அகம் மறைத்தல்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தாய் தந்தையரிடம் கூட, அன்பை அணைத்தல்/தழுவல் மூலம் வெளிப்படுத்துவது என்பது நமது மரபில் முதலிலிருந்தே இல்லாதது என்றே நானும் எண்ணியிருந்தேன்.

சில நாட்களுக்கு முன் கம்பராமாயணம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாடல் கண்ணில் பட்டது.. தசரதன் ராமனுக்கு பட்டம் சூட்டவேண்டும் என்று நிச்சயித்த பின்பு, ராமனைச் சந்திக்கும் இடம்.

நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பதென்! நளிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அல்ல திண் தோளையும் மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான்

(விலங்கல் – மலை, அலங்கல் – மாலை)

ராமனின் இளம் தோள்கள் ராஜ்யபாரத்தைத் தாங்குமா என்று தனது தோள் மார்பு கொண்டு அளந்து பார்த்தானாம் தசரதன்!

பாடலைப் படித்து நெகிழ்ந்து விட்டேன்.தசரத மகாராஜனே தன் மகனைக் கட்டியணைத்து நெகிழ்ந்திருக்கிறான். என் அப்பா நினைவு தெரிந்து என்னைக் கட்டித் தழுவியதில்லையே என்றூ ஒரு பெரும் ஆற்றாமை எழுந்து நெஞ்சை அடைத்தது.

இதே போல, தண்டகாரண்யத்தில் கர தூஷணர்களின் சேனையுடன் ஒற்றை ஆளாக சண்டையிட்டு உடம்பு முழுக்க ரத்தக் காயத்துடன் வரும் ராமனை வைதேஹி அப்படியே இறுகக் கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் என்று வால்மீகி ராமாயணத்தில் ஒரு கட்டம் உண்டு.. கோசலையும் சுமித்திரையும் வளர்ந்து பெரியவர்களான ராம லட்சுமணர்களைக் கட்டியணைத்தததும் வால்மீகத்தில் உண்டு.

இடைக்காலத்தில், இத்தகைய அன்பு வெளிப்பாடுகள் பெரிதும் குறைந்து போயிருக்கலாம் என்று படுகிறது. புதியவர்களைப் பார்த்ததும் “சாப்பிட்டாச்சா” என்று கேட்கும் வழக்கம் வந்ததற்குக் காரணம் அடுத்தடுத்து வந்த பஞ்சங்களும் அவை உருவாக்கிய அச்சமும், ஐயமும் கலந்த சமூக மன நிலையும் தான் என்று நீங்கள் முன்பு எழுதியிருந்தீர்கள். இயல்பான அன்பு வெளிப்பாடுகளை வற்றச் செய்ததிலும் அதன் பங்கு இருக்கலாம்.

எதுவானாலும், தற்போதைய சூழலில் பூடகமற்ற நேரிடையான அன்பு வெளிப்பாட்டுச் சொற்களும் செயல்களும் வாழ்க்கையில் இன்னும் அதிகமாகவே அவசியமானவை. நாம் மேற்கத்தியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல, மேன்மையான விஷயமாகவே இது எனக்குப் படுகிறது. உங்கள் பதில் அதை மேலும் தெளிவாக்கியது. உள்ளார்ந்த பரிவோடும் அக்கறையோடும் எழுதப்பட்ட ஒரு பதில். உங்கள் சொற்கள் ஒவ்வொரு தருணத்திலும் அன்பையும், அறிவையும் கற்பிக்கின்றன.

மிக்க பிரியத்துடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

நீங்கள் சொன்ன பிறகுதான் நானும் அதைக் கவனித்தேன்

‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்’என்றுதான் குறளும் சொல்கிறது. நம் மரபில் அன்பை அடக்கிவைக்கும் வழக்கமே இருந்ததில்லை. அது எப்போது வந்தது?

ஜெ

அன்புள்ள ஜே எம்
நலமா?

அகம் மறைத்தல் வாசித்தேன்.
சுற்றிலும் கடல், அனால் தாகம் தீர்க்க வழியில்லை.

நம்மை சுற்றி உள்ள அன்புக் கடல் கரிக்கிறதே!

கட்டிப் பிடித்து அணைத்து முத்தம் கொடுத்து நம் அன்பை நம் நண்பர்களிடம் வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் பெற்றோர்களிடமோ அல்லது கூடப்பிறந்தவர்களிடமோ , மனைவி கணவனிடமோ முடியவில்லை.

என் சிறிய அறிவுக்குத் தோன்றியதை சொல்லுகிறேன். நண்பர்கள் தவிர, மற்ற உறவுகளில் அன்பு உடமைத்தன்மையும் எதிர்பார்ப்புகளும் நிறைந்து உள்ளது. இதில் எங்காவது ஒரு கீறல் விழுந்து விடும். அங்கே அன்பும் சிறிது பிளந்து விடும். அந்த பிளந்து விட்ட அன்புக்குக் கட்டிப்பிடிக்கத் தெரியாமல் போய் விடுகிறது.

தந்தையை சார் என்றும் தாயை மேடம் என்றும் அழைக்கும் சமூகங்களில் அகம் மறைத்தல் நிறையவே உண்டு. அருணகிரி அவர்களின் கட்டுரையில், தெற்கு மற்றும் மைய மேற்கு அமெரிக்கர்கள் இப்படி அழைப்பவர்கள் உண்டு என்று எழுதி இருக்கிறார். அது கொஞ்சம் அபூர்வம் தான். இந்த சமூகத்திலும் அகம் மறைத்தல் நிறையவே உண்டு.

அன்பை வெளிப்படையாகக் காட்டும் சமூகங்கள் வேறு உணர்ச்சிகளை மறைக்கின்றன. அன்பானவர்கள் இறந்து விட்டால், அந்த சோகத்தையும் துக்கத்தையும் அடக்கியே வெளிப்படுத்துகிறார்கள். ஏன் இந்த மாறுபாடு? உலகத்தையே அடக்கி ஆண்ட கூட்டத்துக்கு அழுவது ஒரு பலவீனமோ?

ஆனால் நாம் இதற்கு அப்படியே முரண். அன்பை வெளிப்படையாகக் காட்ட மாட்டோம். ஆனால் அன்பானவர்கள் போய் விட்டால் வயிற்றிலும் மாரிலும் அறைந்து கொண்டு ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டுகிறோம். ஏன்? நம் உடமை நம்மை விட்டுப் போய் விட்டதே, நம் எதிர்பார்ப்புகள் நிறையவில்லையே என்றா?
இல்லை, அழுதால்தான் அன்பு மற்றும் இரக்கம் என நம் பண்பாடு நமக்கு அறிவித்ததா?

ஜப்பானில், அகம் என்பதே கிடையாதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிறருக்கு மரியாதை தவிர மற்ற எந்த உணர்வுகளையும் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.

சிவா சக்திவேல்

அன்புள்ள சிவா,

அகம் மறைப்பது ஒவ்வொரு ஊரிலும் ஒருவகை. ஆப்ரிக்காவில் பார்த்தேன். அறிமுகமில்லாதவரைக்கூடக் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி வரவேற்கிறார்கள், விடைகொடுக்கிறார்கள். ஜப்பானில் சமூராய்த்தனம் காலப்போக்கில் முன்னுதாரணமாக ஆகிவிட்டதோ என்னவோ

ஜெ

முந்தைய கட்டுரைமேற்கின் புகைப்படம்
அடுத்த கட்டுரைசங்கக் கவிதைகள் நாட்டுப்புறப்பாடல்களா?