சொல்லுடன் நிற்றல்

எழுத்தாளன் சொற்பொழிவாளனாக ஆகக்கூடாதென்று எப்போதும் சொல்லிவந்தவர் சுந்தர ராமசாமி. மேடை ஏறவே மறுப்பவர் ஆற்றூர் ரவிவர்மா. ஆனால் அவர்களும் பேசும்படி ஆகிவிட்டிருக்கிறது. சுந்தர ராமசாமி சொற்பொழிவுகளை ஆற்றியே ஆகவேண்டிய கட்டம் வந்தது. தேர்ந்த சொற்பொழிவாளராக ஆகவும் செய்தார். அவர்களின் மாணவன் என்று சொல்லிக் கொள்ளும் நானும் வேறு வழியில்லாமல்தான் மேடைப் பேச்சாளனாக ஆனேன்.

தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் எழுதுவதை மட்டும் செய்தால் தன் பணியைச் செய்யாதவனாகிறான். அவன் ஒரு பண்பாட்டுச் செயல்பாட்டாளனாகவும் பணியாற்ற வேண்டியிருக்கிறது. இலக்கியம் என்ற இயக்கம் தொடர்ந்து நிகழ அவன் தன் பங்களிப்பை ஆற்றியாகவேண்டும். ஆகவேதான் எழுத்தாளர்கள் இங்கே இலக்கிய அறிமுகங்கள் செய்கிறார்கள். இலக்கிய விளக்க நூல்கள் எழுதுகிறார்கள். இலக்கிய விமர்சனங்களும் மதிப்புரைகளும் எழுதுகிறார்கள்.

அந்த இலக்கிய அறிமுகப்பணியின் ஒருபகுதியே இலக்கியவாதியின் மேடை உரை. என் சொற்பொழிவுகளில் பெரும்பகுதி நவீன இலக்கியத்தை அறிமுகம்செய்பவை . சமீபகாலமாக காந்தியச்சிந்தனைகளையும் ஆன்மீக சிந்தனைகளையும் அறிமுகம் செய்து பேசுகிறேன்.

பேசுவது எனக்கு உயிர்வதையாகவே இருந்தது. கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். ஆயினும் பேசவேண்டியிருந்தது. சில மேடைகளில் பேசமுடியாமல் திகைத்து நிற்க நேரிட்டது. அது ஏன் என்பதை கவனித்தேன். எனக்கு மேடையில் சிந்திக்கவரவில்லை என்பதைக் கண்டுகொண்டேன். ஏற்கனவே சிந்தித்ததை மட்டுமே நான் மேடையில் சொல்லமுடிகிறது என்பதை அறிந்தேன்.

ஆகவே சொற்பொழிவுகளை முழுமையாக எழுதி மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல பழக்கமாக அமைந்தது. தமிழின் பெரும் சொற்பொழிவாளர்கள் பலர் மேடையிலேயே சிந்திப்பவர்கள். நான் எழுதும்போது என் எழுத்து அங்கேயே நிகழ்ந்து வரும். அதுபோல மேடையில் அவர்களுக்குப் பேச்சு நிகழ்ந்துவிடுகிறது. அது எனக்குச் சாத்தியமல்ல. என் ஊடகம் எழுத்து. எழுதும்போது எனக்குள் திறக்கும் வாசல்கள் வேறெப்போதும் திறப்பதில்லை.

என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாகக் கட்டுரைவடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. குறிப்புகளைப் பிரித்துப்பார்த்ததுகூட இல்லை. நினைவில் இருந்து மொத்த உரையையும் நிகழ்த்துவேன். முன்னரே தயாரிக்கப்பட்ட என் எழுத்துவடிவ உரையில் இருந்து மிகச்சிறிய மாற்றமே பேச்சில் நிகழ்ந்திருக்கும். என் நினைவுத்திறன் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை.

இப்படி எழுதிப்பேசுவதை இன்று ஒரு நல்ல பழக்கமாகவே நினைக்கிறேன். இதைப் பிறருக்கும் பரிந்துரைக்கிறேன். எழுதிவைத்துப்பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்குத் தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். நினைவு அலைபாய்வதுபோல நம் பேச்சு அலைபாய நேராது. மகத்தான பேச்சாளர்களான எமர்சன், எலியட் போன்றவர்கள் அனைவருமே எழுதிய உரைகளையே நிகழ்த்தினார்கள்.

மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. நான் பேசிய உரையை உடனடியாகக் கட்டுரையாக வெளியிட்டுவிடுவேன். ஆகவே ஒவ்வொருமுறையும் உரையைப் புதியதாக உருவாக்குகிறேன். அது சலிப்பூட்டும் உரையை நிகழ்த்தாமல் என்னைக் காக்கிறது

இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளை கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம்

என் பிரியத்திற்குரிய நண்பர் சிறில் அலெக்ஸுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் சொல்முகம் நூலுக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைதேவதேவன் கடிதம்
அடுத்த கட்டுரைவரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்