லோகி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

லோஹிததாஸ் மரணம் குறித்த உங்கள் பதிவு இப்பொழுது படித்தேன். சில நாட்களுக்கு முன்பாகத்தான் அவரது நகைச்சுவை உணர்வை உங்கள் மீசை பதிவில் எழுதியிருந்தீர்கள். மலையாள சினிமா உலகம் மற்றுமொரு அற்புதமான கதை சொல்லியை இழந்து விட்டது. அவர் இயக்கிய படங்களை விட அவர் திரைக்கதை எழுதிய பல படங்கள் என்னால் என்றும் மறக்க முடியாதவை. அனைத்துமே அழுத்தமான திரைக்கதைகள். கிரீடம், முத்ரா,தசரதம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்று சிபி மலையிலுடன் அவர் சேர்ந்த படங்கள் எல்லாம் மலையாள சினிமாவின் பொற்காலத்தில் வந்தவை.

 

மலையாளத்தில் அவசியம் காண வேண்டிய திரைப் படங்கள். மோகன்லாலை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றவை.  அனைத்து படங்களுமே அவற்றின் நல்ல கதைகளுக்காக வெற்றி பெற்றவை. லோஹிததாஸ் இயக்கத்தில் வந்தவைகளில்  கண்மதம் மட்டுமே இது வரை பார்த்திருக்கிறேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், ஒரு நல்ல நண்பரை இழந்த உங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வருத்தங்களுடன்
ச.திருமலைஅய்யா,
தங்கள் நெருங்கிய தோழர், லோஹித தாஸின் மறைவு தங்களுக்கு பேரதிர்ச்சியாயிருந்திருக்கும். என் மனப்பூர்வ அனுதாபங்கள்.

என் தந்தையார், ‘இதுதாண்டா’ வகை Dr.ராஜசேகரின் படங்கள் பார்க்க விரும்பிய காலத்தில், அப்போது புதிதாக வந்திருந்த ‘ஆம்பள’ என்ற படத்தை நான் பார்க்க நேர்ந்தது. முன்னர் பார்த்திராத ஒரு உணர்வினை அப்படத்தின் கதையும், திரைக்கதையும் உண்டாக்கின. சில நாள் கழித்து, தௌத்யம், No.20 மெட்ராஸ் மெயில் போன்ற மோகன்லால் மசாலா படங்கள் பார்த்ததின் தொடர்ச்சியாக ‘க்ரீடம்’ பார்த்த பின்பு, ‘அட இந்தாளு ‘ஆம்பள’ய காப்பியடிச்சிட்டான், ஆனாலும் நல்லாத்தான் எடுத்திருக்கான்’ என்று நினைத்து விட்டேன். இவர் பெயரும் ஒரு தினுசாக இருந்ததால் மனதில் பதிந்து விட்டது.
HisHighnessAbdullah பார்த்த பின்புதான் இவரைப்பற்றி முழுமையாக தெரிய வந்தது. ஆக்கபூர்வமாகவும் தொடர்ச்சியாகவும் பல படைப்புகள் கொடுப்பவரென்றும், இவர் கதையைத்தான் பிற மொழிகளில் அடிக்கிறார்களென்றும்.
 1999- 2000 வாக்கில் கோழிக்கோட்டில் மாஸ்டர் டிகிரி ப்ரோஜக்டுக்காக தெருத்தெருவாக அலைந்த பொழுது புது வால்போஸ்டரில் இவர் பெயரை எழுத்து கூட்டி படித்ததில் ஓடிப்போய் டப்பா தியேட்டரில் “வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள்” பார்த்தேன். வெண்திரையில் நான் பார்த்த முதல் மலையாள படம்!
 
அதில் அவர் எழுதிய சிறு கவி –
கருத்த ஸ்வப்னங்ஙளூடெ கரிம்பாறக்கெட்டுகளில், ஒருதுளி தாகஜலம் தேடி ஞான் அலயும்போள், திளக்குன்ன சூர்யன் துர்விதியுடெ கனலுகள் சொரியும்போள், சோரயும் கண்ணீரும் குழஞ்ஞு கிடக்குன்ன ஈ ஊஷர பூமியுடெ விலாபம் கேட்டுகொண்டு, ஓமனெ ! நின்டெ ப்ரேமம் எங்ஙனெ கேட்டு வாங்ஙும் ? பரயு பரயு !! 
 (நன்றி YouTube)

திரையில் ஜயராம் ஊடாக இதை நகைச்சுவையாக பயன்படுத்தினாலும், அதிலும் தனது கலையுணர்வை மென்மையாக பகிர்ந்திருப்பார்.  இந்த வரிகளை சுட்டு,  நான் கஷ்டப்பட்டு எழுதியதாக சொல்லி என் மலையாளி மனைவிக்கு, சில நாட்கள் முன்பு, SMS அனுப்பியிருந்தேன். இப்போது இவர்தான் அதன் படைப்பாளி என்று சொல்லும் நேரம் வந்தேவிட்டது. வீ.சி.வீ-இல் மற்றோரிடத்தில், கலை நாடக உலகில் ஜீவிக்க திலகனூடாக ” டே வாஸன வேணம்” என்பார். அருமை!.
 HHA மற்றும் பரதம் அருமையான கதையம்சம் உடையவை. மீண்டும் மீண்டும் பார்த்து ரஸிக்கலாம். சொந்த உறவுகளில் நுண்மையான மாற்றங்களை நல்ல எழுத்து, நல்ல கதைகள் , நல்ல நடிகர்கள் மூலமாக வெளிப்படுத்தியவர். அனைத்திலும் மேலாக நல்ல ரஸனை அளித்தவர். ‘கஸ்தூரிமான்’ வழியாக தமிழில் காலூன்ற நினைத்தது துர்பாக்கியமே. அந்நேரத்தில் மற்றுமொரு நல்ல மலையாள படைப்பு அளித்திருக்கலாம். லோஹித தாஸ் என்ற கலைஞருக்கு அஞ்சலி.  அவரின் எதிர்கால படைப்புகளை இழந்த ரஸிகர் சார்பாக . .
 
shivatma

அன்புள்ள சிவராமன்

நான் இன்றுதான் லோகி சடங்குக்கு போய்விட்டு திரும்பி வந்தேன்.லோகி அபாரமான நகைச்சுவை உணர்ச்சி கொன்டவர். அவரது படங்களில் உள்ள நகைச்சுவை முழுக்க அவரால்தான் எழுதப்படும். நகைச்சுவைக்காக எழுத மாட்டார் – கதாபாத்திரங்களை படைப்பார். நீங்கள் சொன்ன வீண்டும் சில வீட்டுகாரியங்கள் என்ற படத்திலே ஜெயராம் நடிக்கும் அந்த நாடகம் 1930களில் திருவனந்தப்ரத்தில் கைனிக்கர குமாரபிள்ளை போன்றவர்கள் நடித்த கிளாசிக் நாடகங்களை போன்றது. அசோகராக வந்து கைனிக்கரா பேசும் வசனத்தை பகடி செய்து லோகிஎழுதிய வசனம் அது
ஜெ

 

அன்புள்ள ஜெ

லோகியின் மறைவுக்காக வருத்தத்தில் இருந்தீர்கள். ஆனாலும் ஒரு கேள்வி, அற்புதமான பல படங்களை எடுத்த லோகி ஏன் தமிழில் வந்தபோது கஸ்தூரிமான் என்ற சுமாரான படத்தை எடுத்தார்? உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

நான் உங்களிடம் இதை நேரிலேயே சொல்லியிருக்கிறேன். மலையாள இயக்குநர்கள் தமிழில் வரும்போது  அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை, தமிழ்ப்பண்பாடு தெரியவில்லை என்ற கவலை இருக்கும். ஆகவே அவர்கள் இங்கே உள்ள வழக்கமான சினிமா ஆட்களை கூட வைத்துக்கொள்கிறார்கள். இதுதான் தமிழ்சினிமா, இபப்டித்தான் தமிழிலே சினிமா இருக்கவேண்டும், இதுதான் தமிழில் புரியும் என்று இவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள். இவர்கள் இதை தமிழ் இயக்குநரிடமும் சொல்வார்கள். ஆனால் தமிழ் இயக்குநர் அதை நம்பவோ ஏற்கவோ மாட்டார். போராடுவார். மலையாள இயக்குநர் செய்வதில்லை.

லோகி தமிழில்செய்வதாக இருந்த படம் செம்பட்டு. கண்டிப்பாக ஒரு முக்கியமான படமாக இருந்திருக்கும். அதைத்தான் பேசினோம். ஆனால் பதினைந்துநாள் இடைவெளியில் அவர் மாறிவிட்டார். அவரைச் சொல்லி புரியவைக்க முடியவில்லை. சொந்தப்படம் வேறு, ஆகவே பயம்.  அது ஒரு துரதிருஷ்டமான முடிவு

ஜெ
அன்புள்ள ஜெ

லோகித் தாஸின் மறைவை முதலில் உங்கள் இணையதளத்திலேதான் படித்தேன். அவரை எனக்கு தெரியாது. எனக்கு மலையாளமே குத்துமதிப்பாகத்தான் புரிய்ம். ஆனால் எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமானவராக லோகி இருந்தார் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது. அவரது சினிமாக்களின் வழியாக அவருடன் அத்தனை நெருக்கமான மானசீக உறவு எனக்கு இருந்தது. அவரை நான் என் ஆதர்ச சினிமா எழுத்தாளராக நினைத்திருந்தேன். சின்ன வயதிலே சினிமா எடுக்க வேண்டுமென்ற கனவு எல்லா தமிழ் பசங்களையும் போல எனக்கும் இருந்தபோது நான் லோகி எடுக்கிற சினிமாக்களை விட மேலான சினிமா எடுக்கவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். மலையாளசினிமா பார்த்து மலையாளம் கற்றுக்கொண்டு அப்படியே மலையாளப்பெண்ணையும் காதலித்து திருமணம்செய்து கொண்டேன்.

எம்.டி.வாசுதேவன் நாயரின் கதாநாயகிகளுக்கும் லோகியின் கதாநாயகிகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. எம்.டியின் பெண்கள் எல்லாரும் ரெண்டு வார்ப்பு. 1, திமிரான பெரிய இடத்துப்பெண்கள்.2.  அடக்கமான அன்பான கிராமத்துப் பெண்கள் இன்னொரு வகை. இந்த இரண்டாம்வகைப்பெண்கள்தான் துக்கபுத்திரி என்று கேரள மனதிலே பதிந்திருக்கிறார்கள். அந்தமாதிரி கதாபாத்திரங்களைத்தான் பிறகும் நிறைய்பேர் உருவாக்கினார்கள் . ஆள்கூட்டத்தில் தனியே என்றபடத்திலே சீமா பண்ணிய கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அவள் பணம் இல்லாதவள். ஆகவே கைவிடப்படுகிறாள். ஆனால் அது அன்பையும் பாசத்தையும் காட்ட தடையாக இல்லை. ஏனென்றால் அது அவளுடைய இயல்பு. அதேமாதிரி கதாபாத்திரம் மீண்டும் மீண்டும் எம்டி கதைகளிலே வரும். சீமாவே நாலைந்து பண்ணியிருக்கிறார்.

ஆனால் லோகியின் பெண்கள் வேற் மாதிரி. அவர்களும் மிகவும் கஷ்டத்தில் இருப்பார்கள். ஆனால் அந்தக் கஷ்டத்தை துணிச்சலாக சமாளி¢ப்பார்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். ‘வீண்டும் சில வீட்டுகாரியங்கள்’ படத்தில் வரக்கூடிய சம்யுக்தாவர்மா கதாபாத்திரம் போல. துணிந்து நின்று உலகத்தை சமளிக்கிற அபலைகள் அவர்கள்.

லோகியை எண்ணி நானும் கண்ணீர் விட்டேன். எழுத ஆரம்பித்தபோதுதான் சொல்ல முடியவில்லை என்று தெரிகிறது. லோகிக்கு என்னுடைய அஞ்சலி.

தாஸ் பூனெ

அன்புள்ள தாஸ்,

உங்கள் நோக்கு சரிதான். எம்.டியையும் லோகியையும் ஒப்பிட்டால் ஏராளமான நுண்ணிய ஆய்வுகளுக்கு இடமிருக்கிறது. நீங்கள் சொன்ன எம்.டி கதாபாத்திரம் முறப்பெண்ணு என்ற படத்தில் முதலில் உருவாகி வருகிறது. அந்தப்பெண்கள் உயர்சாதியினர். குடும்பத்துக்குள் ஒடுங்கவேண்டியவர்கள். சென்றதலைமுறையில் அப்படிப்பட்ட பெண்கள் நிறைய இருந்தார்கள். எம்டி கண்டவர்கள் அவர்கள். எம்டி உயர்சாதிக்காரர்.

லோகி தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். அவரது கதாபாத்திரங்களான பெண்கள் வேறுவகையினர். அடித்தள வாழ்க்கை கொண்டவர்கள். ஆகவே துணிச்சலானவர்கள். நீங்களே சொன்ன உதாரணங்கள். சீமா நாயர் கதாபாத்திரம். சம்யுக்தா வர்மா வண்ணாத்தி கதாபாத்திரம்

ஜெ

முந்தைய கட்டுரைஅமெரிக்க பயணம்,கொஞ்சம் மாறுதல்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: வ.அய்..சுப்ரமணியம்