ஞானமும் சந்தையும் ஒரு கடிதம்

ஆசிரியருக்கு,

வணக்கம். ஞானம் சந்தை வடிவம் சார்ந்த ஒரு நுகர் பொருள் அல்ல என்று சொல்லி இருந்தீர்கள். இது குறித்து யோசிக்கும் பொழுது தோன்றியதை இங்கு எழுதியுள்ளேன்.

ஒரு பொருள் அது புற வடிவம் கொண்டிருந்தாலும், அக வடிவமான சிந்தனை வடிவம் கொண்டிருந்தாலும் தான் உற்பத்தி செய்ய பட்ட இடத்தில் இருந்து நகர்ந்து அதன் பயனர்களை சேரும் இடம் என்ன? உற்பத்தியாளரும் , பயனரும் சந்திக்கும் இடத்தினை சந்தை என்று சொல்லலாமா? அகப் பொருள் , புறப் பொருள் இரண்டையும் பயனர், உற்பத்தியாளரிடம் இருந்து துண்டிக்கப்பட்டு உற்பத்திப்பொருளை அனுபவிக்க (அக ரீதியாகவோ ,புற ரீதியாகவோ) முடியும். டால்ஸ்டோயின் இலக்கியத்தினை வாசித்துப் பயன் அடையும் பொழுது டால்ஸ்டாயின் பெண்களைக் குறித்த கருத்துகளை (நீங்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்கள்) சேர்ந்து சுமக்க வேண்டியதில்லை. டால்ஸ்டோயினை சந்தித்தோ, அறிந்தோ இருக்க வேண்டியதில்லை. அதே போல இன்று மின்சாரம் பயன் படுத்தும் பொழுது எடிசனின் எல்லாப் பிழைகளையும் சுமக்க வேண்டியதில்லை.

இங்கு மூன்று புள்ளிகள் உண்டு .

1. பொருளின் உற்பத்தி ( அகம் ,புறம் )
2. பயனர் (நுகர்வோர்?),
3. உற்பத்திப் பொருளும், பயனரும் சந்திக்கும் இடம் ( சந்தை?)

உற்பத்திப் பொருளும் , பயனரும் சந்திக்கும் இடத்தில் , இந்த உற்பத்திப் பொருள் கையாளப்படுவது முழுக்க முழுக்கப் பயனரை சார்ந்து உள்ளது. பயனர் தனது அகத் திறனால் உற்பத்திப் பொருளினை கச்சாப் பொருளாக்கி அதனை மேம்படுத்தலாம் (நாராயண குரு, காந்தி ) , அல்லது உற்பத்திப் பொருளின் மேல் அதிகார விளிம்புகளை (வைதீக பேரொளிகள், பல கம்யூனிச சர்வாதிகாரிகள்) சுமத்தி அதை ஆயுதமாக்கலாம், அல்லது உற்பத்திப் பொருளினைப் பயன் செய்யத் தெரியாமல் போகலாம் , அல்லது வேறு வித முடிவுகளும் நேரலாம்.

இதைப் புற வடிவுப்பொருளுக்கும் சொல்லலாம் , அக வடிவப் பொருளுக்கும் சொல்லலாம். கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட எக்ஸ் ரே , கதிரியக்கம் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் என இரு வேறு பொருள்கள், ஒரே கச்சாப்பொருளில் இருந்து சாத்தியம்.

அகப் பொருளின் சந்தை வடிவம் பலவாக இருக்க வாய்ப்பு உண்டு. சொல்லத்தக்க சில வடிவங்கள்.

1. தனிப்பட்ட குரு -சிஷ்ய வாய்ப்பு (மத்துறு தயிர்)
2. கல்வி நிலையங்கள்
3. ஆய்வு மையங்கள்

இன்னும் பல வடிவங்களும் இருக்கலாம்

இந்த விதத்தில் பார்க்கும் பொழுது உற்பத்தியாளர், பயனர் என்பது நிலையான இடங்கள் அல்ல. சந்தையில் பங்கு பெரும் பொழுது வகிக்கும் பாத்திரமே. இன்று உற்பத்தியாளர் நேற்றோ , நாளையோ ஒரு பயனர் என்ற அளவில் சந்தையை சந்தித்தே ஆக வேண்டும். இன்றைய பயனர் நாளையோ ,நேற்றோ உற்பத்தியாளர் வடிவம் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

உற்பத்திப் பொருள்கள் பல ஒன்று சேர்ந்து புதிய உற்பத்திப் பொருள் வடிவம் கொள்ளலாம். இதைப் புற வடிவில் ,அக வடிவில் இரு நிலைகளிலும் காணலாம். பயனர் உற்பத்தியாளராய் மாறும் சாத்தியங்கள் அதிகரிக்கும் பொழுது, உற்பத்திப் பொருள் கச்சாப் பொருளாய் மாறும் சாத்தியம் அதிகரிக்கும் பொழுது பயனரும்,உற்பத்தியாளரும் சந்திக்கும் புள்ளிகள் (சந்தை) அதிகரிக்கும்.சந்திப்பின் விதிகளை சந்திப்பவர்கள் கூட்டாக நெறி செய்து கொள்ளும் பொழுது சந்திக்கும் புள்ளிகள் நேர் பட இயங்க இயலும்.

இது ஒரு யோசனை மற்றும் மாற்று வாசிப்பே. தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

நன்றி
நிர்மல்

முந்தைய கட்டுரைநூல்கள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேதைகள் நடமாட்டம்