ராமன்,அறம்-கடிதம்

வால்மீகிக்கு குறைந்தது 1500 ஆண்டுகள் பின் வந்தவன் கம்பன்.. நமக்கும் கம்பனுக்கும் உள்ள இடைவெளியை விட, வால்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள இடைவெளி அதிகம். இவ்வளவு கால இடைவெளி உள்ள இரு கவிஞர்களின் ”சமூக அறம்” குறித்த பார்வையை இப்படி *நேரடியாக* ஒப்பிடுவதே அபத்தமானது என்று நினைக்கிறேன்.

உண்மையில் வால்மீகி கூறும் வர்ண அமைப்பு வேதகால சமூக அமைப்பு. அதில் வரும் ராமன் பலிச்சடங்கு செய்பவன், குகன் அளித்த மீனுணவை ஏற்பவன் .. அதில் கோசலை, சுமத்திரை, சீதை ஆகிய பெண்களும் சந்தியாவந்தனமும் வேள்வியும் செய்கின்றனர்,.. சபரி என்ற வனவாசிப் பெண்ணை மரியாதைக்குரிய தபஸ்வினியாக வால்மீகி காட்டுகிறார்… அகலிகை சாபத்தால் கல்லுருக் கொண்டவளாக அல்ல, தபஸ்வியாக வருகிறாள்; ராமன் அவள் பாதம் பணிகிறானே அன்றி, ராமனின் கால் தூசியால் அவள் சாப விமோசனம் பெறுவதில்லை; அக்னிப் பிரவேச தருணத்தில் வால்மீகியின் சீதை கம்பனின் சீதையை விட பல மடங்கு சுய உணர்வுடனும், பெண் என்ற பிரக்ஞையுடனும் பேசுகிறாள். இப்படிப் பல விஷயங்கள் சொலல்லாம்.

கம்பன் காட்டும் ராமாயண சமூக அமைப்பில் அன்றைய சோழர் கால தமிழ்ச் சமுதாய அமைப்பு பற்றிய பிரஞையும் சேர்ந்துள்ளது.. மனுநீதி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. அயோத்தியில் “மள்ளர்கள்” வருகின்றனர். உழவு செய்யும் பெண்கள் “கடைசியர்” எனப்படுகின்றனர். கம்பனின் ராமன் தூய சைவ உணவினன்.. இப்படி பல சொல்லலாம்.

அந்தக் குறிப்பிட்ட பகுதி – அது ராமனின் வஞ்சினம் அல்ல, பரதனின் வஞ்சினம். ராமன் காடு செல்ல தான் காரணம் என்றால் இன்னின்ன பாவங்கள் எல்லாம் தன்னை வந்தடையட்டும் என்று பட்டியலிட்டு பரதன் வஞ்சினம் கூறுகிறான்..

அந்த வஞ்சினப் பகுதி இரு ராமாயணங்களிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் உள்ளது.

வால்மீகி – அயோத்யா காண்டம் 75வது அத்தியாயம், பரத சபதம்.

கம்பன் – அயோத்தியா காண்டம் – பள்ளிபடைப் படலம்

கம்பனின் பரதன் ஊருணியை அழித்த பாவத்தோடு சேர்த்து, “அந்தணர் உறையுணை அனலி மூட்டினோன்.. “ என்று பிராமணர் குடியிருப்பை அழித்த பாபத்தையும் குறிப்பிடத் தான் செய்கிறான்,..

அதே போல வால்மீகியின் பரதனும்

May he acquire the sin of polluting the drinking water; of the one who poisons others. May he acquire the sin of separating water from thirsty beings. Maye he acquire the sin of the judge who sees the beings with prejudiced eyes in courts..

என்ற பாவங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறான், பிராமணர் குடியிருப்பை அழித்ததை மட்டும் சொல்லவில்லை..

May he devour food all alone though he is surrounded by childen, wife and servants.. – வால்மீகி

நறியன அயலவர் நாவில் நீர்வர – உறுபதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – கம்பன்

எனவே இரண்டு மகா கவிகளூம், அவரவர்கள் காலத்திய சமூக நெறிகளையும், என்றும் மாறாத மானுட அறம் பற்றிய கருத்துக்களையும் இணைத்தே தான் கூறியுள்ளார்கள் என்பதே உண்மை.. இதில் வால்மீகியை ஏதோ குறுகிய பார்வை கொண்டவர் போல சித்தரிப்பது அறியாமை அல்லது உள்னோக்கம் கொண்ட முற்றிலும் தவறான கண்ணோட்டம்.

பேராசிரியர் ஏசுதாசன் மாபெரும் தமிழறிஞராக இருந்திருக்கலாம்.. ஆனால், அவரது கிறிஸ்தவப் பின்னணி + திராவிட இயக்க தமிழகச் சூழல் இரண்டும் இணைந்து இத்தகைய ஒரு சார்புப் பார்வையை உருவாக்கி யிருக்கலாம்..

ராமனை மானுட அறத்தின் பிரதிநிதியாக வால்மீகியே காட்டி விட்டார்.. கம்பன் அதைத் தான் பின்பற்றுகிறான் – அது ஏதோ அவன் செய்த புதுமை அல்ல. “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்பதே தமிழில் “அறத்தின் மூர்த்தியான்” என்று ஆகிறது.

குல தர்மம் – ஜாதி தர்மம் ஆகியவற்றைக் கடந்த மானுடப் பொது அறம் என்ற கருத்து ஒன்றும் பௌத்த கண்டுபிடிப்பு அல்ல.. இந்து ஞான மரபில் அதற்கு முன்பே இருந்த கருத்து தான் அது.

ஜடாயு

முந்தைய கட்டுரைகுஷ்பு குளித்த குளம்
அடுத்த கட்டுரைசென்னையில் பேசுகிறேன்