மேற்கின் புகைப்படம்

டி.பி.ராஜீவனின் சமீபத்தைய கெ.என் கோட்டூர்- எழுத்தும் வாழ்வும் என்ற மலையாள நாவலில் ஒரு இடம் வருகிறது. கெ.என்.கோட்டூரின் அப்பாவான குஞ்ஞப்பன்நாயர் அவரது சின்னஞ்சிறிய கிராமத்துக்கு சுதந்திரப்போராட்டத்தையும் சமூகசீர்திருத்தத்தையும் கொண்டுவர முயல்கிறார். ஆனால் ஆசாரங்களில் மூழ்கி உறவுப்பின்னல்களில் சிக்கி வாழும் மக்களுக்கு அவர் சொல்வது எதுவுமே புரியவில்லை. சுதந்திரம், சமத்துவம், தேசம், அரசியல்,பொருளாதாரம் என்பவை எல்லாமே வெறும் சொற்களகவே இருக்கின்றன

ஜி.குப்புசாமி

குஞ்சப்பா ஒரு உத்தி செய்கிறார். கிராமத்திற்கு அருகே செங்குத்தான ஒரு பெரிய குன்று இருக்கிறது. மொட்டைப்பாறை அது. அதன்மேல் குளிகன் போன்ற கெட்ட தெய்வங்கள் உள்ளன என்ற நம்பிக்கையால் மக்கள் அதன்மீது ஏறுவதேயில்லை. அவர் அதன் உச்சியில் தேசியக்கொடியை ஏற்ற முன்வருகிறார். முதலில் அஞ்சும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் கொண்டு அவருடன் சேர்கிறார்கள். ஒரு நூறுபேர் ஒருநாள் காலையில் பாறைமேல் ஏற முற்பட்டு மதியம் மேலே சென்று சேர்கிறார்கள்

மேலே நின்று தங்கள் ஊரைப் பார்க்கும்போது அவர்கள் திடுக்கிடுகிறார்கள். இவ்வளவு சிறியதா தங்கள் ஊர்? இவ்வளவு இடுங்கிய மடைக்குள்ளா இத்தனைகாலம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தோம்? கண்ணெட்டும் தூரம் வரை விரிந்து கிடக்கிறது நிலம். பசுமை. வானம். தொடுவானத்தின் முடிவில்லாத ஒளி.

அதன்பின் அவர்கள் அந்த ஊரில் நிறைவடையவில்லை. அதை அவர்களின் சிந்தனை கடந்து சென்றுவிட்டது. அவர்கள் பக்கத்து ஊர்களை அறிய ஆரம்பித்தனர். தேசத்தையும் உலகையும் அறிய விரும்பினர். கல்வி அங்கே வந்தது. போராட்டம் வந்தது. அந்த ஊரில் இருந்து இளைஞர்கள் வெளியேறி உலகை நோக்கி சென்றுகொண்டே இருந்தனர்

பதினெட்டாம் நூற்றாண்டுவரை நமக்கு சிந்தனையும் இலக்கியமும் அப்படி தேங்கித்தான் இருந்தன. மொழியாக்கங்கள் மூலம் நம்மை வந்தடைந்த உலக இலக்கியமும் தேசிய இலக்கியமும்தான் நம்மைக் காலத்தின் குன்றின்மேலேறச்செய்து நாம் யார் என்று காட்டின. த.நா.குமாரசாமி, அ.கி.கோபாலன், க.நா.சு, க.சந்தானம், டி.எஸ்.சொக்கலிங்கம்,சு.கிருஷ்ணமூர்த்தி முதல் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள் தமிழுக்குப் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். அவர்கள்தான் நமக்கு சாளரங்களைத் திறந்துவிட்டவர்கள்

அவ்வரிசையில் வைக்கவேண்டிய முக்கியமான மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி. அவரது மொழியாக்கத்தில் ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு, அருந்ததி ராயின் சிறிய விஷயங்களின் கடவுள் போன்ற நாவல்கள் வெளிவந்துள்ளன. அவர் மொழியாக்கம் செய்த அயல்மகரந்தச்சேர்க்கை அவர் தேர்ந்தெடுத்த உலக இலக்கியப்படைப்புகளின் மொழியாக்கமும் அந்த ஆசிரியர்களின் பேட்டியும் அடங்கிய முக்கியமான தொகைநூல்.

உலக இலக்கியத்தில் முக்கியமானவர்களகாக் கருதப்படும் பத்து ஆசிரியர்களின் பத்து சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. ஹருகி முரகாமி, சல்மான் ருஷ்தி,டோபியாஸ் உல்ஃப், சினுவா ஆச்சிபி, ரேமண்ட் கார்வர்,லே க்ளேசியோ, ஓரான் பாமுக், சீமமாண்டா அடிச்சி, குந்தர் கிராஸ், எடுவர்டோ காலியானோ ஆகியோரின் கதைகள் அவர்களைப்பற்றிய அறிமுகக் குறிப்புடனும் அவர்களுடனான ஓர் உரையாடலுடனும் தொகுக்கப்பட்டுள்ளன

இந்நூல் உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யக்கூடியது- எல்லா வகையிலும். உலக இலக்கியம் என்று நாம் இன்று கருதுவது உண்மையில் இயல்பாக உருவான ஒரு கருத்துருவகம் அல்ல. அது ஐரோப்பிய அறிவுச்சூழலால் கட்டமைக்கப்படுவது. அதில் ஐரோப்பிய ரசனையும் ஐரோப்பிய அரசியல் தேவைகளும் பெரும்பங்காற்றுகின்றன. ஐரோப்பா உலகை எப்படி பார்க்கிறது, எப்படி பார்க்க விழைகிறது என்பதுதான் உண்மையான அளவுகோலாகிறது.

உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகளாக நம்மை வந்தடைபவர்கள் இருவகை. தங்கள் எழுத்தின் தரிசனத்தாலும் அழகியலாலும் உலகவாசகர்களைக் கவர்ந்த இலக்கியமேதைகள் ஒருவகை. ஐரோப்பிய இலக்கிய ஊடகங்களாலும் விமர்சகர்களாலும் அரசியல் உள்நோக்குடன் முன்வைக்கப்படும் உள்ளீடற்ற பிம்பங்கள் இன்னொரு வகை. குப்புசாமியின் தேர்வு அவரது ரசனையை விட சூழலில் பேசப்படுபவர்கள் என்ற அளவுகோலையே அதிகமாக நம்பியிருப்பதனால் இருவகை எழுத்துக்களும் இந்நூலில் உள்ளன.

இந்நூலில் உள்ள ஆசிரியர்களில் சினுவா ஆச்சிபி, சீமமாண்டா அடிச்சி, சல்மான் ருஷ்தி போன்றவர்களை நான் எவ்வகையிலும் முக்கியமான ஆசிரியர்களாக நினைக்கவில்லை. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேலைநாட்டு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் பிம்பங்கள் இவை. உதாரணமாக, வளர்ந்துவரும் நைஜீரியாவின் தேசியத்தை பயாஃப்ரா என்ற கிறித்தவ உபதேசிய கோரிக்கையைக் கொண்டு உடைக்கும் நோக்கத்துடன் முன்னிறுத்தப்படுபவர் அடிச்சி. நைஜீரியாவின் எண்ணை வளம் மீதான ஐரோப்பிய நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளூம் அரசியலின் கருவிதான் அவர்.

முக்கியமான இலக்கியவாதிகளின் பட்டியலிலேயே இருவகை எழுத்தாளர்கள் உள்ளனர். ஆழ்ந்த அக்கறையுடன் உழைத்து வாசிக்கவேண்டிய எழுத்தாளர்கள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் உலகளாவ கவனம் பெற்றனர். அந்த வகையைச்சேர்ந்தவர் குந்தர் கிராஸ். தொண்ணூறுகளில் எழுதிய ஓரான் பாமுக்கையும் அவ்வகைப்பட்டவர் என்று சொல்லலாம்.

தொண்ணூறுகளுக்குப்பின் உலக இலக்கியத்தில் சரளமான வாசிப்புத்தன்மை, அதாவது வெகுஜனத்தன்மை ஓர் முக்கியமான அம்சமாக ஆகியது. ஒரு படைப்பின் முக்கியத்துவத்துக்கு அதன் வெகுஜன பிரபலம் ஓர் அளவுகோலாக எண்பதுகள் வரை கருதப்பட்டதேயில்லை. தொண்ணூறுகளில் புகழ்பெற்ற ஊடகங்கள் அந்த அளவுகோலை இலக்கியத்துக்குள் புகுத்தி நிலைநாட்டின. ஆழத்தை விட சுவாரசியம் அதிகமான படைப்பாளிகள் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தனர். அவ்வகைப்பட்ட எழுத்தாளர் ஹாருகி முரகாமி. கச்சிதமான மொழியும் அழகிய அமைப்பும் கொண்ட அவரது ஆக்கங்கள் வாசகனின் வாழ்க்கையின் சாராம்சத்துடன் மோதுவதேயில்லை.

இவ்வாறு ஒரு பார்வை மாற்றம் வந்தபோது எழுபதுகளில் எழுதிய எழுத்தாளர்கள் சிலர் புதிய கவனம்பெற்றனர். ரேமன் கார்வர், எடித் வார்ட்டன் போன்றவர்களை குறிப்பாகச் சொல்லலாம். எழுத்தின் ஆழமும் தீவிரமும் மட்டுமே அளவுகோலாகக் கருதப்பட்ட எழுபதுகளில் இரண்டாம்வரிசையில் வைக்கப்பட்டவர்கள் இவர்கள். சுவாரசியமான ஆழமான, ஆனால் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்குடன் ஒருபோதும் உரையாடாத எழுத்து இவர்களுடையது. அவ்வகையில் இத்தொகுப்பில் ரேமண்ட் கார்வர் இடம்பெற்றிருக்கிறார்.

சமகால ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் லெ க்ளேஸியோ அமெரிக்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் டோபியாஸ் உல்ஃப் , லத்தீனமெரிக்காவைப் பிரதிநித்துவம் செய்யும் எடுவர்டோ காலியானோ ஆகியோரைத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார் குப்புசாமி. [எடுவர்டோ காலியானோவின் கதையைச்சேர்த்திருக்கலாம். முக்கியமற்ற ஒரு கட்டுரைத்துண்டைச் சேர்த்திருப்பது தொகுப்பின் ஒருமையை குலைக்கிறது ] ஆக, குப்புசாமியின் இத்தொகுதி வெறும் பத்து ஆசிரியர்கள் வழியாக இன்றைய உலக இலக்கியத்தின் பெரும்பாலான போக்குகளை அறிமுகம்செய்து தெளிவான ஒரு சித்திரத்தை அளிக்கிறது.

ஆனால் என் வாசிப்பில் இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகளில் எவற்றையுமே இலக்கியச் சாதனைகள் என்று சொல்ல மாட்டேன். ருஷ்தியின் கதை வெறும் மூளைவிளையாட்டு. பாமுக்கின் கதையும் சலிப்பூட்டும் உத்தி மட்டுமே.லே க்ளேசியாவின் கதையை வாசிக்கையில் மகத்தான ஐரோப்பிய இலக்கியங்களை உருவாக்கிய தத்துவ- அறப்பிரச்சினைகளில் அவர்கள் ஆர்வமிழந்து விலகிவிட்டதாகத் தோன்றியது. எஞ்சியிருப்பது கதைகளை வேறு ஏதேனும் வகையில் சொல்லமுடியுமா என்ற ஆர்வம் மட்டும்தான்.

ரேமண்ட் கார்வரின் ‘ஒரு சின்ன நல்ல விஷயம்’ வாழ்க்கையின் வலிமிக்க ஒரு கணம். ஒரு திறப்பின் தருணம். முரகமியின் ’ஆளுண்ணும் பூனைகள்’ ஒரு கூரிய கனவு. இவ்விரு கதைகளையும் மட்டுமே நவீனத்தமிழின் முக்கியமான கதைகளின் தரத்தைச் சேர்ந்தவை என்று சொல்லமுடியும். நம்முள் ஆழ்ந்திறங்கி நம் கனவின் பகுதியாக மாறி சிந்தனையில் அலைகளை எழுப்பி வாழ்நாள் முழுக்க கூடவே வரும் கதை என ஏதும் இதில் இல்லை.

இன்றைய உலக இலக்கியத்தின் போக்குகளையும் வலிமையையும் போதாமையையும் காட்டும் ஒரு தொகுதி. ஒரு முக்கியமான சாளரம்

[அயல் மகரந்தச்சேர்க்கை. ஜி.குப்புசாமி. வம்சி பிரசுரம்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்
அடுத்த கட்டுரைஅகம் மறைத்தல்-கடிதங்கள்