தேவதேவன் கடிதம்

மனித அகம் ஒரு பொருளில் மோதி திகைத்து அதை அடையாளப்படுத்துதல் என்னும் தத்துவத்திலிருந்து, அந்த அடையாளப்படுத்தும் சொல்லின் புறவய-நிலைத்த தன்மை மற்றும் அனைவருள்ளும் ஏற்கனவே இருக்கும் அந்தரங்கமான மொழி என்ற நுண்மையான இருநிலைகளை மொழியியல் வழியாக விளக்கி, இந்தப் பொதுமொழி படிமங்களை உருவாக்கிக் கையாளுவதன் மூலமாக எப்படி கவிமொழி ஆகிறது என்பதைச் சொல்லி, மறுபடியும் கவிமொழி எப்படி மானுடப் பொதுத்தன்மை பெறுகிறது என்பதை -‘மானுட உடல் சார்ந்து அறியப்படும் பிரபஞ்சம், எனவே அவ்வுடலே மொழியையும் மானுடப்பொதுமையாக ஆக்குகிறது’ – என்று தத்துவார்த்தமாக விளக்கியிருப்பது அபாரம்! தத்துவம், மொழியியல், இலக்கியம், கவித்துவம் என்று பல தளங்களில் நுணுக்கமான பல புதிய விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. தேவதேவனின் பரிணாமத்தோடு, ‘பொது’மொழியிலிருந்து மேலெழும் நல்ல கவிதையின் பரிணாமத்தையும் காட்டிவிட்டது கட்டுரை. மிக்க நன்றி ஜெ.

//சர்வதேச அளவில், மானுடப்பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது…………..மனித உடல் அழியும் என்பதால் காலம், மனித உடல் பருவடிவம் என்பதனால் வெளி. இவ்வாறு அனைத்தையும் தீர்மானிக்கும் மனித உடல்தான் மொழியின் மானுடப் பொதுத்தன்மையை உருவாக்குகிறது.//

இந்த வரிகள் இந்தக் கட்டுரையின் தரிசனம்.

-பிரகாஷ்

அன்புள்ள எழுத்தாளருக்கு…

ஒரு புல் நுனியிலிருந்து பெருங்காட்டையே உருவகித்துக் கொள்ள முடிந்தவர் கவிஞர் தேவதேவன் என்று படித்ததிலிருந்து அது எப்படி இயலும் என்று சந்தேகம் இருந்தது.

பெங்களூர் கக்கதாஸபுரா ரெயில்வே தடத்தை ஒட்டிப் புதிதாக ஒரு கேரள மாதிரிக் கோயிலை எழுப்பி இருக்கிறார்கள். கணபதியும், அய்யப்பனும், பகவதியுமாக நாராயணிதேவி கோயில்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை இருவரும் சென்றிருந்தோம். தரிசனம் முடித்து விட்டுக் கிளம்பும் போது மழை பிடித்து விட்டது. அடித்து ஊற்றிக் கொண்டிருந்த போது, பகவதி க்ஷேத்ரத்தின் நிலை வாயில் மேல் பார்த்தேன். இருபுறமும் நான்கு நாகங்கள் ஜோடி ஜோடியாய்ப் பின்னிக் கொண்டிருக்க, நடுவில் பயங்கரமாய் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு அகோர முகம்.

’வெறும் அதிநெருக்கக் காடுகள் மட்டுமே இருந்த காலங்களில் பாம்புகள் பெரும்பான்மையான தேசத்தில், அங்கே வாழ்ந்து வந்த பழங்குடியினர் உருவாக்கிய அம்மன் வழிபாடு தான் இப்போது இங்கே தொடந்து வந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்திற்கே என்னால் சில நொடிகளில் பயணம் செய்ய முடிந்தது. அந்த மனிதர்கள், அரவங்களுடனான அவர்களின் உறவுகள், இயற்கை நிகழ்வுகளைப் படிமைப்படுத்துதல்…போன்ற அனைத்தையும் அந்த சிற்பங்கள் உருவாக்கிக் காட்டின.

ஒரு காலத்தையே சில சிற்பங்கள் திறந்து காட்ட முடியும் என்றால், பெருங்காட்டை உணர கவிஞருக்கு புல் நுனியே போதும் என்பதில் தெளிவுற்றேன்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

முந்தைய கட்டுரைதொலைவு
அடுத்த கட்டுரைசொல்லுடன் நிற்றல்