நிதிவசூல் அமைப்புகள் கடிதம்

அன்புள்ள ஜெ.,

நான் தங்களின் தளத்தில் வரும் நிதி உதவி விண்ணப்பங்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். குக்கூ, நம்மாழ்வார் உயிர் சூழல் போன்ற அமைப்புகளுக்கு நிதி அனுப்பியுள்ளேன். இதில் ஒரு வருத்தம்: நான் அவர்களைத் தொடர்பு கொள்ளவே பெரும்பாடு படவேண்டியுள்ளது. world vision போன்ற அமைப்புகள் பெரும் corporate நிறுவனங்கள் போலவே பலமுறை பலவழிகளில் (எரிச்சலூட்டும் வகையில்) தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் பணம் சேகரிக்கிறார்கள்.

ஆனால், குக்கூ, உயிர் சூழல் போன்ற எளிமையான அமைப்புகள், நாமாகத் தொடர்புகொண்டாலும் அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது மிக வருத்தமான விஷயம். உயிர் சூழல் அமைப்புக்குப் பணம் அனுப்பிவிட்டு, அவர்கள் கொடுத்த facebook உரலியில் தொடர்புகொண்டேன். இதுவரை பதில் இல்லை.

உங்கள் தளத்தின் வாயிலாக, இந்த அமைப்புகளின் ஆர்வலர்கள் எவ்வளவு தூரம் சேவை மனப்பான்மையுடன் உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. தேவைக்கு அதிகாமாக சம்பளம் வாங்கும் என் போன்ற பலர் உங்கள் தளத்தைப் படிக்கிறார்கள். இவர்களை முறையாகப் பயன்படுத்தினாலே இந்த அமைப்புகள் நிதிவரவை செம்மையாக அமைத்துக்கொள்ளலாம். இது ஒரு குறையாக சொல்லவில்லை; ஒரு வேண்டுகோள் அல்லது ஆலோசனை மட்டுமே…

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

நிதியுதவி பற்றிய விண்ணப்பங்களை நான் அதிகமும் அளிப்பதில்லை. அந்த அமைப்பைத் தனிப்பட்டமுறையில் தெரிந்திருந்து, அது மிகப்பெரிய அமைப்பாகவும் இல்லாமலிருந்தால் மட்டுமே சொல்கிறேன்

பொதுவாக இவ்வமைப்புகளுக்கு நிர்வாகம், நிதிவசூல் சார்ந்து நிறுவனம்சார்ந்த வசதிகளோ அதற்கான அமைப்போ இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவை அனேகமாக ஒருவரோ இருவரோ சுய ஊக்கத்தினால் ஒருவகை வெட்கத்துடன் வேண்டாவெறுப்பாகவே செய்கிறார்கள். ஆகவே அதில் அவர்களுக்கு ஊக்கமும் கவனமும் இருப்பதில்லை. அவர்களுக்கு சேவையில் மட்டுமே அவர்கள் நாடும் நிறைவு கிடைக்கிறது. ஒரு வசூல் ஊழியரை சம்பளம் கொடுத்து நிறுத்துவது அவர்களுக்கு அநீதியாகவே தோன்றும்.ஆகவே எல்லாவகையான சிக்கல்களும் உள்ளன.

ஆனால் எந்த அமைப்பு மிக முறையாக நிதிவசூல் செய்கிறதோ, அதற்காக முற்றிலும் தொழில்முறையான அமைப்புகளை உருவாக்கியிருக்கிறதோ அது அதற்காக ஏராளமானவர்களைப் பணியமர்த்தியிருக்கிறது என்றே அர்த்தம். அது வசூல் செய்யும் தொகையில் பாதி அந்த வசூல் செய்யும் நிர்வாக அமைப்புக்கே செலவாகி விடுகிறது. இதைப் பல பெரிய தன்னார்வ அமைப்புகளில் கண்டிருக்கிறேன். அவற்றின் முதன்மையான பணி என்பது நிதிசேகரிப்புதான்.

நம்மாழ்வாரின் அமைப்புக்குக் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் எங்கள் வாசகர் குழுமம் வழியாக அனுப்பினோம். ஆனால் நாங்களேதான் மெனக்கெட்டு அனுப்பிக் கணக்கும் கொடுக்கவேண்டியிருந்தது

ஜெ

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்
அடுத்த கட்டுரைபொருளின் அறமும் இன்பமும்