விருதுவிழா உரை – ராஜகோபாலன்

அனைவருக்கும் வணக்கம்! விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான  விருதினைப் பெறும் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு இலக்கிய வட்ட நண்பர்கள்  சார்பில் பேரன்பையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே! எனது பள்ளி வயதில் நான் கிராமத்தில் வளர்ந்த  நாட்களில் நான் கண்ட முதல் நிகழ்த்து கலை வில்லுப் பாட்டுதான். அதைப் பாடும் பெண்மணி என் தாயாரின் தோழி.  ஓய்வு வேளைகளில் என் தாயாருடன் வீட்டுப் பணிகளில் ஏதேனும் உதவி செய்வார். அப்போதெல்லாம் அவரிடமிருந்து ஏதேனும் பாடல் வந்தவண்ணம் இருக்கும். ஒரு பள்ளிச் சிறுவனுக்கேயுரிய ஆர்வத்துடன் நான் அவரிடம் கேட்டேன் – “எந்த பள்ளிக் கூடத்தில் நீங்கள் படித்தீர்கள்? இவ்வளவு பாட்டும் யார் சொல்லிக்கொடுத்தார்கள்? ” . அதற்கு அந்த அம்மையார் சிரித்து “நான் படிக்கவேயில்லை . பள்ளிக் கூடமே சென்றதில்லை ” என்றார். சிறுவனுக்கே உரிய வியப்புடன் நான் மீண்டும் கேட்டேன் – “அதெப்படி? ஒரு எழுத்து கூட படிக்காமல் எப்படி இவ்வளவு பாட்டுக்கள் உங்களுக்குத் தெரிகின்றன?”.  அந்த அம்மையார் இன்னும் உரக்க சிரித்து “தம்பி! முதல்ல பேச்சு வந்தது, பேச்சு வந்ததுக்கப்புறம் பாட்டு வந்தது , பாட்டு வந்ததும் தான் எழுத்தே வந்தது ” என்றார். அன்றைக்கு குழப்பமான பதிலாக இருந்தது. இன்று வயது ஏறிய  பின்னர் புரிகிறது. 

இன்றைக்கும் உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவான அம்சம் இதுதான். ஒரு மொழி எழுத்தாக தோற்றம் பெற்றதும் அதன் முதல் வடிவம் கவிதையாகத்தான் இருக்கிறது. உலகின் அனைத்து மொழிகளிலுமே கவிதை  என்ற மொழி வடிவம்   உண்டு. செறிவுற்ற மொழியே கவிதை ஆகிறது. இன்னும் சொல்வதானால் கவிதை எனும் எழுத்து வடிவம் மூலமாகவே மொழி தன்னை தனது அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்கிறது. அவ்வகையில் அனைத்து மொழிகளுக்கும் கவிதை எனும் வடிவமே முன்னத்தி ஏர் . உரைநடை, வசனம் போன்ற பிற எழுத்து வடிவங்கள் அனைத்துமே கவிதைக்கு பின்னத்தி ஏர் தான். மொழி தோன்றிய நாளிலிருந்து இன்று வரை மொழியில் தொடர்ந்து வரும் எழுத்து வடிவமும் கவிதை தான். அப்படியென்ன கவிதை எனும் மொழி வடிவிற்கு சிறப்பு? பிற எந்த மொழி வடிவங்களை விடவும் கவிதை எனும் வடிவமே மனிதனின் கனவு மனதுடனும், ஆழ் மனதுடனும் நேரடியாகத் தொட்டுப் பேசும் வல்லமை கொண்டது. 

நண்பர்களே! இதை நான் என் வாசிப்பின் எல்லைக்குள்ளாக நின்றுகொண்டே சொல்லுகிறேன். இன்று இந்த மேடையில் எனக்கான இடமும் அதுவேதான்.ஆம்!  நான் ஒரு வாசகனாகவே இங்கு உங்கள் முன் நிற்கிறேன்.  
ஒரு வாசகனாக இருக்கும் நீங்கள் அனைவருமே உணர்ந்திருக்கும் வாசிப்பின் படிநிலை ஒன்று உண்டு. அதாவது ஒரு படைப்பாளி படைப்பிற்கு  முன்னரே நமக்கு அறிமுகமாகிவிடுவது. நீங்கள் அனைவருமே இதை உணர்ந்திருக்கலாம். படைப்பாளியின் பெயர் தெரிந்த பின்னரே நாம் அவரது படைப்பினைத்  தேடிச் சென்று வாசிக்கிறோம். படைப்பின் வழியே சென்று படைப்பாளியைத் தெரிந்துகொள்வது என்பது விதி விலக்காகத்தான் நிகழ்கிறது.  அதெப்படி படைப்பினைத்  தெரிந்துகொள்ளுமுன்னரே படைப்பாளி நமக்கு அறிமுகமாகிறார்? 

ஒரு புதிய ஊருக்கு நாம் செல்வதென்றால் அப்பயணத்தில் நமக்கு பெரிதும் உதவுபவை வழிகாட்டிப் பலகைகளே .  புதிய ஊருக்கு செல்லும் வழி, அது இருக்கும் திசை, இன்னும் செல்ல வேண்டிய தொலைவு இவை அனைத்தையும் நமக்கு சொல்பவை வழிகாட்டிப் பலகைகளே.  இலக்கிய உலகைப் பொறுத்தவரை  விமரிசனங்களே அத்தகைய வழிகாட்டிப் பலகைகள். வாசிப்பின் முடிவற்ற     பெரும்பாதைக்குள் நுழையும் எந்த வாசகனுக்கும் முதலில் தோன்றுவது திகைப்பே. திரும்பும் திசை தோறும் திறப்பினைக் காட்டும் எண்ணற்ற பெரும்பாதைகளின் சந்திப்பில் பிரமித்து நிற்கும் வாசக அனுபவம் எனக்கு மட்டுமானதல்ல என்பதை இங்கிருக்கும் அனைவரும் உணர்ந்திருக்க முடியும். அப்படி நிற்பவர்களுக்கு வழிகாட்டியாய் உதவுபவை விமரிசனங்களே. ஒரு பொதுவான புரிதலில் விமரிசனம் என்பது ஒரு படைப்பு செயல்படும் தளம், தொட்டிருக்கும் சாத்தியங்கள், இன்னும் தொட வேண்டிய தளங்கள், விடுபட்ட சாத்தியக் கூறுகள் இவை அனைத்தையும் வாசகன் முன் வைக்கும்.  இதிலிருந்து   ஒரு படைப்பின் விஸ்தீரணத்தையும் , அதன் எல்லையையும் சேர்த்தே வாசகன் புரிந்துகொள்கிறான். ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கே விமர்சனம் என்பதே குறைகளைப் பேசுவது என்றாகிவிட்டது. .  

நண்பர்களே ! நான் சிறு நகரம் ஒன்றில் வளர்ந்தவன். பணி  காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். சிற்றூர் ஒன்றிலிருந்து பெருநகர் ஒன்றுக்கு செல்லும் ஒரு மனிதனின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்தேன். முக்கியமாக, சென்னையின் சந்துகளுக்குள் நுழைந்து வழி தொலைத்து அலைவது எனது அன்றாட அலுவலாகிப் போனது. வாசிப்பிலும் அப்படித்தான் வழி தொலைத்து அலைய வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை வழிகாட்டிப் பலகைகள் ஏற்படுத்திய குழப்பங்களால். நான் தேவதேவன்  பெயரை அறிந்த நாளிலிருந்து அவரது படைப்பினை வாசிக்க எனக்கு 4 ஆண்டுகள் ஆயின. ஏன் இந்த இடைவெளி? அவரது படைப்பினைக் குறித்த விமரிசனங்கள் அவரது படைப்புகளுக்கு பல வண்ண அறிதாரங்களைப் பூசியிருந்தன . 

“தேவதேவனது கவிதைகள் வெறும் அழகியல் உணர்வுகளை மட்டும் பேசுபவை”

“சமூகப் பிரக்ஞை , சமூக அவலங்களை சாடுதல் போன்ற படைப்பாளியின் கடமைகளற்ற படைப்புகள்”

“அழகியலின் கோட்பாட்டு அடிப்படைகளுக்குப் பொருந்தி வராமல் வெறும் ரசனை மட்டுமே துருத்தி நிற்பவை” – 

இப்படி பலவாறு. அதனாலேயே நான் அவரது படைப்புகளை தேடி வாசிக்கவில்லை. பிறகெப்படி அவரது படைப்பிற்குள் புகுந்தேன்? 
 
நண்பர்களே! வழி தொலைத்து பல சந்துகளுக்குள் புகுந்து செல்லுகையில் சட்டென ஒரு சந்தின் முடிவில் முக்கியச் சாலை தோன்றும் ஆச்சரிய வியப்பினை நான் அனுபவித்ததுண்டு. அப்படியான தற்செயல் தருணத்தின் ஆச்சரியம் ஒன்று என்னை ஆசிர்வதித்த நொடியில் நான் தேவதேவனைக் கண்டுகொண்டேன். ஒரு மின்னல் தெறிப்பென அக்கவிதை என்னைப் பற்றி அவரது படைப்புலகுக்குள் இழுத்துச் சென்றது. 
 
“நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் 
துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை 
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால் ,
மேலும் ஒரு துள்ளலில் மரணம் 
மரித்த கணமே பறவை”

என்னை தேவதேவனின் படைப்புலகுக்குள் ஈர்த்த கவிதை இது. என் வாசிப்பின் அவதானிப்பையே நான் இங்கு முன்வைக்கிறேன். ஒரு கவிஞனைத் தூண்டும் படைப்பூக்கமாக இன்று வரை இருப்பது இயற்கையின் கூறுகளும், பிரபஞ்சத்தின் தீராத சாத்தியங்களும்தான். மனித உறவின் மகத்துவங்கள், அவற்றின் சிக்கல்கள், உக்கிரமான உணர்வுகள், எழுச்சிகள், மாறாத மானுட துக்கம் என எதைப் பாடவந்தாலும் ஒரு கவிஞன் அதை இயற்கையின் துணை கொண்டுதான் பாட முடிகிறது. அகத்தின் கொந்தளிப்பை , அகத்தின் ஆழத்தை புறவயமான இயற்கையின் கூறுகள் வழியாகவே அவன் வெளிப்படுத்த முடிகிறது. 

விமரிசகனின் வார்த்தையில் சொல்வதானால் கவிஞனின் படிமங்கள், உதாரணங்கள், நுட்பங்கள், சொல்லாட்சி போன்ற பல இயற்கைக் கூறுகளின் உதவியின்றி அமைய இயலாது. தமிழில் சங்கப் பாடல்களிலிருந்தே இதனை நாம் காண முடியும். நவயுகக் கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல . காற்று, மழை குறித்து பாரதி, வான் குறித்து பிரமிள், மழை குறித்து நகுலன் …. அவ்வாறே மரம், பறவை, கடல் குறித்து தேவதேவன். 

இதில் தேவதேவன் தனித்து நிற்பதாக நான் உணர்கிறேன். இயற்கையைப் பாடும் கவிஞர் அனைவரும் அதன் ப்ரும்மாண்டத்தை வியந்து பாடுகின்றனர். அதன் ப்ரும்மாண்டத்தின் மகத்துவம் குறித்து வியக்கின்றனர். இங்கே பிரும்மாண்டம் என்பது ஒப்பீட்டு கருத்தே. ஒரு relative statement. எதனுடன் இணை வைத்து நான் இயற்கையை பிரும்மாண்டம் என்பேன்? அதைக் காணும் ஒரு பார்வை, ஒரு சிறு புள்ளி அதன் முன்னே நிற்கும் இயற்கையின் கூறை ப்ரும்மாண்டமாய் காணுகிறது. அந்த கவிமனம் அதைப் பாடுகிறது. தேவதேவனின் படைப்புகளில் அந்த ப்ரும்மாண்டத்தோடு  கூடவே, அதற்கு இணையாக அந்த சிறு புள்ளியும் தொடர்ந்து வருவதைக் காண முடியும்.  இயற்கையின் கூறு அளவிற்கே அதன் முன் நிற்கும் சிறு புள்ளியும் முக்கியத்துவம் பெற்று நிற்பதை தேவதேவனின் படைப்புகளில் காணலாம். 

வானில் சிறகசைத்து வரும் வண்ணத்து பூச்சி ஈரத்தரையில் சிறகுதிர்த்து மரணித்துக் கிடக்கிறது. அதன் மகத்தான வாழ்வின் பெரு ரகசியங்களை வினவும் கவிதை அந்த வண்ணத்து பூச்சியின் சிறகுகளை விளக்குமாற்றால் பெருக்கித்தள்ளும் சிறு புள்ளியையும் சேர்த்துதான் பேசுகிறது. 
மரம் பறவைகளுக்கு அமைத்து தந்த வீட்டை, மரம் தனக்கே அமைத்துக் கொண்ட வீட்டினை, குருவி கட்டும் வீட்டை என மொத்த பூமியையும் வீடாகவே காண முடிந்த கவிஞர் 

“நெருக்கடியுள்  நெரிந்து அனலும் காற்று 
என்ன செய்ய ,
இந்த வீட்டை நான் இன்னும் விடவில்லை ”

என்று பிரபஞ்ச வீட்டினை வியந்து நிற்கும் சிறு புள்ளியின் இடத்தையும் சேர்த்தேதான் பேசுகிறார். 

இயற்கையை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் சில எண்ண  ஓட்டங்களின் படிநிலைகளைக் காணவேண்டியிருக்கும். தொடக்க நிலையில் இயற்கையின் இரக்கமற்ற விதிகள் மீது கோபம் கொள்ள வேண்டியிருக்கும். மனிதனும் அதன் சாத்தியங்களுக்கு உட்பட்டவனே என்பதை   உணருந்தோறும் பச்சாதாபம் கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் நமது புரிதலை போதாமலாக்கும் இயற்கையின் சாத்தியக் கூறுகள் மேல் வன்மம் கொள்ள வேண்டியிருக்கும். இடைவிடாது தொடரும் அவதானிப்பால் இது இப்படித்தான் என்று அயர வேண்டியிருக்கும். சற்று பின்னர் அதை மாற்ற முடியாத மனிதப் பிரயத்தனத்தின் எல்லையை உணர்ந்து துக்கம் கொள்ள வேண்டியிருக்கும். துக்கத்தின் முழுமையில் இயற்கையின் முழுமையை உணர முடியும்.  அங்கிருந்து இயற்கை நமக்கு  ஒவ்வொரு கணமும் தீரா வியப்பைத்தரும் காட்சி அனுபவமாக மாறும். இந்த படிநிலைகளை உணர தேவதேவனின் படைப்புகளை முழுத் தொகுதியாக வாசிக்குமாறு நான் பரிந்துரைப்பேன். அப்படி வாசிக்கையில் இப் படிநிலைகளின்  அனுபவத்தை உணர முடியும். 

வானத்தின் சலனங்களை சமன் செய்ய பறந்து வரும்  என அழகியல் ரீதியில் குறிக்கப்படும் பறவை ஒரு கட்டத்தில் இப்படியாகிறது. 

“இரை  பொறுக்கவும் 
முட்டை இடவும் மட்டுமே 
மண்ணுக்கு வரும் 
வான்வெளிப் பறவை ஒன்று”  

என்று மாறும்போது பறவை என்ற ஒன்றே வேறோன்றாகி விடுவதை எப்படி விளக்க?

அறியுந்தோறும் மாறும் விதிகளும், விதிகளை உணருந்தோறும் உருவாகும் விதி மீறல்களும், விதி மீறல்களைப்  புரிந்து கொள்ளும்போதெல்லாம் உருவாகும் புதிய விதிகளும், மறுபடி விதிமீறல்களுமாய் முடிவற்ற சாத்தியக் கூறுகளோடு புன்னகைத்து நிற்கும் இயற்கை. அதை தேவதேவனின் படைப்புகளில் பல இடங்கள் நமக்குச் சொல்கின்றன. 

அவரது படைப்புகளில் சமூக உணர்வு, இல்லை அவலங்களைச் சுட்டும் உக்கிரம் இல்லை என்பது ஒரு விமர்சனம். எழுத்தினுள்  நுழையும் எல்லோருக்கும் ஏற்படும் “முற்போக்கு காய்ச்சல் ” இவருக்கும் ஏற்படாமல் இல்லை. ஆகி வந்த முற்போக்கு மரபாக இருக்கும் சில பேசுபோருட்களை  தேவதேவனும் பாடித்தான் இருக்கிறார். “மின்னற்பொழுதே தூரம்”, ” குளித்துக் கரையேறாத கோபியர்கள்” வாசித்தால் இதைக் காணலாம். முற்போக்கு மோஸ்தர் மாறாத “அய்யர் சாமி” போன்ற கவிதைகளும் எழுததான் செய்திருக்கிறார். 

ஆனால் இயற்கையின் சான்னித்தியத்தில் விழி விரித்து நிற்கும் தேவதேவனில் கைகூடும் கவித்துவ தரிசனம் சமூகக் கவிதைகளில் இல்லை எனலாம். இன்னும் சொல்வதானால் நாம் இங்கே பேசும் தேவதேவன் மண்ணில் இறங்கத் துடித்தபடி இருக்கும் விதைகளை உள்ளங்கையில் ஏந்தி நிற்பவர். அவ்விதைகள் தாம் அவரை  முழுமையான கவிஞனாக உணரச் செய்கின்றன. 

தொடர்ந்து இயற்கையை அவதானிக்கும் ஒருவர் வந்து அடையும் சாட்சி பாவம் தத்துவமாக மாறி விடும் அபாயம் உண்டு. ஆனால் தேவதேவன் அதனையும் தாண்டி இயற்கையின் முடிவற்ற எல்லைகள் விரிந்து கொண்டே போவதைக் காணும் வியப்பினைக் கைவிடாமலிருக்கிறார். தத்துவத்தின் இறுகிய  தன்மையை இல்லாமலாக்கும் கனிந்து, முதிர்ந்த பார்வையைக் கொண்ட படைப்புகள் பல தேவதேவனின் சிறப்பு. 
“இப்பூமியெனும் கோயிலிலன்றோ நாம் வாழ்கிறோம்” எனும் வரி எனக்குத் தந்த வாசிப்பனுபவம் என்னால் விளக்க  முடியாதது. 

மெய்யாகவே மானுட துக்கங்களை, துயரங்களை தேவதேவன் பாடவில்லையா? அல்லது துக்கத்தின் காட்சி உருவாக்கும் பாதிப்புகளை மட்டும் பாடி நிறுத்திவிட்டாரா? நண்பர்களே! இங்கு என் அனுபவம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 

எனது கல்லூரி நாட்களில் எனது விடுதி அறை நண்பர் ஒருவர் இருந்தார். ஒரு மிகச் சாதாரணமான நாளின் பிற்பகலில்  அவரது தந்தையின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது.  மூன்று சகோதரர்கள், இரு சகோதரிகள் என நண்பரின் குடும்பம் பெரியது. மூத்த பையனாக நின்று என் நண்பர் அடுத்த மூன்று மாதங்கள் அனுபவித்த வேதனை மிகக் கொடிது. தாயாரைத் தேற்றுவது, தந்தை வழி உறவினர்களின் சொத்துக்கான உரிமை கோரல், மூத்த சகோதரியின் திருமணம் , சகோதரர்களின் படிப்புச் செலவு, தனது படிப்பு எனக் குவிந்த சிக்கல்கள் அவருக்கு உறங்கா இரவுகளைப் பரிசளித்தன. நாங்கள் இரவில் எந்த நேரத்தில் எழுந்தாலும் உறங்காமல் அமர்ந்திருக்கும் எம் நண்பரைக் காண முடியும். ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்திக்க வேண்டுமென அவரே பேசுமளவு அவரது மன அழுத்தத்தின் அவதி அவரைப் பீடித்திருந்தது. அவரை நாங்கள் தனியே இருக்க விடுவதேயில்லை. 

ஒரு முறை அவரை அழைத்துக் கொண்டு நானும் இன்னொரு நண்பரும் திருச்செந்தூர் சென்றோம். மாலை வேளை. தந்தை இறந்த ஓராண்டு வரையில் கோவிலுக்குள் செல்வதில்லை என்ற சம்ப்ரதாயத்தால் நண்பர் கடற்கரையிலேயே அமர்ந்துகொண்டார். நானும், மற்ற நண்பரும் கோவிலுக்குச் சென்றோம். ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வருகையில் சற்று தொலைவிலேயே என் நண்பரிடம் ஏதோ வித்தியாசத்தைக் கண்டேன். கடலையே வெறித்து அமர்ந்திருந்த அவரை நெருங்கி தோளைத் தொட்ட கணம் என் நண்பர் கதறி அழ ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரம். கண்ணீராலும், எச்சிலாலும் என் மேலாடை முழுதும் நனைந்திருக்க நாங்கள் கூறிய ஆறுதல் மொழிகள் பயனற்றுப் போயின. ஒரு மிருகத்தின் உறுமல் போல அழுகையின் கேவல் ஒலி இருக்க சாத்தியம் என்பதை , நண்பர்களே! அப்போதுதான் நான் கேட்டேன். 

செய்வதறியாது நானும், மற்ற நண்பரும், சுற்றிலும் கூடிய கூட்டமும் நிற்க என் நண்பர் அழுகையினூடாக மெல்ல நிமிர்ந்து அஸ்தமன சூரியனைப் பார்த்தார். நிமிர்ந்து அமர்ந்து அதனையே பார்த்துக் கொண்டிருந்தார். மழைக் கால கரும்பாறை ஊற்றென  கண்களிலிருந்து நீர் ஓசையின்றி வடிந்தவாறே இருந்தது. மேலும் இருபது ஓசையற்ற நிமிடங்கள். நண்பர் என்னிடம் மெல்லத் திரும்பி சொன்னார் -” ரொம்ப நல்லா இருந்ததில்ல?” 

வாசிப்புகள் ஏதுமற்ற சராசரி உலகியல் ஆசாமி அவர். அந்த நிகழ்வுக்குப் பின் அவரது மன அழுத்தம் அவரை விட்டு விலகி விட்டது. இன்று அவர் வெற்றிகரமான குடும்பத்தலைவர் , தொழிலதிபர். நான் இப்படி நினைக்கிறேன். எல்லை மீறிய துக்கத்தின் அழுத்தத்தில் மானுடம் பீறிட்டு வெளிப்படும் ஒரு புள்ளியாகத்தான் அழகியல் ரசனை இருக்கமுடியுமோவென்று.  அந்த அழுத்தக் கொதிகலன் மூடியைத் திறந்து விடும் கைகள் எப்போதும் இயற்கையாகத்தான் இருக்க முடியுமென இப்போது நம்புகிறேன். நாம் வாழும் சமூகத்தின் ஆகச் சிறந்த மனங்களைக் கொள்வோமானால் அதன் கூட்டு மனமாகவே , மனசாட்சியாகவே ஒரு கவிஞன் இருக்கிறான். சமூக அழுத்தத்தின் பாரம் ஏறும்போது அவன் வழியாகத்தான் மானுடத்தின் அழகியல் ரசனை பீறிட்டுக் கிளம்ப முடியும். இன்று நமது சமூகத்தில் அந்த இடம் தேவதேவனுக்குரியது. 

அந்த மகத்தான கலைஞனை,  இவ்விருது பெறும் வேளையில் மீண்டும் ஒரு முறை வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்  நன்றி! வணக்கம்! 

முந்தைய கட்டுரைஇளையராஜா
அடுத்த கட்டுரைதி ஹிண்டு பேட்டி