அஞ்சலி: வ.அய்..சுப்ரமணியம்

குமரிமாவட்டம் நவீனத் தமிழாய்வில் அளித்துள்ள கொடை மிக முக்கியமானது. கவிமணிதேசிக வினாயகம் பிள்ளை, கெ.என்.சிவராஜபிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வித்வான் லட்சுமணபிள்ளை, கே.கே.பிள்ளை, செய்குத்தம்பிப் பாவலர், பேரா ஜேசுதாசன் என அந்தப்பட்டியலின் முதன்மைப்பெயர்கள் பல. அந்த முதல்வரிசைப்பட்டியலில் இடம்பெறுவது பேரா வ.அய்..சுப்ரமணியம் அவர்களின் பெயர்.

நாகர்கோயிலில் வடசேரியில் 1926 ல் பிறந்த வ.அய்.சுப்ரமணியம் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுகவகுப்பும் இளங்கலையும் படித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தமிழில் முதுகலை முடித்தார். அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலையில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரைப்போல திருவனந்தபுரத்தில் நெடுநாள் பணியாற்றினார். 1965 வரை கேரள பல்கலைகழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார். 

 

மேலைநாட்டு பல்கலைகழகங்களில் நடக்கும் தமிழாய்வுகளை எல்லாம் தமிழகத்தில் ஒருங்கிணைக்கவும் அந்த தரத்திலான தமிழாய்வுகள் இங்கே நடக்கவும் ஓர் உலகத்தரமான பல்கலைக் கழகம் தேவை என்று உணர்ந்த எம்ஜியார் தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தை ஆரம்பித்தார்.1981ல் தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தின் நிறுவன துணைவேந்தராக பணியாற்ற ஆரம்பித்த வ.அய்.சுப்ரமணியம் 1986ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது அப்போதைய அரசியலாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்த பல்கலைக்கழகம் அந்நிமிடம் சிதிலமடைய ஆரம்பித்து இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.

அதை முன்னுணர்ந்ததுபோல தன்னுடைய விடுதல் குறிப்பில் வ.அய்.சுப்ரமணியம் இவ்வாறு எழுதியிருந்தார். ”…என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும். பொருள்முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப்பண்பாட்டை காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நன்று…”

நான் இரண்டுமுறை மட்டுமே வ.அய்.சுப்ரமணியம் அவர்களைச் சந்தித்திருக்கிறேன்.  1988 வாக்கில் அவர் தஞ்சை தமிழ்பல்கலையில் இருந்து விடுபட்டு நாகர்கோயிலில் இருந்த நாட்களில். முதல்முறை எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் சுந்தர ராமசாமியுடன் நடக்கச்சென்றபோது வ.அய்.சுப்ரமணியம் அவரது சிறு குழுவுடன் அமர்ந்து பேசிக்கோண்டிருந்தார் .அனேகமாக தினமும் எஸ்.எல்.பி பள்ளிக்கு மாலைநடை வந்துகொண்டிருந்தார்

நாங்கள் அருகே சென்றதும் சுந்தர ராமசாமி வணக்கம் சொன்னபின் என்னை அறிமுகம்செய்துவைத்தார். வ.அய்.சுப்ரமணியம் என்னை பார்த்து அளவோடு சிரித்தபின் ”எந்த ஊர்?” என்றார். நான் ”திருவரம்பு” என்றேன். ”அங்கே என்ன கோயில் இருக்கிறது?” என்றார்.”மகாதேவர் கோயில்…” என்றேன்.

வ.அய்.சுப்ரமணியம் ”அந்த ஊர் ஆற்றுக்கரையில்தானே இருக்கிறது?” என்றார். ”ஆமாம் தாம்ரவருணி கரையில்” [குமரியில் ஒரு தாமிரவருணி உண்டு] அவர் ”கோயில் எந்த திசை நோக்கி தர்சனம்?” என்றார்.நான் ”மேற்கே” என்றேன். அவர் என்னை கூர்ந்து நோக்கி ”வழக்கமாக மேற்குநோக்கி கோயில்களை அமைப்பதில்லையே”என்றார். நான் ”பொதுவாக கேரள வாஸ்துகலையின்படி ஆற்றங்கரைக் கோயில்கள் ஆற்றை நோக்கித்தான் இருக்கும்” என்றேன். ”திர்ப்பரப்பு கோயில்கூட மேற்கே நோக்கித்தான் இருக்கிறது”

”நீங்கள் மலையாளிகளா?” என்றார் வ.அய்.சுப்ரமணியம் ”ஆமாம்”என்றேன். ”ஆனால் தலைமுறைகளாக தொழில் தமிழில்தான்” என்றேன். மெல்ல சிரித்து ”மேற்கே கோட்டயம் வரை ஒருகாலத்தில் தமிழ்தானே அதிகாரபூர்வ மொழி” என்று சொல்லிவிட்டு வ.அய்.சுப்ரமணியம் ”நாயர்களில் பிடாகை அமைப்பு உண்டா?” என்றார்.

”இருந்திருக்கிறது. மார்த்தாண்ட வர்மா காலம் வரை 108 பிடாகை என்ற அமைப்பு இருந்திருக்கிறது. மார்த்தாண்ட வர்மா அதை அழித்தார். அதன்பின் சிறிய சிறிய பிடாகைகள் இருந்தன. வேலுத்தம்பி தளவாயின் கலகத்துக்குப் பின் கர்னல் மன்றோ அவற்றையும் இல்லாமலாக்கினார். வேளாளர்களின் பதினெட்டு பிடாகை என்ற அமைப்பு அப்படி அழியாமல் அதே அதிகாரத்துடன் மருமக்கத்தாய ஒழிப்பு வரை நீடித்தது” என்றேன்

வ.அய்.சுப்ரமணியம் சுந்தர ராமசாமியிடம் ”நல்லது, ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய மண்ணைப்பற்றியும் வரலாற்றைப்பற்றும் தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் என்ன எழுதினாலும் பயன் இல்லை” என்றார். அதன்பின் என்னைப்பார்த்து ‘சரி, நீ போ ‘ என்பது போல தலையசைத்தார்

நான் அவரது தோரணையால் எரிச்சல் அடைந்தேன். ஒன்று அவர் கிட்டத்தட்ட அச்சுத்தமிழில் பேசினார். என்னை ஒரு மாணவனைப்போல நடத்தினார் – அதாவது பழங்கால கண்டிப்பான ஆசிரியர்களின் தோரணையில். என்னை அவர் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்ற எண்ணம்  எனக்கு ஏற்பட்டது. ஏன் சுந்தர ராமசாமியையும் அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

”அவர் நெஜம்மாவே ஒரு பழங்கால வாத்தியார்தான்” என்றார் சுந்தர ராமசாமி ”ஆனா கல்விப்பணிக்காகவே உடல் பொருள் ஆவி எல்லாத்தையுமே ஒப்படைச்சுகிட்ட பழங்கால வாத்தியார்கள் உண்டுல்ல, அப்டிப்பட்டவர். பெரிய விஷயங்களை பண்ணினவர்”

”அவ உங்களை மதிக்கலியே” என்றேன். ”அவருக்கு மாடர்ன் லிடரேச்சர்னா என்னன்னே தெரியாது. லிட்டரேச்சர்னா அது ரிசர்ச் மெட்டீரியல்தான் அவருக்கு. சுத்தமா டேஸ்டே கெடையாது. அவர் ஒரு ஸ்காலர் அவ்ளவுதான்”

”வையாபுரிப்பிள்ளை மாதிரி?” என்றேன். ”சேச்சே, வையாபுரிப்பிள்ளை பெரிய இலக்கிய ரசிகர். அந்த ரசனை அவரோட லேங்வேஜ் ஸ்டைலிலேயும் தெரியும். இவருக்கு அப்டி ஒண்ணுமே கெடையாது. இவரோட தமிழ் நடை இரும்பை உருக்கி வார்த்தது மாதிரி  இருக்கும். தமிழ்ப்பண்பாடு மேலே தீராத ஆர்வத்தோட ஆராய்ச்சி செய்த அறிஞர் இவர். அப்றம் அப்டிப்பட்ட ஆய்வுகளை எல்லாம் ஒருங்கிணைக்கத் தெரிஞ்ச நிர்வாகி. அவ்ளவுதான்”

பின்னர் பலமுறை  அங்கேயே வ.அய்.சுப்ரமணியம் அவர்களைப் பார்த்தேன். சும்மா ஒரு தலையசைப்பு அவ்வளவுதான். அதன்பின் ஒருமுறை அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பார்த்தேன். அவர் அருகே சென்று வணக்கம் சொன்னேன். ”நீ யார்?” என்றார். நான் என்னைப்பற்றி சொன்னேன் ”இப்போது நினைவு வருகிறது” என்றார். அத்துடன் சரி. நான் விலகிப்போய் அமர்ந்துகொண்டேன்

அவர் உயர்பதவிகளில்  இருந்தமையால் எப்போதுமே அவரைத்தேடி வருபவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருப்பார். நம்மவர்கள் இரண்டாம் சந்திப்பிலேயே சிபாரிசு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். பல்வேறு உயர்பதவிகளை வகித்த வ.அய்.சுப்ரமணியம் தன் ஊதியத்துக்குமேல் எதையுமே ஈட்டியரவல்ல. தன் குடும்ப சொத்தான ஓட்டுவீட்டில் சாதாரணமாக குடியிருந்தார்.

அ.கா.பெருமாள் வ.அய்.சுப்ரமணியம் அவர்களைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். வ.அய்.சுப்ரமணியம் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான முறைமையும் இல்லாமல் முழுமையான வாசிப்பு இல்லாமல் விருப்பப்படி தமிழாராய்ச்சி செய்வதன்மேல் ஒருவகையான பொறுமையின்மை கொண்டிருந்தார். அத்தகையவர்களை அவர் நெருங்கவே விடுவது இல்லை. அதேசமயம் உண்மையான ஆய்வாளர்களுக்கு மிக இனியவராக ஆகி நெருங்குவ்து அவர் இயல்பு. அ.கா.பெருமாள் வ.அய்.சுப்ரமணியம் அவர்களுக்கு அண்மையானவராகவே இருந்தார்.

எம்.ஜி.ஆர்தஞ்சை தமிழ்பல்கலைக் கழகத்தை வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் ஆலோசனைப்படி அவரை முன்னிறுத்தியே தொடங்கினார். உலகத்தரமான ஒர் தமிழாய்வு நிறுவனமாக தஞ்சை தமிழ்பல்கலையை உருவாக்க வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முடிந்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை சுந்தர ராமசாமி அவரது ஒரு கட்டுரையில் சொல்கிறார்.

பல்கலை துணைவேந்தராக வ.அய்.சுப்ரமணியம் பொறுப்பேற்று அமர்ந்திருக்கும்போது எம்.ஜி.ஆர் அவரைச் சந்திக்க பல்கலைக்கு வந்தார். எம்ஜிஆர் வரும்செய்தி வ.அய்.சுப்ரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டது. வ.அய்.சுப்ரமணியம் வாசலுக்கு வந்து எம்.ஜி.ஆர்ரை சந்தித்து வரவேற்க வேண்டும் என்று சில சொன்னார்கள். மரபுப்படி துணைவேந்தர் கவர்னரை மட்டுமே அப்படி வரவேற்க வேண்டும், மரபுகளை மீறக்கூடாது என்று வ.அய்.சுப்ரமணியம் மறுத்துவிட்டார். அதை எம்.ஜி.ஆரும் புரிந்துகொண்டார்.

வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் கனவான தஞ்சை தமிழ்பல்கலைகழகம் எம்ஜியாரின் மரணத்துக்குப் பின் அரசியல் ஊடுருவலால் சீரழிந்து செயல்ற்று போவதை   அவர் கண்டார். இன்று அது ஒரு மாபெரும் சடலம்போல மட்கிக்கொண்டிருக்கிறது. அந்த அழிவு வ.அய்.சுப்ரமணியம் அவர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியதென்றாலும் அவர் சோர்ந்து போகவில்லை. குப்பம் திராவிடப் பல்கலைக்குப் பொறுப்பேற்று தமிழாய்வுக்கும் தென்னிந்தியப் பண்பாட்டாய்வுக்கும் அவர் அரும்பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட தஞ்சை பல்கலை செய்ய நினைத்ததை அவர் குப்பம் திராவிட பல்கலையில் செய்து முடித்தார். இன்று தமிழ் பண்பாட்டாய்வில் முக்கியமான எல்லா நூல்களும் குப்பம் திராவிடப் பல்கலை வெளியீடாக வந்தவையே

வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் பங்களிப்பு என்ன? மரபான தமிழறிஞராக இருந்தாலும் அவர் அமெரிக்க பல்கலையில் பயின்றவர். ஆகவே முறைமை மீது அழுத்தமான பற்று கொண்டவர். தமிழாய்வை அறிவியல் விதிகளின்படி மட்டுமே நடத்தவேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தார். தமிழாய்வு என்றால் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துதல் என்ற சமவாக்கியம் இருந்த சூழலில் இந்த அறிவியல் அணுகுமுறையே அவர் தமிழுக்கு அளித்த பெரும் கொடை.

இந்நோக்கு மொழி ஆய்வில் அறிவியல் அடிப்படையை என்றுமே வலியுறுத்திய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டது. வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றுதான் தமிழாய்வுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கச் செய்தது. ஆனால் வ.அய்.சுப்ரமணியம் அந்த தமிழ்ப்பற்று தன் ஆய்வுக்கு குறுக்கே வர அனுமதித்தவரல்ல. இந்த நடுநிலைமை தமிழாய்வில் என்றும் தேவையாக இருக்கக் கூடிய ஒன்று. தன் மாணவர்களில் அந்த நோக்கை வலியுறுத்தி பயிற்றுவித்தது தமிழில் ஒரு மரபை உருவாக்கியது.

வ.அய்.சுப்ரமணியம் அவர்கள் நேற்று 29-6-2009 அன்று காலமானார்.  அவர்களுக்கு அஞ்சலி

 

மு.இளங்கோவனின் இணையப்பதிவு

http://muelangovan.blogspot.com/

முந்தைய கட்டுரைலோகி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவட்டார வழக்கு:கடிதங்கள்