ஒரு கனவின் கதை

ஜமா அத் ஏ இஸ்லாமி அமைப்பின் மாதஇதழான ‘சமரசம்’ மார்ச் மாத இலக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘உச்சகட்டம்’ என்ற கதை படித்தேன். ‘தாழை மதியவன்’ எழுதியது.

சுருக்கமாக கதை இதுதான்.

*****

பெங்களூரில் பேலஸ் மைதானத்தில் புத்தகத்திருவிழாவில் பத்து தமிழ்பதிப்பகங்கள் கடைபோட்டிருக்கின்றன. அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. எங்களுடையது இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடை. கணிசமான பெண்கள் வந்தாலும் பர்தா அணிந்த பெண்கள் குறைவு. பெரும்பாலானவர்கள் டிஷர்ட்டும் ஜீன்ஸ¤ம் அணிந்த பெண்கள்.

ஒரு ஜீன்ஸ் பெண் வருகிறாள். அவளது முகமும் தோற்றமும் அவளை இன்னாரென அடையாளம் காட்டவில்லை என்றாலும் அவளை ஒரு கிறிஸ்தவப்பெண் என்று நான் எண்ணினேன். அவள் சில ஆங்கில நூல்களைப் பார்த்தபின் என்னிடம் வந்து ‘இஸ்லாமிய திருமணச் சட்டங்களைப்பற்றி ஏதேனும் புத்தகங்கள் உள்ளனவா?’ என்று கேட்டாள்.

பல நூல்கள் உள்ளன என்று நான் சொல்லி ”எல்லாமே குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளனவே?” என்றேன். ”அதெல்லாம் எனக்கு தெரியும். எனக்குத்தேவை இஸ்லாமியபெண் ஒரு கிறிஸ்தவரை மணக்கலாமா என்றுதான்” என்கிறாள் அவள்

”அதற்காக புத்தகங்களை நாடவேண்டாம். நானே சொல்கிறேன். ஒரு இஸ்லாமியர் வேதம் வழங்கப்பட்ட கிறித்தவர்களையும் யூதர்களையும் மணக்கலாம். இஸ்லாமியப்பெண் அப்படி மணக்க இஸ்லாம் அனுமதிக்காது” என்றேன்

”இது என்னசார் நியாயம்?”என்கிறாள் அவள் ”ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?”

”அப்படி இஸ்லாமியரால் மணக்கப்பட்ட கிறித்தவப் பெண்ணோ யூதப்பெண்ணோ நாளடைவில் இஸ்லாமின் வழிமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டுவிடுவாள்.ஆனால் முஸ்லீம் பெண்ணுக்கு கணவராகும் யூதரோ கிறித்தவரோ இஸ்லாமியவட்டத்துக்குள் வரமுடியாமல் போகலாம்.ஆகவே அவ்வாறு மணந்துகொள்ளக் கூடாது என்று இஸ்லாம் விலக்குகிறது”என்று நான் விளக்கினேன்.

அந்தப்பெண்ணின் பெயர் நிஷா என்று தெரிந்தது. அவள் மணமாகி தலாக் பெற்று இப்போது கிறிஸ்தோபர் என்பவரை மணந்துகொள்ள ஆசைப்படுகிறாள். இதை அவள் வேறுபக்கம் போனபோது அவளுடன் வந்த அவளது நண்பனான தாமஸ் என்பவன் சொல்கிறான்.

அப்போது அங்கே பர்தா அணிந்த ஒரு பெண் வருகிறாள். மைசூர்க்காரி. அவளைக் கண்டதும் நிஷா ஓடிவந்து அவளைக் கட்டிக் கொள்கிறாள். அவள் நிஷாவின் அண்ணன் மனைவி. நிஷாவைக் கண்டதும் அவள் முகம் சிவந்து கடுகடுக்கிறது. பர்தா அணியாமல் வந்தமைக்காக நிஷாவைத் திட்டுகிறாள்.

நான் பர்தாபற்றிய உருது நூலை அவளுக்கு அளிக்கவா என்று கேட்டேன். அவள் அதில் பர்தாபோடவேண்டும் என்றுதானே போட்டிருக்கும் என்கிறாள். பர்தா போடாத பிரான்ஸ் தேசப்பெண்களின் சீரழிவைப்பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறது என்றேன்,

அந்தப்பெண்கள் போகிறார்கள்.

அன்று எனக்கு நல்ல களைப்பு. அறைக்குப் போய்படுத்தேன். அப்போது உதவியாளனான சுலைமான் நிஷாவைப்பற்றிச் சொல்கிறான். நிஷாவின் அத்தா பெங்களூரில் பெரிய எரிசாராய ஆலை அதிபராம். நிஷா ஒரு கிறிஸ்தவனைக் காதலிக்கிறாள். அவர் அவளை கட்டாயமாக இன்னொரு முஸ்லீமுக்குக் கட்டிவைக்கிறார். அவள் அவருடன் வாழாமல் ஏதேதோ சொல்லி தலாக் செய்துகொள்கிறாள். தன் காதலனை மணக்க ஆசைப்படுகிறாள். அத்தா அதற்கு சம்மதிக்கவில்லை. ஆகவே காதலனுடன் ஓடிப்போகிறாள். இஸ்லாமிய முறைப்படி அப்பா வாழாத காரணத்தால்தான் பெண்ணும் அப்படி ஆகியிருக்கிறாள் என்கிறான் சுலைமான்

இஸ்லாமிய முறைப்படி வாழாதவர்களுக்கு ஏற்படக்கூடிய முடிவுதானே இது என்று எண்ணியபின் நான் சொன்னேன். ”உனக்குத்தெரியுமா நிஷாவையும் காதலனையும் அவளது அப்பா மங்களூர் கடற்கரையில் தேடிக் கண்டுபிடித்து பிடித்து எரிசாராயம் ஊற்றி எரித்துவிட்டார்”

”எப்படித்தெரியும்?”

”இன்றைய நாளிதழில் செய்திபோட்டிருக்கிறது” என்றேன்

சுலைமான் அழ ஆரம்பித்தான். ஒரு காதலின் சோக முடிவை எண்ணி அவன் கண்ணீர் உகுக்கிறான். அவனது கண்ணீர் என் முகத்தில். அது எப்படி என்று நான் வியந்தபடி கண்விழித்தேன். மழைத்துளிகள்.

அது ஒரு பகல்கனவு!

புத்தகக் கண்காட்சியின் கடைசிநாள். சேலைமுந்தானையை தலைமேல் பொட்டபடி அண்ணி வருகிராள். அருகே பர்தா அணிந்தபடி நிஷா!

”நீங்க கொடுத்த புத்தகத்தை இன்னும் படிக்கலே” என்றாள். நான் சிரித்தேன். என் கனவை நினைத்து சிரித்தேன். அவர்கள் புத்தகங்கள் வாங்குகிறார்கள்.

சுலைமான் புன்னகைத்தான். அப்புன்னகையில் கேள்விக்கணைகள்.

அதை உணர்ந்து நிஷா சொன்னாள். ”அன்று தாமஸ் உங்களிடம் சொன்னதை என்னிடமும் சொன்னான்.நான் அவனை திட்டினேன்”

”உங்கள் முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம்?”என்று சுலைமான் கேட்டான்

”மாமா கிறிஸ்தோபரை மருமகனாக ஒத்துக் கொண்டுவிட்டார். கிறிஸ்தோபரும் ‘கிதுர் அகமதா’க மாறிவிட்டார்”என்று அண்ணி சொன்னாள்

நிஷாவின் கண்களில் புன்னகை!

*****

இவ்வளவுதான் தாழை மதியவனின் சிறுகதை. விசித்திரமான கதை. அதிலும் அந்தக் கனவு !!!

முந்தைய கட்டுரைசிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்