ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்

ஜெயமோகன்.இன் என்ற இந்தத் தளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் [ சிரில் என்று எழுதி அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது. எங்களூரில் ‘றாபின்ஸன் றைஸ் மில்’ என்றுதான் எழுதுவோம். அது எங்கள் றைற்.] ஜெகத் என்பவரின் இணையதளத்தை பார்க்கும்படி அடிக்கடிச் சொல்லி இணைப்பு அனுப்புவார். சமீபத்தில் என்னைப்பற்றிய அங்கதம் நன்றாக இருந்தது. ஒருவரை கூர்ந்து நோக்கி அவரது சில உடல் அல்லது பேச்சு அல்லது எழுத்து வழக்கங்களை கண்டுபிடித்து அவற்றை மிகைப்படுத்துவதே எங்கும் பகடியின் வழிமுறையாக இருந்துள்ளது. ஜெகத் என்னுடைய பல பாணிகளை தொட்டுக் காட்டியிருக்கிறார் என்றே படுகிறது. சிரிக்க வைக்கும்படி இருந்தது, என்னைவிட அருண்மொழியை.

என்னுடைய மனம் இயங்கும் தளம் என்பது மரபுக்கும் நவீன உலகுக்கும் இடையேயான கொடுக்கல்வாங்கல் நிகழும் புள்ளிதான். எனது வாசிப்புப் பின்புலம் தமிழ்-மலையாள இலக்கியச் சூழலைச் சார்ந்தது. முதிரா இளமைப்பருவத்தில் படித்தவற்றை வாழ்நாள் முழுக்க மீட்டிப்பார்ப்பதே எந்தச் சிந்திக்கும் மனிதனும் பொதுவாகச் செய்யக் கூடுவதாக இருக்கிறது. அதே போல நான் சந்தித்த ஆசிரியர்கள். பொதுவாக நூலில் படித்தவற்றைவிட உரையாடலில் கேட்டவையே அதிகம் நினைவில் நிற்கின்றன. மனிதர்களுக்கு நிகராக ஒருபோதும் நூல்கள் அமைவதில்லை

ஜெகத் விட்ட விஷயங்கள் இரண்டு. முதிரா இளமையில் நான் ருஷ்ய, பிரிட்டிஷ் இலக்கியங்களை அதிகம் படித்திருக்கிறேன். அவையே கையில் கிடைத்தன. ஆகவே அவையே எனக்கு உடனடியாக நினைவுக்கு வருபவை. அத்துடன் ஒரு குடும்பமனிதன் ஆகையால் எப்போதும் என் குடும்பம் உதராணமாக என் நினைவுக்கு வந்தபடியே இருக்கும்.

இருபது வருடம் கழித்து ஜெகத் எழுதும் க்ளீஷேக்களை வைத்து ஒரு நல்ல கட்டுரை எழுதுகிறேன். மற்றபடி ஜெகத் அவரது இணையதளத்தில் என்னைப்பற்றி நிறையவே எழுதியிருப்பதைப் பார்த்தேன். பொறுமையாக இன்னொரு தருணத்தில்தான் படிக்க வேண்டும். ஒரு சம்பந்தமும் இல்லாமல் வில்பர் ஸ்மித் சாகஸ நாவல்களைப் படிக்க ஆரம்பித்து அவற்றில் இருந்து வெளியேவர முடியாமல் இருக்கிறேன். ஆப்ரிக்க சித்திரங்கள். ஆனால் படித்து முடித்ததுமே மறந்துபோகும் எழுத்துக்கள். பொதுவாகப் பார்க்கும்போது ஜெகத் இலக்கியம் பற்றியும் என்னைப்பற்றியும் உறுதியான பல முன்முடிவுகளில் இருப்பதுபோல தெரிகிறது.

என் ஆர்வத்தை தூண்டி இக்குறிப்பை எழுத வைத்த விஷயம், மலையாள இணையதளங்களை தமிழ் எழுத்துக்களில் படிக்கும்பொருட்டு ஜெகத் உருவாக்கியிருக்கும் மென்பொருள். அதை பயன்படுத்தி சில கட்டுரைகளை பொதுவாக பார்த்தேன். இங்குபோலவே எந்த வித உரைநடை ஒழுங்கும் இல்லாத அரட்டைநடையில்தான் அங்கும்  வலைப்பூக்கள் எழுதப்படுகின்றன என்று தெரிந்தது. அத்துடன் மலையாளம் தெரிந்த என்னால் தமிழில் அவற்றை படிப்பது சற்றே எரிச்சலூட்டியது

ஆனால் ஒரு பெரிய வாசலின் திறப்பு இது என்று பட்டது. திராவிட மொழிகளை காதால் கேட்டால் நம்மால் சில நாட்களிலேயே புரிந்துகொள்ள முடியும். சினிமாத்துறையில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் தெரியும். சமையற்காரர்கள் உட்பட. சிலநாட்களிலேயே எனக்கு தெலுங்கு காதுக்குப் பழகி விட்டது. [பெரும்பாலான துணைநடிகைகள், ஒப்பனையாளர்கள் தெலுங்குப்பெண்கள்] கன்னடம் எனக்கு கேட்டால் புரியும். மொழிகளைப் பிரிப்பது தனி லிபிகள்தான். அந்த தடையை இம்மாதிரி முயற்சிகள் மூலம் தாண்ட முடிந்தால் சட்டென்று புது உலகம் அறிமுகமாவது தெரியும்.

இந்த மென்பொருள் மூலம் தினம் சிறிதளவு படித்தாலே மலையாள மொழிக்குள் சென்றுவிட முடியும் என்று படுகிறது. குறிப்பாக மலையாள இலக்கியங்கள் இந்த வகையில் கிடைக்கும் என்றால் இன்னும் நல்லது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யபப்ட்ட நூல்களுடன் மூலத்தை இவ்வாறு ஒப்பிட முடிந்தால் அது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.

கன்னடமொழிக்கு இப்படி ஏதாவது எழுத்துரு மாற்றும் வசதி இருந்தால் காரந்தையும் பைரப்பாவையும் கன்னடச் சொற்களில் படிக்க மிகவும் ஆசைப்படுவேன்.

http://malaiyaruvi.blogspot.com/

முந்தைய கட்டுரைபின் தொடரும் நரியின் ஊளை :ஜெகத்
அடுத்த கட்டுரைசிற்பப் படுகொலைகள்…