அகம் மறைத்தல்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ,

தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி சொல்லும் முன், தாமதமான என் பதிலுக்கு வருத்தம் தெரிவிப்பதுதான் முறை. தாமதத்திற்கு மூன்று காரணங்கள். முதலாவது, தங்கள் பதில் ‘junk’ பெட்டியில் சென்று சேர்ந்துவிட்டது. தங்கள் முகவரி, என் முகவரித் தொகுப்பில் இருந்தும் இது எப்படி நடந்ததென்று தெரியவில்லை. உங்களின் தளத்தில் (அல்லது, அது எங்களின் தளம்) இதை வெளியிட்டபின் சென்று மின்னஞ்சலில் தேடியதில் இது தெரிந்தது.

இரண்டாவது, நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சூடிய பூ சூடற்க” கதைத் தொகுப்பு படித்துக்கொண்டிருப்பது. இது, என் குதூகலத்தை சற்று உறிஞ்சித்தான் விட்டது. வறண்ட காட்டில், எதற்கோ கடந்துபோன மாட்டின் மூத்திர ஈரத்தில் முளைத்த கொடிகள், பட்ட மரங்களின் மேலே மெலிந்து படர்வது போல கதை மனிதர்கள் வாழ்வு இருக்கிறது. அவரின் கதைகள், மிகுந்த ஆயாசத்தையும், ஒரு சுழலில் மாட்டிகொண்ட இயலாமையும் தரும் அதே நேரம், வாழ்வின் மீது நமக்கிருக்கும் குறையாத பற்றை, வாழை மட்டைகளை உரித்துத் தண்டை எடுப்பதுபோல் எடுத்து காண்பிக்கிறது. உங்கள் சிறுகதைகளில் எப்போதும் ஓடிகொண்டிருக்கும் அறம் எனும் ஆறு, இன்னும் மெலிந்து, கிளை நதிகள் ஏதுமின்றி, கரையில் பூங்காக்கள் எதுவுமின்றி, சிறு ஓடையாய், இன்னும் சிறுக்க முடியாததாய் இவர் கதைகளில் தெரிகிறது. என்னால் ஒருசேர இரண்டு கதைகளுக்கு மேலாக சேர்ந்து படிக்க முடிவதில்லை. ஒவ்வொரு கதையும் தரும் அழுத்தம் தாங்க முடியாததாக உள்ளது. ஆனாலும் ஒவ்வொரு கதையின்போதும், என் குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு இன்னும் நெருக்கமாய் உணர்கிறேன்.

மூன்றாவது, உங்களின் பதிலை மீண்டும் மீண்டும் படித்து, அதை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முயல்வது. இன்று வரை, உங்கள் நேரத்திற்கும் இது பற்றி சிந்தித்து எழுதியதற்கும் நன்றி சொல்வதைத் தவிர என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்களின் சில வரிகள், அவை குறிக்கும் நிகழ்வுகள் என்அனுபவத்தில் இருந்ததால் அவற்றை உடனடியாக உணரமுடிகிறது. ஒரு எடுத்துக்காட்டாக இதைச் சொல்லலாம். “அவர்கள் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அந்த அன்பைத் தடையில்லாமல் கொட்டுவார்கள். ஏனென்றால் அவர் இறங்கிவந்திருப்பதை அவை உணர்வதோ மதிப்ப்பிடுவதோ இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.”

ஆனால் சிலவற்றை என்னால் முழுதும் சட்டென்று புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்களும், சு. ராவும், உங்களின் தந்தை வழியாக இந்த சமூகத்தை அறிந்ததை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. என் தந்தை அத்தனை உக்கிரமாக இல்லாதிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். என் எல்லா நிலைகளிலும் நேரடி வாய் வார்த்தை வழி மட்டும் தான் இல்லையே தவிர, மற்ற வழிகளில் (பணம் தருதல், அம்மாவழி ஊக்குவித்தல்,…) அவர் உறுதுணையாய் இருந்ததாக இருக்கலாம். எங்களின் அளவற்ற்ற பாதுகாப்பு உணர்வுக்கு அவர் மிக முக்கிய காரணம். எங்களுக்கும், எங்கள் பங்காளிகள் 15 பேருக்கும், அவர்களின் மகன்களுக்கும் எப்பொழுதும் வட்டியில்லா, பத்திரமில்லா கடன் தரும் ஒரு மனிதராகவே இன்னும் இருக்கிறார். பத்துவருடக் கல்லூரிக் காலத்தில் தெரியாத ஒன்றைக் கடந்த சில வருடங்களில் தெரிந்துகொண்டேன். எங்கள் வாழ்க்கையில் ,என் (மற்றும், என் தோழியின்) பெற்றோர்களின் பெரும் பங்களிப்பாகக் கருதுவது இதைதான்., எங்களை ஒரு திறந்த மனதுடன் வளர்த்தியிருப்பது. சமூகம் பற்றி, அவர்களுக்குப் பிடிக்காத உறவினர்கள் பற்றிக் கூட எந்தக் கருத்தையும் எங்களில் பொறித்துவைத்து வளர்க்கவில்லை. என் மகனுக்கு நான் செய்யும் பலவிசயங்கள் என் அப்பாவை எனக்குப் புரியவைத்து வருவது தெரிகிறது.

உங்கள் பதிலில் சுதாரித்துகொண்டு, இல்லை இல்லை என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று சொல்ல இதை சொல்லவில்லை. இதை, என் தந்தை பற்றி என் எண்ணங்களைத் தொகுத்துகொள்ளும் ஒரு முயற்சி. இதை எழுத எழுத, ஒன்று தெரிகிறது. உங்கள் வரி புரியத் தொடங்குவது போல இருக்கிறது. சமூகத்தின் மீதான என் உணர்வுகள் கிட்டத்தட்ட என் அப்பாவின் மீதான மதிப்பீடு போலவே இருக்கிறது. என் பெற்றோரை வைத்து இந்த சமூகத்தை நான் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் வழிமுறை அவர்களிடமிருந்துதான் வந்திருக்கும் என்பது தெரிகிறது. குறைந்த பட்சம், சமூகத்தை எதிர்த்து என்னை சுருக்கிகொள்ளும் எதிர் மனநிலையை ஊட்டி வளர்க்கவில்லை. எல்லாம் இன்னமும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

நீங்கள் நீத்தார் வழிபாடு, மூத்தோர் வழிபாடு இதற்கு ஒரு தொடக்கமாக, காரணமாக இருக்கும் என்று ஊகிப்பது மிக சரி என்றுதான் தோணுகிறது. உங்களுடைய இந்த வரிகள் மிக மிக சரியான அவதானிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “நம் மூத்தவர்கள் அந்த மரியாதைக்குப் பழகிவிட்டிருக்கிறார்கள். அதையே தங்களுக்குச் சமூகம் அளிக்கும் அங்கீகாரமாக, இடமாக நினைக்கிறார்கள். அந்த மரியாதை சற்று குறைவதைக்கூட அவர்கள் தாங்கிக்கொள்வதில்லை. அவர்கள் உக்கிரமாகக் கோபம் கொள்ளுமிடம் எல்லாமே மரியாதை குறைகிறதோ என தோன்றுமிடங்கள்தான். அவர்கள் முன்கோபத்தையும் விரைப்பையும் கைக்கொள்வதே மரியாதையை இழக்காமலிருக்கத்தான். அவர்கள் மண்ணில் மூதாதைதெய்வங்களின் வடிவில் வாழ நினைக்கிறார்கள், மனிதர்களாக அல்ல. அக்குளில் அந்தக் கண்ணாடிப்பாத்திரத்துடன் இருக்கையில் எப்படி இயல்பாக அசையமுடியும்?” மிக சரி. என்ன தவிர்த்தாலும், இந்த கண்ணாடி பாத்திரம் வந்து இடுக்கிக் கொள்கிறது. பின்பு, வலுக்கட்டாயமாக எடுத்துவைக்க வேண்டி இருக்கிறது.

எனக்கு சிலநாட்களாக பிரேசிலிலிருந்து ஒரு மாணவன் வந்திருக்கான். அவனுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது, (அதாவது, என்னை விட மோசம்). நான் எதையாவது விளக்கும்போது, “எனக்குப் புரிகிறது” என்பதற்கு பதில், “of course , I know this” என்பான். எனக்கு சுர் என்று வரும், மொழியில் விறைப்பு வரும், “வேறு என்ன தெரியும் சொல்லு” என்று சொல்லத் தோன்றும். சில வினாடிகள் ஆகும், உண்மை உணர்ந்து, அக்குளில் இருந்து அந்த கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்து வைக்க. இது தான் மனித இயல்பு என்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. என் உயரதிகாரி, ஆஸ்த்ரேலியாகாரர். என் முட்டாள் தனமான குறுக்கீடல்களுக்கு எப்பொழுதும் முகம் சுளித்ததில்லை.

அன்னையைப் பற்றியும், அவர்களின் அன்பு பற்றியும், அவர்களை நம் சமூகம் நடத்தும் விதம் பற்றியும், உங்கள் கருத்துகளுடன், என்னை விட யாரும் அதிகம் ஒத்துப் போகமுடியுமென்று தெரியவில்லை. (I , could not agree more என்பதை தமிழ்ப்படுத்த முயற்சித்தேன்). ஒரு கிராமத்தில், எனக்குத் தெரிந்த அத்தனை ஆண்களும், மனைவியையும், அம்மாவையும் அடிப்பவர்கள்.

முடிந்த அளவு என் தோழிக்கும்(மனைவி), நண்பர்களுக்கும் , மிக அதிக அளவில் என் மகனுக்கும் அன்பை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எல்லைகைளை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தவேண்டும். உங்கள் கடிதம் அதற்கு உறுதுணையாக ஒரு நீண்ட காலத்திற்கு இருக்கும்.

கடைசியாக, உங்கள் ஆழ்ந்த கடிதத்திற்கு மிக்க நன்றி. உங்கள் பதில் பற்றி என் தோழி சொன்னதிலிருந்து, அதை முழுதும் படிக்கும் வரை இருந்தபடபடப்பை, மகிழ்ச்சியை, சமீபத்தில், எங்கள் குழுவின், ஆராய்ச்சிக் கட்டுரை பிரசுரித்தல் தொடர்பாக செல் (Cell) எடிடர்களிடம் இருந்து வந்த சம்மதக் கடிதத்தைப் படித்ததிற்கு தாரளமாக ஒப்பிட முடியும்.

நன்றியுடன் உங்கள் நலம் விழையும்,
கெளதம்

அன்புள்ள கௌதம்,

வாழ்க்கையின் ஏதோ ஒரு அனுபவத்துளி எழுத்தாளனுக்குள் காலப்போக்கில் குறியீடாக ஆகிவிடுகிறது. அவனுடனேயே இருக்கிறது. அவனுடைய எல்லாப் பார்வைகளையும் தீர்மானிக்கிறது. பசித்துச் சென்றமர்ந்த பந்தியில்இருந்து எழுப்பி விடப்பட்ட நாஞ்சில்நாடன்தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

எப்படி நாம் நம் அப்பா வழியாக மரபை அறிகிறோம்? மரபு என்பது செய்-செய்யாதேக்களின் தொகுப்பாக அறிமுகமாகிறது. மூதாதையர்களின் பெயர் வரிசையாக நினைவில் நிற்கிறது. சடங்குகள் ஆசாரங்களாகக் கூடவே வருகிறது. இவையெல்லாமே நம் அப்பா வழியாகவே நம்மை அடைகின்றன. ஆகவே நம் அப்பா நமக்குள் எந்த வகையில் பதிகிறாரோ அப்படியே மரபும் பதிகிறது.

சென்ற தலைமுறை அப்பாக்களில் இருந்த இறுக்கமும் மௌனமும் இன்றில்லை என நினைக்கிறேன். அதற்குப் பல பண்பாட்டு உள்ளடக்கங்கள் உண்டு. சாதி சார்ந்து மதம் சார்ந்து. பொதுவாக போர்ச்சாதிகளில் தந்தை கறாரானவர், அன்னியர். வேளாண்சாதிகளில் தந்தைக்கு இன்னும் கொஞ்சம் பேச்சுத்தொடர்பு இருக்கும், ஆனால் தூரமும் இருக்கும்.

ஜெ

சார்,

அகம் மறைத்தல் ஒரு அபாரமான கட்டுரை.

முழுமையான அன்பை ஒரு குருவிடம்தான் உணர முடியும் என்று எனக்குத் தோன்றும். நீங்கள் எனக்கு எழுதும் ஒவ்வொரு மடலும் துள்ளிக் குதிக்க வைக்கும். கோதாவரிக்கு வரச் சொல்லி நீங்கள் அழைத்தபோது நான் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. அதன்பின் லண்டனில் இருந்தபோது நீங்கள் எழுதிய கடிதம்!

மனம் துவளும்போதெல்லாம் அந்தக் கடிதங்களைப் படிப்பேன். இதுவரை எண்ணற்ற முறைகள் படித்திருக்கிறேன்.

என்னைபோல வயது முதிர்ந்த பெற்றொருக்குப் பிறந்த குழந்தைகள் சபிக்கப்பட்டவர்கள். பெண் குழந்தைக்கு மாற்றாக வந்த பிழைகள். பெற்றோரின் அக்கறையின்றி, உடன் பிறந்தோரின் கவனிப்பின்றி தனித்துவிடப்பட்ட நாய்க்குட்டிபோல வாலை ஆட்டிக்கொண்டு முன்பின் தெரியாதவரிடமும் அன்பை மட்டும் யாசித்து வளர்வது கொடுமை. அது கிடைக்காதபோது அன்பைக் கடந்தவர்களாகக் காட்டிக் கொள்ள நேரிட்டு, அது பழக்கமாகிவிடுவது நரகம். நிராகரிப்புக்கும், வெறுப்புக்கும் பழகிப் போகும் மனம், உண்மையான அன்பு கிடைக்கும்போது சந்தேகப்படுகிறது. இதுதான் எனக்கும் ரீங்காவுக்கும் நடந்த பல சண்டைகளின் மூல காரணம்.

குடும்பம் என்றால் என்னவென்பதை உங்கள் குடும்பத்தையும், பவா குடும்பத்தையும் பார்த்தபோதுதான் உணர்ந்தேன். உங்களின் ஆசீர்வாதத்தால் நானும் அப்படி ஒரு குடும்பத்தில் ஒருவனாக இருக்க முடிகிறது.

நடந்தவற்றை மாற்ற முடியாது, அதைக் கடந்து வரவேண்டும் என்பது புரிந்தாலும் அது எளிதாக இல்லை. அதே சமயம் நினைத்த அளவுக்குக் கடினமாயும் இல்லை. நான் வெற்றி கொள்ளவேண்டியது என்னையே என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஒழிமுறியை மிகவும் ரசித்தேன். உங்கள் தாயும் தந்தையும் பிரிந்தாவது வாழ்ந்திருக்கலாமே எனும் ஏக்கத்தின் வெளிப்பாடாகத் தோன்றியது எனக்கு.

அன்புடன்,
ஆனந்த்.

அன்புள்ள ஆனந்த்

முதிர்ந்தவயதில் பிறந்த குழந்தைக்கு இரு எல்லைகளில் வாழ்க்கை அமைவதைக் கண்டிருக்கிறேன். மிதமிஞ்சிய செல்லமும் குலாவலும் அல்லது முற்றாகப் புறக்கணிப்பு. இரண்டுமே துரதிருஷ்டங்கள்தான்.

ஆனால் அன்புக்கான ஏக்கமும் நல்லதே. அது அன்பை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றலை அளிக்கிறது. அன்பு அள்ளித்தரப்படும் சூழலில் பிறந்து அதை உணர முடியாத மொண்ணைத்தனத்துடன் வாழ்வதற்கு அது மேல்

ஒழிமுறியின் தூண்டுதல் ஒரு நிகழ்ச்சி. நான் நண்பர் பரீக்‌ஷா ஞாநியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் கடுமையாக நோயுற்றுத் தேறிக்கொண்டிருந்தார். அவரது விவாகரத்தான மனைவி பத்மா வந்திருந்து அவரை கவனித்துக்கொண்டிருந்தார். அவர்களுக்குள் சுமுகமான உறவு இருந்தது. ஆனால் பத்மா தனியாக, சுதந்திரமாக இருந்தார். அந்நாளை நான் பதிவுசெய்திருக்கிறேன்

என் அப்பா அம்மா தற்கொலை செய்துகொள்ளாமலிருக்கவேண்டுமென்றால் அது ஒன்றே வழியோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் ஒழிமுறி.

அதில் மீனாட்சியம்மா சொல்லும் வசனம் உண்டு- ‘அடிமையின் அன்பு நாயின் வாலாட்டல் போல. சுதந்திரமானவர்களுக்கே அன்புசெலுத்த உரிமை உண்டு’ அன்பு செலுத்தும் உரிமைக்காகவே அவர் விவாகரத்து கோருகிறார், வெறுப்பினால் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைமீண்டும் ஓர் இந்தியப்பயணம்
அடுத்த கட்டுரைமாபெரும் இயந்திரம்