வரலாற்றை வாசித்தல்:கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

வரலாற்றை வாசிக்ககட்டுரையில் திரு. ராஜமாணிக்கனார் புத்தகங்களை பற்றி தங்கள் ஒன்றும் குறிப்பிடவில்லையே.  திராவிட பார்வை கொண்டு இருந்தாலும் அவருடைய சில ஆராய்ச்சிகள் முக்கியமானது அல்லவா. (உதா: நாயன்மார்களின் காலங்கள் பற்றிய அவருடைய ஆய்வு.).

நன்றி,

சிற்றோடை.

 

அன்புள்ள சிற்றோடை அவர்களுக்கு

 

ராஜமாணிக்கனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு குறித்து சொல்லியிருந்தேன். நாயன்மார் காலங்கள் குறித்த ஆய்வை நான் கவனிக்கத்தக்க நூலாகவே கருதுகிறேன். ஆனால் அது முக்கியமான வரலாற்று  விவரிப்பு நூலோ அல்லது மூல ஆராய்ச்சி நூலோ அல்ல. மனோன்மனியம் சுந்தரனார் எழுதிய மாணிக்கவாசகர் காலம்என்ற நூல்தான் முன்னோடியான முதல் ஆய்வு. ராசமாணிக்கனார் நூல் அதற்கு எதிர்வினை மட்டுமே.

 

இந்நூல்களை வரலாற்று ஆய்வுகள் என்பதை விட பண்பாட்டு ஆய்வுகள் அல்லது இன்னும் நுட்பமாக பண்பாட்டு வரலாற்று ஆய்வுகள் என்று சொல்லலாம். என் பட்டியலில் வரலாற்று நூல்களை மட்டுமே கணக்கில்கொண்டேன்

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜயமோகன்

 

தென்னிந்திய சமூக வரலாற்றை புரிந்து கொள்ள ஒரு முக்கிய எழுத்தாளர் பர்டன் ஸ்டைன். 

 

Burton Stein : Peasant State and Society in Medieval South India

 

6ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை எப்படி தமிழக/தென்னிந்திய சமூகம் பரிணாம வளர்சி அடைந்தது என்பதில்,  இந்த புத்தகத்தை விட நல்ல புத்தகம் நான் பார்த்ததில்லை

 

அன்புடன்

 

வன்பாக்கம் விஜயராகவன்

 

 

 

 

 

அன்புள்ள விஜயராகவன்

 

பர்ட்டன் ஸ்டெயின் பற்றி ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். எனக்கு பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா , ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்களை வரலாற்றாசிரியர்கள் என்பதை விட பண்பாட்டுவரலாற்று ஆசிரியர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமோ என்று ஓர் ஐயம். பர்ட்டன் ஸ்டெயின் சோழர் கால நில மானிய முறை குறித்து எழுதிய நூல் முக்கியமானதே.

 

ஜெ 

 

 

 

 

சார், நீங்கள் குறிப்பிடும் நூல்களில் சிலவற்றை ஐஏஎஸ் தேர்வுக்கு பரிந்துரை செய்வதை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நூல்களின் பெயர்களை மட்டுமே சொல்வார்கள். நீங்கள் நூல்களின் கருத்தியலையும் அறிமுகம் செய்திருக்கிறிர்கள். நன்றி

 

ஆர்.ரவிச்சந்திரன்

 

 

அன்புள்ள ரவிச்சந்திரன்,

 

இவை பிரபலமான நூல்கள்தான்

 

வரலாற்றையும் தத்துவத்தையும் ஒரு பாடமாக வாசித்தால் சிந்தனை வெறும் மேற்கோளாக மாறிவிடும்– ஐ ஏ எஸ் தேர்வுக்கு அது போதும்தான். அவற்றை ஓர் உரையாடலாகவே வாசிக்க வேண்டும். அப்போதுதான் நம் கருத்தை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

1993 வாக்கில் நான் முதன்முதலாக டி.டி.கோஸாம்பி பெயரை கேள்விப்படேன். எங்கள் கிராம நூலகத்தில் சுபமங்களா வரும். அதில் இரண்டு இதழ்களிலாக டி.டி.கோஸாம்பியைப்பற்றி விரிவான ஒரு அறிமுகக் கட்டுரை வெளிவந்திருந்தது. அந்தக் கட்டுரையை எஸ்.ஆர்.என் .சத்யா தான் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். அப்போதே கோஸாம்பியின் வரலாற்று ஆராய்ச்சி முறைமீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் நான் மேற்கொண்டு வாசிக்கவில்லை. நான் படித்தது வேறு. நீண்ட நாட்களுக்குப் பின்னால் உங்கள் இணையதளத்தில் கோஸாம்பியின் படத்தைப் பார்த்தபோது இந்த ஞாபகம் வந்தது. அவரை மீண்டும் முறையாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. சரித்திரத்தை அவர் அணுகிய கோணம்தான் சரி என்று நான் நம்புகிறேன்

 

சிவதாஸ்

கொச்சி

 

[தமிழாக்கம்]

 

 

அன்புள்ள சிவதாஸ்,

 

கோஸாம்பியைப் பற்றி சுபமங்களாவில் வெளிவந்த அந்தக் கட்டுரையை எழுதியது நான்தான். ஆனால் அப்போது அக்கட்டுரை கொஞ்சம் கூட வாசிக்கபடவில்லை என்ற எண்ணம் இருந்தது. சுபமங்களா வாசகர் கூட்டங்களில் பல எழுத்தாளர்கள் அந்தமாதிரி நீளமான புரியாத கட்டுரைகளை போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆகவே அதன்பின் அம்மாதிரி கட்டுரைகளை போட கோமல் ஒத்துக்கொள்ளவில்லை.

 

நீண்டநாட்களுக்குப் பின்னர் இப்படி ஒரு கடிதம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல சுபமங்களாவில் நான் எழுதிய இன்னொரு கட்டுரை பற்றியும் கடிதம் வந்திருக்கிறது

 

ஜெயமோகன்

 

 

அன்புள்ள ஜெ,

 

வரலாற்றை வாசிப்பது பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு மிகமிக உதவியான ஒன்று. நான் வரலாற்று நூல்களை எப்போதும் வாசிப்பவன். எல்லா விஷயத்திலும் வரலாற்றாசிரியர்கள் மோதிக்கொள்வதைப் பார்க்கும்போது வரலாறு என்ற ஒன்று உண்டா என்றே நினைப்பேன். நீங்கள் எழுதியிருப்பது போல வரலாற்றை ஒரு சர்ச்சையாகவே எடுத்துக்கொண்டால் நல்லதுதான் என்று தோன்றுகிறது.

 

சங்கர்

 

அன்புள்ள சங்கர்

 

எந்த முரணியக்கமும் ஒரு மையத்தை உருவாக்கிக் கொண்டுதான் முன்னகரும். அந்த மையம்தான் உண்மையான வரலாறு

 

ஜெ

வரலாற்றை வாசிக்க…

முந்தைய கட்டுரைஅயன் ராண்ட் – 3
அடுத்த கட்டுரைசெய்தொழில்:கடிதங்கள்