முகம் பார்க்கும் கண்ணாடி முன் நீண்டநேரத்தைச் செலவிடுவார் லோகித தாஸ். காலையில் எழுந்ததுமே பல்விளக்கிவிட்டுச் செய்யும் முதல் வேலையே அதுதான். அதிகாலையில் எழுவது அவரது வழக்கம், நாலரை மணிக்கு. பல்தேய்த்ததுமே சிலபல ஆயுர்வேதக் கலவைகள் உண்பார். பின்னர் இன்னொருமுறை பல்தேய்ப்பார். அதன்பின் கண்ணாடிமுன் நல்ல ஒளியில் மூக்குக் கண்ணாடி போடு நின்றபடி முகத்தை பரிசோதனைசெய்வார். நரைக்கு மிக நுட்பமாக சாயம்பூசுவார். விலை உயர்ந்த சாயம் வைத்திருந்தார். அவர் முகத்தில் ஒருநாள்கூட நாம் நரையின் துளியை பார்க்க முடியாது.
நான் அதைக் கவனிக்கும்போதெல்லாம் குறும்புச்சிரிப்புடன் ”இந்த குருவிச்சிறகையெல்லாம் கொஞ்சம் கறுப்பாக்கு ஜெயமோகனா…” என்பார். என் முகத்தில் நானே கரி பூசுவதில்லை என்பேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் நான் தெரியவேண்டும், வேடமிட்டுக்கொள்வதில் எனக்கு ஆர்வமில்லை என்பேன்
லோகிக்கு அதில் உடன்பாடில்லை.”நான் வெளியுலகுக்குக் காட்டும் இந்த முகம் நானே தினமும் என் கழுத்துக்கு மேல் வரைந்து எடுத்துக்கொள்வது. இது பொய் என்று நீ சொல்லலாம். ஆனால் அப்படி உண்மையான முகம் என்று ஒன்றும் இல்லை என்றுதான் நான் சொல்வேன். முகம் என்பதெல்லாம் நாமே நினைத்துக்கொள்வதுதான்”
இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒரு கலைஞனின் இன்றியமையாத தேவை என்பது லோகியின் கருத்து. இளமையாக நினைத்துக்கொண்டால், இளமையாக காட்டிக்கொண்டால், இளமை நம்மிடம் இருக்கும். நம்மை இளமையானவனாக எண்ணிக்கொண்டால் இளமைக்கான அசைவுகள் பாவனைகள் நம்மில் கூடும். அது பிறர் நம்மை இளமையாக நடத்தச்செய்யும் . பிறர் நம்மை இளமையானவனாக நடத்தினால் நாம் மேலும் இளமையாக உணர்வோம்.
நம்முடைய முகம் இளமையாக இருந்தாகவேண்டும் என்று லோகி மீண்டும் மீண்டும் சொல்வார். நாம் பார்க்கும் முகங்கள் எல்லாம் நம் முகத்தையே பிரதிபலிக்கின்றன. இயற்கைக்கு என்று ஒரு பாவமும் இல்லை. அது தெளிந்த ஆற்றுநீரோட்டம் போல. அது நம்மை பிரதிபலித்து நமக்குக் காட்டுகிறது. சிந்தனையாளனுக்கு அது தத்துவமாக தெரியும். நோயாளிக்கு அது நோயாக தெரியும். காதலனுக்கு அது காதல்வெளியாக இருக்கும்.
”இயற்கை நம்முடைய காதல்பெண்ணைப்போன்றது. பிரியே என்று கூப்பிட்டால் அவளுடைய ·பாவம் காதல் நிறைந்ததாக இருக்கும். எடீ புலையாடிமோளே என்று கூப்பிட்டால் அவளுடைய ·பாவமும் அதுதான். நம்மில் பாதிப்பேர் நாற்பது வயதிலேயே ஓய்ந்துபோய் அவளை ‘இந்தாடீ’ என்று ஒரு அக்கறையும் இல்லாமல் கூப்பிட ஆரம்பிக்கிறோம். அவளுக்கும் நம் மீது ஒரு விதமான அக்கறையும் இருப்பதில்லை”
ஏன் இளமை? லோகி சொல்வார். இளமை என்றால் உயிர். உயிர் குறைவதுதான் முதுமை. இளமையில்தான் எல்லாமே இருக்கிரது. கனவுகள், இலட்சியங்கள், ஊக்கம், உற்சாகம் எல்லாமே. நாம் இயற்கையில் ரசிப்பது அதன் இளமையை மட்டுமே. ”இயற்கை என்பது லீலை. கேளி. அது இளமையில் மட்டும்தான் இருக்கிறது. இயற்கையின் ·பாவம் காதல்தான். இளமையில் மட்டும்தான் காதல். காதல் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை. எப்போது மனதில் இருந்து காதல் போகிறதோ அப்போதே கலையும் போய்விடும்…”
லோகியின் வாழ்க்கைக் கோட்பாடு அது. அதை அவர் வெவ்வேறு சொற்களில் சொல்லிக்கொண்டே இருப்பார். பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அவரது வார்த்தை ‘ப்ரணயம்’. பிரேமம் என்ற சொல் அவருக்கு அவ்வளவு உவப்பில்லை. அதில் மோகம் மட்டுமே உள்ளது. பிரணயத்தில்தான் காதலின் லீலையும் உள்ளது
இயற்கை என்பது பிரம்மாண்டமான ஒரு காதல் லீலை என்று வயலார் ராமவர்மா அவரது சினிமாப்பாடல்களில் அற்புதமாக சித்தரித்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் லோகி. இயற்கையின் படைப்பூக்கம் கொண்ட தோற்றம் என்பது காதலே. வயலார் ராமவர்மா அவரது காதல்பாடல்களில் நிலவும் காயலும் தென்னைமரத்தோப்புகளும் மலைகளும் கடலும் பெரும் காதல் லீலையில் ஈருபட்டிருப்பதை அற்புதமான வாக்கியங்களில் சொல்லியிருக்கிறார் என்பார்
பாலக்காடு அருகே லக்கிடி கிராமத்தில் லோகியின் பண்ணை வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தோம். நல்ல நிலவு. குளிர் கொண்ட காற்று. இருளுக்குள் தென்னைமரங்களின் சலசல ஒலி. தூரத்தில் சில நாய்களின் குரைப்பொலி. லோகி அழகான கண்ணாடிக்கோப்பையில் கொஞ்சமாக மதுவை ஊற்றி சோடா கலந்து ஐஸ்போட்டு வைத்திருந்தார். துபாயில் இருந்து யாரோ கொடுத்த ஸ்காட்ச். மது உள்ளே போனாலே பாட்டுதான். லோகிக்கு நல்ல ஆழமான குரல். அழுத்தமான இசைஞானம் உண்டு. அவர் பாடுவதற்கான எந்த முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் நல்ல பாடகர் என்றுதான் சொல்ல வேண்டும். மென்மையாக பாடல்களை முனகி முனகி நம்மில் பாடலின் இசைவடிவை உருவாக்க அவரால் முடியும்.
லோகிக்கு பாடல்களின் இசை முக்கியமல்ல, வரிகள்தான். இசை என்பது கவிதையின் ஒரு சிறப்பு வடிவம் என்றுதான் அவர் சொல்வார். வரிகளை நினைவுபடுத்தாத தூய இசை இல்லை என்று வாதிடுவார். அதில் அவருக்கும் ஷாஜிக்கும் சண்டை மூள்வதுண்டு. அதை ஒரு விவாதத்தரப்பு என்பதைவிட நெஞ்சில் எந்நேரமும் கவிதையை வைத்திருந்த ஒரு இலக்கியவாதியின் அபிப்பிராயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்வப்னங்ஙள் உறங்ஙாத்த ராத்ரி
ஏதொ ஸரத்கால ஸ¤ந்தர ராத்ரி
காமுகிமாரும் காமுகன்மாரும்
ரோமாஞ்சம் அணியுந்ந ராத்ரி
[கனவுகள் கண்ணுறங்கா இரவு
ஒரு வசந்தகாலத்தின் அழகிய இரவு
காதலிகளும் காதலர்களும்
புல்லரித்துக்கொள்ளும் இரவு]
லோகி பாடும்போது பெரும்பாலும் அந்தச்சூழலுக்கு பொருத்தமாக அவர் நெஞ்சில் எழுந்த ஒரு வரியில் இருந்துதான் ஆரம்பிப்பார். அனுபல்லவி சரணம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அப்படியே மெல்ல பல்லவிக்கு வந்தார். இருட்டுக்குள் அவரது முகத்தில் பக்கவாட்டுத்தோற்றத்தில் தாடி மென்மையாக ஒளிவிட்டது
இந்துலேஹே இந்துலேஹே
இந்த்ர ஸதஸிலே ந்ருத்த லோலே
ஈ ராத்ரி நின்னே கண்டிட்டு எனிக்கொரு
தீராத்த தீராத்த மோஹம்
[இளநிலவே இளநிலவே
இந்திர சபையின் நாட்டியக்காரியே
இவ்விரவில் உன்னைக்காணும்போது எனக்கு ஒரு
தீராத தீராத ஆசை ]
பெருமூச்சு விட்டுக்கொண்டு ”வயலாருக்கு நிலவு என்றால் அப்படி ஒரு மோகம். பெரும்பாலான பாடல்கள் நிலவைப்பற்றித்தான். மேகத்தை முகத்திரையாகப்போட்டுக்கொண்டு முதலிரவு அறைக்கு வரும் பெண்ணாக நிலவைப்பார்க்க அவரால்தான் முடியும். மாணிக்க மிதியடியின் காலடிஓசை நெருங்குவதைக் கேட்டு நாணம் கொண்டு மேகத்த்தை இழுத்துவிட்டு முகம் மறைக்கும் நிலவு…” இன்னும் ஒரு வரியை உடனே ஆரம்பித்தார் லோஹி.
உத்தராயணக்கிளி பாடி உன்மாதினியெப்போலே
பொன்னும் வளையிட்ட வெண்ணிலாவே
நின்னே ஒந்நு சும்பிச்சோட்டே?
[உத்தராயணக்கிளி பாடியது உன்மாதம் வந்தவளைப்போல
பொன்வளை போட்ட வெண்ணிலாவே
உன்னை ஒருமுறை முத்தமிடலாமா நான்?]
”வயலாருக்கு இயற்கை என்பது மாபெரும் காம விளையாட்டு. ஓயாத காதல் வெளி. வேதகால ரிஷிகள் அப்படித்தான் இயற்கையைப் பார்த்தார்கள். சூரியனின் ஒளியைக்கூட விந்து என்றுதான் வேதத்தில் சொல்லியிருக்கிறார்கள்….” என்றார் லோகி .
மீண்டும் ஒரு பெக். தொட்டுக்கொள்ள வறுத்த ஆட்டுக்கறி. தேங்காய்த்துருவல் போட்டு காரம் குறைவாக பொரித்து எடுத்தது. லோகி குடிகாரர் அல்ல. ஒரு லார்ஜை எப்போதுமே தாண்டுவதில்லை. அதை மிகமிக மெல்ல, வெகுநேரம் எடுத்துக்கொண்டு, குடிப்பார். குடித்தால் மேலும் உல்லாசியாக, மேலும் சங்கீதப்பிரியராக, மேலும் ரொமாண்டிக் ஆக, மேலும் மென்மையானவராக ஆகிவிடுவார்.
”உலகம் முழுக்க புராதன கவிதைகளில் இயற்கையை அழியாத காதல் வடிவமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். தமிழில் உள்ள புராதனமான கவிதைகள் இயற்கையின் ஐந்து நிலைகளையும் காதலின் ஐந்து மனநிலைகளாகத்தான் சித்தரிக்கின்றன” என்றேன்.
”இயற்கை முழுக்க காதல்தான்…காதல்தான் சிருஷ்டிகரம் என்பது. ஆவேசமான ஒரு காதல் நம்மிடம் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் காதல் எப்போது இல்லாமலாகிறதோ அப்போது நம்ம்முள் உயிர்ச்சக்தி இல்லாமல் ஆகிறது என்று பொருள். மேற்கொண்டு நாம் உயிர்வாழ்வதில் இயற்கைக்கு அக்கறை இல்லை என்று பொருள்…கறவை வற்றிய மாட்டை அடிமாட்டுக்கு அனுப்புவதுபோல இயற்கை நம்மை குரூரமாக சாவை நோக்கி அனுப்பிவிடும்…சாவுக்கு எதிரான போராடம் என்றால் அது காதல்தான்”
லோகி அவரது வழக்கமான வாழ்க்கைவிளக்கத்தை வந்து அடைந்தார். ”காமம் ஒன்றுமே இல்லை. அறிவில்லாத கற்பனை இல்லாத வெறும் தடியுடல்கள் காமத்தில் ஈடுபாட்டும். கலைஞனுக்கு உரியது காதல்தான். இய்றகையில் உள்ள இயல்பான விஷயம் காமம்தான் , காதல் மனிதனின் கண்டுபிடிப்பு என்று சில முட்டாள்கள் சொல்கிறார்கள். அவர்கள் இயற்கையையே பார்த்தது கிடையாது. இயற்கையில் காமம் மிகமிகக் கொஞ்சம். காதல்தான் அதிகம். ஜெயமோகன், ஒரு ஜோடி சிட்டுக்குருவிகளைப் பார். எத்தனை நேரம் அவை களியாட்டம் போடும் தெரியுமா? கிரீடை என்று அதை சொல்வார்கள். பாம்புகள் நாள்கணக்காக காதல்செய்யும்….காமம் என்றால் அதெல்லாம் எதற்கு? போய் போட்டுவிட்டு வேலையைப் பார்க்க போகவேண்டியதுதானே?”
மழைச்சாரல் ஆரம்பித்தது. நாங்கள் நாற்காலிகளை தூக்கிக்கொண்டு பூமுகத்தை அடைந்தோம். அந்த வீட்டை லோகி அவரது ‘அரயன்னங்களுடே வீடு’ என்ற படத்துக்கான அட்வான்ஸ் பணத்தில் வாங்கினார். பழங்கால வீடு– நூறு வருடம் பழையது. அக்காலத்தில் ஏதோ முஸ்லீம் நிலப்பிரபு கட்டியது. சிவந்த வெட்டுகல்லால் ஆன இரட்டை மாடிக் கட்டிடம். வெட்டுகல் மீது பூச்சு ஏதும் இருக்காது. உயர்ந்த ஓட்டுக்கூரை. பூமுகத்திண்ணையும் சுற்று வராந்தாவும் உள்ள நாலுகெட்டு வீடு. பலகையால் ஆன மாடி. வீட்டைச்சுற்றி தென்னை மரங்கள்.
லோகிக்கு மிகப்பிடித்த இடம் அந்த வீடுதான். அங்கேதான் அவர் பெரும்பாலும் இருப்பார். எரணாகுளத்தில் ஆலுவாவில் பெரியாற்றின் கரையில் அவருக்கு மிகப்பெரிய பங்களா இருந்தது. அங்கேதான் அவரது குடும்பம். இங்கே சமையலுக்கு ஆள் வைத்துக்கொண்டு தனியாக இருப்பது அவருக்கு பிடித்தமானது.
மழைத்துளிகள் சரம் சரமாகச் சீறி வந்து சுவர்களில் பொழிந்தன. நிலவு முழுமையாக மறைந்தது. தோட்டத்தில் மழையின் சீறல் ஒலி. ஆனால் பெரிய மழை இல்லை. காற்றில் சிதறடிக்கப்பட்ட தூறல் மட்டுமே
”மந்தஸமீரனில் ஒழுகி ஒழுகி எத்தும்
இந்த்ர சாபம் நீ…”
[இளங்காற்றில் ஒழுகி ஒழுகி வரும்
இந்திரனின் அம்பு நீ]
லோகி திண்ணையில் அமர்ந்துகொண்டு மேலும் பாடினார். மழைச்சாரலை இந்திரனின் அம்பாக உருவகிப்பது ஏதாவது பழம்பாடல்களில் இருக்கிறதா என்று யோசித்தேன். மணி பன்னிரண்டு தாண்டிவிட்டிருந்தது. மெல்ல கொட்டாவி விட்டேன்.
”அப்ப நாம தூங்கலாம்” என்றார் லோகி. நன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன். லோகி மேலே மாடியில் அவரது படுக்கை அறைக்குச் சென்றார். புது இடத்தில் என்னால் கொஞ்சநேரம் தூக்கத்தில் அமையமுடியவில்லை. மாடியில் லோகி மெல்லிய குரலில் செல் ·போனில் பேசுவது கேட்டுக்கொண்டே இருந்தது. எந்நேரமும் அவரிடம் பேச இளம்பெண்கள் உண்டு. மந்திரக்கோலால் தொட்டு எந்தப்பெண்ணையும் நடிகையாக்கி புகழுச்சியில் அமரச்செய்ய முடியும் அவரால். அதைவிட அவரது அழுத்தமான பிரியமான குரல். அவரில் எப்போதுமே இருக்கும் இனிமை, மென்மை….
இந்த நாலைந்து வருடங்களில் அழகிய இளம் பெண்கள் வலுவான காந்தத்தால் ஈர்க்கபப்ட்டவர்கள் போல அவரை நோக்கி வந்துகொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது வெறும் தொழில்முறை உறவுகள் மட்டுமல்ல. அந்தத்தொடர்புகள் ஒருபோதும் அத்தனை உணர்ச்சிகரமாக நீள்வதில்லை. அவர்கள் அவரை நம்பினார்கள். அவர்மீது அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் பிரியத்துக்கான காரணம் அவரில் எப்போதும் ததும்பிக்கொண்டிருந்த உண்மையான ஆழமான காதல்தான் என்று நினைக்கிறேன். அவர் பெண்களை பெருங்கவிஞன் போல வழிபட்டார். முதிரா இளைஞனைப்போல ஆவேசத்துடன் காதலித்தார். ஓவியனைப்போல அவர்களின் அழகில் ஈடுபட்டார்.
அதேசமயம் ஒரு முதிர்ந்த மனிதரின் நிதானம் அவரில் இருந்தது. அவர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். ஒரு பெண்ணுக்கு தீங்கிழைப்பதை, அவள் மனம் வருந்தச்செய்வதை அவரால் கற்பனையே செய்ய முடியாது. இளமையின் வேகமும் முதுமையின் கனிவும் கொண்ட காதலன். வேறு எங்கே அப்படிப்பட்ட ஒரு இணைவு கிடைக்கும் அவர்களுக்கு?
பல்வேறு இடங்களில் லோகியுடன் தங்கியிருக்கிறேன். ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு பேசிப்பேசிச் சலித்து தூங்கியிருக்கிறோம். நன் தூங்க ஆரம்பித்ததும் லோகி செல்போனை எடுப்பார். பத்துப்பதினைந்து மிஸ்டு கால் இருக்கும். மென்மையாக குரலில் ”எந்தெடீ” மறுமுனையில் சிணுக்கம். சிலசமயம் கொஞ்சல். அபூர்வமாக அழுகை.நான் தூங்கி விழிக்கும்போதும் சிலசமயம் அந்த உரையாடல் ஓடிக்கொண்டிருக்கும்.
”அய்யோ லோகி…விடிஞ்சாச்சே…இவ்ளவு நேரமா?’ என்பேன் ”நீ வெளியே போய் பார்…விடிய விடிய மரந்தை தென்றல் தழுவிக்கோண்டிருக்கிறது…அதற்கு இன்னும் சலிக்கவில்லை” லோகிக்குச் சலிப்பதே இல்லை. ”காதல் சலித்தால் பிறகு சாப்பாடு சலிக்கும். உடை சலிக்கும்…கவிதையும் சங்கீதமும் சலிக்கும்…” ”சரி சரி”என்று புரண்டு படுத்துக்கொள்வேன். மறுமுனையிடம் ”ஜெயமோகன்….ஆள் ஒரு வேதாந்தி…” என்று மேலும் நீளும் உரையாடல்.
ஐம்பத்துநான்கு வயதில் லோகி இறந்ததை நினைத்தால் நெஞ்சை அடைக்கிறது. ஆனால் அதுதானே அவர் விரும்பிய மரணமாகவும் இருக்கக் கூடும். முதுமையை அவர் வெறுத்தார். காதலில்லாத ஒரு நாளைக்கூட அவர் வாழ விரும்பவில்லை. வயலார் ராமவர்மா, அரவிந்தன், பரதன், பத்மராஜன் என லோகி விரும்பிய, லோகியைப்போன்றே வாழ்ந்த, அத்தனைபேருமே ஐம்பதுவயதுகளில் இறந்தார்கள். முதுமையை அவர்கள் சந்திக்கவேயில்லை.
நிற்பவர் சிபி மலையில்
”பத்மேட்டனுக்கு வயசு ஆகவில்லை. ஐம்பத்தைஞ்சுதான்….நல்ல காரியம். அவரை கிழவராக நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. நல்ல சுள்ளன் சுந்தரனாகவே போய்ச்சேர்ந்தார்” என்றார் லோகி, பி.பத்மராஜனின் மரணத்தைப் பற்றி. அதைத்தான் தனக்காகவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். லோகித தாஸ் சடலமாக ஜனத்திரள் நடுவே கிடக்கும்போது இன்னும் சின்னவயதாக தெரிந்தார்.
[மேலும்]