கவிஞன்
======
பேருந்துக்கு அடியில்
விழும் மகனை
பிடித்து விலக்க முடியாமல்
நின்று பரிதவிக்கும்
அவனைபெற்றதுமே இறந்த
அன்னையைப்போன்றவன் நான்.
எனக்கில்லை
அதற்கேற்ற
கையோ
பலமோ.
********
உறுதியான நிலமல்லவா பயங்கரம்!
=========================
மண்ணை நோக்கி
பயந்து அலறுவதுண்டு ஒரு பைத்தியக்காரி.
மேலிருந்து கீழே விழுகின்றவள்
நிலத்தில் மோதித் தலைசிதறித்தானே இறக்கிறாள்?
நிலத்தை அடைவதுவரை
அவளுக்கு ஒன்றும் நிகழ்வதில்லையே?
பின்னுக்கு சென்ற உயரமல்ல
பின்னுக்குச்செல்ல மறுத்த
நிலமல்லவா அவளைக் கொன்றது?
உயரத்தின் சதுப்பல்ல
நிலத்தின் உறுதியல்லவா
அவளுக்கு எதிரி?
நிலத்தின் உறுதியல்லவா பயங்கரம்!
************
விதிப்பயன்
========
மகன் இறந்த ஓர் அன்னை
யுதிஷ்டிரனை அணுகி
ஏனிப்படி எனக்கு நிகழ்ந்தது என்றாள்.
பதிலுக்கு யுதிஷ்டிரன் சொன்னான்,
உற்றவரின் ஆசையின்படி அன்றி
மண்ணில் ஒரு குழந்தையும் இறப்பதில்லை.
எந்தக் கொடுந்துயரும்
நிராகரிக்க முடியாத விண்ணப்பத்தின் விளைவே.
நினைக்காதது நடக்குமளவுக்கு
பெரிதல்ல இவ்வுலகம்.
நினைத்துப்பார்,
எப்போதோ நீயும் உள்ளெரிந்து பிரார்த்தனை செய்திருப்பாய்,
ஆனால் அது…
அவள் நினைவுகூர்ந்து சொன்னாள்,
அப்படி நிகழவேண்டும் என்று எண்ணி அல்ல.
அடுத்தக் கணமே என்னை நானே
கிழித்து ரணமாக்கியிருக்கிறேன்.
தெய்வமே நான் சொன்னதென்ன என்று
தீயிலிருந்து விரலெடுப்பதுபோல
அச்சொல்லில் இருந்து என்னை
இழுத்துக் கொண்டிருக்கிறேன்.
பெற்றதாயின் சொல்லல்லவா
பலிக்காதென்று சமாதானம் செய்துகொண்டிருக்கிறேன்.
நான் எப்போதும் வேண்டிக் கொண்டிருந்த எதுவுமே கேட்கப்படாமல்
இது மட்டுமே கேட்கப்பட்டது என்கிறாயா?
எத்தனை நெருக்கமானவர்களிடமும் கேட்கவழியில்லாத,
பிற எவரிடமும் வேண்டிக்கொள்ள முடியாத,
கலப்பற்ற, அவசரமான,
ஓரு வேண்டுகோள்.
அதுவும் ஒரு பெற்றதாயின் விண்ணப்பம்.
எப்படி கேட்கபடாது போகும்?
அந்த அன்னை சொல்லாததனால் போலும்
இதுவரை வெளியே தெரியவில்லை இக்கதை
************
குடை
====
எதிர்பாராமல் பெய்தஒரு பெருமழையில்
அப்போது மட்டுமே மனிதர் கண்ணில் படக்கூடிய
அப்போது மட்டுமே உசிதமென்று தோன்றக்கூடிய
கடற்கரைப் பாதையோரத்து ஓலைக்கூரைக்குக் கீழே
சேர்ந்து நிற்கையில் அறிமுகம் கொண்டோம்
கனத்து பெய்யும் மழையில்
அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்.
ஒரே போலத் தோன்றும் இருகுழந்தைகளுக்கு
பெற்றோரானோம்.
சமீபத்தில் ஓர் இரவில்
தூங்கிவிட்டாள் என்று தோன்றியபோது
அவளது கரத்தை எடுத்து மெல்ல கீழே வைத்தேன்
அவள் கேட்டாள்
அந்த மழை அரைமணிநேரம் மட்டுமே பெய்ததா என்ன?
***********
கூடுதல் பொறுப்புகள்
===============
பைக்கில் பாயும் இவ்விளைஞன்
இருபத்துநான்கு கிலோமீட்டர் போய்
விபத்துக்குள்ளாவான்
அவனறியவில்லை
எங்கு தக்க சமயத்தில் போய்சேர்வதற்காக
தான் வேகமெடுக்கிறோம் என.
அவனறியவில்லை
தான் வகிக்கும் கூடுதல் பொறுப்பு என்ன என்று.
வயல்வரப்பு வழியாக
நடந்தும் ஓடியும் வந்துசேரும் பெண்
நிமிடங்கள் கழித்து இடிந்துவிழப்போகும்
பஸ்நிறுத்தக் கட்டிடத்தில் ஏறி நிற்கிறாள்
நேரத்துக்கு வந்துவிட்டேனே
என அவள் ஆசுவாசத்துடன் வியர்வை ஒற்றுகிறாள்
இன்று மாலை
தளர்ந்து விழுந்து இறக்கப்போகிறவளிடம் ஊடி
சாப்பிடாமலிருக்கிறான் கணவன்.
அவளால் முடிந்தவரை சமாதானம் செய்கிறாள்,
இனி இப்படி நடக்க்காது
ஒருபோதும் ஒருபோதும்…
அவன் கவனிப்பதில்லை
குளத்தில்
மூழ்கிச்சாகப்போகும் சிறுவன்
தலைமறந்து எண்ணை தேய்க்கிறான் *
‘சீக்கிரம் வாடா!’
தெருவில் நின்று தோழர்கள்
அவசரப்படுத்துகிறார்கள்.
இப்போது அவர்களின் பொறுமையின்மை
யாருடைய பொறுமையின்மையும்கூட?
உங்களை முட்டிக் கொல்லப்போகும் லாரி
சின்னச் சின்ன உந்தல்களுக்குப் பின்
புறப்பட்டாயிற்று.
உங்கள் மரத்தின் வேர்
உடையத்தொடங்கியாயிற்று.
உங்களுடைய பாம்பு
ஒற்றையடிபபதைக்கு ஊர்ந்திறங்கத் தொடங்கியாயிற்று.
அதற்கு இன்னும் நேரமிருக்கிறது.
நீங்கள் இப்போதுதானே சட்டையைப் போடுகிறீர்கள்?
‘அப்படியானால் நான் போகிறேன்’
என்று வெளியே வரும்போது
நீங்கள் அறிவதில்லை,
சில நேரங்களில் சொற்களின் அகலம்.
தனியாக
பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் இந்தப்பெண்
காத்து நிற்பதை மட்டுமா
காத்து நிற்கிறாள்?
என்னென்ன கூடுதல் பொறுப்புகள்
இன்று அவள் வகித்தாகவேண்டுமோ!
**********
*. அதிகப்பிரசங்கம் என்பதைக் குறிக்கும் மலையாளச் சொல்லாட்சி.
மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்:ஜெயமோகன்
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
http://jeyamohan.in/?p=341
http://jeyamohan.in/?p=340
http://jeyamohan.in/?p=331
1 comment
9 pings
Skip to comment form ↓
down under
August 2, 2010 at 1:32 pm (UTC 5.5) Link to this comment
“எனக்கில்லை
அதற்கேற்ற
கையோ
பலமோ.”
“அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.”
beautifully expressed delicate human condition …
Its a pleasure going back and reading …random posts.
I always like kalpatta narayanan poems and your translations.
jeyamohan.in » Blog Archive » பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்
March 30, 2008 at 5:25 pm (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது?
March 31, 2008 at 8:38 pm (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
March 31, 2008 at 9:04 pm (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » பத்து மலையாளக் கவிதைகள்
March 31, 2008 at 9:07 pm (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
March 31, 2008 at 10:22 pm (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
March 31, 2008 at 10:25 pm (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » ஹரிதகம் ஓர் இணையதளம்
April 1, 2008 at 12:27 am (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]
jeyamohan.in » Blog Archive » ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்
December 16, 2009 at 2:10 am (UTC 5.5) Link to this comment
[…] http://jeyamohan.in/?p=341 http://jeyamohan.in/?p=331 […]
கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை
April 30, 2014 at 12:15 am (UTC 5.5) Link to this comment
[…] கல்பற்றாநாராயணன் கவிதைகள் 2 கல்பற்றா நாராயணன் கவிதைகள் […]