அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

இளம் வயதில் நான் கேட்டுப்பிரமித்த மேடைப்பேச்சாளர் என்றால் கேரள சிந்தனையாளரும் மார்க்ஸியருமான பேராசிரியர் எம்.என். விஜயன்தான். கண்ணனூரில் அவரை நான் ஒருமுறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். விஜயன் ஒருமுறை சொன்னார் ‘மிக அதிகமான புல் தின்று மிகக் கொஞ்சமாக பால் கொடுக்கும் ஒரு பசுதான் அழகியல் என்பது’

மாடு வளர்த்தவர்களுக்கு இந்த வரி இன்னும் புரியும். மாடு பகலெல்லாம் மேய்ந்துகொண்டே இருக்கிறது. மாலையில் கைகளைக்க புல் பறித்து, கழுத்தொடிய புல் கொண்டுவந்து போட்டால் அதை அரைமணிநேரத்தில் தின்று முடித்துவிடுகிறது. இரவெல்லாம் வைக்கோல் மெல்வதும் உண்டு. தின்னாமலிருக்கும் கொஞ்சநேரத்தில் தின்றதை அசைபோட்டுக்கொண்டிருக்கும். இவ்வளவும் காலையிலும் மாலையிலுமாகக் கறக்கும் இரண்டுலிட்டர் பாலுக்காக. சின்ன வயதில் நானே பிரமித்திருக்கிறேன் அவ்வளவு பாலுக்காகவா இவ்வளவு புல்?

புல் செரித்து உடலாகி ரத்தமாகி பசுவின் ஆன்மாவாக ஆகி அதன் மடியில் கசிந்திறங்க வேண்டியிருக்கிறது. அழகியல் என்பது அதைப்போன்றதுதான். உலகவாழ்க்கை அனைத்தையும் அது அறிந்து உள்வாங்கிக்கொள்ளவேண்டும். பல்லாயிரம் உலகியல்செய்திகள், பலவகைப்பட்ட உணர்ச்சிநிலைகள், முரண்படும் கருத்துக்கள் அனைத்தையும் உண்டு செரித்து உடலாக்கி உதிரமாக்கி கொள்ளவேண்டும். அதன்பின்னரே பால் ஊறும். ஒவ்வொரு எளிய அழகியல் கொள்கைக்கு அடியிலும் மிகப்பிரம்மாண்டமான வாழ்க்கை அவதானிப்பு இருக்கிறது.

நான் பின்னர் ஒருமுறை யோசித்தேன். அப்படியென்றால் ஆன்மீகம்? நானறிந்த ஆன்மஞானிகள் பலர் மிகக்குறைவாகவே வாசித்தவர்கள். மிகமிகக் குறைவாகவே வாழ்க்கையை அறிந்தவர்கள். ஆன்மீகம் பசு அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அது பட்டாம்பூச்சி. மிகக்குறைவாக உண்டு மிக அதிகமாகப் பறக்கும் உயிர் அது.

ஏனென்றால் பசு செடியையே உண்கிறது. பட்டாம்பூச்சி அச்செடியில் பூத்த மலரில் ஊறிய தேனை மட்டுமே உண்கிறது. வாழ்க்கையின் சாராம்சத்தை மட்டுமே அறிந்து வண்ணச்சிறகுகளாக அதை மாற்றிக்கொள்பவரே ஆன்மீகவாதியாக ஆகிறார்.

இலக்கியத்திற்குத் தகவல்கள் கருத்துக்கள் உணர்ச்சிகள் என எல்லாமே தேவையாகின்றன. செடியின் வேரும் தண்டும் இலைகளும் என அவற்றைச் சொல்லலாம். அச்செடியில் முளைத்த மலர் என்பது அதன் கனவு. அக்கனவின் தேன் மட்டுமே போதும் ஆன்மீகத்துக்கு. அதை நாம் படிமம் என்று சொல்லலாம்.

ஆன்மீகம் வெறுமே படிமங்கள் வழியாகவே செயல்படுகிறது. அதற்கு ஒட்டுமொத்தப் பண்பாடோ, வரலாறோ, வாழ்க்கையோ தேவையில்லை. அவற்றிலிருந்து திரண்டுவந்த ஒரு படிமம் போதும். பௌத்தப்பண்பாடும் வரலாறும் சடங்குகளும் ஒரு பௌத்தமெய்ஞானிக்குத்தேவையில்லை. ஒரு வெண்தாமரையே போதும்.

ஆன்மீகத்தின் மொழி படிமங்களே. மொழியில் விளக்கப்படும் படிமங்கள் அல்ல அவை. மனதிலிருந்து மனதுக்கு, கனவிலிருந்து கனவுக்கு நேரடியாகக் கைமாறப்படும் அகத்தின் துளிகள் அவை. அவற்றுக்கு அர்த்தமளிப்பது ஆன்மீகவாதியின் கனவும் தியானமும் மட்டுமே. கல்வி அல்ல.

அந்தப்புரிதலை மறுக்கும் ஒரு வரியைக் கேரளச் சிந்தனையாளரும் வரலாற்றாசிரியருமான பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ’நாராயணகுரு- தொகைநூல்’ என்ற முக்கியமான நூலில் வாசித்தேன். ’வரலாற்றுரீதியான ஆன்மீகம்’ என்ற சொல்லை அதில் பாலகிருஷ்ணன் பயன்படுத்தியிருந்தார். நான் ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டேன். அதென்ன வரலாற்று ரீதியான ஆன்மீகம், வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம் போல? Historical Materialism போல Historical Spritualism என ஒன்றை முன்வைக்கிறீர்களா என்ன?

உரக்கச்சிரித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் சொன்னார், ‘ஆமாம்…ஆன்மீகப்பாட்டாளிகளே , உங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, கடவுள்களைத்தவிர’ நானும் சிரித்தேன். அதன்பின் சட்டென்று தீவிரமாகி பாலகிருஷ்ணன் ஆன்மீகத்தின் வரலாற்றுப்புலம் பற்றி பேச ஆரம்பித்தார்.

ஆன்மீகம் என்பது மதம்சார்ந்ததல்ல. நெடுங்காலமாக மதங்கள் ஆன்மீகத்தைக் கையாண்டு வருகின்றன என்று சொல்லலாம். ஆன்மீகம் என்ற சொல்லை ’முழுமைநோக்கு’, ’சாராம்ச நோக்கு’ என்ற இரு அடிப்படைக்கூறுகள் கொண்டது எனலாம். வாழ்க்கையைப்பற்றிய ஒட்டுமொத்த நோக்கு ஆன்மீகத்தின் அடிப்படை. சமூகத்தை,மனிதகுலத்தை, உயிர்க்குலத்தை, பிரபஞ்சத்தை முழுக்கக் கருத்தில்கொண்டு சிந்திப்பது அது.

அச்சிந்தனையின் விளைவாக அடைந்த சாராம்சமான தெளிவையே ஆன்மீக தரிசனம் என்கிறோம். அதனடிப்படையில் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் புரிந்துகொள்ள விளக்க ஆன்மீகம் முற்படுகிறது. ஆன்மீகத்தின் உலகியல் லாபம் என்பது அறம் என்கிறார் அம்பேத்கர், அவரது புத்தரும் அவரது தம்மமும் என்ற மகத்தான நூலில்.

ஆன்மீகத்தைப்பற்றிப் பேசுபவர்கள் இரண்டு முன்முடிவுகளின் அடிப்படையில் பேசுவதை பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். ஒன்று, ஆன்மீகம் என்பது முழுக்கமுழுக்கத் தனிநபரின் அகம் சார்ந்தது. இரண்டு, ஆன்மீகம் என்பது உலகியல் விஷயங்களுடன் தொடர்பற்றது, அல்லது அதற்கு எதிரானது. உலகியல் சார்ந்த சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு அப்பால் ஆன்மீகம் அதன் தூய படிமங்கள் வழியாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பார்கள் அவர்கள்.

அவ்விரு முன்முடிவுகளும் முற்றிலும் பிழையானவை என மறுத்த பாலகிருஷ்ணன் அவ்வகையான பிழைநம்பிக்கை கொண்டவர்கள் ஆன்மீகத்திற்கான தேடலில் ஆன்மீகம் மாதிரியான இன்னொன்றைக் கைதவறுதலாக எடுத்துவிடுகிறார்கள் என்றார். அதற்காகவே ஆன்மீகம் பற்றிய வரலாற்றுணர்வை முன்வைப்பதாகச் சொன்னார்.

முதல் விஷயம் ஆன்மீகம் ஒருபோதும் ஒரு தனிநபருக்குள் நிகழ்வது அல்ல. அது மனிதகுலம் தோன்றியநாள் முதலே உருவாகி வந்த அடிப்படை வினாக்களால் ஆனது.அவ்வினாக்களுக்கு மனிதகுலம் இதுகாறும் அடைந்த விடைகள் பண்பாட்டில் நிறைந்திருக்கின்றன. அவை தரிசனங்களாகவும் படிமங்களாகவும் ஒவ்வொரு தனிமனிதனைச்சுற்றியும் பரவியிருக்கின்றன. அந்தப் பெரும்பரப்பின் ஒரு துளியாக நின்றுகொண்டுதான் ஒவ்வொருவரும் தங்கள் ஆன்மீகத்தை அடைகிறார்கள்.

அந்தப் பெரும்பரப்பைக் கடல் என்று சொல்லலாம். தனிமனித அகம் என்பது அந்தக்கடலில் உள்ள மீன். அக்கடலிலேயே பிறந்து அக்கடலையே உண்டு அதிலேயே நீந்திவாழ்கிறது அது. அந்த மீனுக்குள்ளும் கடல்தான் இருக்கிறது.

இரண்டாவதாக, ஆன்மீகம் என்பது எப்போதும் மனிதவாழ்க்கையின் வினாக்களில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒருபோதும் அது வாழ்க்கைக்கு அப்பால் தன் வினாக்களை எழுப்பிக்கொள்வதில்லை. பண்பாட்டிலும் வரலாற்றிலும் உள்ள வினாக்களுக்காக அது தேடுகிறது. சாராம்சப்படுத்தியும் நுண்மைப்படுத்தியும் பார்க்கும் போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட யதார்த்தங்களில் இருந்து விலகிச்செல்கிறது. எப்போதைக்குமான விடைகளைப்பற்றி மட்டும் பேசுகிறது. ஆனால் அதன் விடைகள் மீண்டும் அன்றாட வாழ்க்கையை நோக்கியே வருகின்றன. எந்த ஆன்மீக தரிசனமும் அறத்தரிசனமாக உருமாறி மக்களின் வாழ்க்கைக்கு வரத்தான் வேண்டும்.

பறவை மண்ணில் இருந்துதான் மேலே செல்கிறது. விண்ணின் ஒளியில் அது சுற்றிவரலாம். ஆனால் அதன் உணவு மண்ணில்தான். அதன் கூடும் குஞ்சும் மண்ணில்தான். ஆகவே அது மண்ணைத்தான் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆகவே ஆன்மீகத்தை மண்ணில் இருந்து பிரித்து நோக்கவேண்டியதில்லை. அதை எப்போதும் பண்பாட்டின், வரலாற்றின் ஒரு நுண்ணிய நிலையாக மட்டுமே எண்ணி ஆராயவேண்டும் என்று வாதிட்டார் பாலகிருஷ்ணன்.

ஆன்மீகம் படிமங்களால் நிகழ்வது. ஆன்மசாதகனின் ஆழ்மனதில் விளைவது அது. அவனுடைய கனவாலும் தியானத்தாலும் அறியப்படவேண்டியது. ஆனால் அது ஓர் உச்சநிலையில்தான். அதற்கு முன் அவன் தன் அகத்தைப் படிமங்களால் நிறைத்துக்கொள்கிறான். அந்தப்படிமங்களை அவன் எப்படி அடைகிறான் என்பது மிகமிக முக்கியமானது

அந்தப்படிமங்களை அவன் தேர்வுசெய்கிறானா இல்லை தன்னிச்சையாக அவனுக்குள் அவை வந்து சேர்கின்றனவா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலான மனிதர்களின் அகப்படிமங்கள் அவர்களின் பிறப்புச்சூழலால், வளர்ப்பால் தன்னிச்சையாக வருபவைதான். ஒருவன் இந்துவாக கிறித்தவனாக இஸ்லாமியனாக இருப்பது பெரும்பாலும் அவனுடைய தேர்வல்ல.

ஆனால் ஓர் உண்மையான ஆன்மீகசாதகன் தன்னுடைய அகத்துக்குள் வந்து நிறையும் படிமங்களை தானே தேர்வுசெய்வான். ஓர் அறிவியலாளன் தன் சோதனைச்சாலையின் பொருட்களை எந்த அளவுக்கு கவனமாக தேர்வுசெய்வானோ , எந்த அளவுக்கு நுட்பமாக அவற்றை அறிந்திருப்பானோ அந்த கூர்மையை நாம் ஆன்மீகசாதகனிடமும் எதிர்பார்க்கவேண்டும்.

அவ்வாறு ஒருவன் தனக்குள் இருக்கும் ஆழ்படிமஅச்சுக்களையும் தன்னுள் வந்து நிறையும் படிமங்களையும் சரியாக மதிப்பிட்டு அறியவேண்டுமென்றால் அவனுக்கு அவற்றைப்பற்றிய வரலாற்றுப்புரிதல் தேவை. அந்தத் தெளிவு உடைய ஆன்மீகத்தையே வரலாற்றுரீதியான ஆன்மீகம் என்கிறேன் என்றார் பாலகிருஷ்ணன்.

ஆமாம். பட்டாம்பூச்சி தேனை அருந்துகிறது. ஆனால் தேனை அது தேடித்தேடி சேகரிக்கிறது. தேன் என அது சர்க்கரைக்கரைசலைக் குடிப்பதில்லை. தேனை மட்டும் தேடும் அந்தப் பிரக்ஞையை வரலாற்றுணர்வு என்று சொல்லலாம்

அப்படிப்பார்த்தால் நாம் நம்முடைய ஆன்மீகத்தை சரியான வரலாற்றுணர்வுடன் புரிந்துகொண்டிருக்கிறோமா என்ன? நம்முடைய பொருளியலைப்பற்றி நாம் கவலை கொள்கிறோம். அரசியலைப்பற்றி கவனமாக இருக்கிறோம். ஆன்மீகத்தைப்பற்றிப் பொருட்படுத்துவதில்லை

ஆன்மீகம் தேவையில்லை என்று நினைக்கிறோம். அப்படி ஒன்று நம்மில் இல்லை என்று எண்ணுகிறோம். ஆனால் வாழ்க்கையைப்பற்றி ஒட்டுமொத்தமாக அணுகி சாராம்சப்படுத்திக்கொண்ட ஒரு நோக்கு இல்லாத மனிதனே இல்லை. அதுவே அவனுடைய ஆன்மீகம். அந்த ஆன்மீகத்தில் இருந்தே நம்முடைய கனவுகளும், இலட்சியங்களும், அறமும் உருவாகின்றன.

அந்த ஆன்மீகம் நம்மில் எப்படி நுழைகிறது எப்படி வளர்கிறது என நாம் அறிந்திருக்கவேண்டும். அதைப்பற்றிய விவாதங்கள் நம் அறிவுச்சூழலில் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன.

*

ஒருமுறை குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு தொன்மையான நூலகத்துக்குச் சென்றிருந்தேன். நூறாண்டுக்கால வரலாறுள்ள அந்நூலகம் இன்று அழிந்துவிட்டது. ஓட்டுக்கூரை உடைந்து மழைநீர் உள்ளே பெய்ததனால் அதன் நூலக அடுக்குகளில் புராதனமான நூல்கள் பெரும்பாலும் மட்கிப் பூஞ்சைபிடித்து ஊதிப்போயிருந்தன. அந்நூல்களை எடுத்தெடுத்துப்பார்த்தபோது திடீரென்று ஒரு மறைந்த நகரத்தை , ஒரு பண்பாட்டை மண்ணுக்குள் தோண்டி எடுத்த உணர்ச்சியை அடைந்தேன்.

அங்கிருந்த நூல்களில் பெரும்பாலானவை பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் வெளியான மத விளக்க நூல்கள். தலையணை தலையணையாகக் கெட்டிஅட்டைபோட்ட நூல்கள் அவை. பெரும்பாலானவை சைவம் சார்ந்தவை. சைவசித்தாந்த விளக்கங்கள். சைவநூல்களுக்கு உரைகள். வைணவ நூல்களும் ஏராளமாக இருந்தன. கிறித்தவநூல்களும் பல இருந்தன. அந்நூல்களைப் புரட்டிப் பார்க்கையில் தமிழில் மதமறுமலர்ச்சியின் ஒரு நூற்றாண்டு கடந்து சென்றுவிட்டிருப்பதை உணர முடிந்தது.

திருநெல்வேலியில் எந்த சைவரைக் கேட்டாலும் அவரது தாத்தா ஒரு சில சைவநூல்களை எழுதியிருப்பதாக சொல்வார் என்று ஒரு கிண்டல் உண்டு. அது பொய்யல்ல. உண்மையிலேயே அவ்வளவு சைவநூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஊருக்கு ஒரு சைவப்பிரகாச சபைகள் உருவாயின. அங்கே சொற்பொழிவுகளும் வகுப்புகளும் நடந்தன. அரைநூற்றாண்டுக்கு முன்புதான் அந்த அலைமெல்ல ஓய்ந்தது. இன்று கட்டிடங்கள் எஞ்சுகின்றன. நூலக அடுக்குகளில் நூல்களும்.

புராதனநகரின் இடிபாடுகள் போல நூற்றுக்கணக்கான நூல்கள்! அந்நூல்களில் பெரும்பாலானவை இனிமேல் அச்சாகப்போவதில்லை. அச்சானாலும் எவரும் வாசிக்கமுடியாது. அவற்றில் சிவஞானபோத விளக்கம் என்ற நூலை மட்டும் நான் ஒரு மாதிரிக்காக எடுத்துவைத்துக்கொண்டேன். நான் இன்று வரை வாசித்ததிலேயே மிகமிகக் கடுமையான தமிழ் அது. ஒரு தட்டில் கல்லாலான சோறும் இரும்பாலான பொரியலும் பரிமாறி வைத்தது போல இருக்கிறது அந்நூல்.

இந்தக் காலகட்டம் தமிழில் முக்கியமானது. இக்காலகட்டத்தில்தான் தமிழின் ஆன்மீகம் மறுவரையறை செய்யப்பட்டது. அல்லது மறுதொகுப்பு செய்யப்பட்டது. ரத்தினச்சுருக்கமாக என்னென்ன நிகழ்ந்தது என்று சொல்கிறேன். முதலில் சைவம் மறுதொகுப்படைந்தது. சைவ வழிபாட்டுமுறைகள் தொகுக்கப்பட்டன. [அதில் நடந்த உள்விவாதங்களுக்கு சாட்சியாக இன்று கிடைப்பது ஆறுமுகநாவலருக்கும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் நடந்த பூசல்களைப்பற்றிய தகவல்கள்] சைவசித்தாந்தம் நவீன தத்துவ தர்க்க அடிபப்டையில் மீள்விளக்கம் அளிக்கப்பட்டு சைவமதத்தின் தத்துவமையச்சரடாக முன்வைக்கப்பட்டது. சைவமதத்தையும் சைவ சித்தாந்தத்தையும் ஒன்றாக இணைப்பதற்காகத்தான் அவ்வளவு நூல்கள் எழுதப்பட்டன என்று நினைக்கிறேன்

அதேபோல வைணவத்தின் வழிபாட்டுமுறைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரு பொதுப்போக்காகத் திரட்டப்பட்டது. [அதில் நடந்த உள்விவாதங்களுக்கு சாட்சியாக தென்கலை வடகலை வைணவக்குழுக்கள் நடுவே நிகழ்ந்தமோதல்களைப்பற்றிய நீதிமன்ற வழக்குகள் பல உள்ளன] ஆனால் சைவம்போல வைணவத்தின் தத்துவத்தரப்புகள் ஒருங்கிணைவை அடையவில்லை. ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தரப்புகளும் மாத்வரின் துவைதம் சார்ந்த தரப்புகளும் வல்லபரின் சுத்தாத்வைதத் தரப்புகளும் ஒருவரோடொருவர் கடும் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

தமிழகத்தில் எப்போதுமே வேதாந்தமோ அதன் அடுத்தகட்ட வடிவமான சங்கர அத்வைதமோ வலுவாக இருந்தது இல்லை. சங்கரமடங்கள் அத்வைதத்துக்குப் பதில் புரோகிதமதத்தையே முன்னிறுத்தின. விவேகானந்தரின் நவீன அத்வைதத்தை ஒட்டி உருவான மறுமலர்ச்சி பெரிய அளவில் மக்களியக்கமாக ஆகவில்லை. அறிவார்ந்த ஒரு விவாதமாக நிகழ்ந்து சில ராமகிருஷ்ணமடம், ராமகிருஷ்ணதபோவனம் போன்ற சில அமைப்புகளை மட்டும் அது உருவாக்கியது. பாரதி போன்ற சில முன்னோடிகளில் ஒரு தரிசனமாக மட்டும் அது செல்வாக்கு செலுத்தியது.

தமிழகத்தில் சாக்தம் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பாக நெடுங்காலம் இருந்திருக்கிறது. சாக்த வழிபாட்டுமுறைகளும் சாக்த ஆலயங்களும் தமிழகமெங்கும் உள்ளன. இன்றும் தமிழக ஆன்மீகத்தில் சாக்தம் முக்கியமான இடம் வகிக்கிறது. ஆனால் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆன்மீக மறுவரையறையில் சாக்தம் இடம்பெறவே இல்லை. சாக்தம் பற்றிய விவாதங்கள் நிகழவுமில்லை.

தமிழ்ச்சூழலில் இஸ்லாம் ஒருவணிக மதமாக முதலில் அறிமுகமாயிற்று. அதன்பின்னர் அது வடக்கத்தியப் படையெடுப்பாளர்களுடன் மீண்டும் வந்து சேர்ந்தது. தமிழக இஸ்லாமில் இந்த இரு மாறுபட்டபோக்குகள் எப்போதுமே உள்ளன

தமிழகத்தில் இஸ்லாமிய ஆன்மீகத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் சதக்கத்துல்லா அப்பா அவர்க்ள் மறுவரையறை செய்தார். அவர் முன்வைத்ததைத் தமிழ்இஸ்லாம் என்றே சொல்லமுடியும். தமிழகத்தின் பொதுப்பண்பாட்டின் இருந்த பிற ஆன்மீக அம்சங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொண்டு அது உருவானது. உமறுப்புலவர் முதல் குணங்குடிமஸ்தான் வரையிலான இஸ்லாமிய ஞானிகள் அந்த தமிழ் இஸ்லாமின் உருவாக்கங்கள். ஆனால் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் தமிழ்இஸ்லாம் பெரும்பாலும் தமிழ் இஸ்லாமிய வணிகர்களுக்குள்ளேயே இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் அந்தத் தமிழ் அடையாளத்தைத் துறக்கவும் உலகளாவிய இஸ்லாமியப் பண்பாட்டின் பகுதியாகத் தன்னை அடையாளம் காணவும் முற்பட்டது. இந்த மறுவரையறைப்படுத்தும்போக்கு இன்றுவரை தொடர்ந்து நீடிக்கிறது. இன்று உமறுப்புலவர், குணங்குடியார் போன்றவர்களுக்கு இஸ்லாமில் இடமில்லை என்னும் நிலை வந்துள்ளது.

பதினேழாம் நுற்றாண்டில் இங்கே வந்துசேர்ந்த கிறித்தவம் இங்குள்ள மேல்தட்டு மக்களுடனும் மதத்துடனும் உரையாட முயன்றது. தேம்பாவணி அதற்கான மிகச்சிறந்த ஆதாரம். இரேனியஸ் ஐயரின் பைபிள் மொழியாக்கம் அந்த மேல்தட்டுமக்களை இலக்காகக் கொண்டது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் கிறித்தவம் தன்னை அடித்தள மக்களின் மதமாக மறுவரையறை செய்துகொண்டது. பைபிள் ‘சந்தைப் பிரசங்கத்துக்கான’ மொழிநடையில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கிறித்தவம் அதன் செவ்வியல் அம்சங்களைத் துறந்து ஒரு நாட்டார்மதமாகத் தன்னை இங்கே முன்வைக்க ஆரம்பித்தது.

இவைதவிர முக்கியமான இரு புதிய விஷயங்கள் உருவாகிவந்தன. ஒன்று சித்தர்மரபு என்ற ஒன்றின் உருவாக்கம். தமிழ்ச்சித்தர்கள் என்ற ஒரு பரம்பரை இக்காலகட்டத்தில் எப்போதோ கட்டமைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் என்ற பிரசுர நிறுவனத்துக்காக மாம்பழக்கவிசிங்கராயர் என்ற தொகுப்பாசிரியர்தான் இன்று சொல்லப்படும் பதினெண்சித்தர் என்ற வரிசையை உருவாக்கினார் என்கிறார்கள்.

அதற்கு முன் உதிரிப்பாடல்களாகவும் சிறிய நூல்களாகவும் சித்தர்பாடல்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன. சித்தர்களில் எல்லா வகையினரும் உண்டு. தாயுமானவரைப்போல சைவசித்தாந்திகள் உண்டு.சிவவாக்கியரைப்போல அத்வைதநோக்குடையவர்கள் உண்டு.ரசவாதிகளும் மருத்துவர்களும் உண்டு. அவர்களை உதிரி மறைஞானிகள் என்று சொல்லலாம். . சமூகத்துக்கு வெளியே வாழ்பவர்கள் இவர்கள். பற்றின்றி உடைமையின்றி வானமே கூரையாக அலைந்து திரிந்து வாழும் ஆன்மஞானிகள். சமணமதத்தின் உள்ள நிர்வாண அவதூதர் என்ற கருத்துருவத்தின் இன்னொரு வடிவம் இவர்கள்

சித்தர்கள் ஒட்டுமொத்தமாக ஒருவகையான சிந்தனைமரபையும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையினர். அவர்களைத் தொகுத்து ஒரு சித்தர்மதத்தைக் கட்டமைக்கும் முயற்சிகள் நூறாண்டுக்காலமாக நிகழ்கின்றன. நூற்றுக்கணக்கான நூல்கள் அதற்காக எழுதப்பட்டன , இப்போதும் எழுதப்படுகின்றன. தினமணி நூலரங்கத்தைப்பார்த்தால் ஒவ்வொருவாரமும் சித்தர்களைப்பற்றிய நூல்கள் பல வெளிவந்திருப்பதை நாம் காணலாம்.

சித்தர்மதம் என்பது ஒரு தூய தமிழர்மதமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கு லெமூரியாவிலிருந்தே வேர்கள் எடுக்கப்படுகின்றன. அது ஒரு ஆதிதமிழ் ஆன்மீகமாக விளக்கப்படுகிறது. ஆனாலும் அதற்கு ஒரு சாதிசார்ந்த சமூகப்பின்னணி இருப்பதை நாம் காணலாம்.சித்தர்களில் வைணவர்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப்பின் உருவாகிவந்த இரண்டாவது புதிய விஷயம் என்பது மதம்சாரா ஆன்மீகத்துக்கான தேடல். மதம்சாராத அறத்தைக் கண்டடையவேண்டிய கட்டாயத்தில் இருந்து இது ஆரம்பிக்கிறது. இந்தத் தேடலின் விளைவாகவே திருக்குறள் ஒரு மதம்சாரா அறநூலாக முன்னிறுத்தப்பட்டது. திருக்குறளில் தெளிவாகவே தெரியக்கூடிய சமண அடையாளங்கள் இல்லாமலாக்கப்பட்டன. சொல்லப்போனால் அந்தத் தொடர்பு பற்றிப் பேசுவதே தவிர்க்கப்பட்டது.

சென்ற நூறாண்டுக்காலத்தில் குறள் பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நூல்கள் இவ்வாறு அதை ஒரு மதம் சாரா ஆன்மீகநூலாக விளக்கும் நோக்கம் கொண்டவை. ஆனால் இந்த மதம்சாரா ஆன்மீகத்தை இஸ்லாமியரும் கிறித்தவரும் பெரும்பாலும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை என்ற யதார்த்தமும் இங்கே இருக்கிறது.

இதுதான் நாம் இருபதாம்நூற்றாண்டில் காலடி எடுத்துவைக்கும்போது நமக்குக் கிடைத்த ஆன்மீகத்தின் சுருக்கமான வரைபடம். நாம் கொண்டுள்ள ஆன்மீகம் இதில் எந்தச் சரடாக இருந்தாலும் அதற்கு இரு கட்டங்கள் உள்ளன. அதன் நீண்ட பழங்கால வரலாறு ஒன்று. அது பத்தொன்பதாம்நூற்றாண்டு வாக்கில் தமிழ்ச்சூழலில் மறுவரையறைசெய்யப்பட்ட பின் கிடைக்கும் வடிவம் இன்னொன்று.நம்மிடமிருக்கும் எல்லா ஆன்மீகப்படிமங்களையும் இந்த நீண்ட வரலாற்று நோக்கில் வைத்துத்தான் நாம் பரிசீலிக்கவேண்டும். வரலாற்று நோக்குள்ள ஆன்மீகத்துக்கான அடிப்படைப்பார்வை அவ்வாறுதான் அமையமுடியும்

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் கூட்டுவிவாதம் தமிழ்ச்சமூகத்தின் ஆன்மீகத்தை வடிவமைத்தது. அதன் விளைவாக எழுதப்பட்ட பல்லாயிரம் நூல்கள் இன்று பெரும்பாலும் வாசிக்கப்படுவதில்லை என்பது உண்மை. அதன் முக்கியமான முகங்களான ஆறுமுகநாவலர், ஞானியார் சுவாமிகள், பிரதிவாதிபயங்கரம் அண்ணாங்கராச்சாரியார், கா.சு.பிள்ளை, திரு.வி.க போன்ற பலநூறுபேர் இன்று வெறும் பெயர்களாகவே அறியப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அந்த விவாதம் மூலம் உருவான கருத்துக்களும் படிமங்களும்தான் நம் ஆன்மீகத்தை ஆள்கின்றன.

அயோத்திதாசரின் பங்களிப்பு இந்த விவாதக்களத்தில்தான் நிகழ்ந்தது. அன்று பிரம்மாண்டமான அமைப்பு வலிமையுடன் சாதிப்பின்னணியுடன் நிகழ்ந்த அந்தப்பொதுவிவாதத்தில் தனிநபரான அவரது குரல் கரைந்து காணாமலாகியது. நூறாண்டுகளுக்கும் மேலாக அப்படி ஒரு குரல் ஒலித்த தகவலே எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்று பார்க்கையில் அந்த பலவீனமான குரல் மிக முக்கியமான ஒரு மாற்றுவழியைக் காட்டுகிறதென்று புரிகிறது.

அத்துடன் அயோத்திதாசர் இந்த மாற்று ஆன்மீகம் சார்ந்து அதிகமொன்றும் எழுதிவிடவும் இல்லை. மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். பெரும்பாலும் மாற்றுத்தரப்புக்கான குறிப்புகள். இந்திரர்லோகசரித்திரம் போன்ற கொஞ்சம் புராணவிவரணைகள். குறளுக்கான விளக்கவுரைக்குறிப்புகள் கொஞ்சம் – அவ்வளவுதான். அவற்றில் இருந்து ஒரு முழுமையான கருத்துவடிவத்தை நாம் இன்று அறியகொள்ள முடியாது. ஒரு தரப்பை உருவாக்குவதற்கான தொடக்க முயற்சி மட்டும்தான் அது.

ஆகவே அயோத்திதாசரின் குறிப்புகளை மட்டும் பார்த்தால் அவற்றை நாம் முக்கியமானவையாகக் கருத முடியாது. ஆனால் அக்கால விவாதச்சூழலை முழுமையாக உருவகித்துக்கொண்டு அச்சூழலின் பின்னணியில் அக்குரலை நிறுத்திப்பார்த்தால் மட்டுமே அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

அதாவது அயோத்திதாசர் என்ன சொன்னார் என்பதை விட எப்போது எந்த விவாதத்தின் பகுதியாக அவற்றைச் சொன்னார் என்பதே முக்கியம். ஆகவேதான அந்தப் பின்புலத்தை விவரிக்கவேண்டியிருக்கிறது. அந்தத் தரப்பு எந்த வகையில் முக்கியம் என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவேதான் வரலாற்றுரீதியான ஆன்மீகம் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. அயோத்திதாசரின் text ஐ விட அவர் பேசிய context ஐ முக்கியமாக முன்வைக்கவேண்டியிருக்கிறது.

ஏனென்றால் அயோத்திதாசர் முன்வைப்பது நம்முடைய ஆன்மீக வரலாற்றின் இன்னொரு பக்கம். இன்றும் வாழக்கூடிய, ஆனால் பேசப்படாத ஒரு பக்கம்

[மேலும்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசகர் கடிதங்கள்