விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]

சுஜாதா அறிமுகம்

ஒரு நண்பர் சந்திப்பில் கேட்கப்பட்டது, இலக்கியவிமரிசன அளவுகோலின்படிக் கறாராகச் சொன்னால் தமிழில் சுஜாதாவின் இடம் என்ன? பலசமயம் இத்தகைய கேள்விகளுக்கு ஒரே வரிப்பதில்களைச் சொல்ல முடியாது. சொல்லிவிட்டு ‘இருந்தாலும்’, ‘மேலும்’ என்று சொல்லிச்சொல்லி விரிவாகக் வேண்டியிருக்கும். சொன்ன வரியை ‘ஏனென்றால்’ என்று மேலும் மேலும் விளக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அப்படிச் சொல்வதென்பது ஓர் இலக்கியவிமர்சகனுக்கு இன்றியமையாதது – அதன் மூலம் அவன் தன் சிந்தனைகளை தொகுத்துக் கொள்கிறான்.

சுஜாதா முதலாவதாக ஒரு நடையாளர் – stylist. தமிழில் அவரது முக்கியமான பங்களிப்பு அதுதான். ஒரு வகையில் அது ஆச்சரியமானது. தமிழில் சிற்றிதழ்களில் குறைவாக எழுதிய பலரது நடைகள் மெல்லமெல்ல தேய்வழக்குகளாக மாறி தேங்கின. சுஜாதா முன்னகர்ந்துகொண்டே இருந்தார், கடைசிக்கணம் வரை புதிதாக இருந்தார். வணிக இதழ்களில் எழுதிக்குவித்த ஒரு படைப்பாளி அப்படி இருந்தது ஒரு பேராச்சரியம். அவரது தேய்வழக்குகளை பிறர்தான் பின்பற்றினார்கள். அவர் கடைசியாக எழுதிய குறிப்புகள்கூட அப்போது பிறந்த நடையுடன் இருந்தன

மிகப்பரவலாக, மிகவும் வாசிப்புத்தன்மையுடன், நெடுநாட்கள் வந்துகொண்டிருந்தன சுஜாதாவின் எழுத்துக்கள். புறக்கணிக்கவே முடியாத படைப்பூக்கம் கொண்டவையாக இருந்தன. ஆகவே அவர் உருவாக்கிய பாதிப்பு மிகமிக அடிப்படையானது. நான் ஏற்கனவே சொன்னதுபோல நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் நடையின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாதவர் கோணங்கி மட்டுமே. சொற்றொடர் அமைப்புகள், சொற்றொடர்களை நடுவே வெட்டுதல் தாவிச்செல்லுதல் என அவரது ஏதேனும் ஓர் அம்சம் படைப்பூக்கத்துடன் எழுத்தாளர்களை பாதித்திருக்கும்.

சுஜாதாவின் படைப்புகள் எவை முக்கியமானவை? கண்டிப்பாக சிறுகதைகள்தான். தமிழ்ச்சிறுகதையின் எந்த ஒரு இறுக்கமான பட்டியலிலும் ஒரு சுஜாதா கதை இடம்பெறவேண்டும். சிறுகதைக்குரிய செவ்வியல் வடிவில் எழுதியவர் அவர். கனகச்சிதமான வருணனைகள், சுருக்கமான சரளமான உரையாடல்கள், மறக்கமுடியாத யதார்த்தம் மூலம் நம் கற்பனையில் வாழ்க்கையின் ஒரு துளியை நிறுவி விட முடிந்த அவரது சிறுகதைகள் எப்படியும் ஐம்பது கதைகள் உள்ளன.

அதற்குப்பின்? சுஜாதாவின் குறுங்கட்டுரைகள் முக்கியமானவை. தன் அப்பா அம்மாவைப்பற்றிய அவரது சித்தரிப்புகள், ஸ்ரீரங்கம் காட்சிகள், சரளமான சுயசரிதைக் குறிப்புகள் ஆகியவை தமிழிலக்கியத்தின் மிகவும் படைப்பூக்கம் கொண்ட பகுதிகள். பொதுவாக குறுங்கட்டுரைகள் நம் மொழியில் வலுவான இலக்கிய வகைமை அல்ல. ஆகவே அந்தத் தளத்தில் சுஜாதாவுக்கு ஒரு முன்னோடியின் இடம் உண்டு.

குறுங்கட்டுரைகள் நடையாலேயே தங்களை நிறுவிக்கொள்பவை. இறுக்கமான கச்சிதமான வடிவம் தேவைப்படுபவை. தகவல்கள் புதுமையாக அமையவேண்டிய கட்டாயம் உள்ளவை. கொஞ்சம் புனைவுக்குள் கால் நீட்டி நிற்க வேண்டியவை. சுஜாதாவின் குறுங்கட்டுரைகள் இக்குணங்கள் அனைத்தும் கொண்டவை. அவரது இயல்புக்கு மிகப்பொருத்தமான வடிவமாக அது இருந்தது.

அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள். சுஜாதா நாடகங்கள் எழுதவந்தபோது அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷன் தனியார் நாடக அமைப்புகளுக்கு நிதியை அள்ளி விட்டு  நாட்டார் அரங்கையும் புராண அரங்கையும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருந்தது. நாடகம் என்றாலே அது யதார்த்தமல்லாத கதைச் சித்தரிப்பும் செயற்கையான அசைவுகளும் குறியீடுகளும் கொண்டதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்நிலையில் முற்றிலும் யதார்த்தமான சுஜாதாவின் நாடகங்கள் சபாநாடகங்களின் உலகுக்குள் சென்று அமைந்தன. அங்கே ஏற்கனவே மெரினா போன்றவர்கள் எழுதும் சென்னைபிராமண நாடகங்களின் ஒருபகுதியாக இவையும் பார்க்கப்பட்டன.

ஆனால் சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை.

ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.

இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே.

மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.

இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. அவரது நாடகங்களை டென்னஸி வில்லியம்ஸ், பீட்டர் ஷா·பர் ஆகியோரின் நாடகங்களுடன் இரு கோணங்களில் ஒப்பிடலாம். அவற்றைப்போலவே சுஜாதாவின் ஆக்கங்களும் மேடையில் இயல்பான வாழ்க்கையை சரளமாக நிகழ்த்திக் காட்டுகின்றன. உரையாடல் மூலமே கதையை இட்டுச்செல்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையை நம் முன் விரித்து வைக்கின்றன.

சுஜாதாவின் எழுத்தின் பலம் அவரது உரையாடல்கள். ஆகவே இவ்வகையான நாடகம் அவருக்கு மிக உவப்பானதாக அமைகிறது. உரையாடல் மூலமே கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்தை மிக நுட்பமாக அமைக்கிறார். மென்மையான நகைச்சுவை அவற்றை எப்போதும் ஆர்வத்துக்குரியவையாக ஆக்குகிறது. மேடையிலும் அந்நகைச்சுவை அலாதியான அனுபவத்தை அளிக்கிறது

பெரியவர்: நீங்களே இப்ப இந்த ஊதியத்தை சம்பாதிக்கிறதுக்கு எப்படி கடுமையா உழைச்சிருப்பீங்க…

கணபதி: அது வந்து… கடுமையா…

கல்யாணி: என்ன உழைச்சாரோ தினுசு தினுசா தினம் டிபன் கட்டிண்டு போவார்…பெசரட்டைக் கொண்டா அடையைக் கொண்டான்னு..

[பிரயாணம்]

மூன்று வசனங்களில் மூன்று கதாபாத்திரங்களின் இயல்புகள் வெளியாகிவிடுகின்றன. சுஜாதா எப்போதுமே நக்கலில் அபாரமாக வெளிப்படுவார். அது நாடகங்களை தொய்வில்லாமல் கொண்டுசெல்ல உதவுகிறது அவருக்கு. நாடகத்தில் மையச்சிக்கல் அவிழும் வரைக்கும் ரசிகர் கவனத்தை ஈர்த்து வைப்பது பெரிய சவால். தன் நகைச்சுவையின் சரளம் மூலம் அதை சாதிப்பது அவரது நாடகங்களின் வலிமை

பாலா: சிரிச்சா சும்மா கம்பி மத்தாப்பு போல இருக்கும்

பெர்னார்டு:பத்த வைச்சா? அப்றம், சொல்லுங்க…

பாலா:கருப்பாத்தாண்டா இருப்பா ஆனா நெருப்பா இருப்பாடா

பாலா :தமிழ்ல வெளயாடறிங்களே..

[பிரயாணம்]

சிறுகதைகளில் சுஜாதா பலவகைகளில் வெளிப்படுகிறார். நடுத்தரவர்க்கத்தின் இயலாமையும் சமாளிப்பும்தான் அவரது கணிசமான கதைகளின் கருக்கள். அறிவியல்கதைகள் விசித்திரமான குற்றக் கதைகள் என அவரது அக்கறைகள் பரந்தவை. ஆனால் நாடகங்களில் சுஜாதாவின் உலகம் மிகவும் குறுகி விடுகிறது. அவருக்கு பிற வடிவங்களை விட நாடகம் மிக அந்தரங்கமானதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெறால் அவரது நாடகங்களில்தான் சுஜாதா தன் சாதியச் சூழலை குடும்பப்பின்னணியை நுட்பமாகக் கொண்டு வந்திருக்கிறார். கணிசமான அவரது நாடகங்கள் நடுத்தர வர்க்கத்து தென்கலை அய்யங்கார் பின்னணி கொண்டவை

நாடகங்களில் இன்னும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று காலாவதியாகும் ஒரு தலைமுறையை தன் கதைக்கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோதவழக்கு, அன்புள்ள அப்பா, ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக்கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்லமெல்ல சமாதானம் செய்துகொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதைவிட அந்த சமரசத்தின் பரிதாபம். அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.

சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்கவைக்கும் தன்மை கொண்டவை. தாது நாடகம் என்ற நிகழ்கலையின் தர்மம் என்றே நான் நினைக்கிறேன். மேலே சிந்திப்பவர்களுக்கு தமிழின் முக்கியமான விழுமிய நிராகரிப்பு நாடகங்கள் அவை என்பது புரியும். உண்மையில் எந்த அற -ஒழுக்க மதிப்பீடுகளிலும் ஆழமான நம்பிக்கை இல்லாத நிரூபணவாத அறிவியலாளனின் கறாரான பார்வை கொண்டவர் சுஜாதா. இந்நாடகங்களிலும் பழையன கழிதல் என்ற இயற்கைவிதியை குரூரமாக முன்வைத்து அன்பு பாசம் கடமை நன்றியுணர்ச்சி என்னும் மானுட உணர்ச்சிகளுக்கு வாழ்க்கையின் இயந்திர விதிகளில் ஒரு பங்களிப்பும் இல்லை என்ற தன் முற்றிலும் எதிர்மறையான கோணத்தை நிறுவி முடிக்கிறார்.

மிக வெளிப்படையாகவே இந்த அறநிராகரிப்பை நிகழ்த்தும் நாடகம் ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’  மிக யதார்த்தமாகச் செல்லும் நாடகம் ஒரு கட்டத்தில் நாடகமே கலைந்து நடிகர்கள் நாடகத்தையும் ரசிகர்களையும் நோக்கிச் சிரிக்கும் அபத்த நிலையை நோக்கி நகர்கிறது. பல கதைகளில் பாசம் போன்ற உணர்வுகளைக்கூட அவற்றின் நடைமுறைத்தன்மையுடன் வெளிப்படுத்தி காலியாக ஆக்கிவிடுகிறார் சுஜாதா.

வந்தவன் என்ற ஓரங்கநாடகத்தில் புதிய காலகட்டத்தின் பிரதிநிதியான இளைஞன் அதன் மையக்கதாபாத்திரமான ஓட்டல்காரரிடம் இதை திட்டவட்டமாகவே சொல்கிறான். சிறியதை பெரியது, எளியதை வலியது தின்னும். இந்த இயற்கை விதிக்கு முன் உன்னுடைய தர்மம் அறம் மனிதாபிமானம் எல்லாம் அர்த்தமில்லாதவை, காலத்தில் மூழ்கி மறைந்து போ என்கிறது அது. ‘நீ ரொம்ப நல்லவன். ஆனால் நான் உன்னிடம்தான் கொள்ளையடிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் அதுதான் என்னால் முடியும்’ என்று சொல்லும் அக்கதாபாத்திரம் பலவகையிலும் சுஜாதாவின் எல்லா நாடகங்களிலும் ஓடும் மையத்தைச் சுட்டுகிறது

நாடகம் என்ற கலைவடிவில் சுஜாதாவின் நாடகங்களில் குறையும் அம்சம் என்றால் கவித்துவம் என்று சொல்லலாம். நாடகம் அதன் உச்சத்தில் தரிசனதளம் நோக்கி நகர்கிறது. ஒரு பிரபஞ்ச தரிசனம் ஒரு மேடையில் ஒருசில கதாபாத்திரங்கள் மற்றும் தருணங்கள் வழியாக வெளியாகவேண்டுமென்றால் அது உயர்கவித்துவமாகவே அமைய முடியும். அந்த தளம் நோக்கி நகரக்கூடிய சுஜாதா நாடகங்கள் எவையும் இல்லை. நாடகமேடையை வாழ்க்கை நிகழும் ஒரு துண்டுநிலமாக அவர் மாற்றுகிறார். பிரபஞ்சம் நிகழும் ஒரு குறியீட்டு வெளியாக ஆக்குவதில்லை.

ஆனால் அதையும் மீறி விபரீத கவித்துவம் ஒன்று அவ்வபோது மின்னிச் செல்கிறது. அதுவே பல நாடகங்களை தமிழின் முக்கியமான இலக்கியப்பிரதிகளாக ஆக்குகின்றது. நவீன கவிதை அடைந்த எதிர்கவித்துவம் என அதைச் சொல்லலாம்

லட்சுமி:…ஏன்னா ஏதாவது சாப்பிடறேளா?

சீனிவாசன் :சாப்பிடறேன்

லட்சுமி: என்ன சாப்பிடறேள்?

சீனிவாசன் :ரத்தம்

லட்சுமி: அம்மாடி!

[கடவுள் வந்திருந்தார்]
[சுஜாதாவின் நாடகங்கள். முழுத்தொகுப்பு. உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18 பக்கம் 822  விலை 500 ]

மறுபாதி [யாழ்ப்பாணம்] கவிதைக்கான இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை Aug 30, 2009 

மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைபுதுமைப்பித்தன் ஆபாச எழுத்தாளரா?
அடுத்த கட்டுரைவிடுதலை, ஒரு கடிதம்