வல்லிக்கண்ணன்

valikannan

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

நீங்கள் வல்லிக்கண்ணனைப் பற்றி எதுவும் எழுதியது போலத் தெரியவில்லையே. உங்களின் கணிப்பில் அவர் ஒரு பெரிய இலக்கிய ஆளுமையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், இலக்கியத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகவும் பெரியதல்லவா? அசோகமித்திரனைப் போலத் தன்னை உருக்கிக் கொண்டு, வாழ்நாளெல்லாம் எழுதிக்கொண்டே இருந்த அவரைப்பற்றி நீங்கள் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். அப்படி ஏதேனும் எற்கனவே நீங்கள் எழுதியிருந்தால் தயவுசெய்து இந்தக் கடிதத்தைப் பொருட்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

பி.எஸ்.நரேந்திரன்

அன்புள்ள நரேந்திரன்

நான் எப்போதுமே எனக்குப்போட்டுக்கொள்ளும் விதி இறந்தவர்களை, முதியவர்களைப்பற்றி எழுதும்போது இந்திய மரபின் ஆசார நோக்கான நீத்தார், மூத்தார் வழிபாட்டின் மனநிலைகள் ஊடுருவி அவையே மதிப்பீடுகளாக வெளிவந்துவிடக்கூடாது என்று. அப்படி கருத்துச்சொல்லும்போது நம்முடைய சூழலில் ஓங்கியிருக்கும் ஆசாரமான பண்பாட்டு உளவியல் அதிர்ச்சி அடைகிறது, வசைபாட ஆரம்பிக்கிறது என எனக்கு தெரியும். ஆனாலும் வேறு வழி இல்லை. இதை எனக்கு சுந்தர ராமசாமி நூற்றுக்கணக்கான முறை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்

காரணம் நாம் ஒரு பண்பாட்டில் பணியாற்றும்போது நேர்மையான கறாரான விமர்சனங்களை முன்வைத்தாகவேண்டியிருக்கிறது. ஆசார மனநிலைகள் அவ்விமர்சனங்களுக்கு எதிரானவை. கறாரான விமர்சனங்களே விழுமியங்களை முன்வைப்பவை. மனிதர்களை விடவும் மதிப்பீடுகள் முக்கியமானவை என்ற எண்ணம் கொண்ட ஒருவர், மனிதர்களைப்பற்றிய பிம்பங்களை அல்ல அவர்களின் உண்மையான பங்களிப்பையே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும் என எண்ணம் கொண்ட ஒருவர் செய்யவேண்டியது அதுதான்

வல்லிக்கண்ணனை நான் நேரில் கண்டதில்லை. கடிதத் தொடர்புகள் இருந்தது, கொஞ்சநாள். அவரது சிவப்புக்கல் மூக்குத்தி போன்ற கதைகள் முக்கியமானவை. ஆனால் ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய நாலைந்து நல்லகதைகளுக்கு மேல் படைப்பிலக்கியத்தில் அவருடைய பங்களிப்பு என ஏதும் இல்லை.

விமர்சனத்துறையில் கறாரான இலக்கிய மதிப்பீடுகள் அற்றவராகவே இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரியாக ஒரு கட்சிநிலைப்பாடு கொண்டு விமர்சனம்செய்தார். பின்னர் எல்லாவற்றையும் பாராட்டுபவராக ஆனார். அகிலனைப்பற்றிய அவரது புளகாங்கிதம்பற்றி சுந்தர ராமசாமி கண்டித்து எழுதியதை நினைவுகூர்கிறேன்.

வயதான காலகட்டத்தில் அவரது இலக்கிய அணுகுமுறை இரு அடிப்படைகள் கொண்டதாக இருந்தது. முதன்மையாக வேளாள சாதிநோக்கு. அதனடிப்படையில் வேளாள எழுத்தாளர்களை அடையாளம் கண்டு தூக்கிவிட அவர் முயன்றார். இரண்டாவது முற்போக்கு கட்சி அடையாளம் கொண்ட எல்லாரையும் எந்த அளவுகோலும் இல்லாமல் பாராட்டி,சீராட்டி சில வரிகள் கார்டுகளிலும் கட்டுரைகளிலும் எழுதிவந்தார். அவர்களிலும் எந்தத் திறனும் இல்லாத எழுத்தாளர்களையே அதிகமும் பாராட்டினார்.அவர்கள் தங்களை அவர் பாராட்டினார் என்பதற்காகவே அவரைப் போற்றினார்கள்

அதே சமயம் அவர் எழுதிக்கொண்டிருந்த காலம் வரை தமிழில் வெளிவந்த எந்த முக்கியமான நூலையும் அவர் வாசிக்கவில்லை. கருத்துச்சொல்லவில்லை. பின்னாளில் முதன்மை பெற்று வந்த பெரும்பாலான எழுத்தாளர்களை அவர் புறக்கணித்தார். எல்லாப் புதிய முயற்சிகளையும் பெயர்கள் சொல்லாமல் பொத்தாம்பொதுவாக நிராகரித்தார்.

அவர் சாகித்ய அக்காதமி போன்ற அமைப்புகளில் பணியாற்றிய நாட்களில் தரமான எழுத்தாளர்களுக்கு எதிரான சக்தியாகவே விளங்கினார். வேளாள -முற்போக்கு எழுத்தாளர்களுக்கு விருதளிப்பதற்கு மட்டுமே அதற்குள் நின்று வாதாடினார். பல முக்கியமான பெரும்படைப்பாளிகள் விருது வாங்கும் நிலை வந்தபோது வல்லிக்கண்ணனின் மூர்க்கமான எதிர்ப்பு அதைத் தடுத்தது என்பது அனைவரும் அறிந்த வரலாறு. வல்லிக்கண்ணன் அளவுக்கு உள்ளூர கட்சிக்காழ்ப்பும் சாதிப்பற்றும் கொண்டிருந்த மூத்த எழுத்தாளர்கள் குறைவு.

நாலந்தர வணிக எழுத்தாளர்கள் விருதளிக்கப்படும் போது வல்லிக்கண்ணன் அதை ஆதரித்தார். அவர்களும் விருதுபெறுவதற்கான சிற்றிதழ்தரப்பின் ஆதரவு என்ற அளவில் அவரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஓர் மூத்த எழுத்தாளர் பேச்சில் சொன்னார். ‘நா பார்த்தசாரதி வணிக எழுத்தாளர். சாகித்ய அக்காதமிக்குள் சென்றதும் இலக்கியவாதிகளைப் போற்றி விருதளிக்கப் போராடினார். அவரால் உள்ளே கொண்டுசெல்லப்பட்டவர் வல்லிக்கண்ணன். அவர் உள்ளே சென்றதும் வணிக எழுத்தாளர்களுக்காகப் பாடுபட்டார். இதுதான் இலக்கிய முரணியக்கம்’

வல்லிக்கண்ணனுக்கு இலக்கியமதிப்பீடுகள் முக்கியமானவையாக இருக்கவில்லை. அவரது தனிப்பட்ட எதிரிகள் விருது பெற்றுவிடலாகாது என்பதே முக்கியம். அவர் ஒருபோதும் இலக்கியத்துக்காக ஏதும்செய்ததில்லை. தனக்காக, தன் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொள்ளவும் தன் நண்பர்களை ஆதரிக்கவும் மட்டுமே கடைசிக்காலம் முழுக்கப் பணியாற்றினார்.

சென்ற காலங்களில் சாகித்ய அக்காதமி விருதுகள் நாலாந்தர எழுத்தாளர்களுக்கு அளிக்கப்பட்டபோது அதில் வல்லிக்கண்ணன் வகித்த பங்கைப்பற்றி நான் அப்போதே எழுதியிருக்கிறேன். வல்லிக்கண்ணனின் ஆளுமையும் பங்களிப்பும் தமிழிலக்கியத்தின் துரதிருஷ்டமான பக்கம் என்றால் அது மிகையல்ல.

அவரது இளமையில் அவர் நடந்தே சென்னைக்குச் சென்றது, இலக்கியவாதியாக மாறப் போராடியது, திருமணம்செய்துகொள்ளாத வாழ்க்கை ஆகியவை அவருக்கு ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தன. ஆனால் என்ன செய்தார் என எவருமே பார்ப்பதில்லை. வல்லிக்கண்ணன் பிரம்மச்சாரி என்பது துறவைப்போற்றும் நம் சமூகத்தில் ஒரு பெரிய மதிப்பை உருவாக்கியது. அதெல்லாம்தான் அவரை நிலைநிறுத்தின.அவரைப்போற்றுபவர்கள் அவரது ஒரு நல்ல கட்டுரையை, கதையை சுட்டிக்காட்டமுடியாது. சொல்லப்போனால் இன்றுவரை அவரது ஒரே ஒரு சிறுகதையையாவது சுட்டிக்காட்டி வரக்கூடிய ஒரே இலக்கியவாசகன் நானே

வல்லிக்கண்ணனின் பங்களிப்பில் முக்கியமானது ஒன்றே. இலக்கியவரலாறு. அவர் எழுதிய இரு வரலாற்று நூல்கள் சரஸ்வதி காலம், தமிழ்ப்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். அவை அவர் நேரடியாகப் பங்குகொண்ட இலக்கியக் காலகட்டத்தின் வரலாறுகள்.அவர் தன் நினைவை நம்பி எழுதிய நூல்கள் அவை. அம்மட்டுக்குமாவது தமிழில் ஒரு பதிவு வந்ததே என்பதனால்தான் அவை  ஆகவே அவை முக்கியமானவை. ஆனால் வரலாற்று நூல்களுக்கான பொறுப்பான தகவல்களோ, ஆய்வுப்பின்புலமோ, அழுத்தமான மொழியோ இல்லாத வளவள எழுத்து அது. அந்நூல்களையாவது கொஞ்சம் தரவுகளைச் சேகரித்து, கொஞ்சம் உழைத்து எழுதியிருக்கலாம்.

வல்லிக்கண்ணன் வேளாளர்களாலும் வேகாத முற்போக்கினராலும் அவ்வப்போது நினைவுகூரப்படுவது நியாயம். இலக்கியவாசகர்களுக்கு அவர் ஒரு சென்றகாலம்–மறக்கப்படவேண்டியது..

ஜெ


வல்லிக்கண்ணன்

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jan 2, 2013 

 

முந்தைய கட்டுரைஅது யார்? கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16