்றில் இவ்வகையான பெயருக்கு இலாபநோக்கற்று இயங்கும் அமைப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. உண்மையில் எந்த நோக்கங்களுக்காக அவ்வகையான அமைப்புகள் இயங்குகின்றனவோ அந்த நோக்கங்களுக்காக அந்த அமைப்புகள் பெறும் நிதியில் பெருமளவு அந்த அமைப்பில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமாகவே செலவிடப்படுகிறது. உழைப்பதற்கு இன்னுமொரு வழியாக இவ்விதமான இலாப நோக்கற்று இயங்கும் அமைப்புகளைப் பாவிப்பதற்கேற்ற வகையில்தான் நிலவும் சட்டதிட்டங்களுமிருக்கின்றன. இதனால் இவ்விதமான அரச நிதியினைப் பெற்று வயிறு வளர்ப்பதற்காகவே பலர் இவ்வகையான அமைப்புகளை உருவாக்குகின்றார்கள். வேடிக்கையென்னவென்றால் இவ்விதமான அமைப்புகளைத் தம் உழைப்புக்குப் பாவிப்பவர்களுக்கு தொண்டர் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனிப்பட்ட மனிதர்கள் பலர் எந்தவித ஆரவாரமுமின்றி மிகப்பெரிய சேவையினை எந்த விதப் பிரதிபலனெதனையும் எதிர்பார்க்காமல் ஆற்றி வருகின்றார்கள். பார்க்கப்போனால் உலகமெங்கும் இவ்விதமான நிலைமையே காணப்படுகிறது.

– வ.ந.கிரிதரன் –

அன்புள்ள கிரிதரன்

ஆம், ஆனால் இதன் இன்னொரு பக்கமும் உள்ளது. இன்று தனிப்பட்ட மனிதர்கள் ஊடகங்கள் மூலம் மிகப்பெரிய தியாக பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். அவர்களை நம்பி நாம் அளிக்கும்பணம் வீணாகலாம். அதற்குப்பதில் தணிக்கைக் கண்காணிப்பும் வெளிப்படையான திட்டமும் உள்ள அமைப்புகளுக்கு உதவலாமென நினைக்கிறார்கள் மக்கள். அது ஒரு மேல்நாட்டு மனநிலை. இங்கும் இப்போது நன்கொடைகளை அமைப்புகளுக்கு மட்டுமே அளிப்பதே பெரும்பாலானவர்களின் மனநிலையாக ஆகிவருகிறது. மேலும் வணிகநிறுவனங்கள் அரசு போன்றவை இன்னொரு நிறுவனத்துக்கே நிதியளிக்கமுடியும். தனிநபர்களுக்கு அளிக்க முடியாது.

எந்த சமூகப்பணியையும் முடிந்தவரை நாமே நேரில் செய்வது நல்லது. நாமே களத்தில் கொஞ்சமேனும் இல்லாத துறைகளுக்கு நிதியளிக்காமலிருப்பதே புத்திசாலித்தனம். என் அனுபவம் இதுவே

ஜெ

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலையில்…
அடுத்த கட்டுரைவரலாறு-கடிதம்