விஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,

இந்தமுறை விஷ்ணுபுரம் விருது தேவதேவனுக்கு என கடைசியில்தான் முடிவெடுத்தோம். தேவதேவனுக்கு விருது அளிப்பதென்பது என்பது எங்களுக்குப்பெரிய கௌரவம் என்றாலும் அவர் எங்கள் நண்பர் குழுமத்துக்கு மிகநெருக்கமானவர் என்பதனால் அந்தத் தயக்கம். ஏற்கனவே அவரது படைப்புகளைப்பற்றிக் கருத்தரங்கு நடத்தியிருக்கிறோம். அவர் எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு விருதளிப்பது சொந்த அண்ணனுக்கு விருதளிப்பதுபோல. ஆனாலும் தமிழில் கௌரவிக்கப்படாத பெரும்படைப்பாளிகளில் ஒருவர் அவர் என்பதனால் அவருக்கே அளிப்பதாக முடிவெடுத்தோம்

பரிசை அளிப்பதற்கு இளையராஜாவை அணுகுவதற்கு தேவதேவன்தான் காரணம். நான் இருவரையும் நன்கறிவேன். இளையராஜாவின் ஆளுமை பலவகையிலும் தேவதேவனுக்கு நிகரானது. தன் கலையையே உபாசனையாகக் கொண்டவர்கள். தன் கலையன்றி எதைப்பற்றியும் அறியாதவர்கள். கடவுள் தோற்றமளிப்பதென்றால் ராஜாவுக்கு இசையாகவும் தேவதேவனுக்கு கவிதையாகவும்தான் காட்சியளிக்கவேண்டும். வேறு எந்தவகையில் வந்தாலும் ‘அப்பாலே போ’ என்று சொல்லிவிடுவார்கள்.

இளையராஜாவிடம் நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்க நானும் நண்பர் சுகாவும் கெ.பி.வினோதும் சென்றிருந்தோம்.பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுப்பவரும், பிரசாத் ஒலிப்பதிவுக்கூட அறையைவிட்டு வெளியேவருவதற்கு மிகவும் தயங்குபவருமான ராஜா நான் அழைத்ததுமே ‘அதுக்கென்ன நீங்க கூப்பிட்டா வரவேண்டியதுதானே’ என்று சொல்லிவிட்டார். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் எங்கள் நோக்கம், கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பது, அவருக்கு உவப்பானதாக இருந்ததுதான் காரணம் என ஊகித்தேன்.

ஜா.ராஜகோபாலன்]

ராஜா வருவதாக்ச் சொன்னதுமே நிகழ்ச்சி சட்டென்று மிகப்பெரிதாக ஆகிவிட்டது. மாநகராட்சிக் கலையரங்கம் பதிவுசெய்யப்பட்டது. கூடுதல்நிதிக்காக நண்பர்களிடம் மின்னஞ்சல் மூலம் கேட்டார் அரங்கசாமி. நண்பர்கள் அன்றிப் பிறரிடம் நிதி கேட்கக்கூடாதென்பது எங்கள் கொள்கை. எப்போதுமே நாங்கள் நிதி சேகரித்துக்கொண்டே இருக்கிறோம். இப்போதுதான் நம்மாழ்வாரின் வானகம் அமைப்புக்குக் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் வசூலித்து அளித்தோம். இருந்தாலும் நிதி உடனே சேர்ந்துவிட்டது. விழா முடிவானது. அரங்கசாமி ஒருங்கிணைப்பாளர். விளம்பரம் ,அழைப்பிதழ் முதலியவற்றை செல்வேந்திரனும் அவரது மனைவி நடத்திவரும் அர்த்தமண்டபம் என்ற விளம்பர-மக்கள்தொடர்பு அமைப்பும் சேர்ந்து பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

கோவையில் விளம்பரத்தட்டிகள் வைப்பது உட்பட எல்லாவேலைகளையும் நண்பர் ராதாகிருஷ்ணன் செய்தார். ஈரோடு விஜயராகவன் வந்து வேலைகளில் உதவினார். பயணமுன்பதிவுகள் பொறுப்பை சீனிவாசன் -சுதா தம்பதியினர் எடுத்து நடத்தினார்கள்.உணவுப்பொறுப்பை ராமச்சந்திர சர்மா எடுத்துக்கொண்டார்.டிசம்பர் முதல்வாரம்தான் நிகழ்ச்சி முடிவாகியது இரண்டுவாரத்தில் இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்தது என்பது தொழில்முறை நிகழ்ச்சி அமைபபளர்களுக்குக் கூட சாத்தியமானதல்ல. அதிலும் பணம்தந்து எவரையுமே வேலைசெய்யவைக்கவில்லை. இந்த ஆர்வமும் உற்சாகமும் பண அளவில் மதிப்பிட்டால்கூடப் பல லட்சம் பெறுமானமுள்ளவை.

நான் டிசம்பர் பத்தொன்பதாம்தேதியே ஊரில் இருந்து கிளம்பிவிட்டேன். இருபதாம்தேதி திரிச்சூரில் லோகிததாஸ் நினைவு திரைக்கதைப்போட்டி பரிசளிப்பு விழா. சிந்துலோகிததாஸ் வந்திருந்தார். நிகழ்ச்சியில் நான் லோகியுடனான நினைவுகளையும் லோகியின் சினிமாபற்றிய கருத்துக்களையும் பற்றிப் பேசினேன். காலையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. ஆற்றூர் சிரித்தபடி சொன்னதுபோல ‘போஸ்ட் ஒழிமுறி’ பிரபலம். பெருமளவில் இதழாளர் வந்திருந்தனர். ஏராளமான பேட்டிகள், கட்டுரைகள்.

இரவில் ஆற்றூர் ரவிவர்மா வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கினேன். ஆற்றூர் கொஞ்சம் கால்வலியுடன் இருக்கிறார். தினம் ஐந்தாறு கிலோமீட்டர் நடப்பவர் இப்போது வீட்டுக்குள் இருப்பதன் சோர்வுடன் இருந்தாலும் மனதளவில் உற்சாகம்தான். கம்பராமாயணத்தை மொழியாக்கம் செய்கிறார். இசைகேட்கிறார். இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தோம். காலையிலும் பத்துமணிவரை பேசிக்கொண்டிருந்தேன். அதன்பின் கிளம்பி கோவைக்கு வந்தேன். கேரளத்தின் ‘உயர்தர’ பேருந்து. நான் அருகிலிருந்தவரிடம் ‘இது தேசிய நெடும்பாதையில் போகாதா, இப்படி சந்துகள் வழியாகச் செல்கிறது?’ என்றேன். அவர் நிதானமாக ‘இது தேசிய நெடும்பாதைதான்’ என்றார்

மதியம் கோவை. அரங்கசாமியின் நண்பர் வந்து என்னை அழைத்துச்சென்றார். எஸ்.கே.விடுதியில் அறை. நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். விழாவுக்கான உற்சாகம் அங்கேயே ஆரம்பித்துவிட்டது. சிலசமயம் தீவிரமாகவும் சிலசமயம் வேடிக்கையாகவும் சென்றுகொண்டே இருந்த உரையாடல். மாலைக்குள் நிறைய நண்பர்கள். ஈரோட்டிலிருந்து விஜயராகவன், கிருஷ்ணன், திருப்பூர் ராஜமாணிக்கம். சேலம் பிரசாத், சுரேஷ், சென்னையிலிருந்து பிரபு என வெளியூர்நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

இரவு தங்குவதற்காக நண்பர் ஷிமோகா ரவியின் பங்களாவுக்குச் சென்றோம். அதன் நான்காம் மாடியின் அறைகள் முழுக்க காலியாகவே இருந்தன. அங்கே சென்றபோது ஈரோட்டில் இருந்து முரளி போன்ற நண்பர்கள் வந்து சேர்ந்துகொண்டார்கள். பேச்சு உலகளவில் சமூக அமைப்பை உருவாக்குவதில் மதங்களுக்குரிய பங்கைப்பற்றியும் இந்திய சமூகக் கட்டுமானத்தை வன்முறையில்லாமல் அமைப்பதில் வைதிகமும் சமணமும் ஆற்றிய பங்கைப்பற்றியும் சென்றது. இரவு இரண்டு மணிக்குத்தான் தூங்க முடிந்தது.

அதிகாலையில் மதுரைநண்பர்கள் வே. அலெக்ஸ், பாரிசெழியன் எல்லாரும் வந்துவிட்டார்கள். மறுநாள் முதல் எல்லா நண்பர்களும் தங்குவதற்காக ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்திருந்தோம். பெரிய கூடமும் நான்கு தனியறைகளும் உணவுக்கூடமும் கொண்ட மண்டபம் அது. நான் என் அறைக்குச்சென்று குளித்து உடைமாற்றி ஏழுமணிக்குக் கல்யாணமண்டபம் வந்தபோது மொத்த இடமும் நண்பர்களால் நிறைந்திருந்தது.

ஈரோட்டில் இருந்து விஸ்வம், சிவா, பாபு என நண்பர்கள் வந்தார்கள். திருப்பூர் நண்பர்கள். மதுரை திருச்சி நண்பர்கள் என பெரிய கூட்டம்.

விஷ்ணுபுரம் விருதை ஒட்டி நண்பர்கள் கூடுவது ஆரம்பித்து இந்த மூன்றாம்வருடம் அது மிகப்பெரிய இலக்கியச் சந்திப்பாக ஆகிவிட்டிருக்கிறது. ஏறத்தாழ நூறு நண்பர்கள். வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்நிகழ்ச்சிக்கெனவே வந்து உடனே திரும்பிய நண்பர்கள் ஏழெட்டுபேர் இருந்தார்கள். சித்தார்த், கார்த்திக், ராஜன் என இணையத்தில் மட்டுமே அறிமுகமான வெளிநாட்டு நண்பர்களை சந்திப்பதில் பெரும் உற்சாகம் இருந்தது.

பத்துமணிக்கு ராஜாவும் சுகாவும் விமானமேறிவிட்டார்கள் என்ற தகவல் தெரிந்தது. நானும் அரங்கசாமியும் அலெக்ஸும் பாரிசெழியனும் ரவியும் நாஞ்சில்நாடன் வீட்டுக்குச்சென்று அவரை அழைத்துக்கொண்டு விமானநிலையம் சென்றோம். அங்கே பதினொன்றரை மணிக்கு ராஜா சுகாவுடன் இறங்கிவந்தார். ராஜாவின் முகம் என்னைப்பொறுத்தவரை எப்போதுமே மனதை மலரச்செய்வது. நான் அவரது இசையைப்பற்றிக்கூடச் சொல்லவில்லை, அவரது சிரிப்பும் தோற்றமுமே மிக இனிமையானவை.

[செல்வேந்திரன்]

நாஞ்சில்நாடனும் அலெக்சும் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்கள். ‘நீங்கள்லாம் வந்ததே பெரிய கௌரவம்.செண்டெல்லாம் எதுக்கு?’ என்று சிரித்தார் ராஜா. ராஜாவை தி பார்க் ஓட்டலுக்குக் கொண்டு விட்டோம். சுகாவைச் சந்திக்க ஒரு பெருங்கும்பலே காத்திருந்தது. ஆனால் ராஜா அவர் தன்னுடன் இருந்தால் வசதி என்று சொல்லிவிட்டார். ஆகவே சுகாவும் பார்க் ஓட்டலிலேயே தங்கிவிட நேர்ந்தது. ராஜாவிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவருக்கு எங்கள் நிகழ்ச்சி இப்படிப்பட்ட ஒரு பெரும் நண்பர்கூடுகை என அப்போதுதான் தெரிந்தது. ஆச்சரியப்பட்டார்.

நான் திரும்பிக் கல்யாணமண்டபம் வந்தேன். இப்போது பெரும் இலக்கியக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தேவதேவன் இதழாளர்களுக்கு பேட்டிகள் கொடுத்துக் களைத்த நிலையில் இருந்தார். மாடியில் இரு பெரும்பந்திகளாக சாப்பாடு. ராமச்சந்திரஷர்மா பந்திவிசாரணை செய்துகொண்டிருந்தார்.

அத்தனை இலக்கியநண்பர்கள் உற்சாகமாகச் சிரித்துக் கொப்பளித்தபடி சாப்பிடுவதைப் பார்க்கையில் மனம் பொங்கியது. எவ்வளவு பெரியகுடும்பம்! எவ்வளவு எழுத்தாளர்கள். பல்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள். முரண்பட்ட இலக்கியப்பார்வைகளும் அரசியலும் உடையவர்கள். ஆனால் இந்தக்காலகட்டத்தின் பொதுச்சிந்தனையை ஒன்றாகத் திரட்டும் தேனீக்கள் அவர்கள். அவர்கள் செல்லும் திசைகள் மட்டுமே வேறு வேறு.

மதியத்துக்குப்பின் இன்னும் பத்துநண்பர்களுடன் சென்று ராஜாவைப்பார்த்து வந்தேன். ஓய்வெடுத்து உற்சாகமாக இருந்தார். அவரது அண்ணாவும் கவிஞருமான பாவலர் வரதராஜனைப்பற்றிப் பேசினார். சுகாவிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டுத் திரும்பினோம். வந்து மீண்டுமொரு இலக்கிய விவாத அமர்வு

மாலை ஏற ஏற நிகழ்ச்சிக்கான பதற்றம். பதற்றப்பட ஏதுமில்லை. ஏனென்றால் எந்த ஏற்பாட்டிலும் எனக்கு எந்தப்பங்குமில்லை. ஆனாலும் பதற்றப்படாவிட்டால் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நிறைவு இருக்காதே என்பதற்கான பதற்றம்.

ஆறுமணிக்கு நிகழ்ச்சி. ராஜாவை அழைக்கச்சென்றிருந்த நண்பர்கள் அவர் கிளம்பிவிட்டதாகச் சொன்னார்கள். வழியில் ஒரு எதிர்பாராத போக்குவரத்துத் தேக்கம். ஆறு இருபதுக்கு ராஜாவந்திறங்கினார். நாங்கள் அவரைக்காணக் கூட்டம் வரும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அந்த அளவுக்கு வெறிகொண்ட மாபெரும் நெரிசலை எதிர்பார்க்கவில்லை. அவரைப் பாதுகாத்து உள்ளே கொண்டுசென்றோம். இன்னொரு சின்னச் சிக்கல், இத்தனை இதழாளர் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவர்களுக்கான ஏற்பாடுகளையும் விரிவாகச் செய்யவில்லை. முன் இருக்கைகள் அவர்களுக்காக ஒதுக்கியிருக்கவேண்டும்.

[நாஞ்சில் நாடன்]

நிகழ்ச்சி ஒரு பக்கம் ஓர் இலக்கியக்கூட்டமாகவும் மறுபக்கம் ஒரு கொண்டாட்டமாகவும் இருந்தது. செல்வேந்திரன் அவருக்கே உரிய மெல்லிய கிண்டலும் உற்சாகமான இளமைச்சிரிப்புமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ராஜா மேடைக்குவந்தபோதே அரங்கு முழுக்க ஒரு பரவசம். அவரது தோற்றமே அந்த அலையை உருவாக்கியது. தேவதேவன் விழா வேறு எவருக்கோ நடக்கிறது என்பதுபோல பராக்குபார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்

இளையராஜா இசையமைத்த மாசறுபொன்னே வருக என்ற பாடலை இறைவணக்கமாக நண்பர் சுரேஷின் மகள்கள் பாடினார்கள். சுருதிசுத்தமான பாடல். இனிய குரல். ராஜாவே பின்னர் அவர்கள் நன்றாகப்பாடினார்கள் என்று சொன்னார்.

அரங்கசாமி விஷ்ணுபுரம் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றிச் சொன்னார். ஒரு இலக்கியநண்பர்கள்கூட்டம் தமிழில் என்னென்ன நிகழவில்லை. என்னென்ன நிகழலாம் என நினைத்ததோ அதை நிகழ்த்துவதற்கான அமைப்பாக உருவாக்கப்பட்டது. இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பாற்றி கவனிக்கப்படாதுபோன படைப்பாளிகளை முன்னிறுத்துவதே இவ்வமைப்பின் நோக்கம். அதற்காகவே இவ்விழா என்றார்.

நாஞ்சில்நாடன் தலைமையுரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் elegant என்று சொல்லப்படவேண்டிய உரை. தேவதேவனுக்கும் அவருக்குமான உறவைப்பற்றிச் சொல்லி தேவதேவனின் கவிதைகளின் எளிமையான அழகை நலம்பாராட்டினார். ராஜாவை சந்தித்த முதல்நிகழ்ச்சியையும் அவரது இசையில் படித்துறை படத்துக்காக எழுதிய பாடலையும் விவரித்தார். ராஜகோபாலன் தேவதேவன் கவிதைகளைப்பற்றி செறிவானதோர் உரையை நிகழ்த்தினார். மோகனரங்கன் தேவதேவன் கவிதைகளைப்பற்றி ஒரு கருத்துரையை வாசித்தார்.

இயக்குநர் சுகா ஒரு எளிய நெல்லைச்சிறுவனாகத் தனக்கு எப்படி கவிதை அறிமுகமாகியது என்று விவரித்தார். பள்ளிப்பாடத்தில் ‘எட்டையபுரம் சுப்பையா’ கவிதைகள். அதன்பின் கவிதையைக் காட்டித்தந்தவை கண்ணதாசனின் சினிமாப்பாடல்கள். அவை கொஞ்சகாலம் பித்தெடுத்து அலையவைத்திருக்கின்றன. அதன்பின் வண்ணதாசன் போன்ற நவயுகக் கவிஞர்களின் கவிதைகள். கடைசியாக தேவதேவனின் கவிதைகளுக்கு வாசல் திறந்தது என்றார். இயல்பான நகைச்சுவையுடன் கூடிய உரை.

தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருதையும் பணமுடிப்பையும் இளையராஜா வழங்கினார். தேவதேவன் பற்றிய ‘ஒளியாலனது’ என்ற என்னுடைய நூலை கல்பற்றா நாராயணன் வெளியிட வாசகர் கோபி ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார் .

சொல்புதிது குழும நண்பரான கடலூர் சீனு நண்பர்களின் உதவியுடன் சொல்புதிது என்ற பதிப்பகத்தை இவ்வருடம் ஆரம்பித்திருக்கிறார். ஆறு நூல்களை இவ்வருடம் வெளியிட்டிருக்கிறார். என் நூல்கள் இரண்டு. சிறுகதைத் தொகுதியான ‘ஈராறு கால் கொண்டெழும் புரவி’ இந்துஞானமரபின் மீதான விவாதங்கள் கொண்ட ’இந்து மதம் விவாதங்கள்’

டாக்டர் சுநீல்கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ என்னும் தொகை நூல். ஷிதிமோகன் சென்னின் ‘இந்துமதம் அறிமுகம்’. கே.பி.வினோத் ஒரு நூலை மொழியாக்கம் செய்திருந்தார் . நித்ய சைதன்ய யதியின் ‘இந்துமதம்-விவேகிக்கான வழிகாட்டி’ .

இருவருக்கும் இது முதல்நூல். ஆகவே சொல்புதிதை ராஜா கையால் அறிமுகம் செய்வது ஒரு நல்வாய்ப்பு என்பதனால் அந்த இருவரையும் மட்டும் மேடையேற்றி அவர்களின் நூல்களை ராஜா வெளியிடச்செய்து பெற்றுக்கொள்ளவைத்தோம்.

கல்பற்றா நாராயணனின் உரையை கே.பி.வினொத் மொழியாக்கம் செய்தார் கல்பற்றா தேவதேவனின் கவிதைகள் மீதான தன்னுடைய நுணுக்கமான வாசிப்பை அழகிய படிமங்கள் வழியாகப் பேசினார். ‘அப்பால் அழகிய இளம்பெண்ணாகத் தெரிந்த ஒருத்தி என்னை நெருங்க நெருங்க முதியவளாகி என்னைக் கடந்துபோனாள்’ என்ற தேவதேவனின் கவிதை வரியில் இருந்து முன்னும் பின்னும் நகர்ந்து அமைக்கப்பட்டிருந்த அழகிய உரை. காலமும் பார்வையும் சேர்ந்து உருவாக்கும் கவிதைக்கணத்தை , அதிலுள்ள தீராத வியப்பை , அவ்வுரையில் கல்பற்றா நாராயணன் பதிவுசெய்திருந்தார்.

[சுகா ]

ராஜாவின் உரை பார்வையாளர்களால் பெரும் எழுச்சியுடன் வரவேற்கப்பட்டது. கவிதை என்பது இசை கலக்கப்பட்ட மொழி. அதனால்தான் அது சிறப்பு பெறுகிறது. ஏனென்றால் மனிதனின் முதல்மொழி இசைதான். இரண்டாவது இடம்? அதுவும் இசைதான்? சரி, மூன்றாவது இடம்? அதுவும் இசையேதான். தேவதேவனின் சில கவிதைகளைத்தான் வாசிக்க முடிந்தது என்றும் அதிலேயே அவர் தன்னுள் உள்ள அமைதியைக் கண்டுகொண்ட பெரும் கவிஞர் என்று தெரிந்ததாகவும் இளையராஜா சொன்னார்.

கடைசியாக நான் வாழ்த்துரை வழங்கினேன். 1986இல் முதல் முறையாகக் குற்றாலம் பதிவுகள் பட்டறையில் தேவதேவனைச் சந்தித்தநாளை நினைவுகூர்ந்தேன். அன்று தேவதேவன் சொன்னார். ‘என்னுடைய கவிதைகள் மரங்களைப்போல. அவற்றின் கிளைகளை நீங்கள் என் வரிகளில் பார்க்கிறீர்கள். அவற்றின் வேர்கள்நேர் எதிர் திசையில் மண்ணுக்குள் ஓடுகின்றன. மண்ணுக்குள் இருக்கும் வேர்களும் இணைந்ததே மரம்’ அன்றுமுதல் அவர் என் ஆன்மாவின் விளையாட்டுத்தோழர் என்றேன்.

கடைசியாக தேவதேவன் தன்னுடைய ஏற்புரையை வாசித்தார். விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் பங்கெடுத்த அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு வந்திருந்த கு.ஞானசம்பந்தன், வெயிலான் ஆகியோரும் அமைப்பை சேர்ந்த விஜயராகவன் , திருமலைராஜன் ஆகியோரும் நினைவுப்பரிசுகள் வழங்கினர். தேவதேவன் மனைவிக்கு சுதா சீனிவாசன் நினைவுப்பரிசு வழங்கினார்.

[ சுநீல் கிருஷ்ணன் நூல் வெளியீடு]

விழாவில் நாங்கள் எதிர்பாராத கூட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். பெரிய கூடம் நிறைந்து வெளியே பலர் நின்றிருந்தனர். இரு சிறு சிக்கல்கள். ஒன்று இதழாளர்களுக்குத் தனி இடமும் அடையாளமும் வழங்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதழாளர் அல்லாதவர்களும் இதழாளர் என வந்து கூடிவிட்டார்கள். ஆகவே இதழாளர் கொஞ்சம் அதிருப்தி அடைந்தனர். அவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டியிருந்தது. அந்த மன்னிப்பை மீண்டும் பதிவுசெய்கிறேன். ராஜாவை சந்திக்க விரும்பி முன்னரே கேட்டிருந்த இதழாளர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்திருந்தோம். விழாமேடையில் அதற்கான வசதி இருக்கவில்லை.

இரண்டாவதாக ராஜாவின் அடித்தளரசிகர்கள். இலக்கிய ஆர்வமில்லாதவர்கள் வரக்கூடாது என்பதனால் நாங்கள் பெரிய அளவில் விளம்பரத்தட்டிகள் வைக்கவில்லை. ஆனாலும் நூறுக்குமேற்பட்ட அதிதீவிர ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அவர்களுக்கு நிகழ்ச்சியில் ஆர்வமில்லை. வெளியே நின்று ராஜாவை சந்திக்கவேண்டும் என்றும் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றும் கூச்சலிட்டார்கள். அழுதார்கள், காலில் விழுந்தார்கள்.

‘சரி உங்கள் பிரதிநிதியாக இருவர் வந்து மாலை போடுங்கள்’ என்று சொன்னோம். அதை அவர்கள் ஏற்கவில்லை. அப்படியானால் பத்துப் பத்துப் பேராக வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றோம். அதற்கும் சம்மதமில்லை. அனைவருக்கும் ராஜாவிடம் பேச, கொடுக்க ஏதாவது இருந்தன. கூட்டமாக முட்டி மோதி மேடையேறவே அவர்கள் முயன்றார்கள்.

[கே.பி,வினோத் நூல் வெளியீடு]

அது சாத்தியமே இல்லை. ராஜா எழுபதுக்கும்மேல் வயதானவர். தனிமை விரும்பி. அவர் களைத்தும் இருந்தார். ஆனால் எதையுமே அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. விழா முடிவு வரை ராஜா இருந்திருந்தால் பெரிய நெரிசல் வரலாம் என்பதனால் என் உரைக்கு முன்னதாகவே ராஜாவை வெளியே கொண்டுசென்றோம். அவ்வழியில் பெரும் கூட்டம் மூர்க்கமாக முண்டிக் கதவுகளை உடைத்தது. ஆகவே வேறு காரில் வேறு வழியாக அவரை வெளியே கொண்டு சென்றோம்.

அவ்வழியிலும் இருபதுமுப்பது பேர் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் அவரது வழியை மறித்துத் தரையில் விழுந்தார்கள். கத்திக் கூச்சலிட்டு அவர் காலைப்பிடித்தார்கள். வேட்டியையும் கையையும் பிடித்து இழுக்க வந்தார்கள். அவர் அங்கே மேலும் சற்று நேரம் நின்றால் பெருங்கூட்டமாக ஆகிவிடும். கைகளால் ஒரு வளையம் செய்து அதற்குள் ராஜாவை நடக்கச்செய்து பாதுகாப்பாகக் காரில் ஏற்றிக் கொண்டு வெளியே விட்டோம். கார் சாலைக்குப்போனபின்னரே என் மூச்சு திரும்பி வந்தது.

அந்த நெரிசலில் சிலரைப்பிடித்துத் தள்ளவேண்டியிருந்தது. அப்போது கடும் கோபம் வந்ததும் உண்மை. தங்கள் வெறியால் என்ன செய்கிறோமென்றே தெரியாமலிருக்கிறார்களே என நினைத்தேன். ஆனால் மறுநாள் அவர்கள் மீது பிரியம்தான் வந்தது. தம்பி ராதாகிருஷ்ணனை அனுப்பி அவர்களைத் தேடிப்பிடிக்கச் சொன்னேன். ராதாகிருஷ்ணன் அவர்கள் வைத்த ஒரு பேனர்வழியாக அவர்களை அடையாளம் கண்டுகொண்டார். அவரும் அலெக்ஸும் சென்று அந்த இளைஞர்களைக் கூட்டிவந்தார்கள்.

நான் அவர்களைக் காரில் ஏற்றி பார்க் ஓட்டலுக்குக் கொண்டுசென்றேன். அந்த இளைஞர்கள் துப்புரவு வேலை, ஒயரிங் வேலை போன்றவை செய்பவர்கள். ஓய்வுநேரப் பொழுதுபோக்காக பாண்ட் மேளம் வாசிக்கிறார்கள்.உண்மையான இசைரசிகர்கள்,பாடகர்கள். கூடவே ராஜாவின் பக்தர்கள். ராஜாவை சந்திக்க எட்டுமுறை சென்னைக்குச் சென்று மாதக்கணக்கில் முயன்றார்கள் என்றார்கள். ஒருமுறை அவர்கள் மூகாம்பிகை கோயிலுக்கே சென்றார்களாம், அங்கும் சந்திக்கமுடியவில்லையாம்.

அன்று, 23 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு ராஜாவுக்குக் கோவையில் பெரிய இசைநிகழ்ச்சி இருந்தது. அதற்காக அவர் கிளம்பும் நேரம். இளைஞர்களைத் தேடிப்பிடிக்க நேரமாகிவிட்டது. ராஜா கிளம்பவிருக்கிறார் என்றார் சுகா. நான் சொல்லிப்பார்க்கிறேனே என்று சொன்னேன். உள்ளே சென்று சொன்னதும் ராஜா வரச்சொல்லுங்கள் என்றார். பையன்கள் உடல்நடுங்கக் கைகூப்பியபடி உள்ளே வந்தார்கள். ஒவ்வொருவராக ராஜாவுடன் படம் எடுத்துக்கொண்டார்கள். நின்றுகொண்டு எடுத்த படம் தவறு என நினைத்தார்கள் போல. காலில் விழுந்து இன்னொரு படம் எடுத்துக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் ராஜாவுக்குக் கொடுக்க ரமணரின் ஒரு படம் கொண்டுவந்திருந்தார். பெரிய ஓவியம். அதை ராஜாவிடம் கொடுக்க ஆறுமாதம் சென்னையில் முயன்றதாகச் சொன்னார். விழாவிலும் அதைக் கொண்டுவந்திருந்தார். அதைக் கொடுத்தார். ‘நான் ஆர்மோனியம்தவிர எந்தப் பொருளையுமே வச்சுக்கிடறதில்லை தம்பி…இதைக்கொண்டுபோய் என்ன பண்ண?’ என்றார் ராஜா.

‘நீங்க கையெழுத்துப் போட்டு அவருக்கே கொடுத்திருங்க ராஜா…அவருக்கு உங்க பரிசா இருக்கட்டும்’ என்றேன்

’சரிதான்’ என்றபின் ராஜா கல்பற்றா நாராயணனின் பேனாவை வாங்கி அந்தப் பையனின் பெயரைக்கேட்டு அதை எழுதி அன்புடன் இளையராஜா என்று எழுதிக் கையெழுத்திட்டார். ஆசிகளுடன் என்று எழுதியிருந்தால் அந்தப் பையன் இன்னும் மிதந்திருப்பான் என நினைத்தேன். பையன்கள் அழுதுகொண்டே இருந்தார்கள். விசும்பல் ஒலிகள் என் மனதை என்னவோ செய்தன.

[கல்பற்றா நாராயணன் ]

ராஜா உடைமாற்றப்போகும் நேரம். இருந்தாலும் கல்பற்றா நாராயணனை அமரச்செய்து கொஞ்சநேரம் அவரது உரை பற்றிப் பேசினார். ‘சங்கீதம் மாதிரி இருந்தது பேச்சு’ என்றார் ராஜா. ’சங்கீதம்னாலே அதிலே எல்லாமே வந்திருது’ என்றார்.’ அருமையான கவிஞர் தேவதேவன்…எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை குடுத்திட்டீங்க. மிகப்பெரிய பாக்கியம்…’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ராஜா சம்பிரதாயமாகப் பேச அறியாதவர் என நான் அறிவேன். அந்த சொற்கள் எனக்கும் பெரிய மன எழுச்சியை அளித்தன.

22 அன்று இரவு விழா முடிந்து வந்து கல்யாணமண்டபத்தில் சாப்பாடு. இருநூறுபேர் சாப்பிட்டார்கள். பெரிய கல்யாணப்பந்தி. சைவ உணவு, பாயசத்துடன். அதன்பின் இரவு இரண்டுமணி வரை கீழே கூடத்தில் அமர்ந்து பேசிக்கோண்டிருந்தோம் . ஒருபக்கம் இலக்கியம். ஆனால் அதைவிட நெடுநாள் காணாத நண்பர்களைக் காணும் பரவசம்தான். தமிழகத்தில் இன்று இத்தனை பெரிய, இவ்வளவு நட்பார்ந்த ஓர் இலக்கியக் கூடுகை நிகழ்வதில்லை என்றார்கள் நண்பர்கள்.

வழக்கமாக நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னரே நண்பர்கள் வருவார்கள். விடியவிடியத் தூக்கமே இல்லாமல் பேசிக்கொண்டிருப்போம். ஞாயிறு நிகழ்ச்சி, சனிக்கிழமை கூடுவது. இம்முறை ராஜாவுக்காக சனிக்கிழமை நிகழ்ச்சி. ஆனால் வெள்ளி விடுமுறை இல்லை என்பதனால் நண்பர்கள் சனி வந்து ஞாயிறு தங்கினார்கள். விழாவுக்கு முந்தைய நாள் இரவு உற்சாகம் கொப்பளிக்கும். இப்போது முந்தையநாளின் களைப்பு காரணமாக இரவு இரண்டுமணிக்கெல்லாம் எல்லாரும் படுத்துவிட்டார்கள்

மறுநாள் காலைமுதலே உரையாடல். நான் இளையராஜாவைச் சந்திக்கச்சென்றபோது கல்பற்றா நாராயணனும் வாசகர்களும் ஒரு பெரிய உரையாடலில் ஈடுபட்டார்கள். கவிதைவிவாதம் என்றுதான் சொல்லவேண்டும். அவரது கவிதைகளைப் புத்தகத்தில் இருந்து வாசித்து விவாதித்தல். தேவதேவனும் இணைந்துகொண்டார். இரண்டுநாள் கூடுகையின் உச்சமே அந்த நிகழ்ச்சிதான் என்றனர் நண்பர்கள் பலர்.

மதியத்துக்குப்பின் மாலைவரை தொடர்ந்து இசைதான். சுரேஷ், ராமச்சந்திர ஷர்மா, ஆகியோர் பாடினார்கள். புதியநண்பரான ஆனந்த் மிக நுணுக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் விசேஷமான சங்கதிகளைப்போட்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிறைவுக்கு , அப்போதிருந்த இனிமையான மயக்கத்துக்கு, அந்தப் பாடல்கள் தேவையாக இருந்தன. ஒரு பாட்டு, அதன்பின் அந்த ராகம் பற்றிய ஒரு விவாதம் தொடர்ந்து இன்னொரு பாட்டு. மாலையில் ராஜாவைச் சந்தித்தபோது அவரது பாடல்கள் மேல் ஒரு பெரிய இசைநிகழ்ச்சி மண்டபத்தில் நடந்துகொண்டிருப்பதைச் சொன்னேன். ’அடாடா அடடா’ என்று ரசித்து சிரித்தார்.

மாலையில் நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரையாக தழுவி விடைபெறுவது துயரமும் இனிமையும் கலந்த அனுபவம். அந்த அனுபவமே ஒருவேளை நிகழ்ச்சியின் உச்சம் என்று சொல்லலாம். பலரை இன்னும் சில நாட்களில் மீண்டும் சந்திக்கப்போகிறேன். ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. இந்தநாட்கள், எங்கள்வழியாக நடந்து முடிந்த இந்த மணிகள், மிக மிக முக்கியமானவை என்ற உணர்வு எங்கள் அனைவருக்குமிருந்தது. இன்று தமிழகத்தின் மிகப்பெரிய, மிகமுக்கியமான, இலக்கியநிகழ்வு இந்த விருதுவிழாதான். இது நாளை வரலாறாகவே நினைவுகூரப்படும். நாங்கள் அதன் சிறு துளிகள். அந்த உணர்வின் நிறைவுதான் அது


விஷ்ணுபுரம் விழா- -படங்கள்

முந்தைய கட்டுரைமோகனரங்கன் உரை
அடுத்த கட்டுரைஇளையராஜா