நாள் என

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நேற்றிரவு ஒரு கனவு ஜெ. உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொல்கிறேன் என்னுடைய நாட்குறிப்பு அன்றன்று எழுதப்படாமல் பின்தங்கியிருக்கிறது என்று. நீங்கள் அதற்குப் பதிலாக ஒரு திருக்குறளைச் சொல்கிறீர்கள். திருக்குறளை வார்த்தை சுத்தமாகக் கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால் என்ன குறள் என்பது எட்டாத் தொலைவில் இருக்கிறது. அந்தக் குறளுக்குப் பிறகு இருவரும் சிரிக்கிறோம். சுற்றிலும் மனிதர்கள் இருந்ததாகத் தோன்றுகிறது…அவர்கள் சிரித்ததாகவும் தோன்றுகிறது. உறுதியாகக் கூற முடியவில்லை. அதன் பிறகு நான் இவ்வாறு செய்வதில்லை என்று உங்கள் அனுபவத்தினால் ஏற்பட்ட பழக்கம் ஒன்றைக் கூறுகிறீர்கள். அதற்கும் முன்பு பேசிய நாட்குறிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. எதைப் பற்றிக் கூறினீர்கள் என்பது காலையில் நினைவு இருந்தது. இப்போது கனவை மீண்டும் நினைவு கூறும் போது மறந்துவிட்டது. பொக்கிஷம் இழந்துவிட்டது போல் தோன்றுகிறது.

அந்தத் திருக்குறள் என்னவாக இருக்கும் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒன்றும் சொல்ல வேண்டும் ஜெ, முந்தைய நாள் கனவில் யானை தோன்றியது. ஏதோ விரிவான கனவுதான். ஆனால், விடிந்த பின் நினைவுகூர்ந்த போது, யானை மட்டுமே நினைவில் எஞ்சியது. யானை பற்றி நினைக்கும் போது உங்களை நினைக்காது இருக்க முடிவதில்லை. கனவென்றாலும் இது பொருந்துகிறது.

சமீபத்தில் உங்களைத் துன்புறுத்துவதாக எண்ணி வழக்குத் தொடர்ந்தவரை நினைத்துப் பரிதாபமே கொள்கிறேன். மற்றபடிக்கு, இது போன்ற நிகழ்வுகள், உங்கள் உண்மையான வாசகர்களுக்கு உங்கள் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் வேண்டுமானால் மேலும் அதிகப்படுத்துவதன்றி, பழிப்போர் எதிர்பார்க்கும் எந்த எதிர்மறை சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. உணமையமான வாசகர்கள், சத்தியத்தோடு எழுதுகிற எழுத்தாளனோடு கொள்கிற அந்தரங்கமான ஆத்மார்த்தமான உறவு இவர்கள் அறிந்திட முடியாதது.

நன்றி,
வள்ளியப்பன்

அன்புள்ள வள்ளியப்பன்,

கனவில் நாம் எவ்வளவுமேதையாக இருக்கிறோம் என நான் நினைத்துக்கொள்வதுண்டு. நான் கனவில் குறள் வாசித்ததுண்டு. எல்லாமே திருக்குறளில் இல்லாத அற்புதமான குறள்கள். அவை எனக்குள் உள்ள திருவள்ளுவரால் எழுதப்பட்டவை. கண்விழித்தால் அவை இல்லாமலாகிவிட்டிருக்கும்

என்ன குறள்? விழித்திருந்தால் இந்தக்குறளைச் சொல்லியிருப்பேன்’’

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்;
வாள் அது உணர்வாற் பெறின்.

உணர்ந்து பார்ப்பவரின் கண்ண்ணில் பார்வைக்கு ஒன்றுபோலவே இருக்கக்கூடிய பற்பல நாட்களாகத் தன்னைப் பிரித்துக்காட்டும் அது ஒரே வெட்டாக உயிரை வெட்டித்தறிக்கும் வாள் போன்றதாகும்.

காலம் நம்மால் துளித்துளியாக உணரப்படுகிறது. நொடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் வருடங்கள். இவை நம் பிரக்ஞையால் உணரப்படுபவை. துண்டுபட்ட காலம் இது. [கண்டகாலம்].

ஆனால் இந்தப் பகுப்புக்கு அப்பால் காலம் என்பது என்ன? அது ஒரே பெருநிகழ்வு. துண்டுபடாத காலம் அது [ அகண்டகாலம்] பிரபஞ்சம் என்பது ஒரே பெருநிகழ்வு. நாம் பிரித்துக்கொள்ளும் காலம் இல்லையேல் அது ஒரு கணம் என்றே சொல்லலாம்.

இருவகைக் காலத்தையும் ஒரேவரியில் சொல்கிறது இக்குறள். மின்னல் போலக் கண்ணிமைக்கும் கணத்தில் நிகழ்வதை நாள் நொடி எனப்பிரித்து உணர்ந்து அதில் திளைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅகம் மறைத்தல்
அடுத்த கட்டுரைமொழி