சார் வணக்கம்,
நா இப்போ ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்துக் கொண்டிருக்கிறேன்..இந்த சமயத்தில் எனக்கு அமெரிக்காவின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..சரியான புத்தகம் ஒன்றைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
அன்புடன்,
நாசர்.
அன்புள்ள நாசர்,
அமெரிக்க வரலாறு என்ற நூல் ஒன்று எழுபதுகளில் வந்துள்ளது. அது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்காக எழுதப்பட்டது. மறுபதிப்பாக வரவில்லை. சில பழைய நூலகங்களில் இருக்கலாம். நாகர்கோயில் இந்துக்கல்லூரி நூலகத்தில் உள்ளது.
எழுபதுகளில் நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நூல்கள் பல்வேறுதலைப்புகளில் எழுதப்பட்டன. முதுகலைப் படிப்பு வரை தமிழிலேயே அளிப்பதற்கான ஒரு திட்டத்தின் பகுதியாக இவை எழுதப்பட்டன. சில நூல்கள் என்னிடமிருக்கின்றன. இந்தியக் குற்றவியல் சட்டம், ஐரோப்பிய வரலாறு, நெப்போலியன் போன்ற பல நூல்கள். எனக்கு அவை மிக உதவியாக இருந்தன. அந்நூல்கள் மறுபதிப்பாக வந்தால் நல்லது. நாகர்கோயில் இந்துக்கல்லூரி நூலகத்தில் எல்லா நூல்களும் உள்ளன
பா ராகவன் எழுதிய டாலர் தேசம் கொஞ்சம் பெரிய நூல். நல்ல வாசிப்புத்தன்மை கொண்டது.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம், நலமா?
சென்னையில் வந்திருந்தபோது சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் (ஜான் ஹொல்ட்) என்ற புத்தகமும் உண்டு. குழந்தைகள் அவர்களின் புரிதல்கள், கல்வி, விளையாட்டு என அனைத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியவைகளைப்பற்றி மிக விரிவாகப் பேசும் மிக அற்புதமான புத்தகம். என் இரண்டரைவயது மகனைப் புரிந்து கொள்ள உதவிய முக்கியமான புத்தகம்.
இது தவிர வேறு, குழந்தைகளை, குழந்தைமையைப் புரிந்துகொள்ள, உதவும் புத்தகங்கள் உள்ளனவா? உங்களுக்குத் தெரிந்த தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வந்துள்ள உங்கள் சிபாரிசாகப் பரிந்துரைக்க விரும்பும் சில புத்தகங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன், அவைகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.
அன்புடன்
கே.ஜே.அசோக்குமார்.
அன்புள்ள அசோக் குமார்
குழந்தைநூல்கள் சிறப்பான தாளில் அழகிய படங்களுடன் அச்சிடப்படவேண்டும். அப்படி அச்சிடப்பட்டால் விலை அதிகமாக ஆகும். மிக அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டால் மட்டுமே விலையைக்குறைக்க முடியும். ஆனால் தமிழில் குழந்தைநூல்களைப் பெற்றோர் வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை. நம் பிள்ளைகள் தமிழில் படிப்பதில்லை. ஆங்கில வழிக்கல்வி பெறுகிறார்கள். ஆகவே நம் பெற்றோர் ஆங்கிலக் குழந்தைநூல்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆகவே தமிழில் நல்ல குழந்தைநூல்கள் குறைவு. வணிகரீதியாக சாத்தியமில்லை
தமிழில் நல்ல குழந்தைநூல்களை முன்பு ராதுகா , முன்னேற்ற [ருஷ்ய] பதிப்பகங்கள் வெளியிட்டன. அவை இப்போது கிடைப்பதில்லை. சில நூல்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுசால் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளன. வேறு சில நூல்களையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்
தேசியபுத்தகநிறுவனம் வெளியிட்டிருக்கும் குழந்தைநூல்கள் சில முக்கியமானவை. ஆனால் புத்தகக் கண்காட்சிகளில் மட்டுமே கிடைக்கும். அவை நல்ல அச்சில் படங்களுடன் உள்ளன.
விகடன் நிறுவனம் நல்ல குழந்தைநூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது என்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய குழந்தைக்கதைகளான கிறுகிறு வானம்; ஆலீஸின் அற்புத உலகம்; கால்முளைத்த கதைகள் போன்றவை வெளியாகியிருக்கின்றன. கால்முளைத்த கதைகளை என் நண்பர் கே.பி.வினோத்தின் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மகள் சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறாள்
ஜெ
அன்புள்ள ஜெமோவிற்கு,
தாங்கள் பதில் எழுதியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை புத்தகங்கள் என்சிபிஎச், பாரதிபுத்தகாலயம் (எஸ்ரா எழுதிய) போன்ற பதிப்பங்கள் வெளியிட்டுள்ள சில குழந்தைகள் புத்தகங்களை மகன் படிக்க சில இப்போதே வாங்கிவைத்துள்ளேன், நீங்கள் சொன்ன என்பிசி வெளியிட்டுள்ள புத்தகங்களையும் வாங்கவேண்டும். குழந்தைகளுக்கான புத்தங்கள் கிடைக்காதது வருத்தமே அளிக்கிறது. நம் சமூகம் அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.
குழந்தைமைகளைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகங்கள், குறிப்பாக ஜான் ஹோல்ட் எழுதிய புத்தகங்கள் போலக் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.
வினோதின் மகள் பெயரும் சைதன்யா என்பதும் அவர் இந்தச் சின்ன வயதில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது.
அன்புடன்
கே.ஜே.அசோக்குமார்.