தேவதேவனின் கவிமொழி -கடிதங்கள்

மனித அகம் ஒரு பொருளில் மோதித் திகைத்து அதை அடையாளப்படுத்துதல் என்னும் தத்துவத்திலிருந்து, அந்த அடையாளப்படுத்தும் சொல்லின் புறவய-நிலைத்த தன்மை மற்றும் அனைவருள்ளும் ஏற்கனவே இருக்கும் அந்தரங்கமான மொழி என்ற நுண்மையான இருநிலைகளை மொழியியல் வழியாக விளக்கி, இந்தப் பொதுமொழி படிமங்களை உருவாக்கி கையாளுவதன் மூலமாக எப்படி கவிமொழி ஆகிறது என்பதைச் சொல்லி, மறுபடியும் கவிமொழி எப்படி மானுடப் பொதுத்தன்மை பெறுகிறது என்பதை -‘மானுட உடல் சார்ந்து அறியப்படும் பிரபஞ்சம், எனவே அவ்வுடலே மொழியையும் மானுடப்பொதுமையாக ஆக்குகிறது’ – என்று தத்துவார்த்தமாக விளக்கியிருப்பது அபாரம்! தத்துவம், மொழியியல், இலக்கியம், கவித்துவம் என்று பல தளங்களில் நுணுக்கமான பல புதிய விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. தேவதேவனின் பரிணாமத்தோடு, ‘பொது’மொழியிலிருந்து மேலெழும் நல்ல கவிதையின் பரிணாமத்தையும் காட்டிவிட்டது கட்டுரை. மிக்க நன்றி ஜெ.

//சர்வதேச அளவில், மானுடப்பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது…………..மனித உடல் அழியும் என்பதால் காலம், மனித உடல் பருவடிவம் என்பதனால் வெளி. இவ்வாறு அனைத்தையும் தீர்மானிக்கும் மனித உடல்தான் மொழியின் மானுடப் பொதுத்தன்மையை உருவாக்குகிறது.//

இந்த வரிகள் இந்தக் கட்டுரையின் தரிசனம்.

-பிரகாஷ்

ஜெ ,
கவிமொழி பற்றி மிக அழகான எளிமையான விளக்கம்.இதன் தொடர்ச்சியாக ஒரு கவிதையை மொழி பெயர்ப்பதின் சவால் எத்தகையது என்று எளிதில் உணர முடிகிறது.

//பெருங்கவிஞன் இயல்பாக உலகமனைத்திற்கும் பொதுவானவனாக ஆகிறான். எதுவும் அவனை மறைக்க முடிவதில்லை//

//சர்வதேச அளவில், மானுடப்பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது.//

கட்டுரையின் மையத்திலிருந்து விலகி ஒரு கேள்வி .
இதை ஏனோ சட்டென உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை ,பல கேள்விகள்.
மானுட உடல் என்பதை விட மானுட அனுபவம் என்பது சரியாக வருமோ என்று தோன்றுகிறது .

ஒரு குருடனின் படிம மொழியும், பார்வை உடைய ஒருவனுடைய படிம மொழியும் வேறு படுமா ?

சமீபத்தில் மற்ற மொழிகளில் எளிதாக மொழிபெயர்க்க முடியாத சில வார்த்தைகளைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அதில் பிற மொழிகளில் மொழிபெயர்க்கவே முடியாத சில வார்த்தைகளப் பற்றி படித்தேன்.

உ.ம்
——————
Ilunga (Bantu): A person who is willing to forgive abuse the first time; tolerate it the second time, but never a third time.

Apparently, in 2004, this word won the award as the world’s most difficult to translate. Although at first, I thought it did have a clear phrase equivalent in English: It’s the “three strikes and you’re out” policy. But ilunga conveys a subtler concept, because the feelings are different with each “strike.” The word elegantly conveys the progression toward intolerance, and the different shades of emotion that we feel at each stop along the way.

Ilunga captures what I’ve described as the shade of gray complexity in marriages—Not abusive marriages, but marriages that involve infidelity, for example. We’ve got tolerance, within reason, and we’ve got gradations of tolerance, and for different reasons. And then, we have our limit. The English language to describe this state of limits and tolerance flattens out the complexity into black and white, or binary code. You put up with it, or you don’t. You “stick it out,” or not.

Ilunga restores the gray scale, where many of us at least occasionally find ourselves in relationships, trying to love imperfect people who’ve failed us and whom we ourselves have failed.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍—————-
மேலே குறிப்பிட்ட வார்த்தை / படிமம் உடல் மூலமாகவோ , புலன்களின் மூலமாக பெற்ற தனித்துவமான விஷயமில்லையே ஒரு பண்பாட்டில் அதிகம்
புழங்கி வந்த மிகவும் சிக்கலான தனித்தன்மை வாய்ந்த ஒரு அனுபவத்தைக் குறிக்கவே அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது? அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு நிகழ்வுதானே மேலே சொல்லப்படுவது? பாண்டு மொழியில் மட்டும் இதற்கு தனியாக ஒரு வார்த்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன ? அவர்களின் சமூகத்தில் , கலாசாரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் இந்த உணர்வு அதிகம் உணரப்படுவதால்தானே ?

கார்திக்

அன்புள்ள கார்த்திக்

நீங்கள் சொல்வது கவித்துவத்தின் தனித்தன்மைகள் பற்றி. அவை எப்போதுமே கவிதையில் உள்ளன. அவைதான் கவிதையை மொழியாக்கம்செய்யமுடியாதவையாக ஆக்குகின்றன. மொழியாக்கம்செய்யக்கூடுவதாக, உலகமனைத்துக்கும் புரிந்துகொள்ளத்தக்கதாகக் கவிதையை ஆக்குவது எது என்பதே என்னுடைய வினா. அது கவிதையில் உள்ள படிமம். படிமம் என்பது உடலால் ஆக்கப்படுவது, அறியப்படுவது. மானுட உடலே மானுடப்பொதுவானது. பிறிதெல்லாம் தனித்துவம் கொண்டது என்பதே நான் சொல்லவருவது

நீங்கள் சொல்லும் சொற்கள் மட்டும் அல்ல பெரும்பாலான கருத்துருவச் சொற்கள் மொழியாக்கம் செய்ய முடியாதவை. தர்மம், கர்மம், மாயை போன்ற சொற்களை மொழியாக்கம் செய்ய முடியவில்லை என்பதை சமீபத்தில் அம்பேத்கரை வாசித்தபோதும் உணர்ந்தேன். சரியான பொருளில் கற்பை மொழியாக்கம் செய்யமுடியுமா என்ன? Chastity virginity என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் அவை கற்புக்கான மொழியாக்கச் சொற்கள் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைதேவதேவனின் பித்து..
அடுத்த கட்டுரைதாய்