லோகி,2. கலைஞன்

லோகித தாஸின் கிரீடம் என்ற படம் அவரை ஒரு நட்சத்திர எழுத்தாளராக ஆக்கியது. மோகன்லாலை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியது.  இந்தியமொழிகளில் அந்தப்படம் மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் அவதாரம் கொண்டிருக்கிறது. மகனை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக்கவேண்டும் என்ற கனவுடன் வாழும் கான்ஸ்டபிள் அப்பா.

அப்பா ஒரு கேடியால் தாக்கப்படுவதைக் கண்டு மனம்பொறாமல் அவனை தாக்கமுனைந்து தானும் கேடியாகிவிடுகிறான் சேதுமாதவன். கடைசியில் கேடியைக் கொன்று சிறைக்குச் செல்கிறான்.  இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வு ஆணை வருகிறது ‘சேதுமாதவனுக்கு வேலைக்கு தகுதி இல்லை சார், அவன் ஒரு கிரிமினல்’ என்று அப்பாவே சொல்லும் இடத்தில் படம் முடிகிறது.

 

கிரீடம்

 

ஒரு வணிகப்படத்தின் கட்டமைப்பு உள்ள அந்தப்படத்தை லோகித தாஸின் சிறந்த படம் என்று சொல்பவர்கள் உண்டு. கல்பற்றா நாராயணன் சொன்னார், ‘அதுதான் லோகியின் மாஸ்டர்பீஸ். அதைவிட அறிவார்ந்த சிக்கலான அழகான பல படங்களை அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த படத்தில் ஒருபோதும் நம்மால் வகுத்துவிட முடியாத விதியின் விளையாட்டு இருக்கிறது’ லோகியின் எல்லாபடங்களுமே விதியின் கதைகள்தான்.

”ஆனால் கிரீடத்தில் உள்ள வீழ்ச்சி அபூர்வமான ஒன்று. ஆரம்பத்தில் சேதுமாதவன் பிறரின் அன்பின் உச்சத்தில் இருக்கிறான். அப்பாவுக்கு அவன் அவரது லட்சியக்கனவின் வடிவம். அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. பாட்டிக்கு கள்ளகிருஷ்ணன். மாமனுக்கு செல்ல மருமகன். மாமன் மகளின் காதலன். தம்பிக்கு தங்கைக்கும் அக்காவுக்கும் பிரியமானவன். நண்பர்களுக்கு உயிருக்கு உயிரானவன். அந்த கோலத்தை மிக நுட்பமாகச் செதுக்கி முடித்தபின் விதியின் கரம் ஓங்கி அடிப்பதைக் காட்டுகிறார் லோகி. சேதுமாதவன் புறக்கணிப்பின் நிராகரிப்பின் படுபாதாளத்துக்குச் செல்கிறான். யாருமே இல்லாதவனாக ஆகிறான். சமூகமே அவனை உதறி விடுகிறது. கிரிமினலாக தன்னந்தனியனாக கூண்டில் விழுந்து கிடக்கிறான்…” என்றார் கல்பற்றா நாராயணன்.

உண்மையின் லோகியின் வாழ்க்கை அதற்கு நேர் எதிரான ஒன்று. அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கணவனால் குரூரமாக கைவிடப்பட்ட ஒரு அம்மாவின் மகனாக 1955 மேய் 10 ல் கேரளத்தில் சாலக்குடி அருகே முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தார். ஒரு இடிந்த கடைவரிசையில் பலகை போட்டு மூடிய ஒற்றையறையில் அவர் தன் அம்மாவுடன் ஐந்துவயதுவரை வாழ்ந்தார். அப்பாவின் முகம் மங்கலாகவே நினைவிருக்கிறது. சிறு வயது என்பது அவருக்கு பசி பசி பசிதான். நடக்க ஆரம்பித்த வயதிலேயே எங்கே சோறு கிடைக்கும் என்று ஊகித்து அந்த வீட்டுக்குச் சென்று பழஞ்கஞ்சியோ மரவள்ளிக்கிழங்குக் களியோ கிடைப்பது வரை காத்து நிற்பதைக் கற்றுக்கொண்டார்.

”சோறு மீது எனக்கு அடங்காத வெறி…நான் வயிறு நிறைந்து படுத்திருக்கும்போதுகூட சோற்றைத்தான் நினைத்துக் கொண்டிருப்பேன். பலகாரங்களைப் பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. மிட்டாய்களை எனக்கு பழக்கமில்லை. எனக்கு தண்ணீர் விட்ட வெறும் சோறே அற்புதமான ருசியுடன் இருந்தது” என்று லோகி சொல்வார். அவமானங்கள் அப்போது மனதில் பதியவில்லை. வளர்ந்து ஆண்மகனாக ஆனபின் நினைவில்தான் அவை அமிலத்துளிகள் போல எரிய ஆரம்பித்தன. பிற சிறுவர்கள் சாப்பிடுவதை பார்த்து நின்ற லோகியை நாயைப்போல கல்லால் அடித்து துரத்தியிருக்கிறார்கள். பிள்ளைகள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை வழித்து அவருக்குப் போட்டிருக்கிறார்கள்.

பின்னர் லோகியின் அம்மா வேறு ஒருவரை மணம் புரிந்துகொண்டார். புதிய கணவன் லோகியை அருவருப்பான புழுவைப்போல பார்த்தார். எங்கே பார்த்தாலும் லோகியை அடிக்க ஆரம்பித்துவிடுவார். அவரைக் கொல்லவேண்டும் என்ற எண்ணமே லோகியின் நெஞ்சில் இருந்தது. கொடுமை தாளமுடியாமல் லோகியே கிளம்பி தூரத்துச் சொந்தக்காரர்களின் வீட்டுக்குச் சென்றார். அவர்கள் வீட்டில் வேலைசெய்து தொழுவத்தில் தங்கிக்கொண்டு பள்ளிக்கூடமும் சென்று வந்தார். ”மதியக் கஞ்சி இருந்த ஒரே காரணத்தால்தான் நான் படித்தேன்”

லோகி அவமானங்களில் புறக்கணிப்பில் வன்முறையில் மிதந்து இளமையைத்தாண்டினார். கரிய குள்ளமான பையன். படிப்பும் பெரிதாக ஏறவில்லை. வேறு எந்த திறன் இருப்பதாகத் தெரியவில்லை. மாடுமேய்க்கவும் சாணிவழிக்கவும் செல்லவேண்டியவன். ஆனால் லோகிக்குள் ஒரு வேகம் இருந்தது, அதுதான் கடைசி வரை அவரிடம் இருந்த வாழ்வாசை. லோகி பிடிவாதமாக படித்தார். பள்ளிக்கூட ·பீஸ் கட்டுவதற்காக அலைந்து திரிந்து உதவிகள் பெற்றார். ஒரு வீட்டில் இருந்து துரத்தப்படும்போது இன்னொரு வீட்டுக்கு போய் ஒண்டிக்கொண்டார்.

பள்ளி இறுதி முடித்த நட்களில் அவருக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. எதையும் செய்யமுடியாதவராக சித்தம் கலங்கி அலைந்தவரை பெந்தகோஸ்த் சபைக்கு ஒரு பெண்மணி கூட்டிச்சென்றார். அவரை மதம் மாற்ற முடியும் என்று எண்ணி அவர்கள் அவரை கவனித்துக்கொண்டார்கள். ”ஏசு என்னை குணப்படுத்தவில்லை. நாலைந்துபேர் நாலைந்துநாள் என்னிடம்  மகனே உனக்கு என்ன செய்கிறது என்று கேட்டார்கள், அது போதும் எனக்கு” என்றார் லோகி. தன் இளமையில் லோகி தன்னிடம் அன்பாகப்பேசிய ஒருவரைக் கூட சந்தித்ததில்லை.

பள்ளி இறுதி முடித்ததும்  பலருடைய உதவியுடன் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பட்டபப்டிப்புக்குச் சேர்ந்தார். பல சிறு பகுதிநேர வேலைகளை செய்து படிப்பை முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில்  ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். அலோபதி மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அதன்பின் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ உதவியாளர் வேலை கிடைத்தது. மூன்றுவேளைச் சாப்பாடும் அழுக்கில்லாதவேட்டியும் ஒழுகாத உறைவிடமும் வாய்த்தது. லோகி அந்தரங்கமாக ஒரு கவிஞர். ஆனால் நெருக்கமான நண்பர்களிடம் கூட தன் கவிதைகளைக் காட்டியதில்லை. கவிதைகளை அவர் தன்னைத்தானே ஆற்றிக்கொள்வதற்கான ஒரு வழியாகவே கண்டிருந்தார்.

அக்காலத்தில் லோகி வெறிபிடித்த இலக்கிய வாசகர். கதைகள் கவிதைகள் என எழுதிக்குவித்தார். சிறுகதைகள் தொடர்ந்து பிரசுரமாயின என்றாலும் அவை அங்கீகாரம் பெறவில்லை. அப்போது தற்செயலாக அவருக்கு தொழில்முறை நாடகக் குழுக்களுடன் உறவு ஏற்பட்டது. இரவுபகலாக அவர்களுடன் சுற்ற ஆரம்பித்தார். இலக்கிய சர்ச்சைகள் இசை மாலைகள், நாடக ஒத்திகைகள். தன்னுடைய கதைகளும் கவிதைகளும் முக்கியமானவை அல்ல என்று லோகி உணர்ந்தார். நாடகம்தான் தன்னுடைய இடம் என்று புரிந்துகொண்டார். கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் முக அடையாளமாக விளங்கிய கேரளா பீப்பில் ஆர்ட்ஸ் கிளப் [கெ.பி.ஏ.சி] தோப்பில் ·பாசியால் நடத்தப்பட்டது. அதில் சேர்ந்து பணியாற்றினார்

கேபிஏஸிக்காக 1986 ல் லோகி அவரது முதல் நாடகத்தை எழுதினார். ‘சிந்து சாந்தமாய் ஒழுகுந்நு’ என்ற அந்த நாடகம் அவரை ஒரு முக்கியமான நாடக ஆசிரியராக ஆக்கியது. அதற்கு கேரள அரசின் விருதும் கிடைத்தது. அந்நாடகத்தில் நடித்தவர் நடிகர் திலகன். பல நினைப்பது போல லோகி நிறைய நாடகங்களை எழுதவில்லை. ‘ஒடுவில் வந்ந அதிதி’, ‘ஸ்வப்னம் விதச்சவர்’ என்ற மூன்று நாடகங்கள் மட்டுமே எழுதினார்..

சிபி மலையில் அப்போது ஒரு கவனிக்கத்தக்க சினிமா இயக்குநராக வெளிவந்திருந்தார். அவரது ‘முத்தாரம்குந்நு பிஓ’ என்ற படம் கலைத்தரமான ஒரு முயற்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் கவனிக்கப்படவில்லை. அடுத்த படத்தை ஆரம்பித்து கொஞ்சநாள் படப்பிடிப்பும் நடத்தி திருப்தி இல்லாமல் இருக்கும்போதுதான் திலகன் அவருக்கு பிடித்தமான ‘தனியாவர்த்தனம்’ என்ற நாடகத்தைப் பற்றிச் சொன்னார். லோகி சிபிமலையிலை பார்க்க நாடகப்பிரதியுடன் சென்றார்

வேட்டியும் சட்டையும் அணிந்து மென்தாடியுடன் வந்த அவர்மேல் சிபிக்கு நம்பிக்கை வரவில்லை. ஏற்கனவே அங்கே ஏதோ விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முக்கியமான நட்சத்திரமாக இருந்த மம்மூட்டி இருந்தார். மம்மூட்டி லோகியிடம் ”எந்தாடோ?” என்று கேட்டார். திரைக்கதை கையில் இருப்பதைச் சொன்னதும் ‘கொண்டா ‘ என்று வாங்கி வாசிக்க ஆரம்பித்தார். பீடி பிடித்து கொண்டு அலட்சியமாக வாசித்த மம்மூட்டி சட்டென்று நிமிர்ந்து மரியாதையுடன் ”தான் இரிக்கூ…”என்று நாற்காலி போட்டு அமரச்செய்தார்.

தனியாவர்த்தனம்

கேரளத்தை உலுக்கியது 1987ல் வெளிவந்த  ‘தனியாவர்த்தனம்’. மம்மூட்டியின் திரைவாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. எம்டிக்கும் பத்மராஜனுக்கும் பின்னர் ஒரு நட்சத்திரம் திரைக்கதையுலகில் உருவாகிவிட்டதென விமரிசகர்கள் உணர்ந்தார்கள். அதன்பின்னர் லோகி வெற்றிகளையே கண்டு கொண்டிருந்தார். மம்மூட்டிக்கும் மோகன்லாலுக்கும் திலகனுக்கும் அவர்களின் நடிப்புத்திறனின் எல்லா தளங்களையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதாபாத்திரங்களை அவர் உருவாக்கி அளித்தார்.

அங்கீகாரத்தின் புகழின் உச்சிக்கு வந்துசேர்ந்தார் லோகி. அதன் பின் கீழே இறங்கவே இல்லை. மலையாளத்திரையில் லோகி அளவுக்கு தொடர் வணிகவெற்றிகளைச் சாதித்த திரைக்கதை நிபுணர் குறைவு. லோகி-சிபி கூட்டில் வந்த படங்களில் பல மலையாளத்திரையின் ஆகச்சிறந்த கலைவெற்றிகளின் பட்டியலில் சேர்பவை. பரதனுக்காக லோகி எழுதிய அமரம், வெங்கலம் போன்ற படங்கள் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றவை. மலையாள மனத்தில்  அந்தரங்கமான கண்ணீராக தேங்கி நிற்கும் பல அழியாத கதாபாத்திரங்களை லோகி உருவாக்கினார்.

ஜூன் 28 ஆம் தேதி லோகி எரணாகுளத்தில் மரணமடைந்தபோது அங்கே கூடிய பல்லாயிரம்பேர் கேரள மனத்தில் அவரது இடமென்ன என்று காட்டினார்கள். அதன்பின் திரிச்சூர் கேரள சாகித்ய அக்காதமி அரங்கில் அவர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டபோதும் பல்லாயிரம்பேர் அவரைக் காண கண்ணீருடன் திரண்டு வந்தார்கள். மறுநாள் பாலக்காட்டில் லக்கிடியில் அவரது பிரியமான பண்ணைவீட்டுக்கு முன்வைக்கப்பட்டபோதும் மக்கள் வந்தபடியே இருந்தார்கள். ஓர் அரசியல் தலைவருக்கு , ஒரு மதத்தலைவருக்கு பிற இடங்களில் கிடைக்கும் மக்கள் அங்கீகாரம் அது

அவரது மரணச்செய்தியை நான் அவர் இறந்து அரைமணி நேரத்தில் அறிந்துகொண்டேன். உடனேயே கிளம்பினேன். பேருந்தில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து எரணாகுளம் சென்றேன். மோசமான சாலை. மோசமான பேருந்து. என் கழுத்துவலி எகிறியது. அதைவிட பேருந்தின் தனிமையில் லோகியின் நினைவுகள் வந்து வந்து மொய்த்து வதைத்தன. இறந்துபோனவர்கள் விட்டுச்செல்லும் புன்னகைகளும் பார்வைகளும் திடீரென்று மிகமிக அர்த்தம்பொருந்தியவை ஆகிவிடுகின்றன.

நான் லோகியின் உதவியாளர் மனோஜை கூப்பிட்டபோது எர்ணாகுளம் அருகே அவரது இல்லத்தில்தான் இறுதிச்சடங்குகள் என்றார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து எங்கோ தான் லக்கிடி இல்லத்தில் சாகவிரும்புவதாக லோகி சொல்லியிருக்கிறார் என்பதனால் அங்கே செல்வதாகச் சொன்னார். நான் நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு திரிச்சூர் வந்தேன். பதினொரு மணிக்கு லோகியை சாகித்ய அக்காடமி அரங்கில் இருந்து லக்கிடிக்குக் கொண்டுசென்றிருந்தார்கள். நான் பாலக்காட்டுக்கு இரவு இரண்டரை மணிக்கு சென்றுசேர்ந்தேன்

அங்கே ஒரு விடுதியில் இரவு தங்கினேன். காலையில் கோவையில் இருந்து ஷாஜியும் வினியோகஸ்தர் கேசவனும் வந்தார்கள். காரிலேயே லக்கிடி சென்றோம். செல்லும் வழியெங்கும் மக்கள். குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெண்கள். இளைஞர்கள், பாட்டிகள். லோகிக்கு ஒரு குணம் உண்டு. அவர் ஒருபோதும் சினிமாக்காரராக ஒதுங்கி வாழ்ந்தவர் அல்ல. சர்வசாதாரணமாக தெருவில் நடந்துசெல்வார். டீக்கடைகளில் சாப்பிடுவார். திருவிழாக்களுக்கு போவார். கதகளியோ நாடகமோ பார்க்க மணலில் போய் அமர்ந்துகொள்வார்

வழியில் அவரைப்பார்ப்பவர்கள் அவரிடம் செல் நம்பர் கேட்பார்கள். யார் கேட்டாலும் கொடுத்து விடுவார். யார் கூப்பிடாலும் பேசுவார். யார் வந்தாலும் பார்ப்பார்.அவரது நேரத்தில் பெரும்பகுதி இதற்கே செலவழிந்தது. இது தவறு என நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.”என்னால் யாரையும் புறக்கணிக்க முடியாது” என்பார் லோகி. சல்லி விஷயத்துக்கெல்லாம் அவரை கூப்பிட்டு மணிக்கணக்காக பேசுபவர்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டில் வைத்த குழம்பை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்க வருவார்கள். லோகிக்கு அந்தரங்க நேரம் என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டிருந்தார்கள்.

கடைசிநாட்களில் லோகி ஒருவாரத்தில் சராசரியாக பத்து நிகழ்ச்சிகளில் பங்குகொண்டிருந்தார். சிலநாட்களில்  ஒரு பகலில் மூன்று நிகழ்ச்சிகள். அவரது சிக்கலே அவரால் எவரையுமே ஏமாற்றத்துக்கு ஆளாக்க முடியாது, எவரையுமே புறக்கணிக்க முடியாது என்பதுதான். அவர் எவர்மீதும் கோபப்பட்டதில்லை. உதவியாளர் மேல் கடும் கோபம் வந்தால் மெல்லிய குரலில் ‘கழுதை’ என்பார். வசைபாடுவது கண்டிப்பது எல்லாம் அவர் அறியாதது. மென்மையானவர் என்பதனாலேயே அவர் உணர்வுரீதியாகச் சுரண்டப்பட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பெருங்கூட்டத்தில் இடிபட்டு நசுக்குண்டு உள்ளே சென்றோம். எங்களுக்கு அந்தக் கட்டிடத்தின் அமைப்பு தெரியும் என்பதனாலேயே பின்பக்கம் வழியாக சென்று கண்மூடிப் படுத்திருந்த லோகியை ஒரு கணம் மட்டும் பார்த்துவிட்டு விலகிச்சென்றோம். அவருக்கு அருகிலேயே சிதை மூட்டப்பட்டுகொண்டிருந்தது. சினிமா பிரமுகர்களாக வந்துகொண்டிருந்தார்கள். யார் யாரோ அழுது கொண்டிருந்தார்கள்.

மீரா கதிரவன் அருகே நின்று கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுதார். கஸ்தூரிமானை தமிழில் எடுக்க ஆரம்பிக்கும்போது மலையாளம் தெரிந்த உதவியாளர் வேண்டும் என்பதற்காக மீரா கதிரவன் சேர்த்துக்கொள்ளப்பட்டார். லோகிக்கு அவர் மேல் அபாரமான பிரியமும் மிகுந்த நம்பிக்கையும் இருந்தது. அவரை கதைவிவாதம் முதல் போஸ்டர் டிசைன் வரை அனைத்திலும் ஈடுபடுத்தினார். உதவியாளரைப் போலன்றிஉ ஆசிரியரைப்போல அவரை பயிற்றுவித்தார். மீராகதிரவன் இப்போது ‘அவள்பெயர் தமிழரசி’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

லோகிக்காக கூடிய கூட்டம் ஆச்சரியப்படுத்தவில்லை. அவர் மக்களின் கலைஞன், எல்லா வகையிலும். அவர் எளிய மக்களிடையே சாதாரணமான ஒருவராக வாழ்ந்தார். அவர்களைப்பற்றி எழுதினார். அவர்களை சிரிக்கவும் அழவும் வைத்தார். அவர்கள் நடுவேதான் அவர் எரிந்து சாம்பலாகவேண்டும்.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைகண்ணீரைப் பின் தொடர்தல்:கடிதம்
அடுத்த கட்டுரைசாருவின் புது அவதூறு