அகம்மறைத்தல்-அங்கும்

அகம் மறைத்தல் ஒரு அருமையான பதில். சில கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் சில அழகான பதில்கள் கிடைக்காமலேயே போய்விடும் என்கிற வகையில் கேள்வி எழுப்பிய கௌதம் வாழ்த்துக்குரியவர்.

இந்த கட்டுரையில் என்னை உறுத்திய ஒரே இடம் கீழ்க்கண்ட வரிகள்:

“…அந்த மனநிலையின் வேர் கிடப்பது நம் பண்பாட்டின் மூதாதை வழிபாட்டில். நாம் இறந்தவர்களை தெய்வமாக்குகிறோம்… மேலைநாடுகளில் மூத்தார் வழிபாடு இல்லை. ஆகவேதான் அன்பை வெளிப்படுத்துவதற்கான செயற்கையான தயக்கங்களும் இல்லை என நான் ஊகிக்கிறேன்”

இந்த ஊகம் ஆதாரமற்றது, தவறானது என்றே எனக்குப்படுகிறது. மூத்தார் வழிபாடு இல்லாத மேலை நாடுகளில் தந்தையரை சார் என்றும் தாயை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கம் இதோ ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கூட இருந்ததுதான். குறிப்பாக தந்தை ஸ்தானம் பணியப்பட வேண்டிய குடும்ப அதிகார மையம். அமெரிக்காவிற்கு முன்பு இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற மரியாதை விளி இருந்தது. அமெரிக்காவில் 1950களில் கூட – குறிப்பாக தெற்கு மாகாணங்களிலும், மைய-மேற்கு மாகாணங்களிலும் தந்தையை ஸார் என்றும் தாயை மேடம் என்றும் அழைக்கும் வழக்கும் இருந்தது. இன்றும் பரவலாக பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் இந்த மரியாதை விளி புழக்கத்தில் இருக்கிறது.

இதோ இந்த வருடம் கூட என் பையனுடன் ஸ்கவுட் கேம்ப்-அவுட் சென்றிருக்கையில் அவன் என்னை “டாடி” என்று அழைப்பதைப்பார்த்த ஸ்கவுட் தலைவர் (அமெரிக்கர் வெள்ளைக்காரர்) அவனிடம் ”தந்தையை மிஸ்டர் போட்டு பெயர் சொல்லி அழைப்பதே மரியாதை” என்று திருத்தினார். (நான் இடைபுகுந்து அது எங்கள் குடும்பத்தில் வழக்கம் இல்லை. இப்படியே இருக்கட்டும் என்றேன்). அமெரிக்க ஸ்கவுட் அமைப்புக்குக் கிறித்துவ அமைப்புகளின் நிதியுதவி அதிகம் என்பது உபரிச்செய்தி.

இந்திய மாறாக, பூர்வீக அமெரிக்க பண்டை சமூகங்களிலும், ஆஸ்திரேலிய பழங்குடிகளிடத்தும் இப்படிப்பட்ட பழக்கம் இருந்ததாகத்தெரியவில்லை. பழங்குடி சமூகங்களில் குழுத்தலைவர் என்பவரே அதிகார மையம். அவர் குழுவின் தந்தை ஸ்தானத்தில் பார்க்கப்பட்டவர். எனவே அவருக்கு மரியாதை, மற்ற அனைவரும் அந்த குழு என்கிற குடும்பத்தின் உறுப்பினர்கள். உறவுகள் அங்கே பயப்படுவதற்கு அல்ல, குழு ஒற்றுமைக்கும் நட்புணர்வுக்கும்.

ஸார் என்று ஏன் தந்தையை அழைக்க வேண்டும் என்பதும் அது ஏன் கிறித்துவ அடிப்படைவாதக் குடும்பங்களில் அதிகம் புழங்குகிறதென்றும் பல விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பொதுவாக எல்லோரும் சொல்வது குடும்பமோ, இறைவனோ, அரசாங்கமோ, அதிகார மையத்திற்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பதைத்தான். விவிலிய மதங்களில் ஆண்டவன் பயப்பட வேண்டியவன், ஒழுக்கத்தை நிலைநிறுத்துபவன், தண்டனை தருபவன். அங்கே இறைவனுக்கு அளிக்கப்படும் தந்தை ஸ்தானம் என்பது அதிகாரத்தின் குறியீடு. அதன் நீட்சியாகத்தான் அடிப்படைவாதக் கிறித்துவக் குடும்பங்களில் இன்றும் தந்தை ஸ்தானம் பணிய வேண்டிய அதிகார சின்னமாகப் பார்க்கப்படுகிறது என்று கருதுகிறார்கள். இதை கிறித்துவ அடிப்படைவாதிகள் பலரும் ஏற்கவும் செய்கிறார்கள். மட்டுமன்றி, குழந்தைகளை அடித்துப்பணிய வைத்தல் என்பது அமெரிக்கக் கிறித்துவ அடிப்படைவாத குடும்பங்களில் ஒரு அவசியமாகவே பார்க்கப்படுகிறது.

பில்லி க்ரஹாம் என்றொரு கிறித்துவ மதப்பிரசாகர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறுவயது பில்லி க்ரஹாமின் குறும்பு எல்லை மீறுகையில் அவரது தந்தை க்ரஹாம், பில்லியை அடிப்பாராம். அதுவும் கோபத்தில் போடும் ஒரு அடியல்ல, நிறுத்தி நிதானமாக பெல்டால் விளாறப்படும் தண்டனை அது. பில்லி க்ரஹாமின் தாய் சொல்கிறார்: ”…sometime he carried things a bit too far, and off came his father’s belt. Mr. Graham never punished in anger or desperation, but when he did see the necessity for correction, I winced. At such times I had to remind myslef of another Proverb” “Withhold not correction from the child; for if thou beatest him with the rod, he shall not die (Proverbs 23:13). More than once, I wiped my tears from my eyes and turned my head so the children wouldn’t see, but I always stood behind my husband when he administered discipline. I knew he was doing what was biblically correct. And the children didn’t die!”

ஒரு விஷயத்தை இங்கே கவனிக்கலாம், நம்மூரிலும் அடி உண்டு, அடியாத மாடு படியாது என்பதுபோன்ற பழமொழிகள் எல்லாம் உண்டு, ஆனால் குழந்தையை அடித்துத்திருத்துவது என்பது மதக்கடமையின் பகுதியென்றாவது மேற்கின் அடிப்படைவாதக் கிறித்துவத்தில்தான்.

இதன் மறுபுறமாக, கிறித்துவ அடிப்படைவாதம் வலுவிழக்கும் இடங்களில் தந்தையை அதிகார மையமாகப்பார்க்கும் போக்கும் கரைந்து போகிறது. ஐரோப்பாவில் இது முதலில் நிகழ்ந்தது. இரண்டாம் உலகப்போரின்போது தந்தையை ஸார் என்று அமெரிக்க பிள்ளைகள் அழைப்பதை ஒரு விசித்திரமாக ஐரோப்பியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (இன்றும் ஐரோப்பாவை விட கிறித்துவப் பழமைவாதத்தில் அதிகம் ஊறிய நாடு அமெரிக்காவே). அமெரிக்காவில் மத அடிப்படைவாதம் குறைந்த வட கிழக்குப்பகுதியிலும் மேற்குக்கடற்கரையிலும் இந்த வழக்கம் அதிகம் காணப்பட்டதில்லை.

அஞ்சிப்பணிய வேண்டிய குடும்ப அதிகார மையம் தந்தை என்பதுபோன்ற ”பழைய” விஷயங்கள் இரண்டாம் உலகப்போருக்குப்பின் வெகுவாக மாறத்தொடங்கின. இன்னொரு விஷயமும் இதற்கு உதவியது, பெண்கள் வெளியில் சென்று வேலைக்குச்செல்லத் தொடங்கியிருந்தார்கள். இரண்டு சம்பளம் வரும் குடும்பங்களில் தந்தையும் தாயும் வேலையைப் பங்கு போட வேண்டிய அவசியமும், அதிகார மையம் என்கிற இறுக்கத்தை வெகுவாகத்தளர்த்தியது.

இன்று இப்படிப்பட்ட மரியாதை விளி பெரும்பாலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான தொலைவை அதிகமாக்குவதாகவே அமெரிக்கப் பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். பிள்ளைகளுடன் நட்புடன் பேசுவதும் அன்பை வெளிப்படையாய்க் காட்டுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது. ஆனால் இது எல்லாமே ஒரு ஐம்பதாண்டு வழக்கம்தான். அதேசமயம், அமெரிக்காவின் பைபிள் பெல்ட் என்று அறியப்படும் பகுதிகளில், பணியப்பட வேண்டிய அதிகார மையம்தான் தந்தை என்ற பார்வையின் வழி உருவான மரியாதை விளிகள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றதாம்.

அன்புடன்,

அருணகிரி.

முந்தைய கட்டுரைகூர்மாவதாரம்
அடுத்த கட்டுரைதேவதேவனின் கவித்தரிசனம்