பந்தி ஒரு விவாதம்

இந்தக் கட்டுரை படித்தபோது பெருத்த அவமானமாயிருந்தது. நான் பலமுறை இதில் சொல்லப்பட்டிருப்பதைப்போல நடந்திருக்கிறேன் என நினைத்து வருத்தப்பட்டேன். எத்தனை உண்மை, நெஞ்சிலறையும் உண்மை.

ஏதோ ஒரு காசு பெறாத விஷயம்போலத் தோன்றும் ஒரு விஷயம் எத்தனை ஆழமானது. பண்பாடு கலாச்சாரமெல்லாம் இப்படி பைசா பெறுமதிப்பற்ற விஷயங்களின் தொகைதானில்லையா? உண்மையில் இதுதான் பிரச்சனையோ? நாம் எல்லாவற்றுக்கும் பெறுமதிப்பைக் கணக்கிடுகிறோமோ? ஒரு கல்யாணம், விசேஷத்தில் கொஞ்சம் காலம் அதிகமாக செலவிடுவதைவிட வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பதைப் பெரிதாய் நினைக்கிறோம்.

இதையெல்லாம் எப்படி மீட்டுக் கொண்டு வருவது

சிறில் அலெக்ஸ்

சிறில்,

இந்தவிஷயம் பற்றி ஒரு பொது விவாதம் உருவானால், பொதுவான ஒரு பிரக்ஞை- அவமானம்- உருவானால் போதும் . இயல்பாகவே அதற்கான கட்டுப்பாடும் உருவாகும். நாம் ‘நாலுபேர் என்ன நினைப்பார்கள்’ என்று எப்போதுமே கவலைப்படும் ஜனங்கள்

அடித்துப்பிடித்து உணவு உண்பது, குப்பையை எங்கும் வீசுவது ஆகிய இரண்டிலும் நமக்கு ஒரு வெட்கம் உருவாகியே தீரவேண்டும்.

சமீபத்தில் இலங்கை சென்று வந்த நண்பர் ஷாஜி சொன்னார். ‘இலங்கை எவ்வளவு சுத்தமான நாடு…. பொது இடத்தில் குப்பையே இல்லை. சென்னைக்கு வந்தால் காலே வைக்க முடியவில்லை’

நான் சொன்னேன் ‘இலங்கையை விடுங்கள், சுத்தமில்லாத வேறு எந்த நாட்டையாவது பார்த்திருக்கிறீர்களா?’ அவர் விழித்தார். நான் சொன்னேன் ‘நான் கண்டதில்லை. ஆப்ரிக்கா உட்பட…உலகிலேயே அசுத்தமான ஒரே நாடுதான் இருக்கிறது. இந்தியா. அதில் மிக அசுத்தமான இரு நகரங்கள் கல்கத்தாவும் சென்னையும்’

நாம் வெட்கப்படுவதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும். படிப்படியாக நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளமுடியும்

ஜெ

ஜெ,

நான் இந்த விஷயத்தில் மாறுபடுகிறேன்.

எனக்கு buffet முறைதான் preferable. இப்படிப்பட்ட பந்தி முறைகளால் ஒரு அனாவசிய formality உருவாகிறது. தட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு கும்பலிலிருந்து இன்னொரு கும்பலுக்குப் போய்க்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடுவதே சுகம். சாப்பாட்டையும் ஒரு சடங்காக மாற்றுவதில் என்ன லாபம்? வீட்டிலே கூட இப்படி யாராவது பரிமாறலாம், எல்லாரும் வரிசைப்படி உட்கார்ந்து கொண்டு சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளோடு அடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிடும் சுகம் வருமா?

இப்படிப்பட்ட பந்தி முறைகளால் உலகம் அழிந்துவிடும், மாற்றியே ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் சூடிதாரையே இளம் பெண்கள் உடுத்தும் இன்னாளில் ஆகா பாவாடை தாவணி மாதிரி வருமா, என்ன அழகு என்ன அழகு என்று பழைய நினைப்பில் உருகுவதைப் போலத்தான் எனக்குத் தோன்றியது. (நானும் பாவாடை தாவணி ரசிகன்தான் என்பதையும் மனைவி ஊரில் இல்லாத இந்த நேரத்தில் தைரியமாக சொல்லிக் கொள்கிறேன்.) இதை எல்லாம் De Gustibus என்று விட்டுவிட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

ஆர்வி

சிலர் கூட்டமாகக் கூடும் எந்த இடத்திலும் அதற்கான ஒழுங்கு தேவையாகிறது. அந்த ஒழுங்கு இல்லாவிட்டால் நிலவுவது அராஜகம். அதனால் உருவாகும் மனக்கஷ்டம். குழந்தைகளையும் முதியவர்களையும் பெண்களையும் உந்தித் தள்ளிவிட்டுச்சென்று போய்ச் சாப்பிடுவதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்?

பந்தி ஆசாரங்கள் ஒரே நோக்கத்துடன் தான் உருவாகியிருக்கின்றன. நிறையபேர் ஒரு சிறிய இடத்தில் கூடி அமர்ந்து சாப்பிடும்போது உருவாகும் சங்கடங்களைச் சமாளிப்பது. அதற்குத்தான் சம்பிரதாயங்களும் விதிமுறைகளும் எல்லாம். அவை உலகமெங்கும் உள்ளன. ஆம், போக்குவரத்து விதிகள் போலத்தான். போக்குவரத்து விதிகள் கார் ஓட்டும் இன்பத்தை இல்லாமலாக்குகின்றன, பயணத்தை ஓர் ஆசாரமாக ஆக்கிவிடுகின்றன, அவை அடக்குமுறைத்தன்மை கொண்டவை என்றெல்லாம் சொல்வீர்களா என்ன?

இன்று இந்த அளவுக்கு ஒழுங்கில்லாமல் சாப்பாட்டுக்கலவரம் நடக்க முக்கியமான காரணம் எவருக்கும் சாப்பாட்டில் ஆர்வமே இல்லை என்பதுதான். ஒரு கல்யாணத்துக்கு இருபது நிமிடம் ஒதுக்கத் தயாராக இருக்கிறார்கள். அதற்குள் சாப்பிட்டுக் கிளம்பிவிடவேண்டும். அதற்காகவே முட்டிமோதல். இலையில் வைக்கும் எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டுக் குழப்பிவிட்டு ஐந்தே நிமிடத்தில் கையை உதறிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அதிலும் கொங்குநாட்டில் நிலவுவது உச்சகட்டக் கொடுமை. நான் அப்பகுதி விருந்துகளில் செலவழிக்கப்படும் பணம் அளவுக்கு எங்குமே கண்டதில்லை. ஓர் இலைக்கே சாதாரணமாக ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்பிருக்கும். நூற்றுக்கணக்கான உணவு வகைகள். ஒருவர் கூட உண்மையாக சாப்பிட்டு நான் கண்டதில்லை. ஒரேநாளில் ஐந்து திருமணங்களுக்குச் செல்கிறார்கள். ஐந்திலும் உணவை சிதைத்துக் கொட்டிவிட்டு எழுந்துவிடுகிறார்கள்.

ஒரு விருந்து என்றால் நிதானமாகத்தான் சாப்பிடவேண்டும். அதுதான் உலகமெங்கும் உள்ள வழக்கம். அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதற்குப்பெயர் விருந்தே அல்ல. உணவை சுவைத்து உண்ணவும், மகிழ்ச்சியாக இருக்கவும் என்னென்ன விதிகள் தேவை என்று மட்டுமே நான் சொல்கிறேன். அதிலும் இன்று திருமணங்களுக்கு வரும் கூட்டம் முன்னைவிட அதிகம் என்பதனால் இந்த விதிகள் மேலும் கண்டிப்பாகத் தேவையாகின்றன. நாமோ இருக்கும் விதிகளையும் இழந்துகொண்டிருக்கிறோம். நான் சுட்டிக்காட்டுவது அதையே.

ஏற்கனவே இருக்கும் ஆசாரங்களும் விதிகளும் இன்று பொருந்தாததவை என்றால் மாற்றிக்கொள்ளலாம். கடந்த காலத்தில் சாப்பாட்டில் சாதி பார்ப்பார்கள்.சாதிகளுக்குள்ளேயே குலம், கூட்டம் என்ற கணக்குகள் இருந்தன. சமூக அந்தஸ்து பார்ப்பதுண்டு. பல சாதிகளில் பெண்களுக்கு மிகமிகக் குறைவான முக்கியத்துவம் இருந்தது. இன்று அதையெல்லாம் உதறிவிடலாம். ஆனால் கூடிச்செய்யும் ஒன்றில் எல்லாருக்கும் உரிய விதிகள் சில இருந்தாகவேண்டும்

ஜெ

ஆர்.வி,

விவாதம் பந்தி முறை பற்றியதல்ல. இன்னும் கொஞ்சம் ஆழமானது. பஃபே குறித்து ஜெ சொல்லவே இல்லை என நினைக்கிறேன். மேலை நாடுகளிலும் விருந்து குறித்த ஆசாரங்கள் உண்டு. பஃபே சிஸ்டத்துல லைன கட் பண்ணிப் போகிறோமில்லையா அதத்தான் அவர் சொல்ல வருகிறார்.

நிலச்சுவான்தார்களின் காலத்து வழக்கங்கள் அழிவது குறித்த ஒரு பழமைவாதியின் குரலாக இந்தக் கட்டுரை பார்க்கப்படும் (வழக்கமான) அபாயம் உள்ளது. ஆனால் இது ஒரு சிறுகதையைப் போல இருக்கும் நிலைமையை சொல்கிறது.

நாம் பழமையிலிருந்து குறைகளை அழித்துவிட்டு அவற்றை செம்மைப்படுத்திப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு அதை அழித்தோ அல்லது மிகத் தவறாகப் பயன்படுத்தியோ வருகிறோம்.

அதீத உபசரணைகளை எதிர்பார்ப்பது (தாணுபிள்ளை அதில் கலாகாரர்) அப்படி இல்லை என்றால் சாப்பிடாமல் சண்டை போடுவது இது எதையும் ஜெ சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால் எந்த நாகரீகமும் இல்லாமல் அடுத்தவரைக் குறித்த எந்தக் கரிசனமுமற்ற விருந்தோம்பலும், விருந்துண்ணலும் இன்றைக்குப் பரவலாயிருக்கிறதை நானும் கண்டு வருகிறேன்.

ரெம்ப ஓவரா செய்யக் கூடாது ஆனால் குறைவாகவும் கூடாது. அந்த சமநிலை கைகூடவில்லை. தராசு இன்னும் ஆடி ஓயவில்லை.

சிறில் அலெக்ஸ்

பஃபே முறை இன்று பல இடங்களீல் உள்ளது. நான் முந்தாநாள் எர்ணாகுளத்தில் சென்ற ஒரு மலையாள இலக்கிய விழாவில் பஃபே முறைதான். ஆனால் ஒட்டுமொத்தக் குழப்பம். நான் தட்டை எடுத்தாலும் சாப்பிடவில்லை. திரும்பி வரும் வழியில் ஆலப்புழாவில் வண்டியை நிறுத்தி சாப்பிட்டேன்.

முதல் விஷயம் தென்னிந்தியச் சாப்பாடு பஃபே முறைக்கு உகந்தது அல்ல என்பதுதான். சோற்றில் சாம்பாரையும் குழம்புகளையும் கலந்து குழைத்து கையால் அள்ளி உண்பவர்கள் நாம். தொட்டுக்கொள்ளப் பலவகையான தொடுகறிகள். ஒரே தட்டில் அவற்றை அள்ளிவைத்துக்கொண்டு சாப்பிடுவது மிக மிக அசௌகரியம். அவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்துவிடுகின்றன.

மேலும் கையால் குழைத்துச்சாப்பிடும்போது எச்சில்கை முழுக்க உணவாக இருக்கிறது. நம் சாப்பாட்டு ஆசாரங்கள் முழுக்க இந்த எச்சில் கை சம்பந்தமாக யோசித்து உருவாக்கப்பட்டவை. வட இந்திய உணவிலோ அல்லது மேல்நாட்டு உணவிலோ இந்த சிக்கல் இல்லை. சாம்பாரையும் பருப்பையும் பிசைந்த கையுடன் ஒரு கூடத்தில் நெருக்கமாக விதவிதமாகத் திரும்பி நிற்பவர்கள் நடுவே உலவுவது மிக சங்கடமானது. நம் பஃபேகளில் எச்சில்கையை சட்டைகளில் தீற்றிக்கொள்வது எப்போதும் நடப்பது.

இரண்டாவதாக பஃபே முறை குறைவான கூட்டத்துக்கு உரியது. ஐம்பதுபேர் நூறு பேர் சாப்பிட ஏற்றது. ஆயிரம்பேர் சாப்பிடும்போது அது வெறும் முட்டிமோதல். பஃபேயில் சாப்பாட்டுக்காக அதிகம்போனால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உணவுப் பாத்திரங்களுக்கு முன்னால் நிற்க நேரக்கூடாது. அந்த நேரம் நீளநீளப் பொறுமை இல்லாமலாகும். நம்மூர் பஃபேக்களில் சோறும் சாம்பாரும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு ரசத்துக்குச் சோறு எடுக்க முப்பது நிமிடம் எச்சில்கையுடன் வரிசையில் நிற்கவேண்டியிருக்கிறது. அதில் என்ன சாப்பிடும் இன்பம் இருக்க முடியும்?

பஃபேக்களில் வயதானவர்கள் மிகவும் தடுமாறுகிறார்கள். எர்ணாகுளம் விருந்தில் மூத்த கவிஞர் காவாலம் நாராயணப்பணிக்கரால் தட்டைக் கையில் பிடிக்கவே முடியவில்லை. ஒரு கையால் தட்டைப்பிடித்தால் மறு கை தடதடவென ஆடுகிறது. ஆனால் யார் உதவிசெய்ய முடியும்? எல்லாக் கையுமே எச்சில். பரிதாபமாகத்தான் இருந்தது.

பஃபேக்களுக்கே கூடத் திட்டவட்டமான விதிகள் உண்டு. வரிசையில் நின்றாகவேண்டும். ஒருபோதும் முந்திச்செல்லக்கூடாது. எச்சில் கையால் உணவையோ பரிமாறப்படும் கரண்டிகளையோ தொடக்கூடாது. உணவுப்பொருட்களை எடுத்துத் தட்டில் வைத்தபின் திரும்பி வைக்கக்கூடாது. இதெல்லாமே சௌகரியமாக உண்ணும் பொருட்டு, பிறரை சௌகரியமாக உண்ண அனுமதிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட விதிகள்.

பஃபேக்களில் சாப்பிட்ட எச்சில்தட்டுடன் திரும்பச் சென்று நிற்கக்கூடாது. கைகளைத் துடைத்தபின் புதிய தட்டை எடுத்துக்கொண்டுதான் செல்லவேண்டும். தட்டு நிறையப் பலவகை உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் பல விதிகள் உள்ளன.

நாம் இன்றும் நல்ல ஓட்டல்களில் முறையாக, அமைதியாகத்தானே சாப்பிடுகிறோம். சூப் வந்து இருபத்தைந்து நிமிடம் கழித்துதான் என்ன வேண்டுமென்றே கேட்க ஆள் வருகிறார்கள். ஒவ்வொரு உணவும் சீராகப் படிப்படியாகத்தானே கொண்டு வரப்படுகிறது. அங்கே நாம் கடைப்பிடிக்கும் பொறுமையையும் ஒழுங்கையும் ஏன் நம் இல்லத்து விருந்துகளில் கடைப்பிடிக்கக்கூடாது?

ஜெ

முந்தைய கட்டுரைகோவைக்கு வருக!
அடுத்த கட்டுரைஅணு-ஒருபடம்