அஞ்சலி: லோகித தாஸ்

நேற்று திரிச்சூரில் இருந்து கரண்ட் புக்ஸ் கெ.ஏ.ஜோணி கூப்பிட்டிருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு பொதுவாக லோகித்தாஸ் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். கடந்த ஒருவருடமாக லோகி திரிச்சூரில்தான் குடியிருந்து வருகிறார். ஜோணி சாகரிகா என்ற தயாரிப்பாளர் எடுக்கவிருக்கும் படத்துக்காக திரைக்கதை எழுத. மோகன்லால் நடிப்பதாக இருந்தது. அதன் விவாதத்துக்காக நான் சென்று அவருடன் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். அப்போதுதான் நாடகவிழாவையும் பார்த்தோம்.

இரண்டுமாதம் முன்பு கூப்பிட்டபோது மோகன்லால் படத்தின் திட்டத்தை கைவிட்டுவிட்டதாகவும் பிரித்விராஜை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாகவும் மனிரத்தினம் படம் முடிவதற்காக காத்திருப்பதாகவும் சொன்னார். ஜோணி ‘லோகி இப்போது திரிச்சூரில் இல்லை. கொஞ்சநாளாகவே ஏதோ காய்ச்சல். ஓய்வெடுப்பதற்காக அவரது சொந்தவீடான ஆலுவாவிற்கே சென்றுவிட்டார்’ என்றார்

இன்றுகாலை முதல் இருமுறை அவரை கூப்பிட்டேன். எண் கிடைக்கவில்லை. கொஞ்சநேரம் முன்பு கல்பற்றா நாராயணன் கூப்பிட்டார். லோகி இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் சொல்வதாகச் சொன்னார். சமீப காலத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி கிடைத்ததில்லை.

லோகித்தாஸ¤க்கு ஐம்பத்தைந்து வயது என நினைக்கிறேன். அவர் சொல்வதில்லை. இளமையான தோற்றத்தை தக்கவைக்க விரும்புவார். மிக உற்சாகமான மனிதர். அபாரமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். இலக்கியவாசகர். இசை ரசிகர். முழுக்கமுழுக்க கலைஞர். அவருடன் என் நாட்களெல்லாம் இலக்கியமும் வேடிக்கையுமாகவே கழிந்திருக்கின்றன.

அவரை சினிமாவில் என் ஆசானாகவே எண்ணியிருக்கிறேன். எனக்கு மீண்டும் மீண்டும் திரைக்கதை சொல்லித்தந்தவர். என்னை வலுக்கட்டாயமாக சினிமாவுக்குக் கொண்டுவந்தவர். என் சொந்த அண்ணனின் இடத்தில் எப்போதும் இருந்தவர். பிரியமே உருவானவர். விசித்திரமான குழந்தைத்தனங்கள் கொண்டவர். சாப்பாடுப்பிரியர்.

லோகித்தாஸின் மனைவி சிந்து. இரு மகன்கள். சமீபகாலமாக அவரது பல படங்கள் சரியாக ஓடவில்லை. அந்த மனச்சோர்வு இருந்தது.ஆ னால் எம்.டி.வாசுதேவன் நாயருக்குப் பின் மலையாளத் திரையுலகின் மாபெரும் திரைக்கதை ஆசிரியர் அவர்தான். ‘தனியாவர்த்தனம்’ அவரது முதல் படம். எழுதாப்புறங்ஙள், கிரீடம், செங்கோல், குடும்பபுராணம், சஸ்னேகம், முத்ரா, வளையம், தனம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, ஆதாரம் ,ஜாதகம், கௌரவர், வெங்கலம், பாதேயம், உத்யானபாலகன், தூவல்கொடாரம், சல்லாபம், வாத்ஸல்யம், அமரம், மகாயானம், கமலதளம், பரதம்  வீண்டும் சில வீட்டு விசேஷங்ங்கள் போன்ற பல மறக்கமுடியாத படங்களை எழுதியவர் லோகி . கலைரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றவை பல படங்கள்.

 

லோகி அவரது முதல்படமான பூதக்கண்ணடிக்காக சிறந்த முதல்பட இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார். காருண்யம் சூத்ரதாரன் போன்று அவர் இயக்கிய முக்கியமான வெற்ற்ப்படங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இருபது முறை அவர் சிறந்த திரைக்கதைக்கான ‘·பிலிம் கிரிடிக்ஸ் அவார்ட்’ பெற்றிருக்கிறார்.தமிழில் கஸ்தூரிமான் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். திரைக்கதைக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். மீராஜாஸ்மின், மஞ்சுவாரியர், திலீப், கலாபவன் மணி போல அவர் திரைக்கு அறிமுகம்செய்த நட்சத்திரங்கள் பலர் 

லோகிக்கு கண்ணீர் அஞ்சலி