சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

‘சிற்ப படுகொலைகள் படித்தேன்’

மிகவும் வேதனை உறத்தக்க நிகழ்வுகள்.

நான் சில கப்பல் கட்டுமானங்களில், இந்த மணல் வீச்சு முறை பயன்படுத்தப் படுவதை பார்த்திருக்கிறேன். மிக உயர் அழுத்தத்தில் பிரத்யோக கருவிகள் கொண்டு அந்த நுண்ணிய மணல் கன ரக எக்கு இரும்பினால் ஆன கட்டு மான சுவர்கள் மீது வீசப்படும். அந்த சுவர்கள் மீது படிந்திருக்கும் துரு கண நேரத்தில் களையப் பட்டு அந்த சுவர்கள் பளபள தோற்றம் கொள்ளும். இந்த செய்கையிலும் சில மில்லி மீட்டர் அல்லது சென்டி மீட்டர் அளவு கூட அந்த எக்கு இரும்பு சுவரின் திடம் குறையும் வாய்ப்பு உள்ளது என்பதை நாம் யூகிக்க முடியும். ஆதலால் சரியான நிபுணத்துவ மேர்பார்வையுடன் அந்த துறையில் தகுதியும் பயிற்சியும் பெற்ற நபரால் செய்யப்பட வேண்டிய ஒரு செயல்.

திடமான இரும்புக்கே இந்த நிலை எனும் பொது, நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கல் சிற்ப்பங்களின் நிலையை நினைத்தால் உள்ளம் பதறுகிறது.

இந்த சிற்பங்களின் சுத்திகரிப்புக்கு மணல் வீசுமுறை அத்தியாவசியம் எனில், அது நிபுணர்கள் மேற்பார்வையில் தகுதியும் பயிற்சியும் பெற்ற நபர்களால் செயப்பட வேண்டும்.

சிற்பங்களின் சுத்திகரிப்புக்கு வேறு மாற்று முறைகளையும் பரிசீலிக்கலாம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சிற்பங்களின் சிதைவுகள், இரும்பினால் ஆன அழகிய சிலையை சில நிமிடம் அமிலத்தில் உறைய வைத்து வெளியே எடுத்தது போன்ற செயல்.

உள்ளம் கனக்கிறது.

வேணு வெற்றாயன்.

**

திருவட்டாறு கோவிலில் மணல் வீச்சு முறையால்
சிற்பங்கள் பாழாகும் செய்தி கேட்டு அதிர்ந்தேன். குமரி மாவட்டக்காரனாக
இருந்தாலும், ஒரே முறை தான் திருவட்டாறு போயிருக்கிறேன். நண்பர்
கந்தசாமியும் நானும் விஷ்ணுபுரம் படித்த போதையில் திருவட்டாறு போயே
தீரவேண்டும் என்று முடிவெடுத்து போயிருந்தோம். அற்புதமான சிற்பங்கள்.
அதுவும் மூலஸ்தானத்திற்கு அருகில் விதானங்களில் செதுக்கப்பட்டிருந்த
முனிவர்களின் குட்டி குட்டியான மரசிற்ப பேனல்கள்….கருவறையில் விளக்கு
வெளிச்சத்தில் தெரிந்த பெருமாளின் முகம்.. மறக்க முடியாத அனுபவம்.

இந்த மணல் வீச்சு முறையை யாராலும் தடுக்க முடியாதா? மூளிகளைத்தான் இனி
சிற்பங்கள் என்று பார்க்கவேண்டுமா?

ஓவியர் ஜீவா

**

தமிழகத்தின் கலைப்பொக்கிஷங்களாஅன சிற்பங்கள் மணல் வீச்சு மூலம் அழிக்கபப்டுவதைப்பற்றி ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள். அனேகமாக எல்லா இடத்திலும் வெள்ளை அடித்தலும் மணல் வீச்சும் மாறி மாறி நடக்கின்றன. இன்றைய சூழலில் எவருமே எதுவுமே செய்ய முடியாத நிலையே உள்ளது. ஒருபக்கம் அரசும் அதிகார அமைப்பும் சுயலாப நோக்கில் குத்தகைதாரர்களுடன் சேர்ந்துகொண்டு செய்யும் அழிவுகள். மறுபக்கம் மூடபக்தியின் அழிவுகள். கலை உணர்வு கொண்டவர்கள் இரு சக்திகளுக்கு நடுவே நின்று தவிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் சிறுபான்மையினரும்கூட.

கோயில்களைக் கலைக்கூடங்களாகவும் காணும் ஒரு வட்டம் உருவாக வேண்டிய தேவை இன்று அதிகரித்துள்ளது. மதநம்பிக்கை இல்லாதவர்களும்கூட கலையுணர்வு கொண்டவர்கள் என்றால் இதில் பங்கெடுக்க வேண்டும். கோயிலைச் சுரண்டுபவர்களின் பிரச்சாரப் பிடியில் இருக்கிறார்கள் பக்தர்கள்.

சிறந்த உதாரணம் ஒன்று. திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் காந்திமதியம்மன் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒருபக்கம் வாலியும் இன்னொருபக்கம் சுக்ரீவனும் போரிடத்தயாரக நிற்கும் இரு சிலைகள் உள்லன. இதில் ஒன்றை எவரோ பத்துவருடம் முன்பு ஆஞ்சநேயர் என்று சொல்லி கிளப்பிவிட்டனர். பாதுகாப்பில்லாமல் பாதையில் நிற்கும் சிலைக்கு வந்தது ஆபத்து. அதன் கழுத்தில் குப்பைகுப்பையாக ராமஜெயம் எழுதிய காகித மாலைகள். அதற்கு முன் கற்பூரம் ஏற்றி சிலையே கறுத்துப்போய்விட்டது. இன்னும் சிலநாட்களில் அச்சிலை அங்கே இருக்காது.

கோயில் என்பது துய்பதற்கான ஒரு பொருள் அல்ல, போற்றிப் பாதுகாப்பதற்கான மரபுச்சின்னம் என்ற பிரக்ஞையை நாம் உருவாகக் வேண்டியுள்ளது. நம் நாட்டில் பலநூறு பக்தர் அமைப்புகள் உள்ளன. உழவாரப்பணி செய்யும் குழுக்கள் பல உள்ளன. பொதுவாகவே மரபு மீது ஆர்வமுள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் கலை குறித்த விழிப்புணர்வுதான் இல்லை. பல இடங்களில் சிலை மீது டிஸ்டெம்பர் அடிப்பவர்களே அவர்கள்தான். அவர்களிடம் இதுகுறித்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கினாலே போதுமானது.

இயலாத காரியமாகப் படலாம். இருபதுவருடங்களுக்கு முன்னர் வனக்காப்பு, சுற்றுச்சூழல் குறித்து தமிழ்நாட்டில் இதே நிலைதான் இருந்தது. அவ்வியக்கங்களுடன் தொடர்ச்சியான தொடர்புள்ளவன் என்ற நிலையில் இன்றுள்ள விழிப்புணர்வு எனக்கு நம்பமுடியாத ஒன்றாகவே உள்ளது. பல தனிமனிதர்களின் தொடர்ச்சியான, அயராத உழைப்பு இதில் பங்களிப்பாற்றியுள்ளது. இன்று அரசே அஞ்சும் ஒரு தரப்பாக அது மாறியுள்ளது

அதேபோன்ற மாற்றம் நம் கலைச்சின்னங்களைக் காக்கும்பொருட்டும் உருவாக முடியும். தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் உழைக்கும் சிலர் அரசியல் நோக்கமில்லாமல் செயல்பட்டாலே போதுமானது. இத்தகைய செயல்பாடுகளுக்கு முறையான அமைப்புகளை உருவாக்குவதே முதல்படி. சிறிய அமைப்புகள் ஆனாலும் ஜனநாயக நாட்டில் அமைப்புகள் உருவாக்கக் கூடிய விளைவுகள் மிக அதிகம்

ஏன், இந்த மணல்வீச்சு முறையை மறுபரிசீலனைசெய்யவேண்டும், இதன் விளைவுகளை சோதித்துப் பார்க்கவேண்டும் என்று ஒரு நீதிமன்ற வழக்கு போட்டாலே போதும். பல விஷயங்களைச் செய்ய முடியும். விழிப்புணர்வுள்ள மிகச்சிறுபான்மையினரே போதும், பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடலாம் என பல உதாரணங்கள் காட்டுகின்றன

இன்றைய அவசியத்தேவைகளில் ஒன்று இது.

ஜெயமோகன்

பழைய இடுகைகள்

சிற்பப் படுகொலைகள்

http://jeyamohan.in/?p=327

http://jeyamohan.in/?p=328

முந்தைய கட்டுரைமூன்று கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு கனவின் கதை